கீழடி 6-ம் கட்ட அகழாய்வு

கொந்தகை கிராமத்தில் அமர்ந்த நிலையில் எலும்புக்கூடு கண்டெடுப்பு
கீழடி அகழ்வாராய்ச்சியின் ஒரு பகுதியாக கொந்தகை கிராமத்தில் நடைபெற்று வரும் 6-ம் கட்ட அகழாய்வில் அமர்ந்த நிலையில் எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி 5-ம் கட்ட அகழாய்வு பணி நிறைவு பெற்ற நிலையில் தற்போது ஆறாம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. கொந்தகை ஈமக்காடாக இருந்த இடம்.
இந்த இடத்தில் தமிழக தொல்லியல் துறை சார்பாக ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை மூன்று குழிகள் தோண்டப்பட்டுள்ளன. முதல் குழியில் 2 முதுமக்கள் தாழிகளும், 2-வது குழியில் 8 முதுமக்கள் தாழிகளும், மூன்றாவது குழியில் 2 தாழிகளும் உள்ளன.
இவற்றில் இரண்டாவது குழியில் உள்ள ஒரு முதுமக்கள் தாழியின் அருகே அமர்ந்த நிலையில் எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த அகழாய்வுப் பணியில் இன்று அமர்ந்த நிலையில் எலும்புக்கூடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் காலம் 2000-ம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கூறப்படுகிறது.
முதுமக்கள் தாழியின் அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூட்டினை தமிழக தொல்லியல் துறை அலுவலர்களும் மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையிலான நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்களும் இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.