செத்திலாப் பத்து
திருவாசகம்/செத்திலாப் பத்து
பொய்யனேன் அகம்நெகப் புகுந்தமுதூறும்
புதுமலர்க் கழலிணையடி பிரிந்தும்
கையனேன் இன்னுஞ் செத்திலேன் அந்தோ
விழித்திருந் துள்ளக் கருத்தினை இழந்தேன்
ஐயனே அரசே அருப்பெருங் கடலே
அத்தனே அயன் மாற்கறி யொண்ணாச்
செய்யமே னியனே செய்வகை அறியேன்
திருப்பெருந்துறை மேவிய சிவனே. 398
புற்று மாய்மர மாய்ப்புனல் காலே
உண்டி யாய் அண்ட வாணரும் பிறரும்
மற்றியாரும் நின்மலரடி காணா
மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப்
பற்றினாய் பதையேன் மனமிக உருகேன்
பரிகிலேன் பரியாவுடல் தன்னைச்
செற்றிலேன் இன்னுந் திரிதருகின்றேன்
திருப்பெருந்துறை மேவிய சிவனே. 399
புலைய னேனையும் பொருளென நினைந்துன்
அருள்புரிந்தனை புரிதலுங் களித்துத்
தலையினால் நடந்தேன் விடைப்பாகா
சங்கரா எண்ணில் வானவர்க்கெல்லாம்
நிலையனே அலைநீர்விடமுண்ட நித்தனே
அடையார்புர மெரித்த
சிலையனே யெனைச் செத்திடப் பணிவாய்
திருப்பெருந்துறை மேவிய சிவனே. 400
அன்பராகிமற் றருந்தவம் முயல்வார்
அயனும் மாலுமற் றழலுறு மெழுகாம்
என்பராய் நினைவார் எனைப்பலர்
நிற்க இங்கெனை எற்றினுக் கண்டாய்
வன்பராய் முருடொக்கும் என்சிந்தை
மரக்கண் என்செவி இரும்பினும் வலிது
தென்பராய்த் துறை யாய் சிவலோகா
திருப்பெருந்துறை மேவிய சிவனே. 401
ஆட்டுத்தேவர் தம் விதியொழிந் தன்பால்
ஐயனே என்றுன் அருள்வழி யிருப்பேன்
நாட்டுத்தேவரும் நாடரும் பொருளே
நாதனே உனைப் பிரிவறா அருளைப்
காட்டித்தேவநின் கழலிணை காட்டிக்
காயமாயத்தைக் கழித்தருள் செய்யாய்
சேட்டைத்தேவர்தந் தேவர்பிரானே
திருப்பெருந்துறை மேவிய சிவனே. 402
அறுக்கிலேன் உடல்துணிபடத்தீப்புக்
கார்கிலேன் திருவருள் வகையறியேன்
பொறுக்கிலேன்உடல் போக்கிடங் காணேன்
போற்றி போற்றியென் போர்விடைப் பாகா
இறக்கிலேன் உனைப்பிரிந்தினிதிருக்க
என்செய்கேன்இது செய்க என்றருளாய்
சிறைக்கணே புனல் நிலவிய வயல்சூழ்
திருப்பெருந்துறை மேவிய சிவனே. 403
மாயனேமறிகடல்விடம் உண்ட
வானவாமணி கண்டத்தெம் அமுதே
நாயினேன் உனைநினையவும் மாட்டேன்
நமச்சிவாய என் றுன்னடி பணியாப்
பேயன் ஆகிலும் பெருநெறி காட்டாய்
பிறைகுலாஞ்சடைப் பிஞ்ஞகனேயோ
சேயனாகிநின்றலறுவ தழகோ
திருப்பெருந்துறை மேவிய சிவனே. 404
போது சேரயன் பொருகடற் கிடந்தோன்
புரந்த ராதிகள் நிற்கமற்றென்னைக்
கோதுமாட்டிநின் குரைகழல் காட்டிக்
குறிக்கொள் கென்றுநின்தொண்டரிற் கூட்டாய்
யாது செய்வதென் றிருந்தனன் மருந்தே
அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோ
சீதவார்புனல் நிலவிய வயல்சூழ்
திருப்பெருந்துறை மேவிய சிவனே. 405
ஞாலம் இந்திரன் நான்முகன் வானவர்
நிற்க மற்றெனை நயந்தினி தாண்டாய்
காலன் ஆர்உயிர்கொண்ட பூங்கழலாய்
கங்கை யாய் அங்கி தங்கிய கையாய்
மாலும் ஓலமிட்டலறும் அம்மலர்க்கே
மரக்க ணேனேயும் வந்திடப் பணியாய்
சேலும் நீலமும் நிலவிய வயல்சூழ்
திருப்பெருந்துறை மேவிய சிவனே. 406
அளித்துவந்தெனக் காவஎன்றருளி
அச்சந்தீர்த்தநின் அருட்பெருங்கடலில்
திளைத்துந்தேக்கியும் பருகியும் உருகேன்
திருப்பெருந்துறையுறை சிவனே
வளைக்கை யானொடு மலரவன் அறியா
வான வாமலை மாதொரு பாகா
களிப்பெலாம் மிகக் கலங்கிடு கின்றேன்
கயிலை மாமலை மேவிய கடலே. 407
திருச்சிற்றம்பலம்
மாணிக்கவாசகர்:
மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார்.
Buy Book From amazon:
Thiruvasagam Tamil Book Hardcover – 2017
by SWAMI CHIDBHAVANANDA