கீழடி அருங்காட்சியகத்துக்கு மார்ச் மாதத்தில் அடிக்கல்: அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

கீழடி அருங்காட்சியகத்திற்கு மார்ச் மாதத்தில் அடிக்கல் நாட்டப்படும் என, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 2020-2021 தமிழக பட்ஜெட்டில், கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என, துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக, இன்று (பிப்.22) சென்னை, தரமணியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், “கீழடி அருங்காட்சியகம் அமைக்க நான்கு நாட்களுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டுள்ளது. ‘ஃபாஸ்டிராக்’ டெண்டர் தான் விடப்பட்டுள்ளது. 15 நாட்கள்தான் அதற்குக் கெடு. இன்னும் 11 நாட்களில் யாருக்கு டெண்டர் விடப்படுகிறது என்பது முடிவு செய்யப்படும்.
மார்ச் மாத நடுவில் அருங்காட்சியகத்துக்கு அடிக்கல் நாட்டப்படும். ஏனென்றால், ஒப்பந்தம் போடப்பட்ட பின்னர்தான் அடிக்கல் நாட்ட முடியும். அதன் பிறகு பணிகள் வேகமாக நடைபெறும்” எனத் தெரிவித்தார்.