பாரி வள்ளல் வரலாறு

பாரி வள்ளல் வரலாறு

10853 0

வேள் பாரி வள்ளல்

இராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புத்துரர் என்ற ஊர் இருக்கிறது. அங்கிருந்து சில மைல் தூரத்தில் பிரான்மலை என்ற மலையும் அந்தப் பெயரோடு ஓர் ஊரும் உள்ளன. சங்க காலத்தில், அந்த மலைக்குப் பறம்பு மலை என்ற பெயர் வழங்கிவந்தது. அங்கு பாரி என்னும் வள்ளல் வாழ்ந்துவந்தான்.

வேள்பாரி பறம்பு மலையை தலைமை இடமாய் கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னர் ஆவார். கடைச்சங்கக் காலத்தைச் சார்ந்தவர். வேளிர் குலத்தில் பிறந்ததால் வேள்பாரி என அழைக்கப்பட்டார்.

பறம்பு மலை நாடு

வனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டுக்குப் பறம்பு நாடு என்று பெயர். பறம்பு மலையை நடுவே உடையதாக விளங்கியமையால் நாட்டுக்கும் பறம்பு என்று பெயர் அமைந்தது. அந்த நாட்டில் முந்நூறு ஊர்கள் இருந்தன.

சங்க காலத்தில் பறம்பு மலை எனவும், பின்னர் திருநெலக்குன்றம் எனவும் சமய இலக்கியங்களில் திருக்கொடுங்குன்றம் எனவும், பெயர் பெற்ற இம்மலை தற்போது பிரான்மலை எனவும் வழங்கப்படுகிறது. 

பறம்பு மலை சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளது. மதுரையிலிருந்து வடக்கே 63 கி.மீ. தொலைவில் உள்ளது.

பறம்பு மலை வளம்

அந்தக் காலத்தில் பறம்பு மலை நல்ல வளமுடையதாக இருந்தது. எங்கே பார்த்தாலும் மரங்கள் அடர்ந்திருந்தன. பலாமரங்கள் குலைகுலையாகப் பழங்களுடன் நின்றன.

மரத்துக்கு மரம் தேன் கூடுகள் அடை அடையாக இருந்தன. மலைப்பாறைகளிலும் பெரிய பெரிய தேனிருல்கள் தேனை ஊற்றுப்போல ஒழுக விட்டுக்கொண்டு பரந்திருந்தன. வண்ணவண்ண மலர்கள் காணக் காண இனியனவாய் மலர்ந்திருந்தன. மலைப் பாறைகளில் அருகருகே பல சுனைகள் தெளிந்த நீரோடு விளங்கின. மலைவளம் சிறந்திருந்த பறம்பு மலையில் ஓரிடத்தில் பாரி சிறிய அரண்மனையைக் கட்டிக்கொண்டிருந்தான். வேறு ஓரிடத்தில் சிவபெருமானுக்குரிய கோயில் இருந்தது.

பாரி வள்ளல் வரலாறு

பாரிவேள் வீரத்திலே சிறந்தவன்; பண்பிலே நிறைந்தவன்; தமிழ்ப் பாவின் நயம் தேர்வதில் பெரியவன்; எல்லாவற்றிற்கும் மேலாகக் கொடையிலே இணையற்றவன். பாரி என்றவுடன் முதலில் அவனுடைய ஆட்சி நினைவுக்கு வருவதில்லை; அவன் வீரம் நினைவுக்கு வருவதில்லை; அவனுடைய வள்ளன்மையே மக்களின் உள்ளத்திலே தோன்றியது.

எத்தனையோ புலவர்கள் அவனிடம் வந்து வந்து அவனுடைய உபசாரத்தையும் விருந்தையும் பெற்று அளவளாவினர்கள்; அவனுடன் இருந்து தமிழ் நூல்களின் நயத்தை நுகர்ந்தார்கள்; அவனுடைய சிறப்பைப் புதிய பாடல்களால் பாடினர்கள்.

விடை பெற்றுச் செல்லும்போது மன நிறைவையும், உவகையையும், நன்றியறிவையும், பலவகைப் பரிசில்களையும் தாங்கிச் சென்றார்கள். புலவர்களுக்கு அவன் உணவு தருவான்; உடை தருவான்; பொருள் தருவான். ஒர் ஊர் முழுவதையும் புலவருக்கு அளித்து அதில் வருகின்ற வருவாயை நுகரும்படி செய்வான்.

யாரேனும் புதிய புலவர் ஒருவருடைய பழக்கம் அவனுக்குக் கிடைத்தால் அதைப் பெரும் பேருகக் கருதி இன்புற்றான்; ஏதோ புதிய நாட்டைப் பெற்றவனைப் போன்ற களிப்பை அடைந்தான்.

