கடவுள் வாழ்த்து | புறநானூறு 1

புறநானூறு

கடவுள் வாழ்த்து

 

புறநானூறு கடவுள் வாழ்த்து பாடியவர்: 

பாரதம் பாடிய பெருந்தேவனார்.

புறநானூறு கடவுள் வாழ்த்து பாடிய இவர் பாரதத்தையும் தமிழில் பாடியதால் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்று அழைக்கப்பட்டார். இவர் இயற்பெயர் பெருந்தேவனார்.

இவர் எட்டுத்தொகை நூல்களில் அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை மற்றும் ஐங்குறுநூறு ஆகிய ஐந்து நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து எழுதிச் சேர்த்தவர்.

பாடப்பட்டோன்: 

சிவபெருமான்.

முக்கண் செல்வர் நகர் வலஞ்செயற்கே இறைஞ்சுக” என்று 6-ஆம் பாடலிலும்,

மூவெயில் உடற்றிப் பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த கறை மிடற்று அண்ணல்” என்று 55-ஆம் பாடலிலும்,

நீலமணி மிடற்று ஒருவன்” என்று 91 -ஆம் பாடலிலும், சிவபெருமானைப்பற்றி புறநானூற்றுப் புலவர்கள் பாடி இருப்பதிலிருந்து அக்காலத்து சிவ வழிபாடு இருந்ததாகவும் சிவனுக்குக் கோயில்கள் இருந்ததாகவும் தெரிகிறது.

புறநானூறு கடவுள் வாழ்த்து பாடலின் பின்னணி

 

எட்டுத்தொகை நூல்கள் பலரால் பல காலங்களில் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பாகையால் அந்நூல்களில் கடவுள் வாழ்த்து என்று ஒருபாடல் இருக்க வாய்ப்பில்லை.

அந்நூல்கள் தொகுக்கப்பட்ட காலத்தில், நூல்களுக்குக் கடவுள் வாழ்த்து முதற் பாடலாக அமைய வேண்டும் என்ற கருத்து பின்னர் நிலவியதால் பாரதம் பாடிய பெருந்தேவனார் இப்பாடலை எழுதிச் சேர்த்ததாகக் கருதப்படுகிறது.

புறநானூறு கடவுள் வாழ்த்து

 

கண்ணி கார்நறுங் கொன்றை, காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை;
ஊர்தி வால்வெள் ஏறே, சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்ஏறு என்ப;
5 கறைமிடறு அணியலும் அணிந்தன்று, அக்கறை

மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று, அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறைநுதல் வண்ணம் ஆகின்று, அப்பிறை
10 பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;

எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய
நீரறவு அறியாக் கரகத்துத்
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.

அருஞ்சொற்பொருள்:

 1. கண்ணி = தலையில் சூடப்படும் மாலை; கார் = கார் காலம்; நறுமை = மணம்; கொன்றை = கொன்றை மலர்; காமர் = அழகு.
 2. தார் = மாலை.
 3. ஊர்தி = வாகனம்; வால் = தூய; ஏறு = எருது.
 4. சீர் = அழகு; கெழு = பொருந்து.
 5. மிடறு = கழுத்து. அந்தணர் = சான்றோன்
 6. நவிலுதல் = கற்றல்; நுவலுதல் = போற்றுதல்.
 7. திறன் = கூறுபாடு.
 8. கரக்கல் = மறைத்தல்.
 9. வண்ணம் = அழகு.
 10. ஏத்துதல் = புகழ்தல்.
 11. ஏமம் = காவல்.
 12. அறவு = அழிதல், குறைதல்; கரகம் = கமண்டலம்.
 13. பொலிந்த = சிறந்த; அருந்தவத்தோன் = அரிய தவம் செய்பவன் (இறைவன்).

புறநானூறு கடவுள் வாழ்த்து விளக்கம்

எல்லா உயிகளுக்கும் பாதுகாப்பான நீர் வற்றாத கமண்டலத்தையும் தாழ்ந்த சடையையும் சிறந்த செய்தற்கரிய தவத்தையுமுடைய சிவபெருமான் தலையில் அணிந்திருக்கும் மாலை கார்காலத்து மலரும் மணமுள்ள கொன்றை மலர்களால் புனையப்பட்டது.

அவன் தன்னுடைய அழகிய நிறமுள்ள மார்பில் அணிந்திருப்பதும் கொன்றை மலர் மாலையே. அவன் ஏறிச் செல்லும் வாகனம் தூய வெண்ணிறமுள்ள காளை; அவனுடைய கொடியும் காளைக்கொடிதான்.

நஞ்சினது கருமை நிறம் சிவனது கழுத்தில் கறையாக இருந்து அழகு செய்கிறது. அந்தக் கறை, சான்றோர்களால் போற்றப் படுகிறது.

சிவனின் ஒருபக்கம் பெண்ணுருவம் உடையது. அப்பெண்ணுருவைத் தன்னுள் அடக்கி மறைத்துக் கொள்வதும் உண்டு. சிவபெருமான் நெற்றியில் அணிந்துள்ள பிறைநிலா அவன் நெற்றிக்கு அழகு செய்கிறது. அப்பிறை பதினெட்டுக் கணங்களாலும் புகழவும் படும்.

பதினெட்டுக் கணங்கள்: 

தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், வித்தியாதரர், நாகர், பூதம், வேதாளம், தாரகணம், ஆகாசவாசி, போகபூமியர்

எனப் பதினெண் திறத்தாரும் பதினெண்கணங்கள் என்று புறநானூற்றுப் பழைய உரையாசிரியர் குறிப்பிடுகிறார்.

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

உங்கள் கருத்தை இடுக...

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

Logo
Register New Account
Reset Password
%d bloggers like this: