அன்று வடகொரியாவில் இருந்து கடத்தப்பட்டு வேறொரு நபருக்கு விற்கப்பட்ட பெண்! இன்று அவர் எப்படி இருக்கிறார் தெரியுமா?
நான் கலங்கி அழுதேன். இது நியாயமில்லை. வட கொரியாவில் கணவரும், குழந்தைகளும் எனக்கு இருந்தபோது, நான் வேறு ஆண்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டேன். தவறானதொரு நாட்டில் பிறந்து விட்டதால், இத்தகைய துன்பத்தில் நான் சிக்குண்டேன்” என்று திருமதி பி தெரிவித்தார்.
2003ம் ஆண்டு சீனர் ஒருவருக்கு விற்கப்பட்டபோது, ‘திருமதி பி’-க்கு 36 வயது.
முதியவர் ஒருவருக்கு வேலைக்காரியாக வேலை செய்வார் என்று எண்ணிக்கொண்டு வட கொரியாவில் இருந்து சீனாவுக்கு இவர் எல்லை கடந்து சென்றார்.
வட கொரியாவில் இருந்து தப்பித்தல்
அவர் சீனாவில் வேலைக்காரியாக பணிபுரிவார் என்று தரகர் அவரிடம் தெரிவித்திருந்தார்.
ஆனால், அவர் சொல்லியது பெரியதொரு பொய்.
ஓராண்டு சீனாவில் வேலைக்காரியாக பணியாற்றி, பணம் சம்பாதித்த பின்னர் வட கொரியா சென்றுவிட வேண்டும் என்பது திருமதி பி-யின் நோக்கமாக இருந்தது.

இவ்வாறுதான் வட கொரியாவிலுள்ள தனது கணவரையும், இரு மகன்களையும் காப்பாற்ற வேண்டும் என்று அவர் எண்ணினார்.
புதிதாக ஒரு கணவரின மனைவியாக இருக்க வேண்டும் என்பது அவரது நோக்கமாக இருக்கவில்லை.
சீன ஆணுக்கு விற்பனை
சீனாவின் ஜீலின் மாகணத்திலுள்ள ச்சாங்ச்சுன் என்ற இடத்தில் திருமதி பி-யும், இன்னொரு வட கொரிய பெண்ணும் 5 சீன ஆண்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
அதன் பின்னர்தான் அந்த தரகர், “ஒரு சீனரோடு ஓராண்டு மட்டும் வாழ்ந்துவிட்டு, பின்னர் அவரை விட்டுவிட்டு சென்று விடலாம்” என்று திருமதி பி-யிடம் கூறினார்.
இப்போது வாழ்வில் நிகழ்ந்த அனைத்து இடையூறுகளை விவரிக்கும் திருமதி பி-யின் திரைப்படம் ஒன்று இயக்குநர் ஜிரோ யுன் என்பவரால் எடுக்கப்பட்டுள்ளது.

விற்கப்பட்ட நபரிடம் பாசத்தையும், நன்றியுணர்வையும் தான் உணர்ந்ததாக திருமதி பி தெரிவித்தார்.
தான் விற்கப்பட்ட சீனரிடம் எவ்வாறு பாசம் உருவாகிறது என்பதை பற்றியே “திருமதி பி, ஒரு வட கொரிய பெண்” என்ற இந்த திரைப்படத்தின் கதை களம் அமைந்துள்ளது.
இவர்கள் இருவரும் 10 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தார்கள்.
கடத்தல்காரி
தானே கடத்தப்பட்டு பாதிப்புக்குள்ளாக திருமதி பி, பின்னர் அவரே வட கொரிய பெண்களை கடத்தி வந்து விற்கும் நபராக ஆனார்.
பிபிசி கொரிய சேவைக்கு சமீபத்தில் அவர் வழங்கிய பேட்டியில், அவர் 50 பேரை கடத்தி கொண்டு வந்து விற்றுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
சீனா-வட கொரியா எல்லையை அவர் கடந்திருந்தார். பின்னர், சீன-லாவோஸ் எல்லையை கடந்து தென் கொரியா சென்றடைந்தார்.
இவற்றை எல்லாம் வட கொரியாவில் வாழ்ந்த அவரது குடும்பத்தை ஒன்றாக வைத்திருக்கவே அவர் செய்துள்ளார்.