கபிலருக்கு சென்ற தூது

மதுரை மாநகர்ச் சங்கத்தில் தலைமைப் புலவராகக் கபிலர் விளங்கின காலம் அது. பாரிவேளுக்கு அவருடைய பழக்கம் வேண்டும் என்ற ஆவல் உண்டாயிற்று. பாண்டியனால் சிறப்புப் பெற்று விளங்கும் பெரும் புலவராகிய அவர் தன்னை நாடிவருவார் என்று எதிர் பார்ப்பது பேதைமை என்று எண்ணினான் பாரி.

ஆகவே தக்க அறிஞர் ஒருவரை மதுரைக்கு அனுப்பிக் கபிலரைக் காணச் செய்தான். கண்டு, அவரைச் சந்தித்து இன்புறவேண்டும் என்று தனக்கு இருக்கும் ஆர்வத்தைத் தெரிவித்து, பறம்பு மலைக்கு வரவேண்டும் என்று அழைக்கச் சொன்னான். சென்றவர் கபிலரிடம் பணிவான சொற்களைக் கூறிப் பாரியினுடைய ஆர்வத்தைத் தெரிவித்தார். கபிலரும் வருவதாகச் சொல்லி அனுப்பினர்.

பாரி கபிலர் நட்பு

பாரிவேள் கபிலருக்கு மிகச் சிறந்த முறையில் வரவேற்பு அளித்தான். கபிலரைக் கடவுளாகவே எண்ணி வழிபட்டான். அவனுடைய பேரன்பை அறிந்த கபிலர் மனம் உருகினர். அடிக்கடி அங்கே வந்தார். இருவருக்குமிடையே இருந்த அன்பு சிறந்த நட்பாக உருவாயிற்று. அதன் பயனாகக் கபிலர் மதுரையை விட்டுவிட்டுப் பறம்பு மலைக்கே வந்து விட்டார். பாரிக்குத் துணைவராகவும், ஆசிரியராகவும், அவைக்களப் புலவராகவும் விளங்கலானர்.

பாரிவள்ளலின் கொடைத்திறத்தைக் கண்டு வியப்படைந்தார். அவனுடைய குணங்களை அருமையான பாடல்களால் பாராட்டினர்.

பாண்டியநாட்டில் உள்ளது திருவாதவூர். அவ்வூரில் பிறந்தவர் கபிலர் எனும் புலவர்; இவர் சங்கத்தமிழ் இலக்கியப்பரப்பில் மிக அதிகமான பாடல்களைப் பாடியவர் என்ற பெருமைக்குரியவர்.

இவர் பாரியின் மிகநெருங்கிய நண்பராவார். பாரியைப் பற்றி இறவாப்புகழுடைய பாடல்களைப்பாடியவர் கபிலர்.

 

முல்லைக்கொடியும் பாரி வள்ளலும்

பறம்பு நாட்டில் அடர்ந்த காடுகளும் இருந்தன. பாரிவேள் அவ்வப்போது தன் நாட்டு மக்களைக் கண்டு அளவளாவி விட்டு வருவான். மலையின்மேல் உள்ள மலைவளத்தைக் கண்டு மகிழ்வது போலவே கீழே உள்ள காட்டு வளத்தையும் கண்டு களிப்பான்.

ஒருநாள் காடு அடர்ந்த ஓரிடத்திற்குச் சென்றான் பாரி. காட்டினிடையே தேர் செல்லுதற்கு ஏற்ற வழிகள் இருந்தன. அன்று அவன் தேரிலே தான் சென்றான். தேர்ப்பாகன் அதை ஓட்டிச் சென்றான். பல இடங்களைப் பார்த்துவிட்டு மீண்டு வந்தான், அப்போது பிற்பகல் வேளை, கதிரவன் மேல் திசையில் இறங்கிக் கொண்டிருந்தான்.

பறம்பு மலையின் அடிவாரத்தை நோக்கித் தேர் போய்க் கொண்டிருந்தது. இரு பக்கங்களிலும் உள்ள இயற்கை வளத்தை அவன் பார்த்துக் கொண்டே வந்தான்; ஆதலின் தேர் மெல்லத்தான் போய்க்கொண்டிருந்தது. ப்போது, தேரை நிறுத்து. என்று அவன் சொல்லவே பாகன் தேரை நிறுத்தினான்.

பாரிவள்ளல் தேரிலிருந்து இறங்கினான். அங்கே அருகில் ஒரு முல்லைக்கொடி வளர்ந்திருந்தது; இளங்கொடியாக இருந்தது. நிறைய அரும்பு கொத்துக் கொத்தாக விளங்கியது. மாலை நேரம் வந்தால் அத்தன அரும்புகளும் மலர்ந்து மணக்கும். தளதளவென்று வளர்ந்திருந்தது முல்லைக்கொடி.

முல்லைக்கொடியின் சோக நிலை

ஆனால் அது பற்றுக்கோடு ஒன்றும் இல்லாமல் காற்றில் அசைந்து கொண்டிருந்தது. தளர்நடை பழகும் குழந்தை தட்டுத் தடுமாறி வந்து கீழே விழும் நிலையில் இருப்பதுபோல அது தளர்ந்து ஆடியது. குருடன் ஒருவன் கால் தளர்ந்து எதையேனும் பற்றிக் கொள்வதற்காக நாலு புறமும் வெறும் வெளியைக் கையால் துழாவுவது போல அது அசைந்தது. மெல்லிய காற்றில் அது திருப்பித் திருப்பி அசைந்தது.

