திருவார்த்தை – அறிவித்து அன்புறுத்தல்
திருவாசகம்/திருவார்த்தை
மாதிவர் பாகன் மறைபயின்ற வாசகன் மாமலர் மேயசோதி
கோதில் பரங்கருணையடியார் குலாவுநீதி குண மாகநல்கும்
போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்திழிந்து
ஆதிப் பிரமம் வெளிப்படுத்த அருளறிவார் எம்பிரானாவாரே. 589
மாலயன் வானவர் கோனும்வந்து வணங்க அவர்க்கருள் செய்தஈசன்
ஞாலம் அதனிடை வந்திழிந்து நன்னெறி காட்டி நலம்திகழும்
கோல மணியணி மாடநீடு குலாவுமிடை வைமடநல்லாட்குச்
சீல மிகக்கரு ணையளிக்குந் திறமறி வார்எம் பிரானாவாரே. 590
அணிமுடி ஆதி அமரர்கோமான் ஆனந்தக் கூத்தன் அறுசமயம்
பணிவகை செய்து படவதேறிப் பாரொடு விண்ணும் பரவியேத்தப்
பிணிகெடநல்கும் பெருந்துறையெம் பேரரு ளாளன்பெண் பாலுகந்து
மணிவலை கொண்டுவான் மீன்விசிறும் வகையறிவார் எம்பிரானாவாரே. 591
வேடுரு வாகி மகேந்திரத்து மிகுகுறை வானவர் வந்துதன்னைத்
தேட இருந்த சிவபெருமான் சிந்தனை செய்தடி யோங்களுய்ய
ஆடல் அமர்ந்த பரிமாஏறி ஐயன் பெருந்துறை ஆதிஅந்நாள்
ஏடர் களையெங்கும் ஆண்டுகொண்ட இயல்பறி வார்எம் பிரானாவாரே. 592
வந்திமை யோர்கள் வணங்கியேத்த மாக்கரு ணைக்கட லாய்அடியார்
பந்தணை விண்டற நல்கும்எங்கள் பரமன் பெருந்துறை ஆதி அந்நாள்
உந்து திரைக்கட லைக்கடந்தன் றோங்கு மதிலிலங்கை அதினிற்
பந்தணை மெல்விர லாட்கருளும் பரிசறி வார்எம் பிரானாவாரே. 593
வேவத் திரிபுரஞ் செற்றவில்லி வேடுவனாய்க்கடி நாய்கள்சூழ
ஏவற் செயல்செய்யுந் தேவர்முன்னே எம்பெருமான்தான் இயங்கு காட்டில்
ஏவுண்ட பன்றிக் கிரங்கியீசன் எந்தை பெருந்துறை ஆதியன்று
கேவலங் கேழலாய்ப் பால்கொடுத்த கிடப்பறி வார்எம் பிரானாவாரே. 594
நாதம் உடையதோர் நற்கமலப் போதினில் நண்ணிய நன்னுதலார்
ஓதிப் பணிந்தலர் தூவியேத்த ஒளிவளர் சோதியெம் ஈசன் மன்னும்
போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்து தோன்றிப்
பேதங் கெடுத்தருள் செய்பெருமை அறியவல் லார்எம் பிரானாவாரே. 595
பூவலர் கொன்றைய மாலைமார்பன் போருகிர் வன்புலி கொன்றவீரன்
மாதுநல் லாளுமை மங்கைபங்கன் வன்பொழில் சூழ்தென் பெருந்துறைக்கோன்
ஏதில் பெரும்புகழ் எங்கள்ஈசன் இருங்கடல் வாணர்ற்குத் தீயில்தோன்றும்
ஓவிய மங்கையர் தோள்புணரும் உருவறி வார்எம் பிரானாவாரே. 596
தூவெள்ளை நீறணி எம்பெருமான் சோதி மகேந்திர நாதன்வந்து
தேவர் தொழும்பதம் வைத்தஈசன் தென்னன் பெருந்துறை ஆளிஅன்று
காதல் பெருகக் கருணைகாட்டித் தன்கழல் காட்டிக் கசிந்துருகக்
கேதங் கெடுத்தென்னை ஆண்டருளும் கிடப்பறி வார்எம் பிரானாவாரே. 597
அங்கணன் எங்கள் அமரர்பெம்மான் அடியார்க் கமுதன் அவனிவந்த
எங்கள் பிரான்இரும் பாசந்தீர இகபரம் ஆயதோர் இன்பமெய்தச்
சங்கங் கவர்ந்துவண் சாத்தினோடுஞ் சதுரன் பெருந்துறை ஆளிஅன்று
மங்கையர் மல்கும் மதுரைசேர்ந்த வகையறி வார்எம் பிரானாவாரே. 598
திருச்சிற்றம்பலம்
திருவார்த்தை – அறிவித்து அன்புறுத்தல்
(திருப்பெருந்துறையில் அருளியது -அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
மாணிக்கவாசகர்:
மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார்.
Buy Book From amazon:
Thiruvasagam Tamil Book Hardcover – 2017
by SWAMI CHIDBHAVANANDA