திருப்பூவல்லி
மாயா விசயம் நீக்குதல்
(தில்லையில் அருளியது – நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
இணையார் திருவடி என்தலைமேல் வைத்தலுமே
துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்
அணையார் புனற்றில்லை அம்பலத்தே ஆடுகின்ற
புணையாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 275
எந்தையெந் தாய்சுற்றம் மற்றுமெல்லாம் என்னுடைய
பந்தம் அறுந்தென்னை ஆண்டுகொண்ட பாண்டிப்பிரான்
அந்த இடைமருதில் ஆனந்தத் தேனிருந்த
பொந்தைப் பரவிநாம் பூவல்லி கொய்யாமோ. 276
நாயிற் கடைப்பட்ட நம்மையுமோர் பொருட்படுத்துத்
தாயிற் பெரிதுங் தயாவுடைய தம்பொருமான்
மாயப் பிறப்பறுந் தாண்டானென் வல்வினையின்
வாயிற் பொடியட்டிப் பூவல்லி கொய்யாமோ. 277
பண்பட்ட தில்லைப் பதிக்கரசைப் பரவாதே
எண்பட்ட தக்கன் அருக்கன் எச்சன் இந்துஅனல்
விண்பட்ட பூதப் படைவீர பத்திரரால்
புண்பட்ட வாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 278
தேனாடு கொன்றை சடைக்கணிந்த சிவபெருமான்
ஊனாடி நாடிவந் துள்புகுந்தான் உலகர்முன்னே
நானாடி ஆடிநின் றோலமிட நடம்பயிலும்
வானாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ. 279
எரிமூன்று தேவர்க் கிரங்கியருள் செய்தருளிச்
சிரமூன் றறத்தன் திருப்புருவம் நெரித்தருளி
உருமூன்று மாகி உணர்வரிதாம் ஒருவனுமே
புரமூன் றெரித்தவா பூவல்லி கொய்யாமோ. 280
வணங்கத் தலை வைத்து வார்கழல்வாய் வாழ்த்தவைத்து
இணங்தத்தன் சீரடியார் கூட்டமும்வைத் தெம்பெருமான்
அணங்கொடணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற
குணங் கூரப் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 281
நெறிசெய் தருளித்தன் சீரடியார் பொன்னடிக்கே
குறிசெய்து கொண்டென்னை ஆண்டபிரான் குணம்பரவி
முறிசெய்து நம்மை முழுதுடற்றும் பழவினையைக்
கிறிசெய்த வாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 282
பன்னாட் பரவிப் பணிசெய்யப் பாதமலர்
என்ஆகம் துன்னவைத்த பெரியோன் எழிற்சுடராய்க்
கல்நா ருரித்தென்னை யாண்டுகொண்டான் கழலிணைகள்
பொன்னான வாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 283
பேராசை யாமிந்தப் பிண்டமறப் பெருந்துறையான்
சீரார் திருவடி யென் தலைமேல் வைத்தபிரான்
காரார் கடல்நஞ்சை உண்டுகந்த காபாலி
போரார் புறம்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 284
பாலும் அமுதமுந் தேனுடனாம் பராபரமாய்க்
கோலங் குளிர்ந்துள்ளங் கொண்டபிரான் குரைகழல்கள்
ஞாலம் பரவுவார் நன்னெறியாம் அந்நெறியே
போலும் புகழ்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 285
வானவன் மாலயன் மற்றுமுள்ள தேவர்கட்கும்
கோனவ னாய் நின்று கூடலிலாக் குணங்குறியோன்
ஆன நெடுங்கடல் ஆலாலம் அமுதுசெய்யப்
போனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ. 286
அன்றால நீழற்கீழ் அருமறைகள் தானருளி
நன்றாக வானவர் மாமுனிவர் நாள்தோறும்
நின்றார ஏத்தும் நிறைகழலோள் புனைகொன்றைப்
பொன்தாது பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 287
படமாக என்னுள்ளே தன்னிணைப்போ தவையளித்திங்
கிடமாகக் கொண்டிருந் தேகம்பம் மேயபிரான்
தடமார் மதில்தில்லை அம்பலமே தானிடமா
நடமாடு மாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 288
அங்கி அருக்கன் இராவணன் அந்தகன் கூற்றன்
செங்கண் அரிஅயன் இந்திரனுஞ் சந்திரனும்
பங்கமில் தக்கனும் எச்சனுந்தம் பரிசழியப்
பொங்கியசீர் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 289
திண்போர் விடையான் சிவபுரத்தார் போரேறு
மண்பால் மதுரையிற் பிட்டமுது செய்தருளித்
தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட
புண்பாடல் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 290
முன்னாய மாலயனும் வானவரும் தானவரும்
பொன்னார் திருவடி தாமறியார் போற்றுவதே
என்னாகம் உள்புகுந் தாண்டு கொண்டான் இலங்கணியாம்
பன்னாகம் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 291
சீரார் திருவடித் திண்சிலம்பு சிலம்பொலிக்கே
ஆராத ஆசையதாய் அடியேன் அகமகிழத்
தேராந்த வீதிப் பெருந்துறையான் திருநடஞ்செய்
பேரானந் தம்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 292
அத்தி யுரித்தது போர்த்தருளும் பெருந்துறையான்
பித்த வடிவுகொண் டிவ்வுலகிற் பிள்ளையுமாம்
முத்தி முழுமுதலுத் தரகோச மங்கைவள்ளல்
புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ. 293
மாவார வேறி மதுரைநகர் புகுந்தருளித்
தேவார்ந்த கோலந் திகழப் பெருந்துறையான்
கோவாகி வந்தெம்மைக் குற்றவேல் கொண்டருளும்
பூவார் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ. 294
திருச்சிற்றம்பலம்
திருவாசகம்/திருப்பூவல்லி
மாணிக்கவாசகர்:
மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார்.
Buy Book From amazon:
Thiruvasagam Tamil Book Hardcover – 2017
by SWAMI CHIDBHAVANANDA