சிறிது காற்றுப் பலமாக அடித்தால் போதும்; அது ஒடிந்து விழுந்துவிடு மென்று தோன்றியது.

அது அங்கும் இங்கும் அசைகிறதைப் பார்த்தால், வழியில் போகிறவர்களை எனக்கு ஒரு பற்றுக்கோடு தரமாட்டீர்களா?” என்று கேட்பது போல இருந்தது.

கொழு கொம்பு இல்லாமல் அந்தக் கொடி தளர்வதைக் கண்டான் பாரி. மக்கள் வறுமையினலோ பசியினுலோ பிணியினாலோ தளர்வதைக் கண்டால் அவன் மனம் பொறுப்பதில்லை; உடனே உதவி செய்ய முற்படுவான். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்னும் இயல்பே அவனிடம் இல்லை. கையில் எது கிடைத்தாலும் அதை அப்போதே கொடுத்துவிடும் வேகம் உடையவன். மக்களிடம் மாத்திரமா இந்த அன்பு? விலங்கினங்கள் துன்புற்றாலும், பறவைகள் வருந்தினாலும் அவன் சும்மா இருப்பதில்லை. அவற்றின் வருத்தத்தைப் போக்க ஏதாவது செய்ய முற்படுவான். அவன் உள்ளம் கருணைமயமானது.

அத்தகையவன் கண்ணில் பற்றுக் கோடின்றிப் பதை பதைத்து நிற்கும் முல்லைக் கொடிபட்டது. அது இயங்காது; வாய் பேசாது. ஆனாலும் உயிர்க் கூட்டங்களில் ஒன்று; ஓரறிவுடைய உயிர் அது. எல்லா உயிர்களுக்கும் கருணை காட்டும் பாரியின் உள்ளம் அந்த உயிரைக் கண்டும் இரங்கியது.

பாரிக்கு வந்த யோசனை

முல்லைக் கொடியின் தளர்ச்சி கண்டு மனம் நெகிழ்ந்தான். அதனைப் படரவிடப் பக்கத்தில் மரம் இல்லை. இருந்தால் அதுவே பற்றிக் கொண்டிருக்குமே! யாரேனும் உழவனாக இருந்தால் எங்காவது போய் ஒரு மூங்கிலைத் தேடிக் கொணர்ந்து நட்டு அந்தக் கொடி படரச் செய்வான். பாரிக்கு அந்த யோசனை தோன்றவில்லை.

முல்லைக் கொடியின் தளர்ச்சியை உடனே போக்க வேண்டும். என்ன செய்வது? இப்போது அவனும் அந்தக் கொடியைப் போலப் பதைபதைத்தான். பளிச்சென்று அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. பாகனை அழைத்துத் தேர்க் குதிரைகளை அவிழ்த்து ஓட்டிவிடச் சொன்னான்.

பிறகு தேரை இழுத்து அந்தக் கொடிக்கருகில் கொண்டு வந்து நிறுத்தச் சொன்னான்; தானும் ஒரு கை கொடுத்தான். அருகில் நின்ற தேரின்மேல் அந்தப் பூங்கொடியை எடுத்துவிட்டான். அப்போது அவனுக்கு உண்டான இன்பத்தை எப்படிச் சொல்வது?

பாரிக்கு இந்தச் சிறிய கொடிக்குத் தேரைப்பற்றுக் கோடாக வைக்கலாமா என்ற எண்ணமே தோன்றவில்லை. அந்தக் கொடியின் தளர்ச்சி ஒன்றே அவன் கண்ணிலும் கருத்திலும் நின்றது. அருகில் எது இருந் தாலும் பற்றுக்கோடாக நிறுத்த வேண்டும். என்ற எண்ணமே முன் நின்றது. தேர் இல்லாவிட்டால், அவனே அங்கே நின்றிருப்பான்!

முல்லைக்குத் தேர் அளித்த பாரி வள்ளல்

கடையெழு வள்ளல்கள் pdf

 

பாரி அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். முல்லை பற்றுக்கோடு பெற்றுப் படர்ந்த அழகைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தான். அந்த வள்ளலின் சீரிய பண்பை எண்ணி எண்ணி அவனுடன் நடந்து கொண்டிருந்தான் தேர்ப் பாகன். குதிரைகளோ நேரே பறம்புமலையின் அடிவாரத்தை நாடிச் சென்றன.

