பிரார்த்தனைப் பத்து
திருவாசகம்/பிரார்த்தனைப் பத்து
கலந்து நின்னடி யாரோ டன்று வாளா களித்திருந்தேன்
புலர்ந்து போன காலங்கள் புகுந்துநின்ற திடர்பின்னாள்
உலர்ந்து போனேன் உடையானே உலவா இன்பச் சுடர்காண்பான்
அலர்ந்து போனேன் அருள்செய்யாய் ஆர்வங் கூர அடியேற்கே. 485
அடியார் சிலருன் அருள்பெற்றார் ஆர்வங் கூர யான் அவமே
முடையார் பிணத்தின் முடிவின்றி முனிவால் அடியேன் மூக்கின்றேன்
கடியேனுடைய கடுவினையைக் களைந்துன் கருணைக் கடல்பொங்க
உடையாய் அடியேன் உள்ளத்தே ஓவா துருக அருளாயே. 486
அருளா ரமுதப் பெருங்கடல்வாய் அடியா ரெல்லாம் புக்கழுந்த
இருளா ராக்கை யிதுபொறுத்தே எய்த்தேன் கண்டாய் எம்மானே
மருளார் மனத்தோர் உன்மத்தன் வருமா லென்றிங் கெனைக்கண்டார்
வெருளா வண்ணம் மெய்யன்பை உடையாய் பெறநான் வேண்டுமே. 487
வேண்டும் வேண்டும் மெய்யடியா ருள்ளே விரும்பி எனை அருளால்
ஆண்டாய் அடியேன் இடர்களைந்த அமுதே அருமா மணிமுத்தே
தூண்டா விளக்கின் சுடரனையாய் தொண்டனேற்கும் உண்டாங்கொல்
வேண்டா தொன்றும் வேண்டாதுமிக்க அன்பே மேவுதலே. 488
மேவும் உன்றன் அடியாருள் விரும்பி யானும் மெய்ம்மையே
காவி சேருங் கயற்கண்ணாள் பங்கா உன்றன் கருணையினால்
பாவியேற்கும் உண்டாமோ பரமா னந்தப் பழங்கடல்சேர்ந்
தாவி யாக்கை யானெனதென்று யாதுமின்றி அறுதலே. 489
அறவே பெற்றார் நின்னன்பர் அந்தமின்றி அகநெகவும்
புறமே கிடந்து புலைநாயேன் புலம்பு கின்றேன் உடையானே
பெறவே வேண்டும் மெய்யன்பு பேரா ஒழியாய் பிரிவில்லா
மறவா நினையா அளவில்லா மாளா இன்ப மாகடலே. 490
கடலே அனைய ஆனந்தங் கண்டா ரெல்லாங் கவர்ந்துண்ண
இடரே பெருக்கி ஏசற்றிங் கிருத்த லழகோ அடிநாயேன்
உடையாய் நீயே அருளிதியென் றுணர்த்தா தொழிந்தே கழிந்தொழிந்தேன்
சுடரார் அருளால் இருள்நீங்கச் சோதி இனித்தான் துணியாயே. 491
துணியா உருகா அருள்பெருகத் தோன்றும் தொண்டரிடைப்புகுந்து
திணியார் மூங்கிற் சிந்தையேன் சிவனே நின்று தேய்கின்றேன்
அணியா ரடியா ருனக்குள்ள அன்புந் தாராய் அருளளியத்
தணியா தொல்லை வந்தருளித் தளிர்ப்பொற் பாதந் தாராயே. 492
தாரா அருளொன் றின்றியே தந்தாய் என்றுன் தமரெல்லாம்
ஆரா நின்றார் அடியேனும் அயலார் போல அயர்வேனோ
சீரார் அருளாற் சிந்தனையைத் திருத்தி ஆண்ட சிவலோகா
பேரா னந்தம் பேராமை வைக்க வேண்டும் பெருமானே. 493
மானோர் பங்கா வந்திப்பார் மதுரக் கனியே மனநெகா
நானோர் தோளாச் சுரையொத்தால் நம்பி இத்தால் வாழ்ந்தாயே
ஊனே புகுந்த உனையுணர்ந்தே உருகிப் பெருகும் உள்ளத்தைக்
கோனே அருளுங் காலந்தான் கொடியேற் கென்றோ கூடிவதே. 494
கூடிக்கூடி உன்னடியார் குளிப்பார் சிரிப்பார் களிப்பாரா
வாடிவாடி வழியற்றேன் வற்றல் மரம்போல் நிற்பேனோ
ஊடிஊடி உடையாயொடு கலந்துள் ளுருகிப் பெருகிநெக்கு
ஆடிஆடி ஆனந்தம் அதுவே யாக அருள்கலந்தே. 495
திருச்சிற்றம்பலம்
பிரார்த்தனைப் பத்து
(திருப்பெருந்துறையில் அருளியது – அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)
மாணிக்கவாசகர்:
மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார்.
Buy Book From amazon:
Thiruvasagam Tamil Book Hardcover – 2017
by SWAMI CHIDBHAVANANDA