ஆசாரக்கோவை பாடல் மற்றும் விளக்கம் 1-20
ஆசாரக்கோவை விளக்கம் PDF மற்றும் eBook வடிவத்தில் 100 பாடல்களுக்கும் பதிவிறக்கம் செய்ய மற்றும் ஆசாரக்கோவை பற்றி மேலும் தெறிந்து கொள்ள…
இந்த பதிவில் ஆசாரக்கோவை பாடல் 1 முதல் 20 வரை பொருளுடன் பார்க்கலாம்…
ஆசார வித்து -1
(பஃறொடை வெண்பா)
நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் இவைஎட்டும்
சொல்லிய ஆசார வித்து
பொருள் விளக்கம்
ஒருவன் செய்த உதவியை மறக்காமல் நன்றியுடன் இருத்தல், பொறுமையுடன் இருத்தல், இனிய சொல் பேசுதல், எந்த ஒரு உயிருக்கும் துன்பம் செய்யாமல் இருத்தல், கல்வி அறிவு, பலனை எதிர்பார்க்காமல் இந்த சமுதாயதிர்க்கு செய்யும் சேவை (அடுத்தவருக்கு உதவும் ஒப்புரவு குணம்), காலம் கருதி ஆற்ற வேண்டிய விஷயத்தை ஆற்றும் திறன், அறிவுடைமை, நல்ல குணம் உடையவருடன் சேர்தல் ஆகிய எட்டும் ஒழுக்கங்களின் வித்து என்று கூறும் விதை ஆகும். இந்த குணங்களில் இருந்து தான் நல்லொழுக்கம் அனைத்தும் ஆரம்பமாகிறது.
2. ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள்
(இன்னிசை வெண்பா)
பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு
நிலக்கிழமை மீக்கூற்றம் கல்விநோ யின்மை
இலக்கணத்தால் இவ்வெட்டும் எய்துப என்றும்
ஒழக்கம் பிழையா தவர்.
பொருள் விளக்கம்
நல்ல குடியில் பிறக்கும் பிறப்பு, நீண்ட ஆயுள் , செல்வம், அழகானத் தோற்றம், நிலங்களை ஆளும் உரிமை, சொல்வன்மை, யாராலும் அழிக்க முடியாத கல்வி, நோய்யற்ற வாழ்வு ஆகிய எட்டும் ஒருவன் ஒழுக்கம் தவறாது இருந்தால் அவனுக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகும்.
3. தக்கிணை முதலியவை மேற்கொள்ளல்
(இன்னிசை சிந்தியல் வெண்பா)
தக்கிணை வேள்வி தவம்கல்வி இந்நான்கும்
முப்பால் ஒழுக்கினால் காத்துய்க்க – உய்க்காக்கால்
எப்பாலும் ஆகா கெடும்.
பொருள் விளக்கம்
ஒரு விடயத்தை சொல்லிக் கொடுப்பவருக்கு உரிய குரு தட்சணை, கடவுளை தொழல், தவம் செய்தல், கல்வி கற்றல் ஆகிய நான்கும் ஒருவன் தவறாமல் மனம், வாக்கு, மெய் ஆகிய மூன்றும் ஒன்று பட செய்ய வேண்டும். செய்யா விட்டால் எந்த உலகத்திற்கும் (இந்த உலகம், மேல் உலகம்) பயன் படாது.
4. முந்தையோர் கண்ட நெறி
(இன்னிசை வெண்பா)
வைகறை யாமம் துயிலெழுந்து தான்செய்யும்
நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதில்
தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே
முந்தையோர் கண்ட முறை.
பொருள் விளக்கம்:
விடியற் காலையில் எழுந்து, இன்று என்ன என்ன நல்ல காரியங்கள் செய்ய வேண்டும் என்று சிந்தித்து, தாய் தந்தையரை வணங்கி ஒவ்வொரு நாளையும் தொடங்குவது வாழ்விற்கு சிறந்தது என்பதே நம் முன்னோர்கள் சொன்ன வழிமுறையாகும்.
5. எச்சிலுடன் தீண்டத் தகாதவை
(இன்னிசைக் சிந்தியல் வெண்பா)
எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார் தீத்தேவர்
உச்சந் தலையோடு இவைஎன்ப யாவரும்
திட்பத்தால் தீண்டாப் பொருள்.
பொருள் விளக்கம்:
விலங்க்கு, சான்றோர், நெருப்பு, கடவுள், உச்சந்தலை ஆகியவற்றை ஒருவன் எச்சிலுடன் இருக்கும் போது தீண்டக்கூடாதவை ஆகும்.
6. எச்சிலுடன் காணக் கூடாதவை
(இன்னிசைக் சிந்தியல் வெண்பா)
எச்சிலார் நோக்கார் புலைதிங்கள் ஞாயிறுநாய்
தக்கவீழ் மீனோடே இவ்வைந்தும் தெற்றென
நன்கறிவார் நாளும் விரைந்து.
பொருள் விளக்கம்:
நன்கு விஷயம் அறிந்தவர்கள் ஒரு நாளும் எச்சிலுடன் இருக்கும் போது புலையன், நிலா, சூரியன், நாய், எரி நட்சத்திரம் ஆகியவற்றை பார்க்க மாட்டார்கள்.
புலை: அசுத்தம், தீய நெறி
7. எச்சில்கள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
எச்சில் பலவும் உளமற் றவற்றுள்
இயக்கம் இரண்டும் இணைவிழைச்சு வாயின்
விழைச்சுஇவை எச்சில் இந்நான்கு.
பொருள் விளக்கம்:
எச்சில்கள் நான்கு வகைப்படும், அவை மலம், ஜலம் என்று உடலில் இருந்து வரும் கழிவுகளால் ஏற்படுபவை இரண்டு, உடலுறவால், வாயால் ஏற்படுபவை இரண்டு ஆக மொத்தம் நான்கு ஆகும்.
8. எச்சிலுடன் செய்யக் கூடாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
நால்வகை எச்சிலும் நன்கு கடைப்பிடித்து
ஓதார் உரையார் வளராரே எஞ்ஞான்றும்
மேதைகள் ஆகுறு வார்.
பொருள் விளக்கம்:
நான்கு வகை எச்சிலில் ஒருவகை இருப்பினும் நன்கு விஷயம் தெரிந்த மேதைகள் எப்போதும் எச்சிலை விலக்காமல் புத்தகம் படிக்கமாட்டார், யாருடம் பேச மாட்டார், தூங்க மாட்டார்.
9. காலையில் கடவுளை வணங்குக
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
நாளந்தி கோல்தின்று கண்கழீஇத் தெய்வத்தைத்
தானறியும் ஆற்றால் தொழுதெழுக அல்கந்தி
நின்று தொழுதல் பழி.
பொருள் விளக்கம்:
காலையில் விழித்தவுடன், குச்சியால் பல் துலக்கி, கண் துடைத்து,குளித்து இறைவனை நின்று தொழுது எழுக, மாலையில் நின்று தொழுவது தவறு, அமர்ந்து இறைவனை வணங்குக.
10. நீராட வேண்டிய சமயங்கள்
(பஃறொடை வெண்பா)
தேவர் வழிபாடு தீக்கனா வாலாமை
உண்டது கான்றல் மயிர்களைதல் ஊண்பொழுது
வைகு துயிலொடு இணைவிழைச்சுக் கீழ்மக்கள்
மெய்யுறல் ஏனை மயலுறல் ஈரைந்தும்
ஐயுறாது ஆடுக நீர்.
பொருள் விளக்கம்:
இறைவனை வணங்கும் முன்னரும், கெட்ட கனவு கண்ட பிறகும், தூய்மை குன்றிய காலத்திலும், உண்ட உணவை வாந்தி எடுத்தாலும், முடி வெட்டிய பிறகும், உணவு உண்ணும் முன்னர், காலையில் எழுந்த பிறகும், உடலுறவுக்குப் பிறகும், சுத்தமில்லாதவரை தொட நேர்ந்த பின்னரும், மல ஜலம் கழித்த பிறகும்,
ஆகிய பத்து விடயங்களில் நாம் சந்தேகம் கொள்ளாமல் குளிக்க வேண்டும்.
11. பழைமையோர் கண்ட முறைமை
(இன்னிசை வெண்பா)
உடுத்தலால் நீராடார் ஒன்றுடுத்து உண்ணார்
உடுத்தாடை நீருள் பிழியார் விழுத்தக்கார்
ஒன்றுடுத்து என்றும் அவைபுகார் என்பதே
முந்தையோர் கண்ட முறை.
பொருள் விளக்கம்
உடலில் ஒரு துணியும் இல்லாமல் நீர் நிலைகளீல் நீராடக்கூடாது, ஒரே ஒரு உடையை உடுத்திக் கொண்டு வெறும் உடம்போடு உணவு அருந்தக்கூடாது. உடுத்திய ஆடையை நீருக்குள் வைத்து பிழியக்கூடாது. நல்ல பண்பு உடையவர் ஒரே ஒரு உடை உடுத்தி பலர் இருக்கும் சபைக்கு செல்ல மாட்டார்கள். இவையே நம் முன்னோர்கள் சொன்ன வழிமுறையாகும்.
12. செய்யாமல் தவிர்க்க வேண்டியவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தலையுரைத்த எண்ணெயால் எவ்வுறுப்பும் தீண்டார்
பிறர்உடுத்த மாசுணியும் தீண்டார் செருப்புக்
குறையெனினும் கொள்ளார் இரந்து.
பொருள் விளக்கம்
தலையில் தடவிய எண்ணையை எடுத்து உடலில் தடவக்கூடாது. பிறர் உடுத்திய உடையை உடுத்தக்கூடாது. அடுத்தவர் அணிந்த செருப்பு அணியக்கூடாது, பிறரிடம் இருந்து இரந்து எதையும் பெறக்கூடாது.
13. செய்யத் தகாதவை
(இன்னிசை வெண்பா)
நீருள் நிழல்புரிந்து நோக்கார் நிலம்இராக்
கீறார் இராமரமும் சேரார் இடர்எனினும்
நீர்தொடாது எண்ணெய் உரையார் உரைத்தபின்
நீர்தொடார் நோக்கார் புலை.
பொருள் விளக்கம்
நீருள் மூழ்கி குளிக்கும் போது கண்ணை திறந்து பார்க்கக்கூடாது, நிலத்தை காலால் கீறக்கூடாது, இரவில் எந்த மரத்தின் கீழும் தூங்கக்கூடாது, (இரவில் மரங்கள் சுவாசிக்கும் போது காற்றில் உள்ள ஆக்ஸிஜன் எடுத்து கரிமல வாயுவை வெளியிடும். இது தூங்குபவரை மூச்சு முட்டச் செய்யும்.)
நோய்யால் துன்பப்பட்டாலும் தண்ணீரில் கை வைக்காமல் (தூய்மை செய்யாமல்) உணவைத் தொடக் கூடாது. எண்ணையை தொட்டு தடவிய பிறகு குடிநீரை தொடக்கூடாது. புலையரைப் (தீயநெறி உடையவரை) பார்க்கக்கூடாது. இவையே நம் முன்னோர்கள் சொன்ன வழிமுறையாகும்.
14. நீராடும் முறை
(இன்னிசை வெண்பா)
நீராடும் போழ்தில் நெறிப்பட்டார் எஞ்ஞான்றும்
நீந்தார் உமியார் திளையார் விளையாடார்
காய்ந்தது எனினும் தலைஒழிந்து ஆடாரே
ஆய்ந்த அறிவி னவர்.
பொருள் விளக்கம்
புனித நதிகளில் நீராடும் போது, ஆய்ந்த அறிவுடைய நல்ல நெறியில் உள்ளவர்கள் ஒருநாளும் நீந்த மாட்டார்கள், , நீரை குடைந்து சேறாக்காமாட்டார்கள், அதில் விளையாட மாட்டார்கள். அதே போல் அந்த நீரில் எச்சில் உமிய மாட்டார்கள், தலையில் எண்ணை இல்லாமல் தலை காய்ந்து இருந்தாலும் தலை மூழ்காமல் உடல் மட்டும் நனையுமாறு குளிக்கமாட்டார்கள்.
15. உடலைப்போல் போற்றத் தக்கவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
ஐம்பூதம் பார்ப்பார் பசுத்திங்கள் ஞாயிறு
தம்பூதம் எண்ணாது இகழ்வானேல் தம்மெய்க்கண்
ஐம்பூதம் அன்றே கெடும்.
பொருள் விளக்கம்
நிலம் , நெருப்பு, காற்று, ஆகாயம், நீர் ஆகிய ஐந்து பூதங்களையும், அந்தணனையும், பசு, நிலா, சூரியன் ஆகியவற்றையும் தன் உடம்பு போல் என்னாது இகழ்ந்திருந்தால், நம் உடம்பில் உள்ள பஞ்ச பூதங்களின் தெய்வங்கள் விலகி துன்பத்தை கொடுக்கும்.
16. யாவரும் கூறிய நெறி
(சவலை வெண்பா)
அரசன் உவாத்தியான் தாய்தந்தை தம்முன்
நிகரில் குரவர் இவர்இவரைத்
தேவரைப் போலத் தொழுக என்பதே
யாவரும் கண்ட நெறி.
பொருள் விளக்கம்
அரசன் , பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர், தாய், தந்தை, நமக்கு நிகரில்லாத நம்மை விட வயதில், திறமையில், குணத்தில் மூத்தவர், இவர்களை தெய்வம் போல் தொழ வேண்டும். இதுவே சிறந்த நெறி.
17. நல்லறிவாளர் செயல்
(இன்னிசை வெண்பா)
குரவர் உரையிகந்து செய்யார் விரதம்
குறையுடையார் தீர மறவார் – நிறையுவா
மேல்கோலும் தின்னார் மரங்குறையார் என்பவே
நல்லறி வாளர் துணிவு.
பொருள் விளக்கம்:
சான்றோற்கள் கூறிய நெறிப்படி கடவுளை வழிபடுவர், விரதம் முடிக்காமல் உணவு உண்ணமாட்டார்கள், மரங்களை வெட்ட மாட்டார்கள். இதுவே நல் அறிவாளர் செய்யும் செயல்.
18. உணவு உண்ணும் முறைமை
(இன்னிசை வெண்பா)
நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலஞ்செய்து
உண்டாரே உண்டார் எனப்படுவர் அல்லாதார்
உண்டார்போல் வாய்பூசிச் செல்வர் அதுவெறுத்துக்
கொண்டார் அரக்கர் குறித்து.
பொருள் விளக்கம்
நாள்தோறும் குளித்து, உணவு உண்ணபதற்கு முன் கைகால், வாய் சுத்தம் செய்து, உணவு இலையை சுற்றி நீரை சிறிது தெளிக்க செய்து உணவு உண்பதே சிறந்தது. இவ்வாறு செய்யாமல் உணவு உண்ணபது வெறும் பேச்சுக்கு உணவு உண்பது போல் இருக்கும், அப்படி உணவு உண்டவர்களின் உடலை அரக்கர்கள் (வியாதிகள்) வந்து எடுத்துச் செல்லும்.
பண்டைய காலத்தில் வீட்டுத் தரை மண்ணால் செய்யப்பட்டு இருந்தது. இதில் எறும்பு, பூச்சி வர வாய்ப்பு அதிகம். இவ்வாறு இருக்கும் சிறு பூச்சிகள் உணவு உண்ணும் போது வராமல் இருப்பதற்காக நீரத் தெளித்து உண்ணும் பழக்கமும், நீர் இன்றி அமையாது உலகு, ஆதலால் உண்ணும் முன் நீருக்கு இந்த உணவை அளித்த நன்றியை தெரிக்கவிக்கவும் இந்த வழக்கம் ஏற்பட்டது.
19. கால் கழுவிய பின் செய்ய வேண்டியவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
காலினீர் நீங்காமை உண்டிடுக பள்ளியுள்
ஈரம் புலராமை ஏறற்க என்பதே
பேரறி வாளர் துணிவு.
பொருள் விளக்கம்:
கை கால்கள் கழுவி அதன் ஈரம் காயாமல் இருக்கும் போதே உணவு உண்ண வேண்டும், (அதாவது கைகால் சுத்தம் செய்து உடனே உணவு உண்ண வேண்டும், நேரம் கடத்தும் போது தூசு, அழுக்கு மீண்டும் கைகளில் வரும் வாய்ப்பு உள்ளது).
கைகால்கள் ஈரமாக இருக்கும் போது படுக்கைக்குள் இறக்கக்கூடாது. (அதாவது இரவு படுக்கும் முன், கடன்களை முடித்து, உடல் அங்கங்களை சுத்தம் செய்து, ஈரம் உலர்ந்த பின்னர் படுக்கைக்குள் நுழைய வேண்டும்.) இது சிறந்த அறிவாளர்கள் செய்யும் செயலாகும்.
20. உண்ணும் விதம்
(இன்னிசை வெண்பா)
உண்ணுங்கால் நோக்கும் திசைகிழக்குக் கண்ணமர்ந்து
தூங்கான் துளங்காமை நன்குஇரீஇ யாண்டும்
பிறிதியாதும் நோக்கான் உரையான் தொழுதுகொண்டு
உண்க உகாஅமை நன்கு.
பொருள் விளக்கம்:
உண்ணும் போது கிழக்கு திசை அமர்ந்து, தூங்கி வழியாமல், அங்கும் இங்கும் ஆடி அசையாமல், நன்கு அசைபோட்டு, பிற விசங்களைப் பார்க்காமல், புற கதைகள் பேசாமல் உணவை ரசித்து, ருசித்து, இறைவனை வணங்கி உண்ண வேண்டும்.
இப்படி செய்யாமல் இருப்பதற்கு உண்ணாமல் இருக்கலாம்.
கிழக்கு திசை சூரியன் உதிக்கும் திசை, வாஸ்து சாஸ்திரத்தில் இது இந்திரன் உடைய திசை. இந்திரன் ஒருவனின் ஆயுள், அந்தஸ்து, செல்வம், புகழ், செல்வாக்கு ஆகியவற்றை அள்ளிப்பவன். இதனால் கிழக்கு திசை அமர்ந்து உண்பது சிறந்தது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
ஆசாரக்கோவை பாடல் மற்றும் விளக்கம் 1-20
ஆசாரக்கோவை விளக்கம் PDF மற்றும் eBook வடிவத்தில் 100 பாடல்களுக்கும் பதிவிறக்கம் செய்ய
மற்றும் ஆசாரக்கோவை பற்றி மேலும் தெறிந்து கொள்ள…
ஆசாரக்கோவை பாடல் மற்றும் விளக்கம் 21-40
ஆசாரக்கோவை பாடல் மற்றும் விளக்கம் 41-60