பாரதியார் கவிதைகள்: சான்றோர்
bharathiyar kavithaigal in tamil
1 தாயுமானவர் வாழ்த்து
என்றும் இருக்க உளங்கொண்டாய்!
இன்பத் தமிழுக் கிலக்கியமாய்,
இன்றும் இருத்தல் செய்கின்றாய்!
இறவாய் தமிழோ டிருப்பாய் நீ!
ஒன்று பொருள ஃதின்பமென
உணர்ந்தாய், தாயு மானவனே!
நின்ற பரத்து மாத்திரமோ?
நில்லா இகத்தும் நிற்பாய் நீ!
2 நிவேதிதா
சான்றோர் | பாரதியார் கவிதைகள்
அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர்
கோயிலாய் அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமதுயர்நா
டாம்பயிர்க்கு மழையாய்,இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்
பெரும்பொருளாய்ப் புன்மைத் தாதச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்
நிவேதிதையைத் தொழுது நிற்பேன்.
3 அபேதாநந்தா
சான்றோர் | பாரதியார் கவிதைகள்
சுருதியும் அரிய உபநிட தத்ன்
தொகுதியும் பழுதற உணர்ந்தோன்.
கருதிடற் கரிய பிரமநன் னிலையைக்
கண்டுபே ரொளியிடைக் களித்தோன்,
அரிதினிற் காணும் இயல்பொடு புவியின்
அப்புறத் திருந்துநண் பகலில்
பரிதியி னொளியும் சென்றிடா நாட்டில்
மெய்யொளி பரப்பிடச் சென்றோன்.
வேறு
ஒன்றேமெய்ப் பொருளாகும்;உயிர்களெலாம்
அதன்வடிவாம்,ஓருங்காலை;
என்தேவன் உன்தேவன் என்றுலகர்
பகைப்பதெலாம் இழிவாம் என்று,
நன்றேயிங் கறிவுறுத்தும் பரமகுரு
ஞானமெனும் பயிரை நச்சித்
தின்றேபா ழாக்கிடுமைம் புலன்களெனும்
விலங்கின த்தைச் செகுத்த வீரன்.
வேறு
வானந் தம்புகழ் மேவி விளங்கிய
மாசி லாதி குரவணச் சங்கரன்
ஞானந் தங்குமிந் நாட்டினைப் பின்னரும்
நண்ணி னானெனத் தேசுறு மவ்விவே-
கானந் தபெருஞ் சோதி மறைந்தபின்
அவனி ழைத்த பெருந்தொழி லாற்றியே
ஊனந் தங்கிய மானிடர் தீதெலாம்
ஒழிக்கு மாறு பிறந்த பெருந்தவன்.
வேறு
தூய அபே தாநந்தனெனும் பெயர்கொண்
டொளிர்தருமிச் சுத்த ஞானி,
நேயமுடன் இந்நகரில் திருப்பாதஞ்
சாத்தியருள் நெஞ்சிற் கொண்டு,
மாயமெலாம் நீங்கியினி தெம்மவர்நன்
னெறிசாரும் வண்ணம் ஞானம்
தோயநனி பொழிந்திடமோர் முகில்போன்றான்
இவன்பதங்கள் துதிக்கின் றோமே
4 ஓவியர்மணி இரவிவர்மா
சான்றோர் | பாரதியார் கவிதைகள்
சந்திர னொளியை ஈசன் சமைத்து, அது பருகவென்றே
வந்திடு சாத கப்புள் வகுத்தனன்;அமுதண் டாக்கிப்
பந்தியிற் பருக வென்றே படைத்தனன் அமரர் தம்மை;
இந்திரன் மாண்புக் கென்ன இயற்றினன் வெளிய யானை.
மலரினில் நீல வானில் மாதரார் முகத்தில் எல்லாம்
இலகிய அழகை ஈசன் இயற்றினான்,சீர்த்தி இந்த
உலகினில் எங்கும் வீசி,ஓங்கிய இரவி வர்மன்
அலகிலா அறிவுக் கண்ணால் அனைத்தையும் நுகருமாறே.
மன்னர்மா ளிகையில் ஏழை மக்களின் குடிலில் எல்லாம்
உன்னருந் தேசு வீசி உளத்தினைக் களிக்கச் செய்வான்
நன்னரோ வியங்கள் தீட்டி நல்கிய பெருமான்,இந்நாள்
பொன்னணி யுலகு சென்றான் புவிப்புகழ் போது மென்பான்.