அங்கே இருந்த குடிமக்கள் குதிரைகளை மாத்திரம் கண்டார்கள். பாரியின் தேர் என்ன ஆயிற்று, அவன் என்ன ஆணான் என்ற கேள்விகள் எழுந்தன. அவர்கள் என்ன நிகழ்ந்ததென்று அறிந்துகொள்ளப் புறப்பட்டு வந்தபோது இடை வழியிலே பாரியையும் பாகனையும் சந்தித்தார்கள். பாகன் வாயிலாகப் பாரியின் செயலை அறிந்து வியந்தார்கள்; உள்ளம் நெகிழ்ந்தார்கள்.

காட்டுக்கு நடுவே பாரியின் உள்ளத்தைக் கனிவித்த முல்லைக் கொடி, வேறு எதற்கும் இல்லாத சிறப்புடன் தேர் பந்தலில் படர்ந்தது. பாரி முல்லைக்குத் தேர் கொடுத்தான் என்ற வியப்புக்குரிய செய்தி தமிழுலகம் முழுவதும் படர்ந்தது. புலவர்கள் புகழ்ந்தனர்; மன்னர்கள் பாராட்டினர்கள். அன்று முதல் ‘முல்லைக்குத் தேர் அளித்த வள்ளல்’ என்று யாவரும் பாரியை வழங்கலானார்கள்.

பாரி பற்றிய கபிலரின் பாடல்கள்

பாரி பாரி என்றுபல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே

 

பொருள்:

பாரி பாரி என்று கூறி அவனுடைய பலவகைப்பட்ட புகழையும் வாழ்த்திச் சிறந்த புலமை மிக்க புலவர் அவன் ஒருவனையே போற்றுவர். பாரி ஒருவனே பெரிய வள்ளல் தன்மை உடையவன் அல்லன்; இவ்வுலகைப் பாதுகாப்பதற்கு மாரியும் இருக்கின்றது.”

உதவி வேண்டி வந்து நிற்போரில் இன்னாருக்குக் கொடுக்கலாம் இன்னாருக்குக் கொடுக்கக் கூடாது என்று பாகுபாடு செய்ய அறியாதவன். இந்த அறியாமையை அறிஞர் உலகம் கொடைமடம் என்று போற்றியது. பாரி படைமடம் கொண்டவன் அல்லன்; கொடைமடம் கொண்டவன் எனப் புகழ்ந்தது. ”பாரி ஒருவன்தானா உலகைக் காப்பாற்றுகின்றவன். மாரி (மழை) இல்லையா?” எனப் பாரியைக் குறைத்துக் கூறுவதைப்போல உயர்த்திப் பேசுகின்றார் கபிலர்.

அங்கவை சங்கவை வரலாறு

பாரிக்கு இரண்டு பெண்கள் இருந்தார்கள். அழகும் அறிவும் நிரம்பின அவர்களுக்குக் கபிலர் தமிழறிவு ஊட்டினார். பாரியினிடம் வந்த புலவர்கள் அவ்விருவருடைய அறிவையும் கண்டு வியந்தார்கள். அவர்கள் போகும் இடங்களிலெல்லாம் பாரியின் புகழோடு அவனுடைய பெண்களின் புகழையும் பரப்பினார்கள். பாண்டிய மன்னனுக்குப் பாரி மகளிரின் பெருமை தெரிந்தது. அவர்களை மணந்துகொண்டால் பாரியின் உறவும் கிடைக்கும் என்று எண்ணினான்.

ஆனால், அவனுக்கு முன்பே மணமாகியிருந்தது; பட்டத்தரசி ஒருத்தி இருந்தாள். பல பெண்களை மணப்பது மன்னர்களின் வழக்கமாக இருந்ததால் அவனுக்குப் பாரி மகளிரின்மேல் விருப்பம் உண்டாயிற்று.

அவன் பாரிக்கு ஓலை போக்கினான். இரு பெண்களையும் தனக்கு மணம் புரிவிக்க வேண்டுமென்று ஓலை கூறியது. பாரி அதைக் கண்டவுடன் சினந்தான். அவன் மகளிராகிய அங்கவை சங்கவை என்னும் இருவரும், “அரசர் அந்தப்புரத்தில் நூறு பேரோடு சேர்ந்து நாங்கள் வாழ விரும்பவில்லை” என்று தெரிவித்தார்கள். வந்த தூதுவன் மறுப்புடன் மீண்டு சென்றான்.

போர் முரசு கொட்டிய மூவேந்தர்கள் 

பாரியின் புகழைக் கேட்டுப் பொறாமை அடைந்திருந்தான் பாண்டியன். ஆகவே அவன் தன் மகளை மணம் செய்து தர மறுத்ததையே காரணமாக வைத்துக்கொண்டு அவனோடு போர் தொடுக்க எண்ணினான்.

இந்தச் செய்தி சோழனுக்கும் சேரனுக்கும் எட்டியது. அவர்களும் பாரியின் மேன்மையை உணர்ந்து பொறாமை கொண்டவர்களே. அவர்களுக்கும் பாரியை அடக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. காரணம் இல்லாமல் அவன் மேல் போர் தொடுக்கலாமா? பாண்டியன் செய்த காரியத்தையே அவர்கள் செய்தார்கள். தனித்தனியே பாரியின் மகளிரை மணக்க வேண்டுமென்று தூது விட்டார்கள்; மறுப்பே விடையாக வந்தது.

