வாழாப்பத்து – முத்தி உபாயம்
திருவாசகம்/வாழாப் பத்து
பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
சீரொடு பொலிவாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன் ஆண்டநீ அருளிலை யானால்
வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே. 448
வம்பனேன் தன்னை ஆண்டமா மணியே மற்றுநான் பற்றிலேன் கண்டாய்
உம்பரும் அறியா ஒருவனே இருவர்க் குணர்விறந்துலக மூடுருவுஞ்
செம்பெருமானே சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
எம்பெருமானே எனனையாள்வானே என்னைநீ கூவிக் கொண்டருளே. 449
பாடிமால் புகழும் பாதமே அல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
தேடிநீ ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
ஊடுவ துனனோ டுவப்பதும் உன்னை உணர்த்துவ துனக்கெனக்குறுதி
வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே. 450
வல்லைவாளரக்கர் புரமெரித்தானே மற்றுநான் பற்றிலேன் கண்டாய்
தில்லைவாழ் கூத்தா சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
எல்லைமூவுலகும் உருவியன் றிருவர் காணும்நாள் ஆதியீ றின்மை
வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 451
பண்ணினேர் மொழியாள் பங்கநீயல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
திண்ணமே ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
எண்ணமே உடல்வாய் மூக்கொடு செவிகண் என்ரறிவை நின்கணே வைத்து
மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே. 452
பஞ்சின்மெல்லடியாள் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செஞ்செவே ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
அஞ்சினேன் நாயேன் ஆண்டுநீ அளித்த அருளினை மருளினால் மறந்த
வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 453
பரிதிவாழ் ஒளியாய் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
திருவுயர்கோலச் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
கருணையே நோக்கிக் கசிந்துளம் உருகிக் கலந்துநான் வாழுமா றறியா
மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 454
பந்தனை விரலாள் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செந்தழல் போல்வாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
அந்திமில் அமுதமே அரும்பெரும் பொருளே ஆரமுதே அடியேனை
வந்துய்ய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 455
பாவநாசாவுன் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
தேவர் தந்தேவே சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
மூவுல குருவ இருவர்கீழ் மேலாய் முழங்கழலாய் நிமிர்ந்தானே
மாவுரி யானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 456
பழுதில்சொல் புகழாள் பங்கநீயல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செழுமதி அணிந்தாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறைச் சிவனே
தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கோர் துணையென நினைவனோ சொல்லாய்
மழவிடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 457
திருச்சிற்றம்பலம்
வாழாப்பத்து – முத்தி உபாயம்
(திருப்பெருந்துறையில் அருளியது – அறு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)
மாணிக்கவாசகர்:
மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார்.
Buy Book From amazon:
Thiruvasagam Tamil Book Hardcover – 2017
by SWAMI CHIDBHAVANANDA