ஆனால், வட கொரிய கணவரோடு அவர் வைத்திருந்த உறவு தோல்வியடைந்தது.
தென் கொரியா சுதந்திரமான நாடாக இருந்தபோதிலும், அவரை மகிழ்ச்சி படுத்துவதைவிட வெறுப்பை ஊட்டுவதாக அவர் கூறுகிறார்.
நிஜ வாழ்வில் இருந்து வெள்ளித்திரைக்கு
துரதிஷ்டவசமாக, அவருடைய வாழ்க்கை கதை வழக்கமற்ற ஒன்றல்ல.
வட கொரியாவின் கம்யூனிச ஆட்சியில் இருந்து தப்பிக்க முயலுகையில், அந்நாட்டு பெண்கள் பலர் அனுபவிப்பது மனித கடத்தலைதான்
இவ்வாறு சீன ஆண்களுக்கு விற்கப்பட்ட பல பெண்களும் அவர்களோடு வாழ்ந்து, குழந்தைகளை பெற்றெடுத்து, அங்கேயே வாழ்வதற்கு தொடங்கிவிடுகின்றனர்.

அதுபோல தென் கொரியாவுக்கு வருகின்ற பல வட கொரியர்களும் மிகவும் வருத்தப்படுகின்றனர். சிலர் வேறொரு நாட்டுக்கு இடம்பெயர்ந்து விடுகின்றனர்.
ஆனால், திருமதி பி தான் விற்கப்பட்ட சீனரை பற்றி உணர தொடங்கியது என்ன?
விற்கப்பட்ட மனிதரோடு எதிர்பாராத காதல்?
“அதனை பாசம் என நினைக்கிறேன். இரு மனிதர்களுக்கு இடையிலான பாசம்”
தான் விற்கப்பட்ட மனிதரோடு திருமதி பி கொண்டிருந்தது “காதலா” என கேட்கப்பட்டபோது அவர் இவ்வாறு பதிலளித்தார்.
“நான் இதனை காதல் என்று உண்மையிலேயே எண்ணவில்லை. அவர் மிகவும் புரிதலோடு நடந்து கொண்டார். மிக சிறந்த மனிதர்” என்று அவர் மேலும் கூறினார்.
சீனாவின் நாட்டுப்புறங்களில் அந்த கணவரோடு வாழ்ந்தபோது, அங்கு யாரும் பெரிதாக காதல் பற்றி பேசுவதில்லை என்று திருமதி பி கூறினார். காதல் பற்றிய பேச்சு வட கொரியாவிலும் அதிகமாக இருந்ததில்லை.
எடுக்கப்பட்டுள்ள திரைப்படத்தில் சீன கணவரோடு அவர் கொண்டிருந்த உறவு பற்றி அதிகமாக விவரிக்கப்படுகிறது.
தான் அவரிடம் விற்கப்பட்டபோதும், அவர் ஒரு நல்ல, அன்பான கணவராக இருந்ததாக திருமதி பி தெரிவித்தார்.
திருமதி பி கோபமாக இருக்கின்ற வேளையில், அவரை தேற்றி சாந்தப்படுத்த முயல்பவராக இந்த திரைப்படத்தில் சீனர் காட்டப்படுகிறார். .
சீன-லாவோஸ் எல்லையை கடந்து செல்ல இந்த சீனக் கணவர் உதவுகிறார். திருமதி பி தென் கொரியா சென்றடைந்து குடியேறிய பின்னர், தன்னையும் தென் கொரியா அழைத்து கொள்வார் என்றும் இந்த சீனர் நம்புகிறார்.
மனித கடத்தலும், எதிர்பாராத காதல் உணர்வை ஏற்படுத்த முடியும் என்ற கருத்தால் இந்த திரைப்படத்தை பார்க்கிறவர்கள் சற்றே குழப்பம் அடைந்துள்ளனர்.
“நான் அவரோடு வாழ்ந்து குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், வட கொரியாவிலுள்ள தனது குந்தைகளுக்காக அவ்வாறு செய்ய வேண்டாம் என எண்ணுவதாக நான் அவரிடம் கூறியபோது, அவர் சரியென கூறிவிட்டார். மிகுந்த நன்றியுணர்வுவோடு அவரை பார்த்தேன். யார்தான் இந்த உணர்வை பெற மாட்டார்கள்” என்று திருமதி பி தெரிவித்தார்.

