இயற்கை வளங்கள்

நம் இயற்கை வளங்கள் எங்கே !

12379 0

தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள்

நிலம் வளங்கள்இயற்கையும், மனிதனும் இயந்தே இவ்வுலகில்  வாழ வேண்டும். இயற்கை வளம் என்பது மனிதனின் முயற்சிகள் ஏதுமின்றி மனிதர்களின் அனைத்து விதமான பயன்பாட்டிற்காகவும் இந்த தரணியில் கிடைக்கும் பொருட்களே ஆகும்.

இன்றைய தலைமுறையை சார்ந்த நாம், இதன் நன்மை தெரியாமல் இயற்கை அன்னையின் வளங்களைச் சுரண்டி அவளையும் அழித்து, நாமும் அழிந்து கொண்டு இருக்கிறோம் என்பதை மறந்து வாழ்கின்றோம்.

புவியின் இயற்கை வளங்கள்

 • நீர்
 • நிலம்
 • காற்று
 • காடுகள்
 • விலங்குகள் மற்றும் பறவைகள்
 • பெட்ரோலியம் மற்றும் டீசல்
 • கனிமம் மற்றும் தாது வளங்கள்

இவை யாவையும் நாம் இயற்கை வளங்கள் என்கின்றோம். இவற்றை மனிதர்களாகிய நாம் தம் தேவைகளுக்காகவே பயன்படுத்திக் கொள்கின்றனர். 

இத்தகைய இயற்கை வளங்க்களைப்பற்றி சற்று பார்ப்போம்…

நீர் வளங்கள்

நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வானின்று அமையாது உலகு

நீர் இல்லாமல் உலகத்தில் உயிர்கள் வாழ முடியாது. அத்தகைய நீரினை நாம் தக்க முறையில் பயன்படுத்தி, நமக்கு அடுத்து வரும் தலைமுறைக்கு நீர் வளத்தை அளிக்க வேண்டும். நம் பூமியில் உள்ள நீரில் 97.5 சதவீதம் உப்பு நீராகும். மீதமுள்ள 2.5 சதவீதம் மட்டுமே தூய்மையான நீராகும்.

தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் - 3அந்த தூய்மையான நீரிலும் 29 சதவீதம் மட்டுமே நிலத்தடி நீராக உள்ளது. மீதம் இருப்பவை பனிப்பிரதேசங்களாகவும், பனிக்கட்டிகளாகவும், பனிப்போர்வையாகவும் இருக்கின்றன.

நம் வாழ்வாதாரத்தில் நீரின் தேவை முக்கிய அங்கமாக இருக்கிறது. அக்காலத்தில் குளம், எரி,கண்மாய், என பல வகையிலும் நீரை சேமித்து வைத்து இருந்தோம். இன்று எரி, குளம் இருந்த இடங்களில் கட்டிடங்கள் நிரம்பியதால், நீரை சேமிக்கும் வழியே இல்லாமல் போகிறது.

ஆனால் இன்றோ. ஆறுகளில் உள்ள நீரையும் சேமிக்காமல் கடலுக்குள் சென்று கலப்பதற்கே வழிவகை செய்து இருக்கிறோம்.

அப்படியே கடலில் கலந்தாலும் சுத்தமான மழை நீராக கலப்பதில்லை. தொழிற்சாலைகளில் கழிவுகளும், மக்களால் கொட்டப்படும் குப்பைகளும், நெகிழிகளும் ஒன்றாக கலந்து மாசடைந்த நீராகவே கடலில் கலக்கிறது. இதனால் நீர் மாசடைவது மட்டுமில்லாமல் கடலில் வாழும் உயிரினங்களும் பாதிப்படைகின்றன என்பதை கவனிக்க தவருகின்றோம்.

பாதுகாக்கும் வழிமுறைகள்

தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் - 5

 • குளங்களும் , ஏரிகளும் முறையாக தூர்வாரப்பட்டு, நீர் இருந்தால் ஆகாயத் தாமரைகள் படரவிட்டு சேமித்து வைக்க முடியும்.
 • ஒவ்வொரு வீட்டிலும் நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தலாம் அல்லது தோட்டங்கள் அமைத்து வீணாகும் நீரை அதற்குப் பயன்படுத்தலாம்.
 • சில தொழிற்சாலைகள் கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்தினாலும், பல தொழிற்சாலைகள் கொட்டாக்கூடாத சாயக்கழிவுகளையும் சேர்த்தே ஆற்றில் கொட்டுகின்றனர். இதனால் மனிதர்களுக்கு பல நோய்கள் வருவதோடு மட்டுமில்லாமல், நீரில் வாழும் சிறு உயிரினங்களும் ,மீன்களும் இறக்கின்றன.
 • மழைநீர் சேகரிப்பு என்பது தனிப்பட்ட நபரின் தொடங்கி, நாடு முழுவதும் கொண்டு வர வேண்டிய அவசியமான திட்டங்களில் ஒன்றாகும்.
 • “தூய்மை இந்தியா” என்று கொண்டு வந்தாலும், ஆற்றில் கொட்டும் குப்பைகளின் அளவை கணக்கெடுக்க முடியவில்லை. இதற்கு ஒரு வகையில் அரசும் காரணமாகிறது. தரம் பிரித்து கொட்டும் குப்பைகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது என்பது நம் நாட்டில் ஒரு சில இடங்களில் மட்டுமே உள்ளன. அதனை மேம்படுத்த யாருமே முன் வருவதில்லை.
 • ஆறுகள் சரியாக தூர்வாரினால், மழை பெய்யும் போது ,போதுமான நீரைச் சேமிக்க முடியும். ஆனால், நிலைமை, ஆற்றோரப் பகுதியில், மணல் அள்ளி அந்த வளங்களும் சுரண்டப்பட்டு வருகின்றன.

 

தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் - 7எத்தனை தொழிற்சாலைகள் புதிது புதிதாக வருகிறதோ, அதற்காக நாம் மிகவும் வருத்தப்படுவோம். (தொழிற்சாலைகளில் நீரின் தேவை மிகவும் அதிகம் என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாக இருக்கிறது).

நிலம் வளங்கள்

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்

வேண்டாது சாலப் படும்.

அதாவது உழுத மண்ணை, ஏறத்தாழ 35 கிராம் புழுதி, 8.75 கிராம் புழுதி ஆகும்படி காயவிட்டுப் பிறகு பயிர் செய்தால், ஒரு கைப்பிடி அளவு எருவும் இடாமலேயே கூட அந்தப் பயிர் விளைச்சல் அதிகமாய் அளிக்கும்.

இன்றைய நிலை???

மணல் கொள்ளை 

“நிலம்” என்பது எந்த வகையான பயிரினை விளைச்சல் செய்தாலும், நன்றாக விளைச்சல் தரக்கூடியதாகவே இருந்தது. சுழற்சி முறையில் வெவ்வேறு பயிர்கள் பயிரிட்டதால், அனைத்து சத்துக்களும் மண்ணில்(நிலத்தில்) குறைவில்லாமல் இருந்தன.

காலங்கள் செல்ல செல்ல, நீரின் பற்றாக்குறை வந்த போது பயிர்களை ஒரே மாதிரியாக பயிரிடத் தொடங்கினர். பிறகு குறைந்த நாட்களில், நிறைய மகசூல் தரும் பயிர்களை பயிரிட்டனர். பூச்சிகொல்லி மருந்துகள் அதிகவீரியம் உடையதாய் பயிர்கள் மீது தெளிக்கப்பட்டது. பயிர்களின் தன்மையும் மாறியது, நிலத்தின் தன்மையும் மாறியது.

தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் - 10இவ்வாறு ஒரே பயிர்களை பயிரிட்டு, பின்பு வேறு பயிர்களைப் பயிரிடும் போது, அதற்கான சத்து கிடைக்காமல் போகிறது. உடனே செயற்கை உரம் வாங்கி பயன்படுத்துகின்றனர். இப்படியே திரும்ப திரும்ப செய்து, நம் விவசாய நிலத்தை வெறும் சக்கையாக மாற்றிவிட்டனர் மனிதர்கள். பின்பு எப்படி விளைச்சல் கிடைக்கும்…?

அதுமட்டுமல்லாமல், விவசாயம் பலனளிக்கவில்லை என்று கூறி, விவசாய நிலத்தை விற்று விட்டு கட்டிடங்கள் கட்டுவதற்கு வழிவகுத்துவிட்டனர். விளைவு: நிலங்களை விட கட்டிடங்களே அதிகம் காணப்படுகின்றன.

