அடைக்கலப் பத்து
திருவாசகம்/அடைக்கலப் பத்து
செழுக்கமலத் திரளனநின் சேவடி சேர்ந்தமைந்த
பழுத்தமனத் தடியருடன் போயினர் யான் பாவியேன்
புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலா
அழுக்குமனத் தடியேன் உடையாய் உன் அடைக்கலமே. 408
வெறுப்பனவே செய்யும் என்சிறுமையைநின் பெருமையினாற்
பொறுப்பவனே அராப் பூண்பவனே பொங்கு கங்கைசடைக்
செறுப்பவனே நின்திருவருளால் என் பிறவியைவேர்
அறுப்பவனே உடையாய்அடியேன்உன் அடைக்கலமே. 409
பெரும்பெருமான்என் பிறவியை வேரறுத்துப் பெரும்பிச்சுத்
தரும்பெருமான் சதுரப்பெருமான் என் மனத்தினுள்ளே
வரும்பெருமான் மலரோன் நெடுமாலறியாமல் நின்ற
அரும்பெருமான் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 410
பொழிகின்ற துன்பப் புயல்வெள்ளத்தில்நின் கழற்புaணைகொண்
டிழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்யான் இடர்க்கடல்வாய்ச்
சுழிசென்று மாதர்த் திரைபொரக் காமச் சுறவெறிய
அழிகின்றனன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 411
சுருள்புரி கூழையர் சூழலிற் பட்டுன் திறம்மறந்திங்கு
இருள்புரி யாக்கையிலேகிடந் தெய்த்தனன் மைத்தடங்கண்
வெருள்புரிமான்அன்ன நோக்கிதன் பங்கவிண்ணோர்பெருமான்
அருள்புரியாய் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 412
மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத் திடவுடைந்து
தாழியைப் பாவு தயிர்போல் தளர்ந்தேன் தடமலர்த்தாள்
வாழியெப் போதுவந்தெந்நாள் வணங்குவன் வலவினையேன்
ஆழியப் பாவுடை யாய் அடியேன் உன் அடைக்கலமே. 413
மின்கணினார்நுடங்கும் இடையார் வெகுளிவலையில் அகப்பட்டுப்
புன்கணனாய்ப்புரள் வேனைப் புரளாமற் புகுந்தருளி
என்கணிலே அமுதூறித் தித்தித்தென் பிழைக்கிரங்கும்
அங்கணனே உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 414
மாவடு வகிரன்ன கண்ணிபங்கா நின் மலரடிக்கே
கூவிடு வாய்கும்பிக் கேயிடு வாய் நின் குறிப்பறியேன்
பாவிடையாடு குழல்போற் கரந்து பரந்த உள்ளம்
ஆகெடுவேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 415
பிறிவறியார் அன்பர்நின் அருட்பெய்கழல் தாளிணைக்கீழ்
மறிவறியாச் செல்வம்வந்துபெற்றார் உன்னை வந்திப்பதோர்
நெறியறி யேன் நின்னையே அறியேன் நின்னையே அறியும்
அறிவறின் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 416
வழங்குகின்றாய்க்குன் அருளார் அமுதத்தை வாரிக்கொண்டு
விழுங்குகின்றேன் விக்கினேன் வினையேன் என்விதியின்மையால்
தழங்கருந்தேனன்ன தண்ணீர் பருகத்தந் துய்யக் கொள்ளாய்
அழுங்குகின்றேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 417
திருச்சிற்றம்பலம்
மாணிக்கவாசகர்:
மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார்.
Buy Book From amazon:
Thiruvasagam Tamil Book Hardcover – 2017
by SWAMI CHIDBHAVANANDA