சென்னிப்பத்து – சிவவிளைவு
திருவாசகம்/சென்னிப் பத்து
தேவ தேவன்மெய்ச் சேவகன் தென்பெ ருந்துறை நாயகன்
மூவ ராலும் அறியொணாமுத லாய ஆனந்த மூர்த்தியான்
யாவ ராயினும் அன்பரன்றி அறியொ ணாமலர்ச் சோதியான்
தூயமாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னிச் சுடருமே. 579
அட்டமூர்த்தி அழகன்இன்னமு தாய ஆனந்த வெள்ளத்தான்
சிட்டன் மெய்ச்சிவ லோகநாயகன் தென்பெ ருந்துறைச் சேவகன்
மட்டு வார்குழல் மங்கை யாளையோர் பாகம் வைத்த அழகன்தன்
வட்ட மாமலர்ச் சேவடிக் கண்நம் சென்னி மன்னி மலருமே. 580
நங்கை மீரெனை நோக்குமின் நங்கள் நாதன் நம்பணி கொண்டவன்
தெங்கு சோலைகள் சூழ்பெருந் துறை மேய சேவகன் நாயகன்
மங்கை மார்கையில் வளையுங்கொண்டெம் உயிருங் கொண்டெம் பணிகொள்வான்
பொங்கு மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னிப் பொலியுமே. 581
பத்தர் சூழப் பராபரன் பாரில் வந்துபார்ப் பானெனச்
சித்தர் சூழச் சிவபிரான் தில்லை மூதூர் நடஞ்செய்வான்
எத்தனாகிவந் தில்புகுந்தெமை ஆளுங் கொண்டெம் பணிகொள்வான்
வைத்த மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே. 582
மாய வாழ்க்கையை மெய்யென் றெண்ணி மதித்திடா வகை நல்கினான்
வேய தோளுமை பங்கன் எங்கள் திருப்பெ ருந்துறை மேவினான்
காயத் துள்ளமு தூறஊறநீ கண்டு கொள்ளென்று காட்டிய
சேய மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே. 583
சித்தமே புகுந் தெம்மையாட் கொண்டு தீவினை கெடுத் துய்யலாம்
பத்தி தந்துதன் பொற்கழற்கணே பன்மலர் கொய்து சேர்த்தலும்
முத்தி தந்திந்த மூவுலகுக்கும் அப்பு றத்தெமை வைத்திடும்
அத்தன் மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே. 584
பிறவி யென்னுமிக் கடலைநீந் தத்தன் பேரருள்தந் தருளினான்
அறவை யென்றடி யார்கள் தங்கள் அருட்கு ழாம்புக விட்டுநல்
உறவு செய்தெனை உய்யக்கொண்ட பிரான்தன் உண்மைப் பெருக்கமாம்
திறமை காட்டிய சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே. 585
புழுவி னாற்பொதிந் திடுகுரம்பையிற் பொய் தனையொழி வித்திடும்
எழில்கொள் சோதியெம் ஈசன்எம்பிரான் என்னு டையப்பன் என்றென்று
தொழுத கையின ராகித் தூய்மலர்க் கண்கள் நீர்மல்குந் தொண்டர்க்கு
வழுவி லாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே. 586
வம்ப னாய்த்திரி வேனைவாவென்று வல்வி னைப்பகை மாய்த்திடும்
உம்ப ரான்உல கூடறுத்தப் புறத்தனாய் நின்ற எம்பிரான்
அன்பரானவர்க்கருளி மெய்யடி யார்கட் கின்பந் தழைந்திடுஞ்
செம்பொன் மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே. 587
முத்தனைமுதற் சோதியைமுக்கண் அப்பனை முதல் வித்தினைச்
சித்தனைச்சிவ லோகனைத்திரு நாமம்பாடித் திரிதரும்
பத்தர்காள்இங்கே வம்மின்நீர் உங்கள் பாசந்தீரப் பணிமினோ
சித்தமார்தருஞ் சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே. 588
திருச்சிற்றம்பலம்
சென்னிப்பத்து – சிவவிளைவு
(திருப்பெருந்துறையில் அருளியது – ஆசிரிய விருத்தம்)
மாணிக்கவாசகர்:
மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார்.
Buy Book From amazon:
Thiruvasagam Tamil Book Hardcover – 2017
by SWAMI CHIDBHAVANANDA