என்னால்தான் இந்த மனிதருக்கு குழந்தை இல்லாமல் பேகிறது என்பதால், அவர் காலமாகும்போது எனது குழந்தைகளும், நானும் அவரது அருகில் இருந்து கவனித்துகொள்ள வேண்டும் என்ற பொறுப்புணர்வு எனக்கு ஏற்பட்டது” என்று திருமதி பி வெளிப்படுத்தினார்.
திரைப்படத்தில் விடுப்பட்டது என்ன?
திருமதி பி வட கொரியாவில் வாழ்ந்து வந்த தனது குழந்தைகளையும், கணவரையும் சீனாவுக்கு அழைத்து வந்தது உண்மையிலேயே நடந்தது.
ஆனால், இது இவரது வாழ்க்கையை விவரிக்கும் திரைப்படத்தில் இடம்பெறவில்லை.
2009ம் ஆண்டு அவரது மூத்த மகனை சீனாவுக்கு அழைத்து வந்தார். தாயோடும், சீன கணவரோடு 3 ஆண்டுகள் வாழ்ந்த மூத்த மகனுக்கு அவ்வளவாக ஒத்துப்போகவில்லை.
எனவே, முத்த மகன் தென் கொரியா செல்ல திருமதி பி உதவினார்.
2013ம் ஆண்டு தன்னுடைய இளைய மகனையும், வட கொரிய கணவரையும் தென் கொரியா செல்ல உதவினார். அவர்கள் தென் கொரியா செல்வதற்கு முன்னால் சீனா வந்து, திருமதி பி-யோடும், சீன கணவரோடும் 40 நாட்கள் தங்கியிருந்தனர்.
நான், சீன கணவர், வட கொரிய கணவர், இளைய மகன் நாங்கள் ஒன்றாக ஒரே அறையில் தூங்கினோம்” என்று திருமதி பி கூறினார்.
இது காதல் உணர்வு என்று நீங்கள் சொல்லமாட்டீர்களா!! என்று நகைச்சுவை உணர்வோடு அவர் குறிப்பிட்டார்.
“கடத்தப்பட்டவர்களில் ஒருவராக”
வட கொரியாவில் இருந்து தப்பிசெல்லும் அந்நாட்டு பெண்களில் 80 சதவீதத்தினர் ஆட்கடத்தலை அனுபவிப்பதாக கூறுகிறார் திருமதி பி.
அவ்வாறு கடத்தப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.
(வட கொரிய பெண்களில் எத்தனை பேர் கடத்தப்பட்டு தங்கள் நாட்டை வந்தடைகிறார்கள் என்பது தொடர்பாக தென் கொரியா, வட கொரியா மற்றும் சீனா நாடுகளிடம் எவ்வித அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களும் இல்லை)
வட கொரிய பெண்களை சீனாவில் விற்கின்ற கடத்தல்காரியாக உடனடியாக திருமதி பி உருவாகவில்லை.
தொடக்கத்தில் அவர் ஒரு பால் பண்ணையில் வேலை செய்தார். மாதத்திற்கு 9 அமெரிக்க டாலருக்கு சமமான தொகையை சம்பாதித்தார்.
இரண்டு ஆண்டுகள் இந்த பால்பண்ணையில் வேலை செய்த அவர், தரகருக்கு பணம் கொடுத்து வட கொரிய குடும்பத்தை சீன-வட கொரிய எல்லையில் சந்தித்தார்.
வட கொரிய பெண்கள் கடத்தல்
தனது வட கொரிய கணவர் மிக மோசமான தோற்றம் அடைந்திருந்ததை கண்டு திருமதி பி அதிர்ச்சியடைந்தார். அதனால்தான் வட கொரிய பெண்களை கடத்தி விற்கின்ற தொழிலை மேற்கொள்ள ஆரம்பித்தார்.