பாரியை வெல்லவேண்டும் என்ற கருத்துத் தமிழ் நாட்டில் முடியுடை வேந்தர்களாக விளங்கிய மூவருக்கும் உண்டாகிவிட்டது. அவர்கள் ஒன்றுகூடி அவனோடு போர் செய்யத் தமக்குள் ஆலோசனை செய்தார்கள்; போர் முரசு கொட்டினார்கள்.

பாரி தன் படைவீரர்களை யெல்லாம் ஒன்று கூட்டினான். நாட்டிலுள்ள ஆடவர்களில் வலிமையும் காளைப் பருவமும் உடையவர்கள் படையில் சேர்ந்தார்கள். நாடு முழுவதையும் காப்பதைவிடப் பறம்பு மலையைக் காப்பாற்றுவது எளிது என்று தோன்றியது. ஆகவே படை முழுவதையும் அம்மலையின் மீது, வைத்துக்கொண்டு அரண்களையெல்லாம் செப்பம் செய்தான் பாரி.

மூவேந்தர் படைகளும் பறம்புநாட்டின் எல்லேயை அடைந்தன. பேருக்கு ஒரு சிறு படை ஆங்கே நின்று அப்படைகளை எதிர்த்தது. சில நாழிகைகளில் அது பகைப் படைகளுக்கு வழி விட்டுவிட்டது. அதைக கண்டு மும்மன்னர்களுக்கும் பெருமகிழ்ச்சி உண்டாகியது. எதிர்ப்பு இல்லாமலே பறம்பையும் பாரியையும் கைவசப்படுத்திவிடலாம் என்று எண்ணினார்கள்.

அதற்கு ஏற்றபடி அவர்கள் நாட்டுக்குள்ளே நுழைந்து செல்கையில் யாரும் எதிர்க்கவில்லை. பறம்பு மலையை அடைந்தார்கள். அந்த மலையின்மேல் பாரி படையுடன் தங்கியிருப்பதை அறிந்தார்கள். மலையின்மேல் ஏறுவதற்குக் குறுகிய வழிகள் சில இருந்தன. ஆனால் அந்தப் பெரும்படை முழுவதும் எளிதில் அவற்றின் வழியே ஏற இயலாது. அன்றியும், பகைப்படை அடிவாரத்துக்கு வந்துவிட்டதை அறிந்த பாரியின் படைவீரர்கள் மேலிருந்து கற்களை உருட்டினர்கள். அவை கீழேயிருந்த படைகளின் மேல் வந்து தாக்கின.

மலையின்மேல் ஏறுவது எளிதாகத் தோற்றவில்லை. கீழிருந்து அம்பை எய்தார்கள். அம்புகளை யாரைக் குறிபார்த்து எய்வது? மேலுள்ள வீரர்கள் மறைந்து நின்று சிறிய துளைகளின் வழியே அம்பை எய்தார்கள். அவை பலரைக் கீழே வீழ்த்தின. தாம் நினைத்த வண்ணம் பாரியை எளிதில் வெல்வது இயலாத காரியம் என்பதை இப்போது முடிமன்னர்கள் உணர்ந்தார்கள்.

பறம்பு மலை முற்றுகை

மூவரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். மலையைச் சுற்றித் தங்கள் படையை நிறுத்தி முற்றுகையிடுவதென்றும், கீழிருந்து உணவுப் பொருள் மேலே செல்ல முடியாமல் தடுக்க வேண்டுமென்றும், நாளடைவில் உணவில்லாமல் மேல் உள்ளவர்கள் தாமே சரணடைவார்கள் என்றும் நினைத்தார்கள். அதன்படியே படைகள் நின்றன.

மேலே பாரியும் கபிலரும் படைவீரர்களும் இருந்தார்கள். அவர்கள் தம் கையில் சேமித்து வைத்திருந்த உணவுப் பண்டங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்தினார்கள். மலையின்மேல் மூங்கில்கள் முற்றியிருந்தன. அவற்றில் விளைந்த நெல்லைத் தொகுத்து அரிசியாக்கிச் சோறு சமைத்தார்கள். இனிய பலாப்பழங்களை உண்டு பசியாறினார்கள். பலாக்கொட்டைகளை மாவாக்கி அதிலிருந்து உணவுப் பண்டங்களைச் செய்து உண்டார் கள்.

வள்ளிக் கிழங்குகளைப் பறித்தெடுத்துச் சுட்டுத் தின்றார்கள். மிகுதியாகத் தேனடைகள் இருந்தமையால் இனிய தேன் குடம் குடமாகக் கிடைத்தது. பல பல சுனைகளில் தெளிந்த நீர் இருந்தது. ஆகவே, கீழிருந்து உணவுப் பண்டம் வாராமையால் அவர்களுக்கு எந்த இடையூறும் நேரவில்லை.

