ஆசாரக்கோவை விளக்கம்
ஆசாரக்கோவை விளக்கம் PDF மற்றும் eBook வடிவத்தில் 100 பாடல்களுக்கும் பதிவிறக்கம் செய்ய மற்றும் ஆசாரக்கோவை பற்றி மேலும் தெறிந்து கொள்ள…
இந்த பதிவில் ஆசாரக்கோவை பாடல் 21 முதல் 40 வரை பொருளுடன் பார்க்கலாம்…
21. ஒழுக்கம் பிழையாதவர் செய்வது
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை
இவர்க்கூண் தொடுத்தல்லால் உண்ணாரே என்றும்
ஒழுக்கம் பிழையா தவர்.
பொருள் விளக்கம்:
ஒழுக்கம் பிழையாதவர் தாங்கள் உண்ணும் முன் தங்களின் மூத்தோர் பறவை (காகம்), விலங்கு (பசு, நாய்) பசியை பொறுக்க முடியாத வயது முதிர்ந்தோர், குழந்தைகள், மற்றும் வீட்டுக்கு வந்த விருந்தாளி ஆகிய அனைவருக்கும் உணவு அளித்த பின்னர் தான் உணவு உண்பர்.
22. பிற திசையும் நல்ல
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
ஒழிந்த திசையும் வழிமுறையால் நல்ல
முகட்டு வழியூண் புகழ்ந்தார் இகழ்ந்தார்
முகட்டு வழிகட்டில் பாடு.
பொருள் விளக்கம்:
முன் சொன்ன கிழக்கு திசை நோக்கி உண்ண இயலாவிட்டால் மற்ற திசை நோக்கி உண்ணலாம், வாசற்படிக்கு நேராக கட்டில் இட்டு தூங்குவது கூடாது.
23. உண்ணக்கூடாத முறைகள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கிடந்துண்ணார் நின்றுண்ணார் வெள்ளிடையும் உண்ணார்
சிறந்து மிகவுண்ணார் கட்டில்மேல் உண்ணார்
இறந்தொன்றும் தின்னற்க நின்று.
பொருள் விளக்கம்:
படுத்துக்கொண்டோ, சாய்ந்துகொண்டோ உணவு உண்ணக்கூடாது, அறிமுகம் இல்லாத வெளியிடத்தில் உணவு உண்ணக்கூடாது. சுவையாக இருப்பதால் அதிக உணவு உண்ணக்கூடாது, கட்டில் மேல் அமர்ந்து உணவு உண்ணக்கூடாது.
பாடல் 18 கூறிய முறை தவறி உண்ணக்கூடாது. இப்படி தவறி உண்பதற்க்கு உண்ணாமல் இருப்பது நலம்.
24. பெரியோருடன் இருந்து உண்ணும் முறை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
முன்துவ்வார் முன்னெழார் மிக்குறார் ஊணின்கண்
என்பெறினும் ஆற்றவலம் இரார் தம்மிற்
பெரியார்தம் பாலிருந்தக் கால்.
பொருள் விளக்கம்:
நம்மைவிட பெரியவர்கள் உடன் உண்ணும் போது, பந்திக்கு முந்தக்கூடாது, அவர்கள் உணவு உண்ணும் முன் நாம் ஆரம்பிக்கக்கூடாது, அவர் சாப்பிட்டு முடித்து எழும் முன் நாம் எழக்கூடாது, அவர்கள் அருகில் அமர்ந்து உண்ணக்கூடாது. எத்தனை செல்வம் பெறினும் அவர்களின் வலம் இருந்து உணவு உண்ணக்கூடாது.
25. கசக்கும் சுவை முதலிய சுவையுடைய பொருள்களை உண்ணும் முறைமை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கைப்பன எல்லாம் கடைதலை தித்திப்ப
மெச்சும் வகையால் ஒழிந்த இடையாகத்
துய்க்க முறைவகையால் ஊண்.
பொருள் விளக்கம் :
நாம் உண்ணும் உணவு இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, காரம், கசப்பு ஆகிய அறுசுவை உள்ளது.
உணவு நன்கு ஜீரணம் ஆக எச்சில் நன்கு ஊற முதலில் இனிப்பு சாப்பிட வேண்டும். கசப்பு சுவை உண்ட பிறகு மற்ற சுவை நன்கு சுவைப்பதில்லை, பிடிப்பதில்லை.
ஆதலால் கசப்பு சுவையை கடைசியில் உண்ண வேண்டும். மற்ற சுவைகள் நடுவில் உண்ண வேண்டும்.
26. உண்ணும் கலங்களைக் கையாளும் முறை
(இன்னிசை வெண்பா)
முதியவரைப் பக்கத்து வையார் விதிமுறையால்
உண்பவற்றுள் எல்லாஞ் சிறிய கடைப்பிடித்து
அன்பில் திரியாமை ஆசாரம் நீங்காமை
பண்பினால் நீக்கல் கலம்.
பொருள் விளக்கம்:
நம் வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு, வயதில் பெரியவருடன் பக்கத்தில் அமர்ந்து உண்ணக்கூடாது. (அதாவது அவருக்கு தேவையானதை உண்ட பிறகு நாம் உண்ண வேண்டும்).
அவர்களுக்கு சிறிய பாத்திரம், சிறிய இலை கொடுத்து நாம் பெரிய பாத்திரத்தில், பெரிய இலையில் அமர்ந்து சாப்பிடக்கூடாது. அன்புடன் பரிமாறி, ஆசாரம் மாறாமல் அமர்ந்து உண்டு,
அவருண்ட பாத்திரத்தை நாம் எடுத்து அவருக்கு தக்க மரியாதை செய்து உபசரிப்பதே சிறந்த முறை ஆகும்.
27. உண்டபின் செய்ய வேண்டியவை
(பஃறொடை வெண்பா)
இழியாமை நன்குமிழ்ந்து எச்சில் அறவாய்
அடியோடு நன்கு துடைத்து வடிவுடைத்தா
முக்கால் குடித்துத் துடைத்து முகத்துறுப்பு
ஒத்த வகையால் விரலுறுத்தி வாய்பூசல்
மிக்கவர் கண்ட நெறி.
பொருள் விளக்கம்:
உணவு உண்டபின் உணவை துப்பக்கூடாது, வாயை நன்றாக் நீர் விட்டு கொப்பளித்து, எச்சில் நீங்க சுத்தம் செய்ய வேண்டும். இது போல் மூன்று முறை செய்ய வேண்டும். பிறகு வாய் வெளியில் துடைத்து, முகத்தில் இருந்ததையும் துடைத்து முகம் வடிவம் பெற செய்து,
முகத்தில் உள்ள மற்ற உறுப்புகளான மூக்கு, கண் கழுவி, விரலால் துடைத்து வாய் துடைப்பதே அறிவு நிறைந்தவர்கள் கண்ட ஆரோக்கியமான வழக்கம் ஆகும்.
28. நீர் குடிக்கும் முறை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
இருகையால் தண்ணீர் பருகார் ஒருகையால்
கொள்ளார் கொடாஅர் குரவர்க்கு இருகை
சொறியார் உடம்பு மடுத்து.
பொருள் விளக்கம்:
இரண்டு கையால் முகர்ந்து எடுத்த நீரை பருகக்கூடாது, பெரியவர் கொடுக்கும் பொருளை ஒரு கையால் வாங்கக்கூடாது, அவருக்கு ஒரு கையால் எந்த ஒரு பொருளையும் கொடுக்கக்கூடாது. இரண்டு கைகளாலும் உடம்பை சொறியக்கூடாது.
29. மாலையில் செய்யக் கூடியவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
அந்திப் பொழுது கிடவார் நடவாரே
உண்ணார் வெகுளார் விளக்கிகழார் முன்னந்தி
அல்குண்டு அடங்கல் வழி.
பொருள் விளக்கம் :
மாலைப்பொழுதில் தூங்கக்கூடாது, வெளி இடங்களுக்கு நடந்து செல்லக்கூடாது (இருட்டு நேரம் ஆதலால் விஷப்பூச்சிகள், பாம்பு போன்றவரை தாக்காமல் இருப்பதற்காக நடந்து செல்லக்கூடாது), பகலும் இரவும் சந்திக்கும் சந்தி வேளையில் உணவு உண்ணக்கூடாது,
யாரிடமும் கோபப்படக்கூடாது. முன் அந்தியில் அதாவது முதல் சாமத்தில் 6 -9 மணி வரை விளக்கு ஏற்றி, இரவு உணவு உண்டு, வெளிடங்களுக்கு செல்லாமல் வீட்டில் அடங்கி இருப்பது மூத்தோர் சொன்ன நல் வழியாகும்.
30. உறங்கும் முறை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கிடக்குங்கால் கைகூப்பித் தெய்வம் தொழுது
வடக்கொடு கோணம் தலைசெய்யார் மீக்கோள்
உடற்கொடுத்துச் சேர்தல் வழி.
பொருள் விளக்கம்:
தூங்கும் முன் கைகூப்பி இறைவனை தொழுது, வடக்கு திசை தலை வைக்காமல், வெறும் உடம்போடு படுக்காமல் உடல் மீது போர்வை போர்த்தி படுப்பது மூத்தோர் சொன்ன நல் வழியாகும்.
31. இடையில் செல்லாமை முதலியன
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
இருதேவர் பார்ப்பார் இடைபோகார் தும்மினும்
மிக்கார் வழுத்தில் தொழுதெழுக ஒப்பார்க்கு
உடன்செல்லல் உள்ளம் உவந்து.
பொருள் விளக்கம்:
இரண்டு தெய்வங்களுக்கு இடையில், இரண்டு அறிவுடைய சான்றோரற்கு இடையில் போகக்கூடாது, தும்பும் போது இறைவனை நினைக்கவேண்டும், பெரிய மனிதர்கள் வாழ்த்தும் போது அவர்களையும் வணங்க வேண்டும். நம்முடன் ஒத்த குணம் உள்ள நண்பர்கள் உடன் மனம் உவந்து செல்ல வேன்டும்.
32. மலம், சிறுநீர் கழிக்கக்கூடாத இடங்கள்
(இன்னிசை வெண்பா)
புற்பைங்கூழ் ஆப்பி சுடலை வழிதீர்த்தம்
தேவ குலம்நிழல் ஆநிலை வெண்பலிஎன்று
ஈரைந்தின் கண்ணும் உமிழ்வோடு இருபுலனும்
சோரார் உணர்வுடை யார்.
பொருள் விளக்கம் :
கால்நடைகள் மேயும் பசும்புற்கள் நிறைந்த பகுதிகளிலும், உண்ணும் பொருள் விளையும் விளை நிலத்திலும், நல்ல காரியங்களுக்கு பயன்படும் பசும் சாணத்தில் மேலும் , சுடுகாட்டிலும், பலர் செல்லும் வழியிலும், பலர் பயன்படுத்தும் நீர் நிலைகளிலும், வழிபாடு செய்யும் இடங்களிலும், ஒருவர் இளைப்பாற நிழல் தரும் மரத்தின் கீழும்,
ஆடு மாடுகள் அடைத்து வைக்கும் இடங்களிலும், உரமாக, வீட்டு பொருள்கள் தூய்மை செய்ய பயன்படும் சாம்பலின் மேல் ஆகிய பத்து இடங்களில் நல்ல உணர்வுடையவர்கள் எச்சில் உமிழ்தல் , மலம், சிறுநீர் கழித்தல் செய்ய மாட்டார்கள்.
33. மலம் சிறுநீர் கழிக்கும் முறை
(குறள் வெண்பா)
பகல்தெற்கு நோக்கார் இராவடக்கு நோக்கார்
பகல்பெய்யார் தீயுனுள் நீர்.
பொருள் விளக்கம்:
மலம், சிறுநீர் கழிக்கும் போது பகலில் தெற்கு நோக்கி அமர கூடாது. இரவில் வடக்கு நோக்கி அமரக்கூடாது. புணித தீயில் பகல் பொழுதில் நீர் ஊற்றி அணைக்கக்கூடாது.
34. மலம், சிறுநீர் கழிக்கும் திசை
(இன்னிசை வெண்பா)
பத்துத் திசையும் மனத்தான் மறைத்தபின்
அந்தரத்து அல்லால் உமிழ்வோடு இருபுலனும்
இந்திர தானம் பெறினும் இகழாரே
தந்திரத்து வாழ்துமென் பார்.
பொருள் விளக்கம்:
எட்டு திசையும், ஆகாயம், பூமி ஆகிய பத்து திசைகளும் மறைத்த பின், அந்தரத்தில் இருப்பதாக நினைத்து, உமிழ் நீர், மலம், சிறுநீர் ஆகியவை கழிக்க வேண்டும்.
கழிக்கும் பொது இந்திர பதவியே கிடைப்பதாய் இருந்தாலும் அடுத்தவருக்கு தெரியும் வண்ணம் வெளிப்படையாக செய்யக்கூடாது. அதில் இருந்து விலகாமல் கழிப்பது நூலோர் கண்ட வாழ்வு முறை என்பர் பெரியோர்.
35. வாய் அலம்பாத இடங்கள்
(இன்னிசை வெண்பா)
நடைவரவு நீரகத்து நின்றுவாய் பூசார்
வழிநிலை நீருள்ளும் பூசார் மனத்தால்
வரைந்துகொண் டல்லது பூசார் கலத்தினால்
பெய்பூச்சுச் சீரா தெனின்.
பொருள் விளக்கம்
நடந்து கொண்டே இருக்கும் போது வாய் அலம்பக்கூடாது, ஓடாமல் ஒரு இடத்தில் தேங்கி உள்ள பாசி படிந்த நீரிலும் வாய் அலம்பக்கூடாது.
நாம் செல்லும் வழியில் கண்ணில் பட்ட நீர் நிலைகளில் அந்த நீரின் தன்மை அறியாது அந்த நீரிலும் வாய் அலம்பக்கூடாது. (வேறு யாராவது உபயோகம் செய்கிறார்களா, ஆடு மாடு மற்ற விலங்குகள் அந்த நீரை அருந்துகிறதா என்று பார்த்து அதை பயன்படுத்த வேண்டும்).
கலத்தில் (பாத்திரத்தில்) முகர்ந்து வாய் அலம்பும் போது பிறர் மீது நீர் தெறிக்கும் படி வாய் அலம்பக்கூடாது.
36. ஒழுக்க மற்றவை
(பஃறொடை வெண்பா)
சுடரிடைப் போகார் சுவர்மேல் உமியார்
இடரெனினும் மாசுணி கீழ்தம்மேற் கொள்ளார்
படைவரினும் ஆடை வளியுரைப்பப் போகார்
பலரிடை ஆடை உதிராரே என்றும்
கடனறி காட்சி யவர்.
பொருள் விளக்கம்:
ஒரு மனிதனுக்கும் விளக்குக்கும் இடையே உள்ள இடைவெளியில் நடந்து செல்லக்கூடாது. சுவர் மேல் உமிழக்கூடாது.
குளிரால் துன்பப்பட்டாலும் அடுத்தவர் பயன்படுத்திய படுக்கை விரிப்பு, போர்வையை பயன்படுத்தக்கூடாது.
மிகப் பெரிய ஜனநெரிசலிலும் நம் ஆடை (வேட்டி சேலை தலைப்பு, முந்தாணி ) அடுத்தவர் மேல் படும் வண்ணம் நடக்கக்கூடாது. பலர் முன் நம் ஆடையை உதரக்கூடாது.
இதுவே நற்கடமைகள் அறிந்த அறிவாளிகளின் செயல் ஆகும்.
37. நரகத்துக்குச் செலுத்துவன
(நேரிசை வெண்பா)
பிறர் மனை கள்களவு சூது கொலையோடு
அறனறிந்தார் இவ்வைந்து நோக்கார் – திறனிலரென்று
எள்ளப் படுவதூஉம் அன்றி நிரயத்துச்
செல்வழி உய்த்திடுத லால்.
பொருள் விளக்கம்:
அறிவு நிறைந்த பெரியோர்கள்,
- மாற்றான் மனைவி,
- போதை தரும் மது,
- உள்ளதை இழக்கச்செய்யும் சூது,
- அடுத்தவர் பொருளை கொள்ளை அடித்தல்
- கொலை
ஆகிய ஐந்தும் தவறியும் செய்ய மாட்டார். இதை செய்தால் நல்ல குணம்/ ஒழுக்கம் இல்லாத ஆண்மைத் திறன் இல்லாதவர்கள் என்று பிறரால் எள்ளப்படுவது மட்டுமல்லாமல் அதுவே நரகத்திற்கு நம்மை எடுத்துச் செல்லும் வழியாகும்.
38. எண்ணக்கூடாதவை
(இன்னிசை வெண்பா)
பொய்குறளை வெளவல் அழுக்காறு இவைநான்கும்
ஐயம்தீர் காட்சியார் சிந்தியார் – சிந்திப்பின்
ஐயம் புகுவித்து அருநிரயத் துய்த்திடும்
தெய்வமும் செற்று விடும்.
பொருள் விளக்கம்:
சந்தேகம் இல்லாத அறிவுடைய பெரியோர்கள் ஒருநாளும் பொய், அடுத்தவர் மீது கோள் சொல்லுதல், பிறர் பொருளை அபகரிக்க திட்டம் இடல், பொறாமை ஆகியவற்றை மனத்தால் சிந்திக்க மாட்டார்கள்.
அப்படி சிந்தித்தால் அவர்களை வறுமை சூழ்ந்து, இம்மை மறுமைக்கும் பிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு ஆழ்த்திவிடும், நரகத்திற்கும் வழிவகுக்கும், தெய்வமும் அழிந்து விடும்
39. தெய்வத்துக்குப் பலியூட்டிய பின் உண்க
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தமக்கென்று உலையேற்றார் தம்பொருட்டூண் கொள்ளார்
அடுக்களை எச்சில் படாஅர் மனைப்பலி
ஊட்டினமை கண்டுண்க ஊண்.
பொருள் விளக்கம்
நல்ல குணம் உடைய பெரியவர்கள் தங்களுக்கு என்று தனியாக சமையல் செய்ய மாட்டார்கள். விருந்தினர், உறவினர் என்று அனைவருக்கும் சேர்த்துத் தான் சமையல் செய்வார்கள். தனக்கு என்று தனியாக செய்து உண்ண மாட்டார்கள். சமையல் அறையில் உணவு தயாராகும் போதும், அதை இறைவனுக்கு படைக்காமல் இருக்கும் போதும் எச்சில் செய்ய மாட்டார்கள். இறைவனுக்கு படைத்து விட்டு பின்பு உண்பார்.
40. சான்றோர் இயல்பு
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உயர்ந்ததன் மேலிரார் உள்ளழிவு செய்யார்
இறந்தின்னா செய்தக் கடைத்தும் குரவர்
இளங்கிளைஞர் உண்ணு மிடத்து.
பொருள் விளக்கம்:
புதிய உறவினர்கள் மத்தியில் உணவு அருந்தும் போது வீட்டில் உள்ள பெரியவர்கள் தங்களுக்கு என்று உயர்ந்த ஆசனம் போட்டு அமர மாட்டார்கள்.
இளைஞர்கள் விளையாட்டாக தவறு செய்தாலும் அதை பெரிது படுத்த மாட்டார்கள். மற்றவர்களுக்கு தீங்கு செய்ய மாட்டார்கள்.
ஆசாரக்கோவை பாடல் மற்றும் விளக்கம் 21-40
ஆசாரக்கோவை விளக்கம் PDF மற்றும் eBook வடிவத்தில் 100 பாடல்களுக்கும் பதிவிறக்கம் செய்ய
மற்றும் ஆசாரக்கோவை பற்றி மேலும் தெறிந்து கொள்ள…
ஆசாரக்கோவை பாடல் மற்றும் விளக்கம் 1-20
ஆசாரக்கோவை பாடல் மற்றும் விளக்கம் 41-60