“எனது குடும்பத்தை பாதுகாப்பதற்காக நான் ஏதாவது செய்ய வேண்டுமென எண்ணினேன்” என்ற அவர், “நான் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும். ஆனால், அந்நேரத்தில் என்னிடம் குடியுரிமை இல்லை. அடையாளம் எதுவும் இல்லை. அதிக தொகை சம்பாதிக்க என்னிடம் பல தேர்வுகள் இல்லை” என்றார்.
2005 முதல் 2010ம் ஆண்டு வரை சுமார் 50 வட கொரிய பெண்களைகடத்தி வந்து சீன ஆண்களுக்கு அவர் விற்றுள்ளார்.
இதனை ஆட்கடத்தல் என்பதை ஒப்புக்கொள்ளும் அவர், 2003ம் ஆண்டு தரகர் அவரை ஏமாற்றியதைபோல அந்த பெண்களை தான் ஏமாற்றவில்லை என்பதை வலியுறுத்தினார்.
அந்த பெண்கள் தாங்கள் சீனருக்கு விற்கப்படுவதற்கு சம்மதம் தெரிவித்தனர். இந்த வகையில். அந்த பெண்களின் வாழ்க்கைக்கு உதவியுள்ளதாக அவர் கூறினார்.
“வட கொரியாவில் இருந்து தப்பி வந்த பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் யாரும் இருப்பதில்லை. அவர்களுக்கு ஒரு துணையாக ஆண் ஒருவரை நான் ஏற்பாடு செய்தால், அந்த பெண்கள் திருமணம் செய்துகொண்டு பாதுகாப்பான வாழ்க்கை வாழலாம். அவர்கள் தெருக்களில் வாழ்ந்தால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர். அதனை அவர்கள் விரும்பவில்லை” என்று திருமதி பி கூறினார்.
அவரும், விற்கப்படுகின்ற அந்த பெண்ணும் கிடைக்கின்ற பணத்தை பாதி பாதியாக பிரித்துக்கொள்வர் என்று திருமதி பி மேலும் கூறினார்
விற்கப்படுகின்ற பெண்களின் கோரிக்கைகளான, ஒவ்வொரு மாதமும் வட கொரியாவிலுள்ள இந்த பெண்களின் குடும்பத்திருக்கு பணம் அனுப்புவது போன்ற திருமண நிபந்தனைகளை சீன குடும்பத்தினரிடம் சீன மொழியில் மொழிபெயர்த்து திருமதி பி தெரிவிப்பார்.
இவ்வாறு செய்வது குற்றமென அவர் உணர்ந்தாரா? முன்னர் கடத்தப்பட்ட அவரே இப்போது ஆட்களை கடத்தி விற்பவராக செயல்படுகிறாரே?
இந்த கேள்விக்கு “வட கொரியாவிலுள்ள எல்லா பெண்களும் இந்த ஆட்கடத்தலை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தேன்” என்று பதிலளித்தார் திருமதி பி.
“நான் ஏமாற்றப்பட்டேன், ஆனால், தாங்கள் எதற்காக கடத்தப்படுகிறோம் என்பது இந்த பெண்களுக்கு தெரியும். அவர்களுக்கு மனவருத்தம் இருந்திருக்கலாம். ஆனால், என்னைபோல இருந்திருக்க வாய்ப்பில்லை” என்று அவர் கூறினார்.
பெண்களோடு ஒத்துழைத்தல்
வட கொரிய பெண்களை சீன ஆண்களுக்கு விற்பனை செய்ததோடு, வட கொரியாவில் இருந்து தென் கொரியாவுக்கு ஆட்களை அனுப்புகின்ற தரகராகவும் திருமதி பி செயல்பட்டார்.
குறைந்தது 50 வட கொரியர்களை தென் கொரியாவுக்கு அனுப்பியுள்ளதாக அவர் கூறினார். அந்நேரத்தில் அவர்களோடு ஒருவராக உணர்வுபூர்வமாக செயல்பட்டதாக அவர் கூறினார்.
“இரண்டு மாதங்களுக்கு முன்னால், எனது இளைய மகன் பயன்படுத்திய பாதையையே நான் பயன்படுத்தினேன். அது கடினமான பாதை என்பதால் அதிக ஆப்பிள்களை பையில் எடுத்துக்கொள்ள வேண்டுமென அவன் என்னிடம் கூறியிருந்தான்” என்று அவர் நினைவுகூர்ந்தார்.