அரம்பைஊர் வசிபோ லுள்ள அமரமெல் லியலார் செவ்வி
திறம்பட வகுத்த எம்மான்!செய்தொழில் ஒப்பு நோக்க
விரும்பிய கொல்லாம் இன்று விண்ணுல கடைந்து விட்டாய்?
அரம்பையர் நின்கைச் செய்கைக்கு அழிதலங் கறிவை திண்ணம்.
காலவான் போக்கில் என்றும் கழிகிலாப் பெருமை கொண்ட
கோலவான் தொழில்கள் செய்து குலவிய பெரியோர் தாமும்,
சீலவாழ் வகற்றி ஓர்நாட் செத்திடல் உறுதி யாயின்
ஞாலவாழ் வினது மாயம் நவின்றிடற் கரிய தன்றோ?
5 சுப்பராம தீட்சிதர்
சான்றோர் | பாரதியார் கவிதைகள்
அகவல்
கவிதையும் அருஞ்சுவைக் கான நூலும்
புவியினர் வியக்கும் ஓவியப் பொற்பும்
மற்றுள பெருந்தொழில் வகைகளிற் பலவும்
வெற்றிகொண் டிலங்கிய மேன்மையார் பரத
நாட்டினில் இந்நாள் அன்னியர் நலிப்ப.
ஈட்டிய செல்வம் இறந்தமை யானனும்
ஆண்டகை யொடுபுகழ் அழிந்தமை யானும்
மாண்டன பழம்பெவரு மாட்சியார் தொழிலெலாம்;
தேவர்கள் வாழ்ந்த சீர்வளர் பூமியில்
மேவிய குரக்கர் விளங்குதல் போல.
நேரிலாப் பெரியோர் நிலவிய நாட்டில்
சீரிலாப் புல்லர் செறிந்துநிற் கின்றார்;
இவரிடை
சுரத்திடை இன்னீர்ச் சுனையது போன்றும்,
அரக்கர்தங் குலத்திடை வீடண னாகவும்,
சேற்றிடைத் தாமரைச் செம்மலர் போன்றும்,
போற்றதற் குரிய புனிதவான் குலத்தில்
நாரத முனிவன் நமர்மிசை யரளால்
பாரத நாட்டில் பழமாண் புறுகென
மீட்டுமோர் முறைஇவன் மேவினன் என்ன,
நாட்டுநற் சீர்த்தி நலனுயர் பெருமான்
தோமறு சுப்ப ராமனற் பெயரோன்
நாமகள் புளகுற நம்மிடை வாழ்ந்தான்
இன்னான் தானும் எமையகன் றேகினன்;
என்னே நம்மவர் இயற்றிய பாவம்!
இனியிவ னனையரை எந்நாட் காண்போம்?
கனியறு மரமெனக் கடைநிலை யுற்றோம்
அந்தோ மறலிநம் அமுனைக் கவர்ந்தான்!
நொந்தோ பயனிலை நுவல யா துளதே?
விருத்தம்
கன்னனொடு கொடைபோயிற்று;உயர்கம்ப
நாடனுடன் கவிதை போயிற்று
உன்னரிய புகழ்ப்பார்த்த னொடுவீரம்
அகன்றதென உரைப்பர் ஆன்றோர்;
என்னகநின் றகலாதோன் அருட் சுப்ப
ராமனெனும் இணையி லாவிற்
பன்னனொடு சுவைமிகுந்த பண்வளனும்
அகன் றதெனப் பகர லாமே.
கலைவிளக்கே!இளசையெனும் சிற்றூரில்
பெருஞ்சோதி கதிக்கத் தோன்றும்
மலைவிளக்கே!எம்மனையர் மனவிருளை
மாற்றுதற்கு வந்த ஞான
நிலைவிளக்கே!நினைப்பிரிந்த இசைத்தேவி
நெய்யகல நின்ற தட்டின்
உலைவிளக்கே யெனத்தளரும்;அந்தோ!நீ
அகன் றதுயர் உரைக்ற் பாற்றோ?
மன்னரையும் பொய்ஞ்ஞான மதக்குரவர்
தங்களையும் வணங்க லாதேன்
தன்னனைய புகழுடையாய்!நினைக்கண்ட
பொழுதுதலை தாழ்ந்து வந்தேன்;
உன்னருமைச் சொற்களையே தெய்விகமாம்
எனக்கருதி வந்தேன்;அந்தோ!
இன்னமொரு காலிளசைக் கேகிடின்,இவ்
வெளியன்மனம் என்ப டாதோ?
