திருவெண்பா – அணைந்தோர் தன்மை
திருவாசகம்/திருவெண்பா
வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்
பொய்யும் பொடியாகா தென்செய்கேன் – செய்ய
திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ
மருவா திருந்தேன் மனத்து. 617
ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ
பார்க்கோ பரம்பரனே என்செய்கேன் தீர்ப்பரிய
ஆனந்த மாலேற்றும் அத்தன் பெருந்துறையான்
தானன்பார் ஆரொருவர் தாழ்ந்து. 618
செய்த பிழையறியேன் சேவடியே கைதொழுதே
உய்யும் வகையின் உயிர்ப்பறியேன் – வையத்
திருந்துறையுள் வேல்மடுத்தென் சிந்தனைக்கே கோத்தான்
பெருந்துறையில் மேய பிரான். 619
முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான்
பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன் தென்னன்
பெருந்துறையின் மேய பெருங்கருணை யாளன்
வருந்துயரந் தீர்க்கும் மருந்து. 620
அறையோ அறிவார்க் கனைத்துலகும் ஈன்ற
மறையோனும் மாலுமால் கொள்ளும் இறையோன்
பெருந்துறையும் மேய பெருமான் பிரியா
திருந்துறையும் என்னெஞ்சத் தின்று. 621
பித்தென்னை ஏற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம்
மத்தமே யாக்கும் வந்தென்மனத்தை அத்தன்
பெருந்துறையான் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும்
மருந்திறவாப் பேரின்பம் வந்து. 622
வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி
ஆரா அமுதாய் அமைந்தன்றே சீரார்
திருத்தென் பெருந்துறையான் என்சிந்தை மேய
ஒருத்தன் பெருக்கும் ஒளி. 623
யாவார்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்
யாவர்க்கும் கீழாம் அடியேனை யாவரும்
பெற்றறியா இன்பத்துள் வைத்தாய்க்கென் எம்பெருமான்
மற்றறியேன் செய்யும் வகை. 624
மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த
தேவரும் காணாச் சிவபெருமான் மாவேறி
வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க
மெய்யகத்தே இன்பம் மிகும். 625
இருந்தென்னை ஆண்டான் இணையடியே சிந்தித்
திருந்திரந்து கொள்நெஞ்சே எல்லாம் தருங்காண்
பெருந்துறையின் மேய பெருங்கருணை யாளன்
மருந்துருவாய் என்மனத்தே வந்து. 626
இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும்
துன்பந் தொடர்வறுத்துச் சோதியாய் அன்பமைத்துச்
சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே
ஊராகக் கொண்டான் உவந்து. 627
திருச்சிற்றம்பலம்
திருவெண்பா – அணைந்தோர் தன்மை
(திருப்பெருந்துறையில் அருளியது – நேரிசை வெண்பா)
மாணிக்கவாசகர்:
மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார்.
Buy Book From amazon:
Thiruvasagam Tamil Book Hardcover – 2017
by SWAMI CHIDBHAVANANDA