இது எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை என்னால் விளக்க முடியவில்லை. உயிர் வாழ்வதற்கு இத்தகைய கஷ்டங்களை வட கொரியர்கள் ஏன் அனுபவிக்க வேண்டும் என எண்ணியபோது, எனது இதயமே வெடித்துவிடும்போல இருந்தது.
வாகனம், நடந்து, டிராக்டர் மூலம் சீனாவில் இருந்து ஆசிய தென் கிழக்கு நாட்டுக்கு தப்பி சென்றபோது திரைப்பட இயக்குநர் ஜிரோ யுன் திருமதி பி-யோடு உடன் சென்றார்.
ஒரேயொரு கேமராவோடு ஆவேசமான இந்த பயணத்தின் எல்லா விவரங்களையும் காட்சிப்படுத்துவது எனக்கு உடலளவில் சவால்மிக்கதாக விளங்கியதாக பிபிசி கொரியா சேவையிடம் அவர் கூறினார்.
குழந்தையை மயங்க வைத்தல்
“என்னால் அதிகமாக படம் பிடிக்க முடியாவிட்டாலும், என்னுடைய முழு வாழ்விலும் இதுவொரு மிக பெரிய பாடம்” என்று அவர் கூறியுள்ளார்.
தப்பிச்செல்லும் கூட்டத்தினர் சீன-லாவோஸ் எல்லையை நடந்து கடக்கின்றபோது, அவர்களிடம் இருந்த குழந்தை ஒன்று அழத் தொடங்கியதும் அனைவரும் பீதியடையும் காட்சி இந்த திரைப்படத்தில் உள்ளது.
அதன் பின்னர் நடந்தது வெள்ளித்திரையில் இல்லாவிட்டாலும் அந்த குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்து அமைதி படுத்தியதாக திருமதி பி வெளிப்படுத்தியுள்ளார்.
எல்லையை கடக்கும் அத்தனை பேரும் மாட்டிக்கொள்வார்கள் என்பதால், அவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை என்றார் அவர்.

லாவோஸிலிருந்து பாங்காங் செல்கிறபோது, அதிகாரிகளின் கைகளில் பிடிபடாமல் தப்பிக்க, டிராக்டரின் பின்பக்கத்தில் படுத்துகிடந்து பயணம் மேற்கொண்டனர்.
இந்த பகுதி திரைப்படத்தில் உள்ளது. திரைப்பட இயக்குநர் யுன்னும், அவ்வாறு படுத்துக்கிடந்து தெளிவான நீலவானத்தை படம் பிடித்து கொண்டிருப்பதை திரைப்படத்தில் காணமுடிகிறது.
சோகமான முடிவு
தென் கொரியாவிற்கு சென்று குடியேறிய பின்னர், தனது சீன கணவரை அழைத்து கொள்வதாக திருமதி பி வாக்குறுதி அளித்திருந்தார், ஆனால், அது நிறைவேறவில்லை.
2014ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் தென் கொரியாவை வந்தடைந்தார். விசாரிக்கப்பட்டபோது, அவர் உளவாளியாக இருப்பார் என்று தென் கொரிய உளவுத்துறை அதிகாரிகள் சந்தேகப்பட்டனர்.
வட கொரியாவில் “ஐஸ்” என்ற அறியப்படுகின்ற வட கொரிய போதைப்பொருளை சீனாவில் ஒரு முறை அவர் விற்பனை செய்திருந்தார். இதுவே அவர் உளவாளியாக இருக்கலாம் என்று சந்தேகப்படுவதற்கு காரணமாயிற்று.
அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஒருமுறை இவ்வாறு செய்ததை திருமதி பி ஒப்புக்கொண்டார்.
ஆனால், அந்த விற்பனை மூலம் கிடைத்த லாபம் வட கொரிய அரசுக்கு சென்றதாக தென் கொரிய உளவுத்துறை அதிகாரிகள் குற்றஞ்சாட்டியதால், அவர் உளவாளியாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டை அவர் பலமாக மறுத்துள்ளார்.
மேலும், திருமதி பி-யையும், அவரது கணவரையும் பாதுகாப்பற்ற வட கொரியர் என்று தென் கொரிய அரசு வரையறை செய்தது.
இதனால் மீள்குடியிருப்பு தொகை, வீட்டுச் சலுகைகள் மற்றும் தொழிற்பயிற்சிகள் போன்றவற்றுக்கு அவர்கள் தகுதியற்று போயினர்.
குற்றப் பின்னணி உடையவர்கள், சீனாவில் குறைந்தது 10 ஆண்டுகள் வாழ்ந்தவர்கள் அல்லது வட கொரியாவில் இருந்து தப்பியோடி வந்த ஓராண்டுக்குள் தஞ்சக் கோரிக்கை விண்ணப்பிக்காதவர்கள் என வட கொரியாவில் இருந்து தப்பியோடியவர்களுக்கு “பாதுகாப்பில்லாதவர்” என்ற நிலையை தென் கொரியா வழங்குகிறது.
இருவரும் சட்டப்பூர்வமற்ற போதைப்பொருளை விற்றதால், “பாதுகாப்பற்றவர்கள்” என்ற நிலையை திருமதி பி-க்கும், அவரது கணவருக்கும் வழங்கியுள்ளதாக நியூஸ் தாபா என்ற தென் கொரிய ஊடகத்திடம் தென்கொரிய ஒன்றிப்பு அமைச்சகம் தெரிவித்த்து.
தனது கணவர் இந்த போதைப்பொருளை தொட்டதுகூட கிடையாது என்கிறார் திருமதி பி.
மேலும், அவ்வாறு சம்பாதித்த பணத்தை தான் செலவுசெய்து விட்டதால், நான் உளவாளியாக செயல்பட்டதாக சநதேகிக்க தென் கொரிய உளவுத்துறை அதிகாரிகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று அவர் கூறினார்.
இவருவரும் தென் கொரிய அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர்.
அவற்றுக்கு மத்தியில், திருமதி பி-யின் சீனக் கணவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
நண்பர்களாக…
ஆனால், பேட்டியளித்தபோது, ஒவ்வொரு நாளும் கலையில் சீனக் கணவர் அனுப்புகிற குறுந்தகவல்களை காட்டி, அவர்கள் இருவரும் நண்பர்களாக உறவை தொடர்வதாக திருமதி பி தெரிவித்தார்.
இந்த திரைப்படத்தின் புகைப்படங்களையும் திருமதி பி அவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
“பெரும்பாலான வேளைகளில் அவரது குறுந்தகவல்கள் எல்லாம் மன்னிப்பு வேண்டி அனுப்பப்பட்டதாக இருக்கும். அவருடைய குறுந்தகவல்தான் என்னை காட்டிக்கொடுத்துவிட்டது என்பதால்தான் அவ்வாறு செய்கிறார்” என்று திருமதி பி குறிப்பிடுகிறார்.
இப்போது திருமதி பி சியோலின் கிழக்கிலுள்ள யோங்பியோங்கில் ஒரு தேனீர் கடையில் தேனீர் விற்பவராக வேலை செய்து வருகிறார்.
பணம் கிடைக்கும் என்பதால்தான் இயக்குநர் யுன்னிடம் தனது வாழ்க்கையை படம்பிடிக்க ஒப்புக்கொண்டதாக அவர் கூறுகிறார்.
“அப்போது பணம்தான் எல்லாமுமாக எனக்கு இருந்தது. இப்போது நான் அவ்வாறு நினைக்கவில்லை” என்கிறார் அவர்.
“நான் எல்லாவற்றையும் எனது குழந்தைகளுக்காக தியாகம் செய்தேன். ஆனால் இப்போது, எனக்கு 50 வயது கடந்துவிட்டது.
இனி எனக்காக, எனது மகிழ்ச்சிக்காக வாழ விரும்புகிறேன். இனிமேல் ஆட்கடத்தலுக்கும், கடத்தலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இருக்கபோவதில்லை” என்கிறார் திருமதி பி.
– BBC – Tamil
மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்
அன்று வடகொரியாவில் இருந்து கடத்தப்பட்டு வேறொரு நபருக்கு விற்கப்பட்ட பெண்! இன்று அவர் எப்படி இருக்கிறார் தெரியுமா? Source link