6 மகாமகோபாத்தியாயர்
சான்றோர் | பாரதியார் கவிதைகள்
செம்பரிதி ஒளிபெற்றான்;பைந்நறவு
சுவைபெற்றுத் திகழ்ந்தது;ஆங்கண்
உம்பரெலாம் இறவாமை பெற்றனரென்று
எவரேகொல் உவத்தல் செய்வார்?
கும்பமுனி யெனத்தோன்றும் சாமிநா
தப்புலவன் குறைவில் கீர்த்தி
பம்பலுறப் பெற்றனனேல்,இதற்கென்கொல்
பேருவகை படைக் கின்றீரே?
அன்னியர்கள் தமிழ்ச்செல்வி யறியாதார்
இன்றெம்மை ஆள்வோ ரேனும்,
பன்னியசீர் மகாமகோ பாத்தியா
யப்பதவி பரிவுன் ஈந்து
பொன்னிலவு குடந்தைநகர்ச் சாமிநா
தன்றனக்குப் புகழ்செய் வாரேல்,
முன்னிவனப் பாண்டியர்நாள் இருந்திருப்பின்
இவன்பெருமை மொழிய லாமோ?
‘நிதிய றியோம்,இவ்வுலகத் தொருகோடி
இன்பவகை நித்தம் துய்க்கும்
கதியறி யோம்’ என்றுமனம் வருந்தற்க;
குடந்தைநகர்க் கலைஞர் கோவே!
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில்
துதியறிவாய்,அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்,
இறப்பின்றித் துலங்கு வாயே.
7 வெங்கடேசு ரெட்டப்ப பூபதி
சான்றோர் | பாரதியார் கவிதைகள்
1
ஸ்ரீ எட்டயபுரம் ராஜ ராஜேந்த்ர மாகராஜ
வெங்கடேசு ரெட்பப்ப பூபதி அவர்கள் சமூகத்துக்குகவிராஜ ஸ்ரீ சி.சுப்பிரமணிய பாரதி எழுதும்
சீட்டுக் கவிகள்.
பாரிவாழ்ந் திருந்த சீர்த்திப் பழந்தமிழ் நாட்டின் கண்ணே
ஆரிய!நீயிந் நாளில் அரசுவீற் றிருக்கின் றாயால்;
காரியங் கருதி நின்னைக் கவிஞர்தாங் காணவேண்டின்
நேரிலப் போதே யெய்தி வழிபட நினைகி லேயோ?
விண்ணள வுயர்ந்த கீர்த்தி வெங்கடேசு ரெட்டமன்னா!
பண்ணள வுயர்ந்த தென்பணி பாவள வுயர்ந்த தென்பா
எண்ணள வுயர்ந்த வெண்ணில் இரும்புகழ்க் கவிஞர் வந்தால்,
அண்ணலே பரிசு கோடி அளித்திட விரைகி லாயோ?
கல்வியே தொழிலாக் கொண்டாய்!கவிதையே தெய்வமாக
அல்லுநன் பகலும் போற்றி அதைவழி பட்டுநின்றாய்!
சொல்லிலே நிகரி லாத புலவர்நின் சூழ லுற்றால்
எல்லினைக் காணப் பாயும் இடபம்போல் முற்ப டாயோ?
எட்டயபுரம்
1919-ம் வருடம் மே சுப்பிரமணிய பாரதி
மாதம் 2உ
2
ஸ்ரீ எட்டயபுரம் மகாராஜ ராஜேந்த்ர
ஸ்ரீ வெங்கடேசு ரெட்டப்ப பூபதி
அவர்கள் சமூகத்துக்கு
கவிராஜ ஸ்ரீ.சி.சுப்பிரமணிய பாரதி எழுதும்
ஓலைத் தூக்கு
ராஜமகா ராஜேந்த்ர ராஜகுல
சேகரன் ஸ்ரீ ராஜ ராஜன்,
தேசமெலாம் புகழ்விளங்கும் இளசைவெங்க
டேசுரெட்ட சிங்கன் காண்க.
வாசமிகு துழாய்த் தாரான் கண்ணனடி
மறவாத மனத்தான்,சக்தி
தாசனெனப் புகழ்வளரும் சுப்ரமண்ய
பாரதிதான் சமைத்த தூக்கு.
மன்னவனே!தமிழ்நாட்டில் தமிழறிந்த
மன்னரிலை யென்று மாந்தர்
இன்ன லுறப் புகன்றவசை நீமகுடம்
புனைந்த பொழு திரிந்த தன்றே!