பாதுகாக்கும் முறைகள்

 • பூச்சிகொல்லி மருந்துகள், செயற்கை உரங்கள் இவற்றை எல்லாம் பயன்படுத்தி, மீண்டும் பழைய நிலைக்கு நம் நிலங்களைக் கொண்டு வருவது கடினமான ஒன்று தான். சில இழப்புகளும் வரும். ஆனால் அப்படி செய்தால் மட்டுமே நம் நிலத்தைக் காப்பாற்ற முடியும். முன்பெல்லாம் அறுவடைக்குப் பிறகு, மாட்டுச்சாணத்தை எருவாக நிலத்தில் கொட்டி உழுவர். அந்த முறையை இப்போதும் பின்பற்றலாம்.

தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் - 12

 • விவசாய நிலங்களை ஆக்கிரமித்து, கட்டிடங்கள் மற்றும் கல்விக்கூடங்கள் கட்டாமல் இருக்கக் கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும்.

இன்று விவசாய நிலங்களில் கட்டிடங்கள் கட்டுவது நிறுத்தி, சாலைகள் அமைக்கத் துவங்கி விட்டனர். அதை விட வருமானம் இதில் அதிகமாய் வருகிறது போலும்.

காற்று வளங்கள்

மனிதனின் தேவைகளில் இன்றியமையாத ஒன்றாக காற்றும் இருக்கிறது. காற்று என்ற ஒற்றைப் பெயருடன் இருந்தாலும், பல வாயுக்களை உள்ளடக்கி இருக்கிறது. 

இன்று, காற்று பல்வேறு விதத்திலும் மாசடைகிறது. குப்பைகளை எரிப்பது, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, மணல் புழுதி போன்றவற்றால் காற்று மாசு அடைகிறது. இதனால் நமது வளிமண்டலமும் பாதிக்கிறது.

பாதுகாக்கும் முறைகள்:

 • காற்று மாசுபடுவதைத் தவிர்க்க மரக்கன்றுகள் நட வேண்டும், காற்றை தூய்மைப்படுத்துவதே மரங்களின் வேலை. ஆனால் நாம் மரத்தை விட்டு வைப்பதே இல்லை. (தொழிற்சாலைகள் சுற்றி மரங்கள் இருக்க வேண்டும் என்பதற்கு இதுவே காரணமாகும்).

தொழிற்சாலைகளே காற்று மாசுபட முதன்மை காரணங்கள்

 • தற்போது வளர்ந்துள்ள தொழில்நுட்பங்களின் மூலம், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையில் சிறிதளவேனும் கட்டுபடுத்த முடியும்.
 • நெகிழி பயன்பாட்டைத் தவிர்க்க ஆரம்பித்தாலும், இன்னும் கடுமையான நிபந்தனைகளுடன் முழுமையாக இருக்கவில்லை என்பதே உண்மை.
 • மட்காத குப்பைகளை மறுசுழற்சி செய்வதே நல்லதாகும். அதை எரிப்பதால், தீமை மனிதர்களுக்கே வரும்.
 • காற்று வளங்களைப் பயன்படுத்தி, காற்றாலை மூலம் ஆற்றலை சேமிக்க முடியும்.

காடுகள்

தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் - 15

ஒரு ஹெக்டேர் பரப்பளவில், அதாவது 2.45 ஏக்கர் நிலத்தில், குறைந்தபட்சம் 10%அளவிற்கு மரங்கள் இருந்தால், அப்பகுதியை “காடு” என்றழைக்கிறோம்.

காடுகள் விலங்குகளுக்கும் மற்றும் பறவைகளுக்கும் வாழ்விடமாக அமைகிறது. இந்தியாவில் தற்போதுள்ள காடுகளின் பரப்பளவு சுமார் 3,775 சதுர கிலோமீட்டர் ஆகும். மனிதர்களாகிய நாம் தான் , மக்கள்தொகைப் பெருக்கத்தின் காரணமாக காடுகளை அழித்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காடுகளை அழித்து மனிதன் குடியேறுவதால் விலங்குகள் நம் வீட்டினுள் நுழைகின்றன. 

தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் - 17ஆனால் உன்மையில், நாம் தான் அவற்றின் வாழிவிடத்தில் வசிக்கிறோம்.

காடுகளில் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகையான மரங்கள் வளரும்.

தமிழகத்தைப் பொருத்த வரை : 

இவற்றை சார்ந்து அதிக காடுகள் உள்ளது.

