இந்திய தண்டனை சட்டம் பிரிவு 222 (IPC Section 222 in Tamil)
விளக்கம்
ஒரு நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஒரு நபருக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது அல்லது ஒரு நபர் மேல் விசாரணைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். அத்தகைய நபரைச் சிறைப் பிடிப்பதற்கும் காவலில் வைப்பதற்கும் அதிகாரம் பெற்றுள்ள ஒரு பொது ஊழியர் கருத்துடன் அந்த நபரைச் சிறைப்பிடிக்காமல் இருக்கிறார். அல்லது காவலில் உள்ள அந்த நபரைத் தப்பி ஓடுவதற்கு அல்லது தப்பி ஓட முயற்சி செய்வதற்குத் துணையாக இருக்கிறார். அந்தப் பொது ஊழியர் தண்டனைக்குரிய குற்றவாளி ஆகிறார்.
சம்பந்தப்பட்ட நபர் மரண தண்டனைக்கு உரியவராக இருப்பின், அந்தப் பொது ஊழியருக்கு ஆயுள் தண்டனை அல்லது பதினான்கு ஆண்டுகள் வரை சிறைக்காவல் தண்டனையாக விதிக்கப்படும். அத்துடன் அபராதமும் விதிக்கப்படலாம்.
அந்த நபர் ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தண்டனைக்கு உரியவராக இருப்பின் அந்த பொது ஊழியருக்கு அபராததுடன் அல்லது அபராதம் இன்றி 7 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் தண்டனையாக விதிக்கப்படும்.
அந்த நபர் 10 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை பெறக்கூடியவராக இருந்தாலும், மேல் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் காவலில் வைக்கப்பட்டிருந்தாலும், அந்தப் பொது ஊழியர் அபராதத்துடனும் அல்லது அபராதம் இல்லாமலும் மூன்று ஆண்டுகள் வரை சிறைக்காவலைத் தண்டனையாகப் பெறுவார்.
தண்டணைவிதிப்பின் கீழ் இருக்கும் அல்லது சட்டப்படி மேல் விசாரணைக்கு அனுப்பப்பட்ட நபரைக் கைது செய்யக் கடமைப்பட்ட பொதுப் பணியாளரைப் பொறுத்தவரையில் உள்நோக்கத்துடன் கைது செய்யாமல் விட்டுவிடல்
ஒரு பொதுப்பணியாளராக இருக்கின்ற எவரேனும், ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தினால் ஏதாவதொரு குற்றத்திற்கு தண்டனை விதிப்பலிருக்கும்போது அல்லது சட்டப்படி காவலில் அனுப்பப்பட்டிருக்கும் போது, அத்தகைய பொதுப் பணியாளர் என்ற முறையில் யாரேனும் ஒரு நபரைக் கைது செய்ய அல்லது அடைப்புக் காவலில் வைக்க சட்டப்படி கடமைப்பட்டிருக்கும் போது, அத்தகைய நபரை உள்நோக்கத்துடன் கைது செய்யத் தவறினால் அல்லது அத்தகைய நபரை உள்நோக்கத்துடன் தப்பிவிடச்செய்தால் அல்லது அத்தகைய நபரை அத்தகைய அடைப்புக் காவலிலிருந்து தப்பிக்க அல்லது தப்பிக்க முயற்சி செய்வதற்கு உள்நோக்கத்துடன் உதவினால் பின்வருமாறு தண்டிக்கப்பட வேண்டும், அதாவது :-
அடைப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கும், அல்லது கைது செய்யப்பட்டிருக்க வேண்டிய அந்நபர் மரண தண்டணைவிதிப்பின் கீழ் இருந்தால் ஆயுள் சிறைத்தண்டனையுடன் அல்லது பதினான்கு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அபராதத்துடன் அல்லது அவ்வாறில்லாமல் தண்டிக்கப்பட வேண்டும். அல்லது
அடைப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும், அல்லது கைது செய்யப்பட்டிருக்க வேண்டிய அந்நபர் ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தின் ஒரு தண்டனைவிதிப்பினால் அல்லது அத்தகைய தண்டணைவிதிப்பின் ஒரு தண்டனைக்குறைப்பு காரணமாக ஆயுள்சிறைத் தண்டனைக்கு அல்லது பத்து வருடம் அல்லது அதற்கு மேலான ஒரு கால அளவிலான சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டவராக இருந்தால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அபராதத்துடன் அல்லது அவ்வாறில்லாமல் தண்டிக்கப்பட வேண்டும்;
அடைப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் அல்லது கைது செய்யப்பட்டிருக்க வேண்டிய அந்நபர், ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தின் ஒரு தண்டணைவிதிப்பினால் பத்து வருடங்களுக்கு நீடிக்கப்படக்கூடாத ஒரு கால அளவிலான சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் அல்லது அந்நபர் காவலுக்கு சட்டபூர்வமாக அனுப்பப்பட்டிருந்தால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க