சொன்னலமும் பொருணலமும் சுவைகண்டு,
சுவைகண்டு,துய்த்தத் துய்த்துக்
கன்னலிலே சுவையறியுங் குழந்தைகள்போல்
தமிழ்ச்சுவைநீ களித்தா யன்றே!
புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
தமிழ்மொழியைப் புகழி லேற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்
வசையென்னாற் கழிந்த தன்றே!
“சுவைபுதிது,பொருள்புதிது,வளம்புதிது,
சொற்புதிது சோதி மிக்க
நவகவிதை,எந்நாளும் அழியாத
மகாகவிதை”என்று நன்கு.
பிரான் ஸென்னும் சிறந்தபுகழ் நாட்டிலுயர்
புலவோரும் பிறரு மாங்கே
விராவுபுக ழாங்கிலத்தீங் கவியரசர்
தாமுமிக வியந்து கூறிப்
பராவி யென்தன் தமிழ்க்கவியை மொழிபெயர்த்துப்
போற்றுகின்றார்;பாரோ ரேத்துந்
தராதிபனே!இளசை வெங்க டேசுரெட்டா!
நின்பால்அத் தமிழ் கொணர்ந்தேன்.
வேறு
வியப்புமிகும் புத்திசையில் வியத்தகுமென்
கவிதையினை வேந்த னே!நின்
நயப்படுசந் நிதிதனிலே நான்பாட நீகேட்டு
நன்கு போற்றி,
ஜயப்பறைகள் சாற்றுவித்துச் சாலுவைகள் பொற்பைகள்
ஜதிபல் லக்கு,
வயப்பரிவா ரங்கள்முதற் பரிசளித்துப் பல்லூழி
வாழ்க நீயே!
எட்டயபுரம்
1919-ம் வருடம் சுப்பிரமணிய பாரதி
மே மாதம் 2ம் தேதி
8 ஹிந்து மதாபிமான சங்கத்தார்
சான்றோர் | பாரதியார் கவிதைகள்
மண்ணுலகின் மீதினிலே எக்காலும்
அமரரைப் போல் மடிவில் லாமல்
திண்ணமுற வாழ்ந்திடலாம்,அதற்குரிய
உபாயமிங்கு செப்பக் கேளீர்!
நண்ணியெலாப் பொருளினிலும் உட்பொருளாய்ச்
செய்கையெலாம் நடத்தும் வீறாய்த்
திண்ணியநல் லறிவொளியாய்த் திகழுமொரு
பரம்பொருளை அகத்தில் சேர்த்து,
செய்கையெலாம் அதன்செய்கை,நினைவெல்லாம்
அதன்நினைவு,தெய்வ மேநாம்
உய்கையுற நாமாகி நமக்குள்ளே
யொளிர்வ தென உறுதி கொண்டு,
யொய்,கயமை,சினம்,சோம்பர்,கவலை,மயல்,
வீண் விருப்பம்,புழுக்கம்,அச்சம்,
ஐயமெனும் பேயையெலாம் ஞானமெனும்
வாளாலே அறுத்தத் தள்ளி.
எப்போதும் ஆனந்தச் சுடர் நிலையில்
வாழ்ந்துயிர்கட் கினிது செய்வோர்,
தப்பாதே இவ்வுலகில் அமரநிலை
பெற்றிடுவார்;சதுர்வே தங்கள்
மெய்ப்பான சாத்திரங்கள் எனுமிவற்றால்
இவ்வுண்மை விளங்கக் கூறும்
துப்பான மதத்தினையே ஹிந்துமத
மெனப்புவியோர் சொல்லு வாரே.
அருமையுறு பொருளிலெலாம் மிக அரிதாய்த்
தனைச்சாரும் அன்பர்க் கிங்கு
பெருமையுறு வாழ்வளிக்கும் நற்றுணையாம்
ஹிந்துமதப் பெற்றி தன்னைக்
கருதியதன் சொற்படி யிங் கொழுகாத
மக்களெலாம் கவலை யென்னும்
ஒருநரகக் குழியதனில் வீழ்ந்துதவித்
தழிகின்றார் ஓய்வி லாமே.
இத்தகைய துயர்நீக்கிக் கிருதயுகந்
தனையுலகில் இசைக்க வல்ல,
புத்தமுதாம் ஹிந்துமதப் பெருமைதனைப்
பாரறியப் புகட்டும் வண்ணம்;
தத்துபுகழ் வளப்பாண்டி நாட்டினிற்
காரைக்குடியூர் தனிலே சால
உத்தமராந் தனவணிகர் குலத்துதித்த
இளைஞர்பலர்,ஊக்கம் மிக்கார்.