உச்சநீதிமன்ற சட்டத்தின் படி, ஒரு நபர் ஒரு மரத்தை வெட்டினால் , அதற்கு ஈடாக பத்து மரக்கன்றுகளை நட வேண்டும். ஆனால் இங்கு மரங்கள் வெட்டும் பணிகள் மட்டுமே நடக்கிறது . மீண்டும் நடுவதற்கு யாரும் முயற்சி செய்வதில்லை.

உலக வன நாள், உலக சுற்றச்சூழல் தினம் போன்ற தினங்களில் மட்டும் நான்கு மரக்கன்றுகளை நட்டு வைத்தது போல், கணக்கு எழுதி வைத்து விட்டு, மற்றைய நாட்களில் அந்த மரக்கன்றுகளை என்ன ஆனது என்றும் கூட பார்ப்பது இல்லை.

மரங்களை வெட்டுவதால் தட்பவெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு மழைப்பொழிவு அதற்குரிய காலத்தில் நடைபெறுவதில்லை.

“மாரி மாறி அல்லவா பெய்கிறது….!!!”

 காடுகளை அழிப்பதால் கார்பன் சுத்திகரிப்பு முறை என்று அழைக்கப்படும் , “கரிமத் தன்மயமாக்கல்” நடைபெறாமல் போகிறது.

பாதுகாக்கும் வழிமுறைகள்

 • தற்போது இருக்கும் நிலையில் வீட்டிற்கு ஒரு மரம் வளர்த்தாவது , நாம் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.
 • அப்படியே நடுவதாய் இருந்தாலும், நிலத்தடி நீரை உறிஞ்சாத மரங்களையே நட வேண்டும். எடுத்துகாட்டாக, வேப்ப மரம், புங்க மரம், அரச மரம் போன்றவை சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு இருக்கும்.
 • காடுகள் இருப்பதாலேயே மண் வளம் பாதுகாக்கபடுகிறது. மழைப்பொழிவின் போது மண் அரிப்பு ஏற்படாமல் காடுகளே பாதுகாக்கின்றன.
 • சில அரிய வகை மூலிகைகளைப் பாதுகாக்கவும், உயிரினங்களுக்கு வாழ்விடமாய் அமையவும் மனிதர்களே உதவ வேண்டும்.
 • கட்டாயம் நீங்க்கள் இவரைப் பற்றி இங்கு படிக்க வேண்டுகின்றேன். 

விலங்குகள் மற்றும் பறவைகள்

இவற்றின் வாழிடமே காடு தான். அதனை அழிப்பதாலயே விலங்குகளும், பறவைகளும் ஊருக்குள் வருகின்றன. காடுகள் மற்றும் காலநிலை மாற்றம் ஏற்படுவதால், சில அரிய வகை உயிரினங்கள் அழிந்தும் , அழியும் நிலையிலும் இருக்கின்றன. மேலும் நாம் சிறுவயதில் அதிகம் பார்த்த சிட்டுக்குருவி போன்ற பறவைகள் இன்று கான்பதே அறிதாக உள்ளது.இவற்றைப் பொன்ற உயிரினங்கள் இருப்பதால் நமக்கு நன்மைகளே உண்டாகின்றன.

இயற்கையும் மனிதனும்

உலகில் மனிதன் இயற்கைகளை நம்பியே, இயற்கையின் வளங்களைக் கொண்டு  வாழவும், இயற்கையை மென்மேலும் வளர வைக்கவுமே படைக்கப்பட்டான்.

தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் - 19இயற்கை அதன் கடமையைத் தவறாமல் செய்கிறது (வளங்களை அள்ளி வழங்குகிறது). மனிதன் தன் கடமையை மறந்து, இயற்கையை அழித்து சுயநலத்துடன் தனகென்ற வாழ்கையை மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

இயற்கை எங்கே !

“இயற்கை எங்கே?” என்று கேட்கும் அளவிற்கு இன்றைய நிலை உள்ளது . இயற்கையை ரசிக்க அதற்கென்று தனிப்பட்ட சுற்றுலா இடத்திற்கோ, பொழுதுபோக்கு பூங்காவிற்கோ தான் செல்ல வேண்டி இருக்கிறது.

