அகத்திணை - 1

சங்க கால காதல் மற்றும் களவு – அகத்திணை

5120 3

அகத்திணை

பண்டைய தமிழர் இலக்கியங்கள் அகத்திணை பற்றி அதிகம் கூறுகின்றது, மேலும் தமிழர் வாழ்வை அகம் மற்றும் புறம் என வகையாக்கப் பிரித்துக் காட்டியுள்ளது. 

புறம் என்பது, ஒருவர் செய்த கொடை, அவரின் வீர செயல்கள் ஆகியவற்றைக் குறிக்கும், இத்தைபற்றிய நமது தமிழ் இலக்கிய பாடல்களில் இவர்களின் பெயர்கள் நேரடியாகக் கூறப்பட்டு இருக்கும். 

அகம் என்பது இதற்கு எதிர்மறை, ஒருவரின் காதல், இல்லறம் சார்ந்த தகவல்களைக் கூருவதே அகத்திணை ஆகும்.  அகத்திணை பாடல்களுள் யாருடைய பெயரையும் சுட்டிக் கூறும் பழக்கம் இல்லை. இவற்றில் தமிழரின் வாழ்க்கையும், பண்புகளும் இழையோடிய பின்னிக் கிடக்கும். 

இவைபற்றிய நம் வாழ்வியலே அகத்திணை எனக் குறிக்கப்படுகின்றது. அகத்திணையை மேலும் 2 பெரும் பிரிவுகளாக நம் முன்னோர்கள் பகுத்தனர். அவை,

 • களவு
 • கற்பு

களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். பெரும்பாலும் அகத்திணையில் களவு பற்றியே அதிகம் பாடல் குறிப்புகள் உண்டு.

களவுக்குக் கற்பு இன்றியமையாதது. தமிழர்களின் வாழ்வில் களவு கற்பாவதே முழுமை பெறும்.

கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. இதற்குக் காதலர்களின் விருப்பம் மட்டுமன்றித் மற்றும் சிலரின் (தோழன், தோழி…) உதவியும் தேவைப்படும்.

நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் மிகப் பழைய தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் அதன் பொருளதிகாரத்தில் அகத்திணை மற்றும் புறத்திணை பற்றிய குறிப்புகள் மிகுதியாக உள்ளது. அகத்திணை இயலை மேலும் 7 திணைகளாகப் பகுத்துள்ளார். அவை,

கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுத்தினை என்ப. (அகத். 1)

 1. கைக்கிளை,
 2. முல்லை
 3. குறிஞ்சி
 4. மருதம்
 5. நெய்தல்
 6. பாலை
 7. பெருந்திணை

என்பனவாம். இதில் கைக்கிளை என்பது ஒருதலக்காதல் மேலும் பெருந்திணை என்பது பொருந்தாக் காமம். 

தமிழர் நிலத்திணைகள்

சங்க காலம்

சங்க காலம் (Sangam period) என்ற சொல், பண்டைய தென்னிந்திய வரலாற்றில் பயன்படுத்தப்பட்ட தமிழர்களின் வாழ்க்கையோடு தொடர்பான ஒரு காலப்பகுதியாகும். இக்காலப்பகுதி கிமு 4 ம் நூற்றாண்டிலிருந்து கிபி 2 ம் நூற்றாண்டு வரை நீடித்திருக்கும் எனக் கருதப்படுகிறது. 
மதுரையை மையமாகக் கொண்டு தமிழ்ப்புலவர்கள் சங்கம் அமைத்து தமிழை வளர்த்தார்கள் என்பதால், இக்காலப்பகுதிற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக,
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக, என் நிலவரை;
                                         — ( புறம்:72 )

என்று பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாடியுள்ள புறநானூற்றுப் பாடல் வரிகளே இத்தகைய புலவர்கள் சங்கம் அமைத்து இருந்ததற்கு சான்றாகும்.

பழங்க்கள தமிழ் இலக்கியத்தில், தமிழகம் என்ற சொல் புறநானூற்றின் 168 ஆவது பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தமிழகம் என்று குறிக்கப்பட்ட இப்பகுதியானது, முழுவதுமாக தமிழ்மொழி பேசும் மக்கள் வாழும் பகுதியாகும். இன்றைய கால இத்தென்னிந்தியப் பகுதியில் தமிழ்நாடு, கேரளா , ஆந்திரப்பிரதேசத்தின் சில பகுதிகள், கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகள், இலங்கை முதலிய பகுதிகளும் அடங்கும். 

சங்க கால தமிழர்களின் காதல் மற்றும் களவு

இந்த கால இலக்கியத்தில் இவர்களின் காதல் மற்றும் களவு வாழ்க்கை தொடர்பான செய்திகளை இனி பார்ப்போம்.

