கோயில் மூத்த திருப்பதிகம்
திருவாசகம்/கோயில் மூத்த திருப்பதிகம்
உடையாள் உன்தன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேன்உன்
அடியார் நடுவுள் இருக்கும் அருளைப்புரி யாய் பொன்னம்பலத்தெம்
முடியா முதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே. 378
முன்னின் றாண்டாய் எனை முன்னம் யானும் அதுவே முயல்வுற்றுப்
பின்னின் றேவல் செய்கின்றேன் பிற்பட் டொழிந்தேன் பெம்மானே
என்னின் றருளி வரநின்று போந்தி டென்னா விடில் அடியார்
உன்னின் றிவனார் என்னாரோ பொன்னம் பலக்கூத் துகந்தானே. 379
உகந்தானே அன்புடை அடிமைக் குருகாவுள்ளத் துணிர்விலியேன்
சகந்தான் அறிய முறையிட்டால் தக்கவாறன் றென்னாரோ
மகந்தான் செய்து வழிவந்தார் வாழ வாழ்ந்தாய் அடியேற்குன்
முகந்தான் தாரா விடின்முடிவேன் பொன்னம் பலத்தெம் முழுமுதலே. 380
முழுமுத லேஐம் புலனுக்கும் மூவர்க்கும் என்தனக்கும்
வழிமுதலேநின் பழவடி யார் திரள்வான் குழுமிக்
கெழுமுத லேயருள் தந்தி ருக்கஇரங்குங்கொல்லோ என்று
அழுமதுவேயன் றிமற்றென் செய்கேன் பொன்னம் பலத்தரைசே. 381
அரைசே பொன்னம் பலத்தாடும் அமுதே என்றுன் அருள்நோக்கி
இரைதேர் கொக்கொத் திரவுபகல் ஏசற்றிருந்தே வேசற்றேன்
கரைசேர் அடியார் களிசிறப்பக் காட்சி கொடுத்துன் அடியேன்பால்
பிரைசேர் பாலின் நெய்போலப் பேசா திருந்தால் ஏசாரோ. 382
ஏசா நிற்பர் என்னைஉனக் கடியா னென்று பிறரெல்லாம்
பேசா நிற்பர் யான்தானும் பேணா நிற்பேன் நின்னருளே
தேசா நேசர் சூழ்ந்திருக்குந் திருவோ லக்கஞ் சேவிக்க
ஈசா பொன்னம் பலத்தாடும் எந்தாய் இனித்தான் இரங்காயே. 383
இரங்கும் நமக்கம் பலக்கூத்தன் என்றென் றேமாந்திருப்பேனை
அருங்கற் பனைகற் பித்தாண்டாய் ஆள்வா ரிலிமா டாவேனோ
நெருங்கும் அடியார் களும்நீயும் நின்று நிலாவி விளையாடும்
மருங்கே சார்ந்து வரஎங்கள் வாழ்வே வாவென்றருளாயே. 384
அருளா தொழிந்தால் அடியேனை அஞ்சல் என்பார் ஆர்இங்குப்
பொருளா என்னைப் புகுந்தாண்ட பொன்னே பொன்னம்பலக்கூத்தா
மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து வருந்துவேனை வாவென்றுன்
தெருளார் கூட்டங் காட்டாயேல் செத்தே போனாற் சிரியாரோ. 385
சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டுதிரண்டுன் திருவார்த்தை
விரிப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வே றிருந்துன் திருநாமம்
தரிப்பார் பொன்னம் பலத்தாடும் தலைவா என்பார் அவர்முன்னே
நரிப்பாய் நாயேன் இருப்பேனோ நம்பி இனித்தான் நல்காயே. 386
நல்கா தொழியான் நமக்கென்றும் நாமம் பிதற்றி நயனனீர்
மல்கா வாழ்த்தா வாய்குழறா வணங்கா மனத்தால் நினைந்துருகிப்
பல்காலுன்னைப் பாவித்துப் பரவிப் பொன்னம் பலமென்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி அருளாய் என்னை உடையானே. 387
திருச்சிற்றம்பலம்
மாணிக்கவாசகர்:
மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார்.
Buy Book From amazon:
Thiruvasagam Tamil Book Hardcover – 2017
by SWAMI CHIDBHAVANANDA