சில மாதங்கள் முற்றுகை நடந்து கொண்டிருந்தது. மன்னர்கள், மேலே இருப்பவர்கள் எப்படி உண்டு வாழ்கிறார்கள் என்று அறியாமல் வியப்படைந்தார்கள். ஒரு நாள் அம்பிலே கோத்த ஓலையொன்று மேலிருந்து கீழே வந்தது.

மூவேந்தர்களுக்கு கபிலர் அனுப்பிய பாடல்

“மலைமேல் எங்களுக்கு மூங்கில் நெல் கிடைக்கிறது. பலாமரங்கள் கணக்கில்லாத பழங்களை வழங்குகின்றன. வள்ளிக் கிழங்குக்குப் பஞ்சமே இல்லை. எங்கே பார்த்தாலும் தேனடைகள் மலிந்திருக்கின்றன. வானத்தில் நட்சத்திரங்கள் இருப்பதைப்போலத் தெளிந்த நீர்ச் சுனைகள் பல இங்கே இருக்கின்றன. ஆகவே எங்களுக்கு உணவுப் பஞ்சம் இல்லை. நீங்கள் அங்கே ஒவ்வொரு மரத்துக்கும் ஒவ்வொரு யானையாகக் கட்டி வைத்தாலும் சரி, பல பல தேர்களைக் கொண்டுவந்து நிறுத்தினாலும் சரி, உங்களால் பறம்பு மலையைக் கைக்கொள்ள முடியாது”

என்ற கருத்து அந்தப் பாட்டில் இருந்தது. அதைக் கண்டு சேர சோழ பாண்டியர்கள் ஒன்றும் தெரியாமல் விழித்தார்கள்.

பாரிக்கு சிட்டுக் குருவி கொடுத்த உணவு

கபிலர் ஒரு தந்திரம் செய்தார். கிளிகளையும் சிட்டுக் குருவிகளையும் பழக்கி அவற்றைப் பறக்கவிட்டுக் கீழே வயல்களில் விளையும் நெற்கதிர்களைக் கொண்டு வரும்படி செய்தார்.

வண்புகழ் பாரி பறம்பின்
நிறைபறைக் குரீஇ இனம் காலை போகி
முடங்குபுறச் செந்நெல் தரீஇயர் ஒராங்கு
இரைதேர் கொட்பின ஆகி பொழுதுபடப்
படர்கொள் மாலைப் படர்தந்து ஆங்கு
வருவர்

                                      – அகம் 303

அப்பறவைகள் கொண்டு வந்த நெல்லைக் கொண்டு சோறு சமைத்து பாரி வள்ளலின் குடும்பத்தின் பசியைப் போக்கியது.

மூவேந்தர்களின் சூழ்ச்சி

பல காலம் முற்றுகையிட்டிருந்தாலும் உணவுக் குறைவு மேலே இருப்பவர்களுக்கு நேராது என்பதை மன்னர்கள் அறிந்து, தம் படைகளை மீட்டுக்கொண்டு தம் ஊரை அடைந்தார்கள். அவர்களுக்கு மனத்துக்குள் கோபம் மூண்டாலும் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டார்கள். போன பிறகும் பாரியைத் தொலைக்க வஞ்சகமாக ஏதாவது வழி உண்டா என்று ஆராய்ந்தார்கள்.

பாரியிடம் புலவரும் பாணரும் விறலியரும் தடையின்றிப் பரிசு பெற்றுச் செல்வதைத் தமிழுலகம் நன்கு அறிந்திருந்தது. முடி மன்னர் மூவரும் அறிந்திருந்தார்கள். அதனால், யாழ் வாசிக்கத் தெரிந்த சிலரை அழைத்துத் தம் கருத்தை முடிக்கும் படி ஏவினார்கள். அவ் வஞ்சப் பாணர்கள் பாரியிடம் சென்று யாழிசையாலும் பாட்டாலும் அவன் அன்பைப் பெற்றனர். ஒரு நாள் மலைவளம் காணவேண்டும் என்று அவனுடன் சென்றனர். கபிலர் அப்போது வெளியூர் சென்றிருந்தார்.

வேள்பாரியின் மறைவு

பறம்பு மலையின்மேல் மரங்கள் அடர்ந்த சூழலில் அந்த வஞ்சகர்களுடன் பாரி நடந்து சென்றான். அப்போது அந்தக் கொடுஞ் செயலாளரில் ஒருவன் பாரியை வாளால் துணித்து வீழ்த்திவிட்டான். பின்பு அந்த வஞ்சகர்கள் தம் வேடத்தை மாற்றி ஓடி விட்டார்கள்.

பொய்யாது பெய்த மேகம் வறண்டது. புலவர்களுக்கு வற்றாது நல்கிய அருவி வற்றியது. பறம்பு நாடு மட்டுமா கண்ணீர் வடித்தது? தமிழ்நாடு முழுவ துமே பாரியின் மறைவுக்காகப் புலம்பியது.