அன்பின் ஐந்திணைகள்

குறிஞ்சி முதல் பாலை வரை உள்ள அகத்திணை  ‘களில் மணம் ஒத்த ஓர் ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே உள்ள காதல், களவு, ஊடல், பிறிவு, இன்பம் பற்றிப் பாடும் திணைகள் ஆகும் எனவே இவை அன்பின் ஐந்தினைகள் என அழைக்கப்படுகின்றது. இந்த அன்பின் அடிப்படையில் தலைவன், தலைவியின் உள்ளத்தே தோன்றுகின்ற வாழ்வியலை, இந்த ஐந்து திணைகளில் பிரித்து இலக்கியங்கள் பாடுகின்றன.

இப்பாடல்கள், பெரும்பாலும் களவு, பிறிவு, ஊடல் போன்ற செய்திகள் மிகவும் இரகசியமாக இருப்பினும், சில நேரங்களில் நெருங்கிய, தோழி, செவிலி, பாணன், பாங்காயினோர் போன்றோரிடம் தம் உள்ளம் திறந்து உரைப்பதாகவும் இவை உள்ளது. 

இவ்வற்றாக 5-வகை திணைகளில் நிகழும் இந்த நிகழ்வுகள் பற்றி, அந்த அந்த திணைகளுக்கே உரிய மேலும் சில துறைகளையும் ஒழுக்கங்களையும் வகுத்துக்கொண்டு செய்யுள் இயற்றி பாடுவதே அக்கால தமிழ்ப் புலவர்களின் மரபாகும்.

இவ்வொழுக்கங்கள் முதல்கருஉரி என 3 தலைப்புகளில் கீழ் வகைப்படுத்தி உள்ளனர்.

முதற்பொருள்

முதற்பொருள் என்பது ‘நிலமும் பொழுதும்  ஆகும். ‘நிலம்’ என்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என 5 வகைப்படும்,

பொழுது என்பது இந்த ஐவகை நிலத்தைச் சார்ந்தோருக்குக் காம உணர்வைப் பொங்கி எழச் செய்யும் “பெரும்பொழுது” மற்றும் “சிறுபொழுது” ஆகும்.

கருப்பொருள்

கருப்பொருள் என்பன அந்த அந்த திணைகளுக்கு உரிய மற்றும் அந்த பகுதியின் மக்கள், தெய்வம், புள், விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் முதலான 14-ம் கருப்பொருள் எனப்படும்.

உரிப்பொருள்

தலைவியும் தலைவனும் கூடுதல், பிரிதல், தலைவனிடம் தலைவி ஊடல் கொள்ளுதல் எதிர்பார்த்துக் காத்திருத்தல், காலம் நீடிக்கும்போது வருந்துதல், இவையே  உரிப்பொருள்கள் எனப்படும்.

இனி, ஒவ்வொரு திணைக்குமான முப்-பொருள்கள் (முதல், கரு, உரி) பற்றி விரிவாக பார்க்களாம்.

அகத்திணைப் பிரிவுகள்

கைக்கிளை

கைக்கிளை என்பது ஒருதலைக் காதலைக் குறிக்கும். இஃது
இழிந்த ஒழுக்கமாகக் கருதப்பட்டாலும் நம்பியகப்பொருளின்
களவியலில் இழிபொருளில் வரவில்லை. மாறாக, தலைவனும்
தலைவியும் களவு வாழ்க்கையில் ஈடுபடுவதற்கு முந்தைய
நிகழ்வாக அமைந்துள்ளதைக் காணலாம்.

கைக்கிளைப் பாகுபாடு

கைக்கிளையானது காட்சி, ஐயம், துணிவு, குறிப்பறிதல் என்று
நான்கு வகைப்படும். இதை,

காட்சி ஐயம் துணிவு குறிப்பறிவுஎன
மாட்சி நான்கு வகைத்தே கைக்கிளை

(களவியல் -சூ. 2)

என்று நம்பியகப்பொருள் குறிப்பிடுகிறது. இனி இவ்வகைகளை

பற்றி விரிவாகப் பார்ப்போம்.

காட்சி

தலைவனும் தலைவியும் முற்பிறவியில் கூடி இன்பம்
பெற்றவர்கள் ஆவர். இவர்கள் இப்பிறவியில் கூடுவதும் பிரிவதும்
நல்வினை, தீவினைகளால் ஆகும். நல்வினையின் பயனாய்,
அறிவாலும் பிறவற்றாலும் ஒத்த தன்மை உடைய தலைவனும்
தலைவியும் எதிர்பாராத விதமாகச் சந்திப்பதே காட்சி ஆகும்.
இவ்விருவருள் தலைவன் தலைவியை விட உயர்ந்தானாய்
இருப்பினும் தவறில்லை. அக இலக்கியங்களில் தலைவனும்
தலைவியும் சந்திக்கின்ற முதல் சந்திப்பு (காட்சி) இவ்விதமாகவே
அமைக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.

ஐயம்

நல்வினையின் பயனாய்த் தலைவியைக் கண்ட தலைவன்,
அவளின் உருவ அழகு, அவளைத் தாம் கண்ட இடம்
முதலியவற்றால் தாம் காண்பது கனவோ, நனவோ என்று ஐயம்
கொள்வான்.

