ஆசைப்பத்து – ஆத்தும இலக்கணம்
திருவாசகம்/ஆசைப்பத்து
கருடக்கொடியோன் காணமாட்டாக் கழற்சே வடியென்னும்
பொருளைத் தந்திங் கென்னை யாண்ட பொல்லா மணியேயோ
இருளைத் துரந்திட் டிங்கே வாவென்றங்கே கூவும்
அருளைப் பெறுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 418
மொய்ப்பால் நரம்பு கயிறாக மூளை என்பு தோல் போர்த்த
குப்பாயம்புக் கிருக்க கில்லேன் கூவிக்கொள்ளாய் கோவேயோ
எப்பா லவர்க்கும் அப்பாலாம் என்னாரமுதேயோ
அப்பா காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 419
சீவார்ந் தீமொய்த் தழுக்கொடு திரியுஞ் சிறுகுடில் இது சிதையக்
கூவாய் கோவே கூத்தா காத்தாட் கொள்ளுங் குருமணியே
தேவா தேவர்க் கரியானே சிவனே சிறிதென் முகநோக்கி
ஆவா வென்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 420
மிடைந்தெலும் பூத்தை மிக்கழுக் கூறல் வீறிலி நடைக்கூடம்
தொடர்ந்தெனை நலியத் துயருறு கின்றேன் சோற்றமெம்பெருமானே
உடைந்துநைந் துருகி உன்னொளி நோக்கி உன்திரு மலர்ப்பாதம்
அடைந்து நின்றிடுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 421
அளிபுண்ணகத்துப் புறந்தோல் மூடி அடியேனுடையாக்கை
புளியம் பழமொத் திருந்தேன் இருந்தும்விடையாய் பொடியாடி
எளிவந்தென்னை ஆண்டுகொண்ட என்னாரமுதேயோ
அளியேன் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 422
எய்த்தேன் நாயேன் இனியிங் கிருக்ககில்லேன் இவ்வாழ்க்கை
வைத்தாய் வாங்காய் வானோர் அறியா மலர்ச்சே வடியானே
முத்தா உன்றன் முகவொளி நோக்கி முறுவல் நகைகாண
அத்தா சால ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 423
பாரோர் விண்ணோர் பரவியேத்தும் பரனே பரஞ்சோதீ
வாராய் வாரா வுலகந்தந்து வந்தாட்கொள்வானே
பேராயிரமும் பரவித் திரிந்தெம் பெருமான் என ஏத்த
ஆரா அமுதே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 424
கையால் தொழுதுன் கழற்சே வடிகள் கழுமத் தழுவிக்கொண்டு
எய்யா தென்றன்தலைமேல் வைத்தெம்பெருமான் பெருமானென்று
ஐயா என்றன் வாயா லரற்றி அழல்சேர் மெழுகொப்ப
ஐயாற் றரசே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 425
செடியா ராக்கைத் திறமற வீசிச் சிவபுரநகர்புக்குக்
கடியார் சோதி கண்டுகொண்டென் கண்ணினை களிகூரப்
படிதா னில்லாப் பரம்பரனே உன்பழஅடியார் கூட்டம்
அடியேன் காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 426
வெஞ்சேலனைய கண்ணார்தம் வெகுளிவலையில் அகப்பட்டு
நைஞ்சேன் நாயேன் ஞானச் சுடரே நானோர் துணைகாணேன்
பஞ்சேரடியாள் பாகத்தொருவா பவளத் திருவாயால்
அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 427
திருச்சிற்றம்பலம்
ஆசைப்பத்து – ஆத்தும இலக்கணம்
(திருப்பெருந்துறையில் அருளியது – அறுசீர்க்கழி நெடிலுடி ஆசிரிய விருத்தம்)
மாணிக்கவாசகர்:
மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார்.
Buy Book From amazon:
Thiruvasagam Tamil Book Hardcover – 2017
by SWAMI CHIDBHAVANANDA