அற்புதப்பத்து – அனுபவமாற்றாமை
திருவாசகம்/அற்புதப் பத்து
மைய லாய்இந்த மண்ணிடை வாழ்வெனும் ஆழியு ளகப்பட்டுத்
தைய லாரெனுஞ் சுழித்தலைப் பட்டுநான் தலைதடு மாறாமே
பொய்யெ லாம்விடத் திருவருள் தந்துதன் பொன்னடி யினைகாட்டி
மெய்ய னாய்வெளி காட்டிமுன் நின்றதோர் அற்புதம் விளம்பேனே. 569
ஏய்ந்த மாமல ரிட்டுமுட் டாததோர் இயல்பொடும் வணங்காதே
சாந்த மார்முலைத் தையல்நல் லாரொடுந் தலைதடு மாறாகிப்
போந்து யான்துயர் புகாவணம் அருள்செய்து பொற்கழலி னைகாட்டி
வேந்த னாம்வெளியே என்முன் நின்றதோர் அற்புதம் விளம்பேனே. 570
நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து நானென தெனும்மாயக்
கடித்த வாயிலே நின்றுமுன் வினைமிகக் கழறியே திரிவேனைப்
பிடித்து முன்னின்றப் பெருமறை தேடிய அரும்பொருள் அடியேனை
அடித்த டித்துஅக் காரமுன் தீற்றிய அற்புதம் அறியேனே. 571
பொருந்தும் இப்பிறப் இறப்பிவை நினையாது பொய்களே புகன்றுபோய்க்
கருங் குழலினார் கண்களால் ஏறுண்டு கலங்கியே கிடப்பேனைத்
திருந்து சேவடிச் சிலம்பவை சிலம்பிடத் திருவொடும் அகலாதே
அருந்து ணைவனாய் ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 572
மாடுஞ் சுற்றமும் மற்றுள போகமும் மங்கையர் தம்மோடுங்
கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு குலாவியே திரிவேனை
வீடு தந்தென்றன் வெந்தொழில் விட்டிட மென்மலர்க் கழல்காட்டி
ஆடு வித்தென தகம்புகுந் தாண்டதோர் அற்புதம் அறியேனே. 573
வணங்கும் இப்பிறப் இறப்பிவை நினையாது மங்கையர் தம்மோடும்
பிணைந்து வாயிதழ்ப் பெருவெள்ளத் தழுந்திநான் பித்தனாய்த் திரிவேனைக்
குணங்க ளுங்குறி களுமிலாக் குணக்கடல் கோமளத் தொடுங்கூடி
அணைந்து வந்தெனை ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 574
இப்பி றப்பினில் இணைமலர் கொய்துநான் இயல்பொடஞ் செழுத்தோதித்
தப்பி லாதுபொற் கழல்களுக் கிடாதுநான் தடமுலை யார்தங்கள்
மைப்பு லாங்கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை மலரடி யிணைகாட்டி
அப்பன் என்னைவந் தாண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 575
ஊச லாட்டுமிவ் வுடலுயி ராயின இருவினை அறுத்தென்னை
ஓசையா லுணர் வார்க்குணர் வரியவன் உணர்வுதந் தொளியாக்கிப்
பாச மானவை பற்றறுத் துயர்ந்ததன் பரம்பெருங் கருணையால்
ஆசை தீர்த்தடி யாரடிக் கூட்டிய அற்புதம் அறியேனே. 576
பொச்சை யானஇப் பிறவியிற் கிடந்துநான் புழுத்தலை நாய்போல
இச்சை யாயின ஏழையர்க் கேசெய்தங் கிணங்கியே திரிவேனை
இச்சகது அரி அயனுமெட் டாததன் விரைமலர்க் கழல்காட்டி
அச்சன் என்னையும் ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 577
செறியும் இப்பிறப் இறப்பிவை நினையாது செறிகுழலார் செய்யுங்
கிறியுங் கீழ்மையுங் கெண்டையங் கண்களும் உன்னியே கிடப்பேனை
இறைவன் எம்பிரான் எல்லையில் லாததன் இணைமலர்க் கழல்காட்டி
அறிவு தந்தெனை ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 578
திருச்சிற்றம்பலம்
அற்புதப்பத்து – அனுபவமாற்றாமை
(திருப்பெருந்துறையில் அருளியது – அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)
மாணிக்கவாசகர்:
மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார்.
Buy Book From amazon:
Thiruvasagam Tamil Book Hardcover – 2017
by SWAMI CHIDBHAVANANDA