(எ.டு) ஒரு தலைவன் தான் கண்ட தலைவியின் அழகைக் கண்டு
ஐயுற்று அவள் தெய்வமோ, மயிலோ, மானுடப் பெண்ணோ
என்று ஐயப்படுவதைத் திருவள்ளுவர்,

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு

(குறள் – 1081)

என்று குறிப்பிடுகிறார்.

துணிவு

தலைவியைத் தெய்வமோ, மயிலோ, மானுடப்
பெண்ணோ என்று ஐயுற்ற தலைவன் அவள்
மானுடப் பெண்தான் என்று தெளிவடைதல்
துணிவாகும். அவன் துணிவுக்குக் காரணங்கள் ஏழு ஆகும்.

இக்காரணங்களால் இவள் மானுடப் பெண்தான் என்று
தலைவன் முடிவுக்கு வருகிறான்.

குறிஞ்சித்திணை

ஊட்டி சுற்றுலா பயணம்

குறிஞ்சியாவது, ‘மலையும் மண்சார்ந்த இடங்களும்’, இயற்கை அழகும், வளங்களும் நிறைந்தனவாக, இளம் பருத்தாரிடையே ‘புணர்தலும் புணர்தல் நிமித்தமும்’ செல்லவும், இவைபற்றி எல்லாம் நினைக்கவும், அணுக்கரிடையே (தமக்கு நெருக்கமானவர்) தம் உணர்வை எடுத்துக் கூறவும் பொருந்துவனவாக அமைந்திருக்கும் நிலப்பகுதிகள். எனவே, தனித்து வேட்டை மேல் செல்லும் இளைஞனும், புனம் காத்து நிற்கும் கன்னியும் ஒருவரை ஒருவர் கண்டு காதலற்று ஒன்றுபடுவதற்கு ஏற்ற நிலைக்களமாகி,

இந்த துணிவு நிகழ்வதற்கு ஏற்ற வாழ்வியல் அமைந்தது குறிஞ்சி ஆகும் குறிஞ்சித்திணைக்கு கூதிர்காலம் மற்றும் முன்பனிக் காலம் பெரும்பொழுதுகளாகவும் யாமம் சிறுபொழுதாகவும் அமையும்.

குறிஞ்சியின் முப்-பொருட்கள்:

கடவுள்முருகக்கடவுள்
மக்கள்பொருப்பன், வெற்பன், சிலம்பன், குறத்தி, குறவன், கொடிச்சி, வேம்பன், கானவர்
புள்கிளி, மயில்
விலங்குபுலி, கரடி, யானை
ஊர்சிறுகுடி
நீர்அருவி நீர், சுனை நீர்
பூவேங்கை, குறிஞ்சி, காந்தள், குவளை
மரம்ஆரம் (சந்தனம்), தேக்கு, அகில்ம் அசோகம், நாகம், மூங்கில்
உணவுமலைநெல், மூங்கில் அரிசி, தினை
பறைதொண்டகப்பறை
யாழ்குறிஞ்சி யாழ்
பண்குறிஞ்சிப்பண்
தொழில்வெறியாடல், மலைநெல் விதைத்தல், தினைப்புனம் காத்தல், தேன் அழித்தல், நெல் குற்றுதல், கிழங்கு எடுத்தல், அருவி மற்றும் சுனை நீர் ஆடல்
பெரும்பொழுதுகூதிர், முன்பனி ( ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை )
சிறுபொழுதுயாமம்
உரிப்பொருள்

புணர்தலும், புணர்தல் நிமித்தமும் ( ஆண் பெண் களவு )

குறிஞ்சித்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்துக் காட்டு: “பகற்குறிக்கண் செறிப்பு அறிவுறீத் தோழி வரைவு கடாயது”

கபிலரின் குறிஞ்சிப் பாடல்

இரவில் தலைவன் வருவது இன்பம் என்றபோதும்,வழியின் கொடுமையால் இனி இரவில் வரல் வேண்டா மலைச்சாரலில் பகலில் வருக என்கிறாள் தோழி.

கொடுவரி தாக்கி வேன்ற வருத்தமொடு
நெடுவரை மருங்கில் துஞ்சும் யானை,
நனவில் தான் செய்த்து மனத்து ஆகலின்,
கனவிற் கண்டு கதும்என வெரீஇப்
புதுவதாக மலர்ந்த வேங்கையை
அது என உணர்ந்து,அதன் அணிநலம் முருக்கிப்
பேணா முன்பின் தன்சினம் தணிந்து,அம்மரம்
காணும் பொழுதில் நோக்கம் செல்லாது
நாணி இறைஞ்சும் நன்மலை நன்னாட!

இவ்வாரு இந்த பாடல் தொடங்குகின்றது…

பாடல் விளக்கம் :

யானை

மிக வருத்தத்துடன், தன்னை தாக்கிய வேங்கை புலியை வென்றது ஓர் யானை. பின்பு களைப்பினால் அம்மலைச் சாரலில் ஓர் புறம் படுத்து நன்றாக உறங்கிய அந்த வலிமையான யானை.நனவில் வந்த வேங்கையே இதன் கனவிலும் வந்தது.

வேங்கை வரக் கண்டதும், இந்த யானை சினங்கொண்டு, அருகிலிருந்த புது மலர்கள் நிறைந்த வேங்கை மரத்தைப் புலி என்றெண்ணிச் சாய்த்து அழித்தது !

அது மரம் எனப் பிறகு காணும் பொழுது, அம்மரத்தைப் பார்க்கவும் நாணங்கொண்ட தலை கவிழ்ந்து சென்றது.

அந்நல்ல மலை நாட்டிற்கு உரியவனே….

முல்லைத்திணை

முல்லை என்பது காடும் காடு சார்ந்த நிலங்களும் ஆகும். இந்நிலத்து ஆயர்களது வாழ்வியல், ஆடவர் ஆனிரை (பசுக்கள்) மேய்த்தற்கு பகற்பொழுது எல்லாம் காட்டிடத்தே இருத்தல், மகளிர் பால், பயன்களை விற்று வருதல் போன்ற ஒழுக்கத்தோடு ஒட்டியதாகும்.

ஏறு தழுவி வெல்பவனுக்கே மகளைத் தரும் வழக்கமும், அவனையே விரும்பி ஏற்கும் கன்னியர் மனமும் இத்திணையின் சிறப்பான மரபுகள். இதனால் காத்திருத்தல் தன்மை இயல்பாக, ‘இருத்தல், இருத்தல் நிமித்தம்’ முல்லைத்திணைக்கு உரிமையாக்கி உள்ளனர்.

முல்லைத்திணைக்கு கார்காலம் பெரும்பொழுதாகவும் மாலை சிறுபொழுதாகவும் அமையும்.

முல்லையின் கருப்பொருட்கள்

கடவுள்

மாயோன் (கண்ணன் என்ற கருத்திணன் என்ற கிரு(ஷ்)ட்டிணன்)

மக்கள்

குறும்பொறை நாடன், தோன்றல், மனைவி, கிழத்தி, இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர், பொதுவர், பொதுவியர், கோவலர்

புள்

காட்டுக்கோழி

விலங்கு

மான், முயல்

ஊர்

பாடி, சேரி, பள்ளி

நீர்

குறுஞ்சுனை நீர், கான்யாற்று நீர் (காட்டாறு)

பூ

குல்லை, முல்லை, பிடவம், தோன்றிப்பூ

மரம்

கொன்றை, காயா, குருந்தம்

உணவு

வரகு, சாமை, முதிரை

பறை

ஏறுகோட்பறை

யாழ்

முல்லை யாழ்

பண்

முல்லைப்பண்

தொழில்

சாமை விதைத்தல், வரகு விதைத்தல், அவற்றின் களை கட்டல் மற்றும் அரிதல், கடா விடுதல், கொன்றை குழல் ஊதல், ஆவினம் மேய்த்தல், கொல்லேறு தழுவல், குரவை கூத்தாடல், கான்யற்று நீராடல்.

பெரும்பொழுது

கார், முன்பனி ( ஆவணி, புரட்டாசி, மார்கழி, தை )

சிறுபொழுது

மாலை

உரிப்பொருள்

(பிரிவை மனத்தில் ஆற்றிக்கொண்டு) இருத்தலும், இருத்தல் நிமித்தமும் ( புறப்பொருள் நிமித்தம் பிரிந்த தலைவன் வருகைக்காகத் தலைவி காத்திருத்தல் )

 

முல்லைத்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: “வினைமுடிந்து மீளூம் தலைவன் தேர்ப்பாகற்கு சொல்லியது”

தலைவிகூற்று

தோழி! நாம், காணாமை உண்ட கடுங்கள்ளை மெய்கூர,
நாணாது சென்று நடுங்க உரைத்தாங்குக்
கரந்ததூஉம் கையொடு கோட்பட்டாம் கண்டாய், நம்
புல்லினத்து ஆய மகன்சூடி வந்ததோர்
முல்லை ஒருகாழும் கண்ணியும் மெல்லியால்! — 5

கூந்தலுள் பெய்து முடித்தேன்மன்; தோழி! யாய்
வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே
அன்னையும் அத்தனும் இல்லராய், யாய்நாண
அன்னைமுன் வீழ்ந்தன்றுஅப் பூ.
அதனை, வினவலும் செய்யாள் சினவலும் செய்யாள் — 10

நெருப்புக்கை தொட்டவர் போல விதிர்த்திட்டு
நீங்கிப் புறங்கடைப் போயினாள்; யானும்என்
சாந்துஉளர் கூழை முடியா, நிலம் தாழ்ந்த
பூங்கரை நீலம் தழீஇத் தளர்புஒல்கிப்
பாங்கரும் கானத்து ஒளித்தேன்; — 15

தோழி கூற்று

அதற்குஎல்லா!
ஈங்குஎவன் அஞ்சு வது?
அஞ்சல்; அவன் – கண்ணி நீபுனைந்தா யாயின், நமரும்
அவன்கண் அடைசூழ்ந்தார் நின்னை; அகன்கண்
வரைப்பில் மணல்தாழப் பெய்து திரைப்பில்
வதுவையும் ஈங்கே அயர்ப்; அதுவேயாம் — 20
அல்கலும் சூழ்ந்த வினை.