உண்மையே தாரகமென் றுணர்ந்திட்டார்,
அன்பொன்றே உறுதி யென்பார்,
வண்மையே குலதர்ம மெனக்கொண்டார்
தொண்டொன்றே வழியாக் கண்டார்;
ஒண்மையுயர் கடவுளிடத் தன்புடையார்;
அவ்வன்பின் ஊற்றத்தாலே
திண்மையுறும் ஹிந்துமத அபிமான
சங்கமொன்று சேர்த்திட்டாரே.
பலநூல்கள் பதிப்பித்தும்,பல பெரியோர்
பிரசங்கம் பண்ணு வித்தும்
நலமுடைய கலாசாலை புத்தகசா
லைபலவும் நாட்டி யுந்தம்
குலமுயர நகருயர நாடுயர
உழைக்கின்றார்,கோடி மேன்மை
நிலவுறஇச் சங்கத்தார் பல்லூழி
வாழ்ந்தொளிர்க,நிலத்தின் மீதே!
9 வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு
ஆசிரியப்பா
சான்றோர் | பாரதியார் கவிதைகள்
வருக செல்வ!வாழ்கமன் நீயே!
வடமேற் றிசைக்கண் மாபெருந் தொலையினோர்
பொற்சிறு தீவகப் புரவலன் பயந்த
நற்றவக் புதல்வ! நல்வர வுனதே!
மேதக நீயும்நின் காதலங் கிளியும்
என்றனைக் காணுமா றித்தனை காதம்
வந்தனிர்!வாழ்திர்!என் மனம்மகிழ்ந் ததுவே
செல்வகேள்! என்னரும் சேய்களை நின்னுடை
முன்னோர் ஆட்சி தொடங்குறூஉம் முன்னர்
நெஞ்செலாம் புண்ணாய் நின்றனன் யாஅன்.
ஆயிர வருடம் அன்பிலா அந்நியர்
ஆட்சியின் விளைந்த அல்லல்கள் எண்ணில.
போனதை எண்ணிப் புலம்பியிங் கென்பயன்?
மற்றுன் நாட்டினோர் வந்ததன் பின்னர்,
அகத்தினில் சிலபுண் ஆறுதல் எய்தின.
போர்த்தொகை அடங்கிஎன் ஏழைப் புத்திரர்
அமைதிபெற் றுய்வ ராயினர். என்வே,
பாரத தேவி பழமைபோல் திருவருள்
பொழிகர லுற்றனள்,பொருள்செயற் குரிய
தொழிற்கணம் பலப்பல தோன்றின,பின்னும்
கொடுமதப் பாவிகள் குறும்பெலாம் அகன்றன.
யாற்றினிற் பெண்களை எறிவதூஉம்,இரதத்
துருளையிற் பாலரை உயிருடன் மாய்த்தலும்,
பெண்டிரைக் கணவர்தம் பிணத்துடன் எரித்தலும்,
எனப்பல தீமைகள் இறந்துபட் டனவால்.
மேற்றிசை இருளினை வெருட்டிய ஞான
ஒண்பெருங் கதிரின் ஓரிரு கிரணம் என்
பாலரின் மீது படுதலுற் றனவே.
ஆயினும் என்னை?ஆயிரங் கோடி
தொல்லைகள் இன்னும் தொலைந்தன வில்லை.
நல்குர வாதி நவமாம் தொல்லைகள்
ஆயிரம் எனைவந் தடைந்துள நுமரால்
எனினுமிங் கிவையெலாம் இறைவன் அருளால்
நீங்குவ வன்றி நிலைப்பன வல்ல.
நோயெலாந் தவிர்ப்பான் நுமரே எனக்கு.
மருத்துவ ராக வந்தனர் என்பதூஉம்
பொய்யிலை.ஆதலிற் புகழ்பெறும் ஆங்கில
நாட்டின ரென்றும் நலமுற வாழ்கவே!
என்னருஞ் சேய்களும் இவரும்நட் பெய்தி
இருபான் மையர்க்கும் இன்னலொன் றின்றி
ஒருவரை யொருவர் ஒறுத்திட லிலாது,
செவ்விதின் வாழ்க!அச் சீர்மிகு சாதியின்
இறைவனாம் உந்தை இன்பொடு வாழ்க!
வாழ்க நீ! வாழ்கநின் மனமெனும் இனிய
வேரிமென் மலர்வாழ் மேரிநல் லன்னம்!
மற்றென் சேய்கள் வாழிய! வாழிய!
Bharathiyar Kavithaigal in Tamil