இந்திய தண்டனை சட்டம் பிரிவு 403 (IPC Section 403 in Tamil)
விளக்கம்
நேர்மையின்றி ஓர் அசையும் பொருளைத் தன்னுடைய சொந்த உபயோகத்திற்கென மாற்றி கொள்வதும் கையாடல் செய்த குற்றமேயாகும். இந்த குற்றத்திற்கு 2 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
உதாரணம்:
1. சங்கரனுக்கு சொந்தமான சொத்தை தன்னுடையது என்று நம்பிய சரோஜா நல்லெண்ணத்துடன் அதனை எடுத்துக் கொள்கிறாள். இந்த நிலையில் சரோஜா மீது திருட்டுக் குற்றம் சாட்ட முடியாது. ஆனால் தன்னுடைய தவறை உணர்ந்த பிறகும் சரோஜா நேர்மையின்றி அந்தச் சொத்தைத் தன் சொந்த உபயோகத்திற்கென வைத்துக்கொண்டால் சரோஜா மீது இந்தப் பிரிவின்கீழ் குற்றம் சாட்டப்படும்.
2. பரமசிவனும் பாஸ்கரனும் நண்பர்கள், பாஸ்கரனின் வீட்டுக்குச் சென்ற பரமசிவம், அவன் இல்லாதபோது அவனுடைய வீட்டிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு போகும்போது, படித்துவிட்டுத் திருப்பிக் கொடுத்து விடலாம் அதற்கு பாஸ்கர் ஆட்சேபம் தெரிவிக்க மாட்டார் என்ற நல்லெண்ணத்துடன் அப்படி செய்திருந்தால் பரமசிவத்தின் மீது பழி இல்லை. ஆனால் அந்தப் புத்தகத்தை விற்றுப் பணத்தைப் பரமசிவம் எடுத்துக்கொண்டால் பரமசிவத்தின் மீது கையாடல் செய்த குற்றம் சுமத்தப்படும்.
விளக்கம் – 1:
ஒரு முறை நேர்மையின்றிக் கையாடல் செய்தாலும் இந்தப் பிரிவின்கீழ் குற்றமாகும்.
உதாரணம்:
ராஜுவுக்கு சொந்தமான அரசாங்க கடன் பத்திரத்தை ராமன் வழியில் கண்டெடுக்கிறான். அதனை அவன் ஈடுகட்டி பணம் பெறுகிறான். பிறகு அதனை மீது ராஜுவிடம் கொடுத்துவிட வேண்டும் என்பதே அவனுடைய நோக்கமாகும். இருப்பினும் ராமன்மீது இந்தப் பிரிவின்படி குற்றம் சாட்டப்படும்.
விளக்கம் – 2:
1. ஒருவர் ஒரு பொருளைக் கண்டெடுக்கிறார். அதனுடைய சொந்தக்காரர் யார் என்று அவருக்குத் தெரியாது. சொந்தக்காரர் வந்து கேட்டல் திருப்பிக் கொடுத்துவிடலாம் என்ற நல்லெண்ணத்துடன் அதனைப் பாதுகாத்து வருகிறார். அவர் நேர்மையின்றி அதனை கையாடல் செய்ததாக அல்லது தமக்கென்று எடுத்துக்கொண்டதாகக் குற்றம் சாட்ட முடியாது.
2. ஆனால் அதன் சொந்தக்காரர் யாரென்று தெரிந்த பிறகும், அந்த நபர் அந்த சொத்தைத் தமக்கென்று வைத்துக்கொள்வது கையாடல் செய்த குற்றமாகும். சொந்தக்காரர் யாரென்று தெரிந்து கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தெரிந்தவுடன் அவருக்கு மேற்படி பொருள் தன் வசத்தில் இருக்கிறது என்று தெரிவிக்க வேண்டும் அப்படிச் செய்யாமல் இருப்பது குற்றமாகும்.
3. பொருளின் சொந்தக்காரர் யார் என்பது பொருளைக் கண்டு எடுத்தவருக்குத் தெரியவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பொருளைத் தமக்கென எடுத்துக் கொள்ளும்போது அது தம்முடையப்பொருள் அல்ல என்று உணர்ந்தாள் போதும் அல்லது அந்தப் பொருளின் சொந்தக்காரரைக் கண்டுபிடிக்க முடியாது என்று உணர்ந்தாலும் போதும்.
உதாரணம்:
அ) பாஸ்கரன் தன் பணப்பை நழுவ விட்டுவிடுவதைப் பரந்தாமன் பார்க்கிறான். அதனைப் பாஸ்கரனிடம் கொடுக்க வேண்டும் என்ற கருத்துடன் பரந்தாமன் எடுக்கிறான். ஆனால் அதைத் தனக்கே உரியதாக எடுத்துக் கொள்கிறான். அப்போது பரந்தாமன் இந்தப் பிரிவின்படி குற்றவாளி ஆகிறான்.
ஆ) ஒருவன் வழியில் ஒரு பணப்பையைக் கண்டெடுக்கிறான். முதலில் அந்தப் பைக்கு சொந்தக்காரர் யார் என்பது அவனுக்குத் தெரியாது. ஆனால் அவன் அந்தப் பையின் சொந்தக்காரர் யார் என்று தெரிந்த பிறகும் அந்தப் பையை அவரிடம் கொடுக்காமல் தானே வைத்துக் கொள்கிறான்.
இ) ஒருவன் விலை மதிப்புள்ள ஒரு மோதிரத்தை தெரிவில் கண்டு எடுக்கிறான். அது யாருடைய மோதிரம் என்ற கண்டறிய முயற்சி செய்யாமல் உடனே அதனை விற்றுப் பணத்தை எடுத்துக்கொள்கிறான். அவன் குற்றவாளி ஆகிறான்.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க