                        கலித்தொகை

பாடல் பொருள் சுருக்கம் :

அகத்திணை காதல்

காதலனைப் பார்க்கச் சென்ற பெண்ணொருத்தி அவன் சூடியிருந்த முல்லைப் பூக்களை வாங்கி ஆசையாய் சூடிக் கொள்கிறாள். வீட்டிற்குத் திரும்புகையில் அதனை தன் கூந்தலுக்குள் ஒளித்துக் கொள்கிறாள்.

அவளின் கூந்தலை வெண்ணெய் பூசி வாருவதற்காக அவிழ்த்த அவள் செவிலித்தாய், கீழே விழுந்த முல்லைப்பூவைக் கண்டு திடுக்கிட்டுப் போகிறாள். எனினும், அந்த அசாதாரண சூழலை மௌனத்தால் எதிர்கொள்கிறாள் அவ்வன்னை. ஏதும் வினவாமலும் அது பற்றி சினம் காட்டாமலும் அவ்விடத்தை விட்டு நீங்குகிறாள்.

நீல வண்ண ஆடை தளர்ந்து விழ நாணத்தால் காட்டில் ஒளிந்துக் கொண்டாள் அவள்

தோழி அவளிடம் சென்று, அடியே! இதற்காக ஏன் அச்சப்படுகிறாய்? பயப்படாதே. நீ அவன் சூடிய பூவைச் சூடியதால் உன் விருப்பத்தை நம் வீட்டவர் உணர்ந்து கொண்டிருப்பார்கள். அவர்களே உன்னை அவனுக்கு மணம் முடித்து வைப்பர் அதற்காக, முற்றத்தில் மணல் பரப்பி அணி செய்கின்றனர் வா என்று அழைத்துச் செல்கிறாள்.

பாலைத்திணை

பாலைக்கு என்று தனி நிலம் இல்லை. ஆனால்,

முல்லையும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்

சிலப்பதிகாரம்.

இதனால், காதலர் இடையே ‘பிரிவும், பிரிதல் நிமித்தமும்’ ஆக ஏற்படும் பெரும் துயரத்தையும் பாலைக்கு உரிமை படுத்தினர்.

ஆறலை கள்வரும், கொலையும் துன்பமும் வெம்மையும் இந்நிலத்துக்கு உரியத் தன்மைகள், பாலைத்திணைக்கு வேனில் காலம், மற்றும் பின்பனி காலம் பெரும்பொழுதுகளாகவும், நண்பகல் சிறுபொழுதாகவும் அமையும்.

பாலையின் முப்-பொருட்கள்

கடவுள்

கொற்றவை (துர்க்கை) (இப்பாலை நிலத்திற்குக் கடவுள் கொற்றவை எனத், தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர் கூறுகிறார்.)

மக்கள்

விடலை, காளை, மீளி, எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர்

புள்

புறா, பருந்து, எருவை, கழுகு

விலங்கு

செந்நாயும் வலிமை அழிந்த யானை, புலி

ஊர்

குறும்பு

நீர்

நீரில்லாகுழி, நீரில்லாகிணறு

பூ

குரா, மரா, பாதிரி

மரம்

உழிஞை, பாலை, ஓமை, இருப்பை

உணவு

வழிப்பறி பொருள், பதியில் கவர்ந்த பொருள்

பறை

துடி

யாழ்

பாலை யாழ்

பண்

பாலைப்பண்

தொழில்

வழிப்பறி

பெரும்பொழுது

இளவேனில், முதுவேனில், பின்பனி (சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, மாசி, பங்குனி)

சிறுபொழுது

நண்பகல்

உரிப்பொருள்

பிரிதலும், பிரிதல் நிமித்தமும் ( பொருள், போர், கல்வி முதலான புறப்பொருள் நிமித்தம் தலைவன் பிரிதலும், தலைவி வாடுதலும் )

 

 

பாலைத்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்துக் காட்டு: “பொருள்வயின் பிரிவு கடைக்கூடிய தலைவன் நெஞ்சுக்குச் சொல்லியது”

இதைத் தற்கால திரைப்படங்களிலும் நாம் காணலாம், தலைவன் தலைவி பிரிவின் போது பாடல் காட்சிகளைக் கண்டால் இது நன்கு விளங்கும் முள் மரங்கள், உடைந்த கட்டிடங்கள், பாலைவனம் எனக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டு இருக்கும்.