கபிலரின் முடிவு

கபிலர் வெளியூரிலிருந்து ஓடி வந்தார். உயிருடன் தம் நண்பனைக் காண முடியாததற்காக அடித்துக்கொண்டு அழுதார். தாமும் உலக வாழ்வை நீத்துவிடவேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. ஆனாச் பாரியின் மகளிர் இருவரையும் தக்க இடத்தில் மனம் செய்து கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தால் அவ்வாறு செய்யவில்லை.

பாரி மறைந்த பிறகு பகை மன்னர் அவன் நாட்டைக் கைப்பற்றத் தொடங்கினர். அதனை அறிந்த கபிலர் அங்கவை, சங்கவை என்னும் இருவரையும் அழைத்துக்கொண்டு வெளியே புறப்பட்டுவிட்டார்.

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின் 
எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார் 
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின் 
வென்றெறி முரசின் வேந்தர்எம் 
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.

    அங்கவை, சங்கவை

பொருள்:

“மூவேந்தரும் முற்றுகை இட்டிருந்த அந்த நிலாக் காலத்தின் வெண்மையான நிலா ஒளியில் எங்கள் தந்தையை நாங்கள் பெற்றிருந்தோம். எங்களுடைய மலையையும் பிறர் கொள்ளவில்லை; எங்களிடமே இருந்தது.

இந்த நிலாக் காலத்தின் வெண்மையான நிலா ஒளியில் வென்று ஒலிக்கும் முரசினைக் கொண்ட வேந்தர்கள் எம்முடைய மலையைக் கொண்டார். நாங்கள் எங்கள் தந்தையையும் இழந்தோம்…”

அங்கவை, சங்கவை இருவருக்கும் நல்வாழ்வு அமைக்க இவர் அடைந்த துயரங்கள் பல. பாரியின் மகளிரைத் தம் மகளிராகவே கருதித் தக்க அரசர்களை நாடி இப்பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார் கபிலர். ஆனால் மூவேந்தர்களின் கோவத்துக்கு ஆளாக நேறிடும் என என்னி அவர்கள் மறுத்துவிட்டார்கள்.

அவ்வகையில் விச்சிகோன், இருங்கோவேள் என்ற இரண்டு அரசர்களை சென்று கபிலர் வேண்டியதைப் புறநானூறு தெரிவிக்கிறது. இறுதியில், பாரி மகளிரைத் தக்க சான்றோரிடம் அடைக்கலம் தந்துவிட்டு, தாமும் வடக்கிருந்து (ஒருவரும் அறியாமல் பெண்ணையாற்றங்கரையில் பட்டினி கிடந்து) உயிர் நீத்து தன் நண்பனான பாரியுடன் விண்ணகம் சேர்ந்தார்.

பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல் 
துறை: கையறுநிலை

கலைஉணக் கிழிந்த, முழவுமருள் பெரும்பழம்
சிலைகெழு குறவர்க்கு அல்குமிசைவு ஆகும்
மலை கெழு நாட! மா வண் பாரி
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய், நீ; எற்
புலந்தனை யாகுவை- புரந்த யாண்டே
பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது
ஒருங்குவரல் விடாஅது ஒழிக எனக்கூறி,
இனையை ஆதலின் நினக்கு மற்றுயான்
மேயினேன் அன்மை யானே; ஆயினும்,
இம்மை போலக் காட்டி, உம்மை
இடையில் காட்சி நின்னோடு
உடன்உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே!

(குறிப்பு: வேள்பாரி துஞ்சியபின், அவன் மகளிரைப் பார்ப்பார்ப்படுத்து வடக்கிருந்தபோது, பாடியது. )

பொருள்:

பெருங் கொடையாளியாக விளங்கும் பாரியே! உன் நாட்டில் ஆண்குரங்கு கிழித்துத் தின்ற பலாப்பழத்தின் மிச்சம் மலை (சிலை) வாழ் குறவர் மக்களுக்கு உணவாக இருக்கும். (உன் நாட்டில் குரங்கும் கொடை வழங்கும்) நாம் கலந்த நட்போடு பழகினோம். ஆனால் அந்த நட்புக்கு நீ உரியவன் இல்லை. ஏன் தெரியுமா? என்மீது பிணக்குக் கொண்டு என்னை விட்டுவிட்டுப் போய்விட்டாய்.

உன் பெருந்தகு நட்பினால் என்னைக் காப்பாற்றினாயே அந்த நட்பிற்கு என்னை விட்டுவிட்டுச் சென்றது தகாது அல்லவா? உன்னுடன் சேர்ந்து வருகிறேன் என்றபோது ‘நீ இங்கேயே இரு (ஒழிக)’ என்று சொன்னவன் ஆயிற்றே. இப்படி நான் உனக்குப் பொருத்தம் இல்லாதவன் ஆகிவிட்டேனே. (உன் மகளிர்க்காக இவ்வாறு கூறினாய் போலும். இப்போது அந்தக் கடமையும் முடிந்துவிட்டது).