அப்போதெல்லாம்  ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மரமும், திண்ணையும் கண்டிப்பாக இருக்கும். இப்போது மரமும் இல்லை, திண்ணை வைத்த வீடுகளும் இல்லை. காரணம் மரம் இருந்தால் குப்பை சேருகிறதாம். காரணத்தைக் கூறுபவர்கள் அதன் நன்மையை நினைத்துப் பார்க்க மாட்டார்கள் போலும்…

செயற்கையான இயற்கை

 • இயற்கை காற்றை உணர்வதை விட்டு, மின்விசிறி காற்றும், ஏசி காற்றும் தான் இப்போது வழக்கமாகி உள்ளது. இயற்கை காற்றால் நம் சுவாசக் கோளாறுகள் நீங்கும் என்பதை பலரும் அறிந்து கொள்ளாமல் இருக்கின்றனர்.
 • ஆரம்ப காலகட்டத்தில் எரி, குளம், ஆறுகளில் இருக்கும் நீர் தான் குடிநீராக இருந்தது. தற்போது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்ற பெயரில் சத்துக்கள் நீக்கப்பட்ட, வெறும் நீரையே அருந்துகிறோம்.
 • வீட்டின் அழகிற்காக மட்டுமல்லாமல் சமையலுக்கும், மருத்துவத்திற்கும் இருந்த செடிகளும், வேலியில் இருந்த கொடிகளும் இன்று காணாமலே போய்விட்டன. மாறாக சில அழகு செடிகளும், நெகிழி தோரணங்களுமே கண்ணில் படுகின்றன.
 • இயற்கையின் பெரிய மாற்றமாக நெகிழிகள் இருந்தது. இட்லி கடையில் பயன்படுத்தும் பூவரசு மற்றும் வாழை இலை முதல், காகிதம் ,கைப்பைகள் என்று அனைத்தும் மாற்றப்பட்டு நெகிழியாக மாறி இருந்தது.
 • காலநிலைக்கு ஏற்றவாறு இயற்கை அளிக்கும் அந்தந்த கால பழங்களையும், காய்கறிகளையும், தானியங்களையும் ( எடுத்துகாட்டாக, கோடைகாலத்தில் நுங்கு, தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரிக்காய், பாகற்காய், திணை, கம்பு, போன்றவையும், மழைக்காலத்தில் மற்றும் குளிர்காலத்தில் கேழ்வரகு , தூதுவளை ) தவிர்த்துவிட்டு குளிரானங்களையும், குப்பை உணவுகளையும் (junk food) எடுத்துக் கொள்கின்றனர்.
 • நம் நிலத்தில் விளையும் பயிர், காய்கறிகளுக்கு, இயற்கை உரங்களான மாட்டுச்சாணம், மக்கும் இலைகளையே பயன்படுத்தினர். பயிர் விளைந்த இடங்களில் நீர் ஊறி இருக்கும் போது, கைகளால் தோண்டினால் நிறைய மண்புழுக்கள் இருக்கும். ‘மண்புழு’ விவசாயிகளின் நண்பன் என்கின்றோம். இன்று செயற்கை உரங்களை பயன்படுத்தி நிலத்தையும், பயிர்களையும் பாழாக்கி, மன்புழுவையும் காணாமல் போக செய்து விட்டோம்.
விளைவு: மண்புழு உரம் என்ற மாற்றம் வந்தது.

மண்புழு உரம்

வீட்டு விலங்குகள் ,பறவைகள் என்று நாய், பூனை, கிளி, புறா, போன்றவற்றை செல்லப்பிராணிகளாக வளர்த்ததை மறந்து, பொம்மை விலங்குகளும் ,பறவைகளும் மனிதர்களின் நண்பர்களாய் மாறின. பொருளாதாரத்திற்கு உதவியாக இருக்கும் விலங்குகளான கோழி, ஆடு, மாடு, மீன், போன்றவையே இன்று வீட்டில் வளர்க்கப்படுகின்றன.

கனிம வளங்கள்

கனிமங்கள் என்பது இயற்கை நமக்கு அளித்த மற்றுமொரு கொடையாகும். கனிமங்கள் மூலம் பொருளாதார அடிப்படையில் மட்டுமல்லாமல், தேவையான ஆயுதங்கள், எந்திரங்கள், ஊர்திகள் போன்றவைகளை தயாரிக்க உதவியாய் இருந்தன, இருக்கின்றன.

கனிமங்கள் என்பது இரும்பு, துத்த நாகம், காரீயம், செம்பு, தாமிரம், மாங்கனீசு, பாதரசம், சயனைடு, கந்தகம்,வெள்ளி, தங்கம், வைரம், நிலக்கரி, தோரியம், யுரேனியம் போன்றவைகளை உள்ளடக்கி உள்ளன.

கனிமங்கள் எங்குள்ளன ?

அனைத்து இடங்களிலும், அனைத்து வகையான கனிமங்களும் கிடைக்காது. சில இடங்களில் அதிகமாகவும், சில இடங்களில் குறைவாகவும் கிடைக்கும்.

தென் ஆப்பிரிக்காவில் அதிகளவில் தங்கமும் வைரமும் காணப்படுகின்றன (குறைந்த அளவில் வெள்ளி), வட அமெரிக்காவில் மாலிப்டினம் மிகுதியாக காணப்படுகின்றன (குறைந்த அளவில் மாங்கனீசு)

இந்தியாவில் நிலக்கரி, மாங்கனீசு, இரும்பு, சிலிக்கா, மைக்கா, சுண்ணாம்பு கற்கள், அதிகளவில் காணப்படுகின்றன ( குறைந்த அளவில் தங்கம், வெள்ளி, காரீயம், தாமிரம்).

குறைந்து போகும் கனிம வளங்கள்

தற்போது கிடைக்கும் கனிமங்களில் சில 21- ஆம் நூற்றாண்டிற்கு மேல் அற்றுப் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது. முழுமையாக அனைத்து கனிம வளங்களும் 28- ஆம் நூற்றாண்டில் அழிந்து விடும். காரணம், மக்கள்தொகை பெருக்கமே ஆகும். மக்கள்தொகை பெருக்கத்தால் மக்கள் இடம்பெயர்ந்து நகர்ப்புறத்தில் வாழத் தொடங்குவதால், கனிம வளங்கள் குறைய வாய்ப்புள்ளது.

எண்ணெய் வளங்கள்

எண்ணெய் வளங்கள்

இவை உலகத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே கிடைக்கின்றன. எண்ணெய், நிலக்கரி போன்றவைகளை எரிபொருள் வளங்கள் எனவும் கூறலாம். இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றாலும், கிடைப்பது மிகவும் அரிதாகவே உள்ளது. எனவே வருங்காலத்தில் எரிபொருள் பற்றாக்குறை வருவதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது.

நாம் மாற்று எரிபொருட்களை கண்டுபிடித்தாக வேண்டிய அல்லது பயண்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. 

இந்தியாவில் 1,31,000 மில்லியன் டன் வரை நிலக்கரி இருப்பதாக ஆய்வாளர்கள் கணகிட்டுள்ளனர். 

தமிழ்நாட்டில் இயற்கை வளங்கள்

தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 1,30,058 சதுர கிலோமீட்டர் ஆகும்.

தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் - 23தமிழகத்தில் மலை வளம்

தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் நீலகிரி மலைப்பகுதியில் ஒன்று சேருகின்றன. இதில் கிழக்குத் தொடர்ச்சி மலை ,தொடர்ச்சியாக இல்லாமல் இருக்கின்றன.

தமிழக மலைகள் பற்றி மேலும் தெறிந்துக்கொள்ள…

தமிழகத்தில் மழை வளம்

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்கற்றால் ஜூன் முதல் செப்டம்பர் வரை தோராயமாக 22 சதவீத மழையும்,

வடக்கிழக்கு பருவக்காற்றால் அக்டோபர் முதல் நவம்பர் வரை 57 சதவீத மழைப்பொழிவும், சில சமயங்களில் புயல் ஏற்பட்டால் 21% மழைப்பொழிவு  கிடைக்கும்.

தமிழகத்தில் காடு வளம்

தேசிய காடுகள் கொள்கையின் படி ஒரு மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில், குறைந்தபட்சம் 33 சதவீதம் அளவிற்கு காடுகள் இருக்க வேண்டும்.

ஆனால் , தமிழ்நாட்டில் 17% மட்டுமே காடுகளாக இருக்கின்றன.

தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் வகைகள்:
 • அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்

(நீலகிரி,  ஆனைமலை).

 • அயன மண்டல் அகன்ற இலைக் காடுகள் அல்லது பருவக்காடுகள்

(மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதி).

 • சதுப்பு நிலக் காடுகள்

(சிதம்பரம், கோடியக்கரை, பிச்சாவரம்).

ஊட்டி சுற்றுலா பயணம்

 • முட்புதர் காடுகள்

(வறண்ட நிலங்களில் உள்ளன).

மண் வளம் காணப்படும் பகுதிகள்

 1. வண்டல் மண்: தஞ்சை, திருவாரூர், கன்னியாகுமரி, நாகை, திருநெல்வேலி, விழுப்புரம், கடலூர்.
 2. கரிசல் மண்: கோயம்புத்தூர்,மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம்.
 3. செம்மண்: சிவகங்கை, ராமநாதபுரம்.
 4. துருக்கல் மண்: காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சை.
 5. உவர் மண்: வேதாரண்யம்.

தமிழகத்தில் கனிம வளம்

இரும்புத்தாது, செம்பு, பாக்சைடு, குரோமைடு, டைரைடு போன்ற உலோக கனிமங்கள் ,

சுண்ணாம்புக்கல், மைக்கா, மாக்னசைடு, ஸ்டீடியட்டு ,உப்பு, போன்ற அலோக கனிமங்களும் கிடைக்கின்றன.

தமிழகத்தில் எரிபொருள் வளம்

எரிபொருள் வளங்களான பெட்ரோலியம், திருவாரூர் மாவட்டம், பனங்குடி பகுதியிலும்.

லிக்னைட் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியிலும் கிடைக்கின்றது.

நீர் மின் நிலையங்கள்

 • மேட்டூர்
 • பாபநாசம்
 • பைகரா
 • குந்தா
 • காடம்பாறை
 • சோலையார்
 • ஆழியார்

சூரிய மின் சக்தி நிலையங்கள்

 • திண்டுக்கல்
 • கிருஷ்ணகிரி
 • தருமபுரி

காற்றாலை சக்தி நிலையங்கள்

 • ஆரல்வாய்மொழி கணவாய்
 • செங்கோட்டை கணவாய்
 • பாலக்காட்டு கணவாய்
 • சென்னை கடலோரப் பகுதிகள்
 • ராமேஸ்வரம்,
 • தேனி
 • பழனி

அதிக காற்று வீசும் பகுதியில் ,அதனை பயன்படுத்தி பயனீட்டு சக்தியாக (Usable Energy) மாற்றி உபயோகப்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டாக: ஓடந்துறை பகுதியில் அக்கிராமத்திற்குத் தேவையான மின்சாரத்தை அவர்களே காற்றாலை மூலம் உற்பத்தி செய்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இயற்கையை நாம் காப்போமா? இயற்கை நம்மைக் காக்குமா?

நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய விடயம் இது. மனிதன் இயற்கையை மென்மேலும் அழித்துக் கொண்டு இருக்கிறான். மனிதன் இயற்கையைப் பாழக்கும் செயல்களை, ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு செய்து இருந்தால், மனிதனை மற்றொருவன் விட்டு வைத்திருக்கவே மாட்டான்.

அதனால் தான் என்னமோ, இயற்கை அவ்வப்போது மழையால் பல ஊர்களை மூழ்கடித்து, புயல், சூறாவளி, போன்ற சீற்றத்தால், தட்ப வெப்ப நிலை மாற்றத்தால் அதிக குளிராலும், அதிக வெயிலாலும்  தன் கோபத்தை பல விதமாக வெளிப்படுத்துகிறது.

இருந்தாலும் இயற்கை தன்னால் முடிந்த உதவியை மனிதனுக்கு தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறது.

எனவே மனிதன் இயற்கையைக் காப்பாற்றினால் தான், இயற்கை மனிதனைக் காப்பாற்றும்.

தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் - 26

அழகான இயற்கை:

இயற்கை அன்னையாய்…

வளி,நீர், மண், கானகம், உயிரினங்கள், கனிமங்கள் பிள்ளையாய், ஒன்றாய் வாழும்(வாழ்ந்த)  இல்லத்தில், புதிய உறவாய் மனிதனை சேர்த்துக் கொண்டார்கள்…

அவன் தன் ஆறாம் அறிவால்,

இயற்கையின் ஆறு பிள்ளையையும், துன்புறுத்தி இன்பம் கொள்கிறான்…

அவன் அறியவில்லை,

அந்த அன்னையே இறுதியில்  இவனைக் காப்பாற்ற போகிறாள் என்று… இவனும் அவளின் பிள்ளைத் தானே…

இதை அறியாத அவன்,

இறுதியில் அவளையும் அழிக்கப் போகிறான்…

 

நன்றி...
- ஸ்டெல்ல்லா மேரி
albatross1395@gmail.com

தென்றல் காற்று

எச்சரிக்கை: இயற்கையை அழித்தால், மனிதனும் அழிவான் !!!!!

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன