புணர்ச்சிப்பத்து – அத்துவித இலக்கணம்
திருவாசகம்/புணர்ச்சிப் பத்து
சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை வாளா தொழும்பு கந்து
கடைபட்டேனை ஆண்டுகொண்ட கருணாலயனைக் கருமால் பிரமன்
தடைபட் டின்னுஞ் சார மாட்டாத் தன்னைத் தந்த என்னா ரமுதைப்
புடைபட் டிருப்ப தென்றுகொல்லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே. 438
ஆற்ற கில்லேன் அடியேன் அரசே அவனி தலத்ததைப் புலனாய
சேற்றி லழுந்தாச் சிந்தைசெய்து சிவனெம் பெருமானென்றேத்தி
ஊற்று மணல்போல் நெக்குநெக் குள்ளே உருகி ஓலமிட்டுப்
போற்றிநிற்ப தென்றுகொல்லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே. 439
நீண்டமாலும் அயனும் வெருவ நீண்ட நெருப்பை விருப்பிலேனை
ஆண்டுகொண்ட என் ஆரமுதை அள்ளூறுள்ளத் தடியார்முன்
வேண்டுந் தனையும் வாய்விட்டலறி விரையார் மலர் தூவிப்
பூண்டு கிடப்ப தென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 440
அல்லிக் கமலத் தயனும் மாலும் அல்லா தவரும் அமரர்கோனுஞ்
சொல்லிப் பரவும் நாமத் தானைச் சொல்லும் பொருளும் இறந்த சுடரை
நெல்லிக் கனியைத் தேனைப் பாலை நிறையின் அமுதை அமுதின் சுவையைப்
புல்லிப் புணர்வ தென்றுகொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 441
திகழத் திகழும் அடியும் முடியுங் காண்பான் கீழ்மேல் அயனும் மாலும்
அகழப் பறந்துங் காண மாட்டா அம்மான் இம்மா நிலமுழுதும்
நிகழப் பணிகொண்டென்னை ஆட்கொண்டு ஆ ஆ என்ற நீர்மையெலாம்
புகழப் பெறுவ தென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 442
பரிந்து வந்து பரமானந்தம் பண்டே அடியேற் கருள் செய்யப்
பிரிந்து போந்து பெருமா நிலத்தில் அருமா லுற்றேன் என்றென்று
சொரிந்த கண்ணீர் சொரிய உள்நீர் உரோமஞ் சிலிர்ப்ப உகந்தன்பாய்ப்
புரிந்து நிற்பதென்று கோல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 443
நினையப்பிறருக் கரிய நெருப்பை நீரைக் காலை நிலனை விசும்பைத்
தனையொப் பாரை யில்லாத தனியை நோக்கித் தழைத்துத் தழு த்தகண்டம்
கனையப் கண்ணீர் அருவி பாயக் கையுங் கூப்பிக் கடிமலராற்
புனையப் பெறுவதென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 444
நெக்குநெக்குள் உருகி உருகி நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும்
நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி நானாவிதத்தாற் கூத்தும் நவிற்றிச்
செக்கர்போலும் திருமேனிதிகழ நோக்கிச் சிலிர்சி லிர்த்துப்
புக்கு நிற்ப தென்றுகொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 445
தாதாய் மூவே ழுலகுக்குங் தாயே நாயேன் தனையாண்ட
பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே பெருந்தேன் பில்க எப்போதும்
ஏதா மணியே என்றென்றேத்தி இரவும் பகலும் எழிலார்பாதப்
போதாய்ந் தணைவதென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 446
காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதுங் கண்ணார் விசும்பின் விண்ணோர்க்கெல்லாம்
முப்பாய மூவா முதலாய் நின்ற முதல்வா முன்னே எனையாண்ட
பார்ப்பானே எம்பரமா என்று பாடிப் பாடிப் பணிந்து பாதப்
பூப்போதணைவ தென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 447
திருச்சிற்றம்பலம்
புணர்ச்சிப்பத்து – அத்துவித இலக்கணம்
(திருப்பெருந்துறையில் அருளியது – ஆசிரிய விருத்தம்)
மாணிக்கவாசகர்:
மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார்.
Buy Book From amazon:
Thiruvasagam Tamil Book Hardcover – 2017
by SWAMI CHIDBHAVANANDA