இனி உன்னைப் பிரிந்திருக்க முடியாது. இடைவிடாமல் உன்னைச் சேர்ந்தே இருக்கவேண்டும். எல்லாவற்றினும் மேலாகிய பால் (விதி) உன்னோடு என்னை வாழவைப்பதாக இருக்கட்டும்.

ஒளவையின் உதவி

மூவேந்தர்கள் மீது இருந்த பயத்தால் எந்த மன்னர்களும் பாரி மகள்களை மணம் முடிக்க முன்வரவில்லை. சில நாட்களுக்குப் பின்னர் ஔவையாரின் முயற்சியால், மூவேந்தர்களைக்கண்டு பயப்படாத மற்றொரு கடை ஏழு வள்ளல் மலையமான் திருமுடிக்காரி என்பவர் மட்டும் முன்வந்தார்.

காரி அரசனின் மகன்கள் சோழிய ஏனாதித் திருக்கண்ணன், தேர்வன் மலையன் என்னும் அண்ணன் தம்பிகள், அங்கவை சங்கவை இருவரையும் மணந்தனர்.

 

வேள்பாரி pdf download

PDF | eBook

கடையெழு வள்ளல்கள்

கடையெழு வள்ளல்கள் பற்றி படிக்க

 

 

Related Post

- 4

காளையார்கோவில் அருகே 2,000-ம் ஆண்டுகளுக்கு முந்தைய கருப்பு, சிவப்பு மண் பாத்திரம் கண்டுபிடிப்பு  

Posted by - ஆகஸ்ட் 7, 2020 0
  காளையார்கோவில் அருகே 2,000-ம் ஆண்டுகளுக்கு முந்தைய கருப்பு, சிவப்பு மண் பாத்திரம் கண்டுபிடிப்பு சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே நல்லேந்தலில் கிடைத்த கருப்பு, சிவப்பு மண்…
தமிழ் கல்வெட்டுகள்

கல்வெட்டு அமைப்புகள்

Posted by - அக்டோபர் 30, 2020 0
கல்வெட்டு அமைப்பு முனைவர் மா.பவானி உதவிப் பேராசிரியர்: கல்வெட்டியல் துறை கல்வெட்டின் அமைப்பினைக் கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம். 1. முகப்புரை (Preamble) 2. குறிப்புரை (Notification) 3. முடிவுரை…
- 8

சங்க கால காதல் மற்றும் களவு – அகத்திணை

Posted by - ஏப்ரல் 19, 2019 3
களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாரு தம் காதலை மறைத்து பழகுதல் மற்றும் உறவுகொள்லுதல் ஆகும். பெரும்பாலும் அகத்திணையில் களவு பற்றியே அதிகம்...
- 10

கீழடி அருங்காட்சியகத்துக்கு மார்ச் மாதத்தில் அடிக்கல்: அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

Posted by - ஆகஸ்ட் 7, 2020 0
  கீழடி அருங்காட்சியகத்துக்கு மார்ச் மாதத்தில் அடிக்கல்: அமைச்சர் பாண்டியராஜன் தகவல் அமைச்சர் பாண்டியராஜன்: கோப்புப்படம் கீழடி அருங்காட்சியகத்திற்கு மார்ச் மாதத்தில் அடிக்கல் நாட்டப்படும் என, தமிழ்…

கீழடி அகழ்வாராய்ச்சி: தமிழர்களின் தொன்மையான வரலாற்றை இருட்டடிப்பு செய்ய நினைக்கும் கூட்டம்

Posted by - ஏப்ரல் 14, 2020 0
  கீழடி அகழ்வாராய்ச்சி: தமிழர்களின் தொன்மையான வரலாற்றை இருட்டடிப்பு செய்ய நினைக்கும் கூட்டம்; வைகோ கண்டனம் கீழடி அகழ்வாராய்ச்சி ஆய்வு அறிக்கையை அந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட தொல்லியல்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. Slot Online
  2. rtp yang tepat
  3. Slot Gacor
  4. Situs Judi Slot Online Gacor
  5. Situs Judi Slot Online
  6. Situs Slot Gacor 2023 Terpercaya
  7. SLOT88
  8. Situs Judi Slot Online Gampang Menang
  9. Judi Slot Online Jackpot Terbesar
  10. Slot Gacor 88
  11. rtp Slot Terpercaya
  12. Situs Judi Slot Online Terbaru 2023
  13. Situs Judi Slot Online Terpercaya 2023 Mudah Menang
  14. Daftar Situs Judi Slot Online Gacor Terbaik
  15. Slot Deposit Pulsa Tanpa Potongan
  16. Situs Judi Slot Online Resmi
  17. Slot dana gacor
  18. Situs Slot Gacor 2023
  19. rtp slot yang tepat
  20. slot gacor yang tepat
  21. slot dana
  22. harum4d slot