எண்ணப்பதிகம் – ஒழியா இன்பத்துவகை
திருவாசகம்/எண்ணப் பதிகம்
பாருரு வாய பிறப்பறவேண்டும் பத்திமை யும்பெற வேண்டும்
சீருரு வாய சிவபெரு மானே செங் கமல மலர்போல்
ஆருரு வாயஎன் னார முதேஉன் அடியவர் தொகை நடுவே
ஓருருவாய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண் டருளே. 599
உரியேன் அல்லேன் உனக் கடிமை உன்னைப் பிரிந்திங் கொருபொழுதும்
தரியேன் நாயேன் இன்னதென்று அறியேன் சங்கரா கருணையினாற்
பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்றுன் பெய்கழல் அடிகாட்டிப்
பிரியேன் என்றென் றருளிய அருளும் பொய்யோ எங்கள் பெருமானே. 600
என்பே உருகநின் அருள்அளித்துன் இணைமலர் அடி காட்டி
முன்பே என்னை ஆண்டுகொண்ட முனிவா முனிவர் முழுமுதலே
இன்பே அருளி எனையுருக்கி உயிருண் கின்ற எம்மானே
நண்பே யருளாய் என்னுயிர் நாதா நின்னருள் நாணாமே 601
பத்தில னேனும் பணிந்தில னேனும்உன் உயர்ந்தபைங் கழல் காணப்
பித்தில னேனும் பிதற்றில னேனும் பிறப்பறுப்பாய் எம்பெருமானே
முத்தனை யானே மணியனை யானே முதல்வ னேமுறை யோஎன்று
எத்தனை யானும் யான்தொடர்ந் துன்னை இனிப்பிரிந் தாற்றேனே. 602
காணும தொழிந்தேன் நின்திருப் பாதம் கண்டு கண் களிகூரப்
பேணும தொழிந்தேன் பிதற்றம தொழிந்தேன் பின்னைஎம் பெருமானே
தாணுவே அழிந்தேன் நின்னினைந் துருகுந் தன்மைஎன் புன்மைகளால்
காணும தொழிந்தேன் நீயினி வரினுங் காணவும் நாணுவனே. 603
பாற்றிரு நீற்றெம் பரமனைப் பரங்கரு ணையோடு எதிர்த்து
தோற்றிமெய் யடியார்க் கருட்டுரை யளிக்குஞ் சோதியை நீதி யிலேன்
போற்றியென் அமுதே என நினைந் தேத்திப் புகழ்ந்தழைத் தலறியென் னுள்ளே
ஆற்றுவனாக உடையவ னேஎனை ஆவஎன் றருளாயே. 604
திருச்சிற்றம்பலம்
எண்ணப்பதிகம் – ஒழியா இன்பத்துவகை
(தில்லையில் அருளியது – எழுசீர்க் கழினெடிலடி ஆசிரிய விருத்தம்)
மாணிக்கவாசகர்:
மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார்.
Buy Book From amazon:
Thiruvasagam Tamil Book Hardcover – 2017
by SWAMI CHIDBHAVANANDA