பாலைத்திணை

புறம் தாழ்வு இருண்ட கூந்தல் போதின்
நிறம்பெறும் ஈர்இதழ்ப் பொழிந்த உண்கண்
உள்ளம் பிணிக்கொண் டோன்வயின் நெஞ்சம்
செல்லல் தீர்க்கஞ் செல்வாம் என்னுஞ்
செய்வினை முடியாது எவ்வஞ் செய்தல்
எய்யா மையோடு இளிவுதலைத் தருமென
உறுதி தூக்கத் தூங்கி அறிவே
சிறிது நனி விரையல் என்னும் ஆயிடை
ஒளிறு ஏத்து மருப்பின் களிறுமாறு பற்றிய
தேய்புரிப் பழங்கயிறு போல
வீவது கோல்என் வருந்திய உடம்பே.

பாடல் பொருள்

தலைவியின் நினைப்பால் துயருற்று தலைவனின் நெஞ்சம் தவிக்கிறது. அதே நேரத்தில் பொருள் தேட வந்த வினை முடியாமல் திரும்பக் கடமை உணர்வு தடுக்கிறது.

காதல் நெஞ்சத்தையும் கடமை நெஞ்சத்தையும் இரு வலிய யானைக்கு ஒப்பிடுகிறார் புலவர். இரு யானையும் பற்றி இழுக்கும் தேய்ந்த பழங்கயிறு போல என் உடல் வருந்துகிறது என்று காதலா கடமையா என்று அருமையான உவமையோடு உரைக்கிறார்.

மருதத்திணை

மருதத்திணை-காதல் (அகத்திணை)

ருதம் என்பது வயலும் வயல் சார்ந்த நிலமும். இவை வளமான செந்நெல் விளையும் பகுதி என்பதால், இங்கே உழுவித்து உண்ணும் பெரும் செல்வர் வாழ்வது இயல்பு. இவர்கள் தம் வளமையால் காமத்தில் எளியராகி பரத்தமை மேற்கொள்ளுதல் நிகழ்வதாகும். இதனால் தலைவியர்க்கு ‘ஊடலும் ஊடல் நிமித்தமும்’ ஆக எழும் பேச்சுக்களும் இயல்பாகும். இது குறித்தே ஊடலும் ஊடல் நிமித்தமும் மருதத்திணைக்கு உரித்தாக்கினார்கள்.

மருதத்திணைக்கு ஆறு பருவங்களும் பெரும்பொழுதாகவும் விடியல் சிறுபொழுதாகவும் அமையும்.

மருதத்தின் கருப்பொருட்கள்:

கடவுள்

இந்திரன் ( காமன் )

மக்கள்

மள்ளர், ஊரன், மகிழ்நன், கிழத்தி, மனைவி, உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்

புள்

வண்டானம், மகன்றில், நாரை, அன்னம், பெருநாரை, கம்புள், குருகு, தாரா.

விலங்கு

எருமை, நீர்நாய்

ஊர்

பேரூர், மூதூர்

நீர்

ஆற்று நீர், கிணற்று நீர்

பூ

தாமரை, கழுனீர்

மரம்

காஞ்சி, வஞ்சி, மருதம்

உணவு

செந்நெல் அரிசி, வெண்ணெல் அரிசி

பறை

நெல்லரிகிணை, மணமுழவு

யாழ்

மருத யாழ்

பண்

மருதப்பண்

தொழில்

விழாச்செய்தல், வயற்களைகட்டல், நெல் அரிதல், கடாவிடுதல், குளம் குடைதல், புது நீராடல்

பெரும்பொழுது

சிறுபொழுது

வைகறையாகிய விடியல்

உரிப்பொருள்

ஊடலும், ஊடல் நிமித்தமும் (அகவொழுக்கப் பிரிவு * வேறொருத்தியோடு வாழ்ந்த தலைவனிடம் தலைவி பிணக்கிக்கொள்ளுதல்)

மருதத்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்துக்காட்டு: “பரத்தையின் பிரிந்து வந்த தலைமகனுக்குக் கிழத்தி சொல்லியது”

மருதத்திணை பாடல்:

தலைவனிடம் பரத்தை ஊடுதல்:

 குரு(கு) உடைத்(து) உண்ட வெள்அகட்டு யாமை

அரிப்பறை வினைஞர் அல்குமிசைக் கூட்டும்

மலர்அணி வாயில் பொய்கை ஊர!நீ

என்னை நயந்தனென் என்றிநின்

மனையோள் கேட்கின் வருந்துவள் பெரிதே

புலவி விராய பத்து,1 (ஐங்குறுநூறு)

புலவி என்பது தண்ணிடம் உறவு கொள்ளும் ஆணிடம் அந்த பெண் கொள்ளும் சிறிய பிணக்கு. 

பாடல் பொருள்

குளத்தில் வாழும் வெள்ளைநிற வயிற்றை உடைய ஆமையின் ஓட்டை உடைத்துக் குருகுப்பறவை உண்ணும். அப்போது அங்கு வயலில் நெல் அறுப்பவர் முழக்கும் பறையொலியைக் கேட்டு குருகு ஓடிவிடும்.

அந்த ஆமையை அந்தத் தொழிலாளிகள் எடுத்துச் சென்று தனக்கு உணவாக்கிச் சுவைத்து இன்புறுவர். 

அதைப் போல் நான் உன்னை விரும்பினேன் என்று உன் மனையாள் கேள்விப்பட்டால் மிகவும் வருந்துவாள் என்று பரத்தை ஊட்டுகிறாள்.

நெய்தல்திணை

கடலும் கடல் சார்ந்த பகுதிகள் நெய்தலுக்கு நிலமாகும். மீன் வளம் நாடி கடலிலே திமில் ஏறி செல்வது பெரும்பாலும் ஆடவர் தொழில் ஆதலின் அவர் குறித்த பொழுதில் திரும்பாத போது ‘இரங்கலும் இரங்கல் நிமித்தமும்’ ஆக எழும் பேச்சும் இந்நிலத்துக்கு இயல்பாயின.

நெய்தல் திணைக்கு ஆறு பருவங்களும் பெரும்பொழுதாகவும் எற்பாடு (பிற்பகல்) சிறுபொழுதாகவும் அமையும்.

நெய்தலின் முப்-பொருட்கள்

கடவுள்

வருணன் (வருள்+நன் =கடல் காற்று )

மக்கள்

சேர்ப்பன், புலம்பன், பரத்தி, நுழைச்சி, கொண்கண், துறைவன், நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர், அளவர், அளத்தியர்

புள்

கடற்காகம், அன்னம், அன்றில்

விலங்கு

சுறா, உமண் பகடு

ஊர்

பாக்கம், பட்டினம்

நீர்

உவர்நீர் கேணி, மணற்கேணி

பூ

நெய்தல், தாழை, முண்டகம், அடம்பம்

மரம்

கண்டல், புன்னை, ஞாழல்

உணவு

மீனும் உப்பும் விற்று பெற்றவை

பறை

மீன்கோட்பறை, நாவாய் பம்பை

யாழ்

விளரி யாழ்

பண்

செவ்வ்வழிப்பண்

தொழில்

மீன்பிடித்தல், உப்பு விளைத்தல், மீன் உணக்கல், பறவை ஓட்டுதல், கடலாடுதல்

பெரும்பொழுது

சிறுபொழுது

ஏற்பாடு

உரிப்பொருள்

இரங்கலும் இரங்கல் நிமித்தமும் (கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வோரது நிலை என்னி மனைவி கவலைப்படுவது இரங்கலாயிற்று. )

 

நெய்தல் திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்துக் காட்டு: “பகற்குறிக்கண் வந்த தலைவன் சிறைப்புறத்தான் ஆக தோழி தலைமகளுக்கு சொல்லுவாளாய் தலைமகனுக்கு சொல்லியது”

இக்கருப்பொருட்கள் அத் திணைக்குரிய சிறந்த பொருட்கள் என்றே கருத வேண்டும். இவையன்றி பிறவும் உள்ளன என்பதும் அவையும் இலக்கியங்களில் பயின்று வருதலும் உண்டு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

நெய்தற்திணை பாடல்:

புணர்ந்து நீங்கிய தலைவனைத் தோழி வரைவு கடாயது. – நக்கண்ணையார் 

இறவுப் புறத்து அன்ன பிணர் படு தடவு முதல்
சுறவுக் கோட்டன்ன முள் இலைத் தாழை,
பெருங் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு,
நல் மான் உழையின் வேறுபடத் தோன்றி,
விழவுக் களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப!

இன மணி நெடுந் தேர் பாகன் இயக்க,
செலீஇய சேறிஆயின், இவளே
வருவை ஆகிய சில் நாள்
வாழாளாதல் நற்கு அறிந்தனை சென்மே!

நற்றிணை

பாடல் பொருள்

இறாமீனின் புறம் போன்ற சருச்சரை பொருந்திய பெரிய அடியையுடைய சுறாமீனின் முகத்தில் நீண்டுள்ள கொம்புபோன்ற முட்களையுடைய இலையையுடைய தாழையானது, பெருங்களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு பெரிய களிற்றியானையின் மருப்புப்போன்ற அரும்பு முதிர்ந்து; நல்ல பெண்மான் தலைசாய்த்து நிற்றல் போல வேறாகத்தோன்றி; விழாவெடுக்கும் களமெல்லாம் கமழா நிற்கும் வலியநீரையுடைய கடற்பரப்பிற்குத் தலைவனே!; மிக்க மணிகள் கட்டிய நெடிய நினது தேரைப் பாகன் செலுத்தலாலே நின்னூர்க்குச் செல்லும் பொருட்டுப் போகாநின்றனை யாதலால், வருவையாகிய சின்னாள் பின்பு நீ வருவாய் என்று குறிப்பிட்ட சிலநாளளவும்; இவள் உயிர்வாழ மாட்டாள் என்பதை நன்றாக அறிந்துகொண்டு செல்வாயாக! 

களவுக் காலத்தில் தலைவனும் தலைவியும் உடலுறவு கொண்டனர். பின்னர் தன் ஊருக்கு மீளும் தலைவனிடம் தோழி கூறுகிறாள்.

