கோயில் திருப்பதிகம்
திருவாசகம்/கோயில் திருப்பதிகம்
மாறிநின்றென்னை மயங்கிடும் வஞ்சப்
புலனைந்தின் வழியடைத் தமுதே
ஊறிநின்றென்னுள் எழுபரஞ்சோதி
உள்ளவா காணவந்தருளாய்
தேறலின் தெளிவே சிவபெருமானே
திருப்பெருந்துறையுறை சிவனே
ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த
இன்பமே என்னுடை அன்பே. 388
அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை
ஆனந்த மாய்க் கசிந்துருக
என்பரம் அல்லா இன்னருள் தந்தாய்
யானிதற் கிலனொர்கைம்மாறு
முன்புமாய்ப் பின்பும் முழுதுமாய்ப்
பரந்த முத்தனே முடிவிலா முதலே
தென்பெருந்துறையாய் சிவபெருமானே
சீருடைச் சிவபுரத்தரைசே. 389
அரைசனே அன்பர்க் கடியனே னுடைய
அப்பனே ஆவியோ டாக்கை
புரைபுரை கனியப் புகுந்துநின்றுருக்கிப்
பொய்யிருள் கடிந்த மெய்ச்சுடரே
திரைபொரா மன்னும் அமுதத் தெண்கடலே
திருப்பெருந்துறையுறை சிவனே
உரையுணர் விறந்துநின்றுணர்வதோர் உணர்வே
யானுன்னை உரைக்குமா றுணர்த்தே. 390
உணர்ந்த மாமுனிவர் உம்பரோ டொழிந்தார்
உணர்வுக்குந் தெரிவரும் பொருளே
இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே
எனைப் பிறப் பறுக்கும் எம்மருந்தே
திணிந்ததோர் இருளில் தெளிந்ததூ வெளியே
திருப்பெருந்துறையுறை சிவனே
குணங்கள் தாமில்லா இன்பமே உன்னைக்
குறுகினேற் கினியென்ன குறையே. 391
குறைவிலா நிறைவே கோதிலா அமுதே
ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்
மனத்திடை மன்னிய மன்னே
சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப்பாயும்
திருப்பெருந்துறையுறை சிவனே
இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய்
இனியுன்னை யென்னிரக் கேனே. 392
இரந்திரந் துருக என்மனத் துள்ளே
எழுகின்ற சோதியே இமையோர்
சிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய்
திருப்பெருந்துறையுறை சிவனே
நிரந்தஆகாயம் நீர்நிலம் தீகால்
ஆயவை அல்லையாய் ஆங்கே
கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக்
கண்ணுறக் கண்டுகொண் டின்றே. 393
இன்றெனக் கருளி இருல்கடிந்துள்ளத்
தெழுகின்ற ஞாயிறே போன்று
நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்
நீயலால் பிறிது மற்றின்மை
சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம்
திருப்பெருந் துறையுறை சிவனே
ஒன்றும் நீயல்லை அன்றியொன் றில்லை
யாருன்னை அறியகிற்பாரே. 394
பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்
பரந்ததோர் படரொளிப் பரப்பே
நீருறு தீயே நினைவதேல் அரிய
நின்மலா நின்னருள் வெள்ளச்
சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே
திருப்பெருந்துறையுறை சிவனே
ஆருறவு எனக்கிங் காரய லுள்ளார்
ஆனந்தம் ஆக்குமென் சோதி. 395
சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம்
ஒருவனே சொல்லுதற் கரிய
ஆதியே நடுவே அந்தமே பந்தம்
அறுக்கும் ஆனந்தமா கடலே
தீதிலா நன்மைத் திருவருட்குன்றே
திருப்பெருந்துறையுறை சிவனே
யாதுநீ போவதோர் வகையெனக்கருளாய்
வந்துநின் இணையடி தந்தே. 396
தந்ததுன் தன்னைக் கொண்டதென் றன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்
யாதுநீ பெற்றதொன் றென்பால்
சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்
திருப்பெருந்துறையுறை சிவனே
எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்
யான் இதற் கிலன்ஓர்கைம் மாறே. 397
திருச்சிற்றம்பலம்
மாணிக்கவாசகர்:
மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார்.
Buy Book From amazon:
Thiruvasagam Tamil Book Hardcover – 2017
by SWAMI CHIDBHAVANANDA