குலாப் பத்து – அனுபவம் இடையீடுபடாமை
திருவாசகம்/குலாப்பத்து
ஓடுங் கவந்தியுமே உறவென்றிட் டுள்கசிந்து
தேடும் பொருளுஞ் சிவன்கழலே எனத்தெளிந்து
கூடும் உயிரும் குமண்டையிடக் குனித்தடியேன்
ஆடுங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 559
துடியேர் இடுகிடைத் தூய்மொழியார் தோள்நசையால்
செடியேறு தீமைகள் எத்தனையுஞ் செய்திடினும்
முடியேன் பிறவேன் எனைத்தன்தாள் முயங்குவித்த
அடியேன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 560
என்புள் ளுருக்கி இருவினையை ஈடழித்துத்
துன்பங் களைந்து துவந்துவங்கள் தூய்மைசெய்து
முன்புள்ள வற்றை முழுதழிய உள்புகுத்த
அன்பின் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 561
குறியும் நெறியும் குணமுமிலார் குழாங்கள்தமைப்
பிரியும் மனத்தார் பிரிவரிய பெற்றியனைச்
செறியுங் கருத்தில் உருத்தமுதாஞ் சிவபதத்தை
அறியுங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 562
பேருங் குணமும் பிணிப்புறும்இப் பிறவிதனைத்
தூரும் பரிசு துரிசறுத்துத் தொண்ட ரெல்லாஞ்
சேரும் வகையாற் சிவன்கருணைத் தேன்பருகி
ஆருங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 563
கொம்பில் அரும்பாய்க் குவிமலராய்க் காயாகி
வம்பு பழுத்துடலம் மாண்டிங்ஙன் போகாமே
நம்புமென் சிந்தை நணுகும்வண்ணம் நானணுகும்
அம்பொன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 564
மதிக்குந் திறலுடைய வல்லரக்கன் தோள்நெரிய
மிதிக்குந் திருவடி என் தலைமேல் வீற்றிருப்பக்
கதிக்கும் பசுபாசம் ஒன்றுமிலோம் எனக்களித்திங்
கதிர்க்குங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 565
இடக்குங் கருமுருட் டேனப்பின் கானகத்தே
நடக்குந் திருவடி என்தலைமேல் நட்டமையால்
கடக்குந் திறல்ஐவர் கண்டகர்தம் வல்லாட்டை
அடக்குங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 566
பாழ்ச்செய் விளாவிப் பயனிலியாய்க் கிடப்பேற்குக்
கீழ்ச்செய் தவத்தாற் கிழியீடு நேர்பட்டுத்
தாட்செய்ய தாமரைச் சைவனுக்கென் புன்தலையால்
ஆட்செய் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 567
கொம்மை வரிமுலைக் கொம்பனையாள் கூறனுக்குச்
செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வேனுக்கு
இம்பை தரும்பயன் இத்தனையும் ஈங்கொழிக்கும்
அம்மை குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 568
திருச்சிற்றம்பலம்
குலாப் பத்து – அனுபவம் இடையீடுபடாமை
(தில்லையில் அருளியது – கொச்சகக் கலிப்பா)
மாணிக்கவாசகர்:
மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார்.
Buy Book From amazon:
Thiruvasagam Tamil Book Hardcover – 2017
by SWAMI CHIDBHAVANANDA