தாழம்பூ மணம் கமழும் உரம் கொண்ட நீர்நிலைகளுக்குத் தலைவனே! மணிகள் பல ஒலிக்கும் தேரைப் பாகன் ஓட்டிச் செல்ல நீ செல்வாய். பின் மீள்வாய். நீ மீண்டும் வர சில நாள் ஆகும். அந்தச் சில நாள் கூட இவள் உன்னைப் பிரிந்து வாழமாட்டாள்.

இந்த உண்மையைத் தெரிந்துகொண்டு நீ செல்வாயாக. (எனவே திருமணம் செய்துகொண்டு உன்னுடன் ஆழைத்துச்செல்) – என்கிறாள்.

சங்க இலக்கியங்களில் அகத்திணை நூல்கள்

சங்க இலக்கியம் என்று அறிஞர்களால் தொகுக்கப்பட்ட நூல்கள் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் ஆகும். இவற்றுள்,

 எட்டுத்தொகைத் தொகுப்பில்:

 • அகநானூறு,
 • ஐங்குறு நூறு,
 • கலித்தொகை,
 • குறுந்தொகை,
 • நற்றிணை

ஆகிய ஐந்து நூல்களும் அகத்திணை நூல்கள்.

பத்துப்பாட்டுத்தொகுப்பில்:

 • குறிஞ்சிப்பாட்டு,
 • முல்லைப்பாட்டு

ஆகிய இரண்டு நூல்களும் அகத்தினை நூல்கள்.

இத் தொகுப்பில் உள்ள நெடுநல்வாடை, பட்டினப்பாலை ஆகிய இரு நூல்களையும்கூட அகத்திணை நூல்கள் என்று அறிஞர்கள் சிலர் எடுத்துக்கொள்கின்றனர்.

நன்றி, உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிண்றது.

 

Related Post

அகத்திணை - 8

அகரம் அகழாய்வில் ஒரே குழியில் 6 பானைகள் கண்டெடுப்பு

Posted by - ஆகஸ்ட் 7, 2020 0
  அகரம் அகழாய்வில் ஒரே குழியில் 6 பானைகள் கண்டெடுப்பு அகரத்தில் நடந்த அகழாய்வில் கிடைத்த பானைகள். திருப்புவனம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அகரம் அகழாய்வில் ஒரே…

கீழடி 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் இணைகிறது மதுரை காமராசர் பல்கலைக்கழகம்: துணைவேந்தர் கிருஷ்ணன் பேட்டி

Posted by - ஆகஸ்ட் 7, 2020 0
  கீழடி 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் இணைகிறது மதுரை காமராசர் பல்கலைக்கழகம்: துணைவேந்தர் கிருஷ்ணன் பேட்டி மதுரை பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன் (இடது) மதுரை கீழடி…
அகத்திணை - 12

கல்வெட்டு எழுத்துகள் கற்போம்

Posted by - ஏப்ரல் 19, 2020 0
கல்வெட்டு எழுத்துகள் கற்போம் கோயில்கள். வரலாற்றுக் கருவூலங்களுள் சிறப்பிடம் பெறுபவை. வரலாற்று ஆவணங்களான கலவெட்டுகளைத் தம்மகத்தே பொதித்து வைத்துள்ள களஞ்சியங்கள். நினைத்தவுடனே கல்வெட்டுகளைப் பார்க்க வாயில் திறந்து…
தமிழ் கல்வெட்டுகள்

கல்வெட்டு அமைப்புகள்

Posted by - அக்டோபர் 30, 2020 0
கல்வெட்டு அமைப்பு முனைவர் மா.பவானி உதவிப் பேராசிரியர்: கல்வெட்டியல் துறை கல்வெட்டின் அமைப்பினைக் கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம். 1. முகப்புரை (Preamble) 2. குறிப்புரை (Notification) 3. முடிவுரை…
பேகன் மனைவி கண்ணகி

பேகன் மனைவி கண்ணகி

Posted by - ஜூலை 5, 2019 0
புகழ்பெற்ற பேகன் ஆடல் கலையில் வல்ல ஒரு விறலியின் ஆட்டத்திலும் பாடலிலும் அவன் ஈர்ப்பு கொண்டான். இதை பற்றி விளக்கம் கேட்ட கண்ணகியை பேகன் ஒரு மாளிகைக்கு…

There are 3 comments

 1. முனைவர் கா செங்கோட்டையன் |

  விளக்கங்கள் அருமையாக உள்ளன.தெளிவாகவும் உள்ளன. பாராட்டுகள். ஒரு சிறு குறை- எழுத்துப் பிழைகள் நிறைய உள்ளன. செண்ணி, கடலாள், துள்ளியமாக, இறுக்கலாம், குற்ப்புகள், பிண்ணி, தமிழ்ர்களின், அறிய நூல்கள்

  Reply
 2. முனைவர் கா செங்கோட்டையன் |

  எழுத்துப் பிழைகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

  Reply

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன