ஆசாரக்கோவை விளக்கம்
ஆசாரக்கோவை பாடல் விளக்கம் PDF மற்றும் eBook வடிவத்தில் 100 பாடல்களுக்கும் பதிவிறக்கம் செய்ய மற்றும் ஆசாரக்கோவை பற்றி மேலும் தெறிந்து கொள்ள…
இந்த பதிவில் ஆசாரக்கோவை பாடல் 61 முதல் 80 வரை பொருளுடன் பார்க்கலாம்.
61. நூல்முறை உணர்ந்தவர் துணிவு
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
வான்முறை யான்வந்த நான்மறை யாளரை
மேன்முறைப் பால்தம் குரவரைப் போலொழுகல்
நூன்முறை யாளர் துணிவு.
பொருள் விளக்கம்
தூய ஒழுக்கத்தால் வந்த, நான்கு வேதங்களையும் கற்று உணர்ந்து குணங்களால் மேல் முறையில் இருப்பவரை நம் பெரியவராகப் பாவித்து அவரை வணங்குதல், நூல் பல கற்றவர்களின் செயலாகும்.
62. சான்றோர்க்குச் செய்யும் ஒழுக்கம்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கால்வாய்த் தொழுவு சமயம் எழுந்திருப்பு
ஆசாரம் என்பர் குரவர்க்கு இவையிவை
சாரத்தால் சொல்லிய மூன்று.
பொருள் விளக்கம்
- பெரியவரை கண்டவுடன் அவரின் கால்களில் தொழுது வணங்குதல்,
- அவர் அமரும் போது நின்று இருத்தலும்,
- அமர்ந்து இருக்கும் போது பெரியவர்கள் வந்தால் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செய்தால்
ஆகிய மூன்றும் பெரியவர்களுக்கு நாம் செய்யும் ஆசாரங்களாகும்.
63. கற்றவர் கண்ட நெறி
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
துறந்தாரைப் பேணலும் நாணலும்தாம் கற்ற
மறந்தும் குரவர்முன் சொல்லாமை மூன்றும்
திறங்கண்டார் கண்ட நெறி.
பொருள் விளக்கம்
- வாழ்க்கையை துறந்து பிறர் வாழ துறவியாக வாழும் துறவியைப் காப்பதும்,
- தவறு செய்ய வெட்கப்படுதலும்,
- நாம் கற்று அறிந்ததை தற்பெருமையுடன் நன்கு கற்று அறிந்து உணர்ந்து அடங்கிய பெரியவர் முன் மறந்தும் பேசாதிருத்தலும்
ஆகியவை ஒழுக்கம் உடையவர் செய்யும் செயலாகும்.
64, வாழக்கடவர் எனப்படுவர்
(இன்னிசை வெண்பா)
பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார்
மூத்தார் இளையார் பசுப்பெண்டிர் என்றிவர்கட்டு
ஆற்ற வழிவிலங்கி னாரே பிறப்பிடைப்
போற்றி யெனப்படு வார்.
பொருள் விளக்கம்
ஒரு இடத்தில் நடக்கும் போதும், ஒரு வாகனத்தில் பயணிக்கும் போதும்:
- கல்வி போதிக்கும் குருமார்கள்,
- தலையில், வயிற்றில் சுமை சுமப்பவர்கள்,
- நோயாளிகள்,
- வயது முதிர்ந்த பெரியோர்,
- இளம் குழந்தைகள்,
- பெண்கள்
- விலங்குகள்
இவர்களுக்கு வழி அளித்து நடக்க வேண்டும், இவர்களுக்கு இடம் அளித்து பின்பு நாம் அமர வேண்டும்.
65. தனித்திருக்கக் கூடாதவர்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
ஈன்றாள் மகள்தம் உடன்பிறந்தாள் ஆயினும்
சான்றார் தமித்தா(க) உறையற்க ஐம்புலனும்
தாங்கற்கு அரிதஆக லான்.
பொருள் விளக்கம்
ஆண் பெண் என்ற பேதத்தை தாண்டி ஐந்து புலன்களையும் கட்டுப்படுத்தி வாழ்வது அரிது, ஆகையால் இதை உணர்ந்த சான்றோர்
- தன்னைப் பெற்ற தாய்,
- தன் மகள்,
- உடன் பிறந்த சகோதரி
ஆகியவருடன் தனியே உறங்க மாட்டார்கள்.
66. மன்னருடன் பழகும் முறை
(இன்னிசை வெண்பா)
கடைவிலக்கிற் காயார் கழிகிழமை செய்யார்
கொடையளிக்கண் பொச்சாவார் கோலநேர்செய்யார்
இடையறுத்துப் போகிப் பிறனொருவன் சேரார்
கடைபோக வாழ்துமென் பார்.
பொருள் விளக்கம்
மன்னர், மேலதிகாரிகள், உயர் பதவியில் இருப்பவர்களை சந்திக்கும் போது,
- அவர்களின் வாயில் (வீட்டில்) உள்ளே நம்மை செல்ல மறுத்தால் கோபம் கொள்ளக்கூடாது,
- மிகுந்த உரிமையை எடுத்துப் பேசக் கூடாது.
- அவருக்கு கொடுக்க எடுத்துச் சென்ற பொருளை கொடுக்காமல் மறைக்கக்கூடாது.
- அவர் போல் ஆடம்பரமாக உடை உடுத்தக்கூடாது.
- பெரிய சபையில் அவரைத் தவிர்த்து பிறருக்கு மரியாதை செய்யும் படி பிறர் உடன் செல்ல மாட்டார்.
வாழ்க்கையின் இறுதி வரை நல்ல நிலையில் வாழ வேண்டும் என்று விரும்புபவர்கள் இதை தவறாமல் செய்வார்கள்.
67. குற்றம் ஆவன
(இன்னிசை வெண்பா)
தமக்குற்ற கட்டுரையும் தம்மிற் பெரியார்
உரைத்ததற்கு உற்ற உரையுமஃ தன்றிப்
பிறர்க்குற்ற கட்டுரையும் சொல்லற்க சொல்லின்
வடுக்குற்ற மாகி விடும்.
பொருள் விளக்கம்
- நமக்கு கொடுக்கும் உறுதி மொழியையும்,
- உயர்பதவியில் இருப்பவர்களால் போற்றப்படும் நிலையில் இருக்கும் பெரியவர்கள் கூறும் உறுதி மொழியும்,
- அது மட்டுமல்லாமல் நம் முன் ஒருவர் பிறருக்குச் சொல்லும் உறுதி மொழியும் வேறு ஒருவரிடம் சொல்லக்கூடாது.
சொல்லுவதால் தேவையற்ற துன்பங்கள் விளையலாம்.
68. நல்ல நெறி
(இன்னிசை வெண்பா)
பெரியார் உவப்பனதாம் உவவார் இல்லம்
சிறியாரைக் கொண்டு புகாஅர் அறிவறியாப்
பிள்ளையே ஆயினும் இழித்துரையார் தம்மோடு
அளவளா வில்லா இடத்து.
பொருள் விளக்கம்
நல்ல நெறியில் உள்ளவர்கள் செயல்.
- பெரியவர் உடன் செல்லும் போது அவர் விரும்புபவை எல்லாம் நமக்கு வேண்டும் என்று விரும்ப மாட்டார்.
- நம்முடன் இணையாகாத சிற்றறிவு உடையவரை வீட்டுக்குள் கூட்டிக் கொண்டு வர மாட்டார்.
- தம் பிள்ளைகளே ஆனாலும் அவர்கள் அறிவு இல்லா செயலைத் செய்தாலும் அவர்களை இகழ்ந்து பேச மாட்டார்கள்.
- அதே போல் தம் கருத்துடன் ஒத்து வராத, நண்பர்கள் அல்லாத நபர்கள் ஆனாலும் அவர்களையும் இகழ்ந்து பேச மாட்டார்கள்
69. மன்னன் செய்கையில் வெறுப்படையாமை முதலியன
(இன்னிசை வெண்பா)
முனியார் துனியார் முகத்தெதிர் நில்லார்
தனிமை இடத்துக்கண் தம்கருமம் சொல்லார்
இனியவை யாமறிதும் என்னார் கசிவின்று
காக்கைவெள் என்னும் எனின்.
பொருள் விளக்கம்
வாழத் தெரிந்தவர்கள்:
- தம்முடைய உயர் அதிகாரி, மேல் நிலையில் இருப்பவர்கள், மன்னன் ஆகியோருடன் கோபப்பட மாட்டார்,
- துணிந்து அவருக்கு எதிரான செயல்களைச் செய்ய மாட்டார்,
- அவர் முகத்துக்கு எதிரே எதிர்த்து நிற்க் மாட்டார்.
- அவர் தனிமையில் இருக்கும் போது தன் குறையை கூறார்,
- எனக்கு இது, அது தெரியும் என்று பெருமையாகக் கூற மாட்டார்கள்.
- காக்கா வெள்ளை என்று அதிகாரி சொன்னாலும் அன்பின்றி அவர் கோபப்படும்படி அதை மறுத்து பேசாமல் அமைதியாக இருப்பார்.
70. மன்னன் முன் செய்யத் தகாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உமிவும் உயர்ந்துழி ஏறலும் பாக்கும்
வகையில் உரையும் வளர்ச்சியும் ஐந்தும்
புணரார் பெரியா ரகத்து.
பொருள் விளக்கம்
நம்மை விட பெரியவர், உயர் அதிகாரி, மன்னன் ஆகியோர் முன்:
- எச்சில் துப்புதல்,
- அவரை விட உயர்வான ஆசனத்தில் அமருதல்,
- வெற்றிலை பாக்கு (புகை, மது) போடுதல்,
- தேவையற்ற தவறான வார்த்தை பேசுதல்,
- தூங்குதல் ஆகியவை செய்யுதல் கூடாது.
71. மன்னன் முன் சொல்லக் கூடாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
இறைவர்முன் செல்வமும் கல்வியும் தேசும்
குணனும் குலமுடையார் கூறார் பகைவர்போல்
பாரித்துப் பல்காற் பயின்று.
பொருள் விளக்கம்
நல்ல குடியில் பிறந்தவர்கள்:
மன்னனிடம் (தம்முடைய மேலதிகாரி /உயர் பதவியில் இருப்பவர்கள்) தம்முடைய கல்வி, செல்வம், புகழ் /பெருமை, குணநலம் ஆகியவற்றை விளக்கி கூறி, வெகு மேலாக பரப்பி தற்பெருமையாகக் கூறி மன்னனின் கோவத்துக்கு ஆளாகி தமக்கு தாமே பகையை தேட மாட்டார்கள்.
72. வணங்கக்கூடாத இடங்கள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
பெரியார் மனையகத்தும் தேவ குலத்தும்
வணங்கார் குரவரையும் கண்டால் அணங்கொடு
நேர்பெரியார் செல்லு மிடத்து.
பொருள் விளக்கம்
- அரசன் இருக்கும் அரண்மனையிலும் ,
- இறைவன் வாழும் கோவிலிலும் பெரியவரை கண்டால் வணங்கக்கூடாது.
அது போல் அவர்கள் வீதி உலா செல்லும் போது அவர்களைத் தவிர்த்து மற்றவர்களை வணங்கக்கூடாது.
73. மன்னர் முன் செய்யத் தகாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
நகையொடு கொட்டாவி காறிப்புத் தும்மல்
இவையும் பெரியார்முன் செய்யாரே செய்யின்
அசையாது நிற்கும் பழி.
பொருள் விளக்கம்
- கேலியாகச் சிரிப்பு
- கொட்டாவி விடுதல்
- எச்சில் உமிழ்தல்
- பெரியவர் மீது படும் படி தும்மல் செய்தல்
இவை யாவும் பெரியவர்கள் முன்பு செய்யக்கூடாது. செய்தால் தீராத பழி வந்து நிற்கும்.
74. ஆசிரியரிடம் நடக்கும் முறைமை
(இன்னிசை வெண்பா)
நின்றக்கால் நிற்க அடக்கத்தால் என்றும்
இருந்தக்கால் ஏவாமை ஏகார் பெருந்தக்கார்
சொல்லிற் செவிகொடுத்துக் கேட்டீக மீட்டும்
வினாவற்க சொல்லொழிந்தக் கால்.
பொருள் விளக்கம்
சிறந்த குணமுள்ள மாணவர்கள்:
- அடக்கத்தால் ஆசிரியர் பாடம் சொல்லாமல் சும்மா இருக்கும் போது அமைதியுடன் இருப்பர்.
- என்றும் இருந்து அமரும் இருக்கும் போது அவர் சொல்லாமல் எழுந்து செல்ல மாட்டார்.
- அவர் பாடம் சொல்லும் போது செவி கொடுத்து கவனமாக கேட்பர்.
- கவனிக்காமல் பாடம் சொல்லி முடித்தவுடன் அது குறித்து வினவ மாட்டர்.
75. சான்றோர் அவையில் செய்யக் கூடாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உடுக்கை இகவார் செவிசொறுண்டார் கைம்மேல்
எடுத்துரையார் பெண்டிர்மேல் நோக்கார் செவிச்சொல்லும்
கொள்ளார் பெரியார் அகத்து.
பொருள் விளக்கம்
பெரியவர்கள் இருக்கும் சபையில்:
- உடையை கழட்ட மாட்டார்கள்.
- காதை சொறிந்து நிற்கக் கூடாது.
- கையை உயர்த்தி பேசக்கூடாது.
- அங்குள்ள பெண்கள் மேல் கண்கள் செல்லக்கூடாது.
- அங்கு அவர்கள் பிறர் காதில் சொல்லும் ரகசியத்தை நாம் காது கொடுத்துக் கேட்கக்கூடாது.
76. சொல்லும் முறைமை
(இன்னிசை வெண்பா)
விரைந்துரையார் மேன்மேல் உரையார்பொய் யாய
பரந்துரையார் பாரித்து உரையார் – ஒருங்கெனைத்தும்
சில்லெழுத்தினாலே பொருளடங்கக் காலந்தால்
சொல்லுக செவ்வி அறிந்து.
பொருள் விளக்கம்
ஒருவர் ஒரு விஷயம் குறித்து கேட்கும் போது,
- விரைவாக அவசரத்துடன் பதில் அளிக்கக் கூடாது.
- சொன்னதை திரும்ப திரும்ப சொல்லக் கூடாது.
- பொய்யாக உரைக்கக் கூடாது.
- பலவாறு விவரித்து உரைக்கக் கூடாது.
- மொத்த கருத்தின் விஷயத்தை சுருக்கமாக சிறிய சொற்றொடர்களால் பொருள் அடங்குமாறு காலம் அறிந்து சொல்ல வேண்டும்.
77. நல்ல குலப்பெண்டிர் இயல்பு
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தம்மேனி நோக்கார் தலையுளரார் கைந்நொடியார்
எம்மேனி ஆயினும் நோக்கார் தலைமகன்
தம்மேனி அல்லால் பிற.
பொருள் விளக்கம்
நல்ல குலத்தில் பிறந்த, கற்பு நெறி தவறாத மங்கையர்:
- தங்கள் உடல் பிறருக்கு அழகாக தெரிய வேண்டும் என்று தங்கள் உடலை பார்த்து அலங்காரம் செய்ய மாட்டார்கள்.
- பிறர் முன்னிலையில் தலைமுடியை உலர மாட்டார்கள்,
- கையை நொடிக்க மாட்டார்கள்.
- தங்கள் கணவனைத் தவிர எத்துணை அழகனாய் இருந்தாலும் பிற ஆடவனைப் பார்க்க மாட்டார்கள்.
78. மன்னர் அவையில் செய்யக் கூடாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
பிறரொடு மந்திரம் கொள்ளார் இறைவனைச்
சாரார் செவியோரார் சாரின் பிறிதொன்று
தேர்வார்போல் நிற்க திரிந்து.
பொருள் விளக்கம்
- அரசன், உயர் அதிகாரிகள் இருக்கும் இடங்களில் இருக்கும் சபையில் பிறருடன் ரகசியம் பேசக்கூடாது,
அரசன் ஒருவருக்கு கூறும் ரகசியத்தை காது கொடுத்து கேட்கக் கூடாது. கேட்கும் படி நிற்க் நேர்ந்தால் அவர் பேசுவதை கண்டு கொள்ளாமல், அதிலிருந்து விலகி வேறு ஒன்றை கவனிப்பது போல் மாறி நிற்க வேண்டும்.
79. பெரியோரிடம் உள்ள முச்செயல்கள்
(நேரிசை வெண்பா)
துன்பத்துள் துன்புற்று வாழ்தலும் இன்பத்துள்
இன்ப வகையால் ஒழுகலும் – அன்பின்
செறப்பட்டார் இல்லம் புகாமையும் மூன்றும்
திறப்பட்டார் கண்ணே உள.
பொருள் விளக்கம்
நன்கு கற்று உணர்ந்து அடங்கிய திறம் நிறைந்த பெரியவர்களிடம்
- தங்களுக்கு துன்பம் ஏற்படும் வேளையில் துன்பத்தை கண்டு துவளாமல் வாழ்வதும்,
- இன்பம் வரும் வேளையில் இன்பத்தை கண்டு பெரு மகிழ்ச்சி அடையாமல் அமைதியாக இருப்பதும்,
- அன்பில்லாத மனிதர்கள் வீட்டில் நுழையாமல் இருப்பதும்
ஆகிய மூன்றும் குணங்களும் நிறைந்து இருக்கும்.
80. சான்றோர் பெயர் முதலியவை கூறாமை
(நேரிசை வெண்பா)
தெறுவந்தும் தங்குரவர் பேருரையார் இல்லத்து
உறுமி நெடிதும் இராஅர் – பெரியாரை
என்று முறைகொண்டு கூறார் புலையரையும்
நன்கறிவார் கூறார் முறை.
பொருள் விளக்கம்
- கோபம் வந்த போதும் பெரியவர்களை பேர் சொல்லி அழைக்கக்கூடாது.
- இல்லத்தரசியிடம் கோபம் கொண்டு நீண்ட நேரம் பேசாமல் இருக்கக்கூடாது.
- பெரியவர்களை முறை இல்லாமல் பேசக்கூடாது.
- அது போல் நன்கு விஷயம் அறிந்தவர்கள், “துன்பம் விளைவிக்கும் சிறிய குணத்தை உடையவரையும்” முறை இல்லாமல் பேச மாட்டார்.
இதுவே நல்ல நெறி என்று கூறப்படும் முறை ஆகும்.
ஆசாரக்கோவை பாடல் மற்றும் விளக்கம் PDF 61-80
ஆசாரக்கோவை விளக்கம் PDF மற்றும் eBook வடிவத்தில் 100 பாடல்களுக்கும் பதிவிறக்கம் செய்ய
மற்றும் ஆசாரக்கோவை பற்றி மேலும் தெறிந்து கொள்ள…
ஆசாரக்கோவை பாடல் மற்றும் விளக்கம் 1-20
ஆசாரக்கோவை பாடல் மற்றும் விளக்கம் 21-40