புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 10. குற்றமும் தண்டனையும்!

1981 0

புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்

புறம்
10. குற்றமும் தண்டனையும்!

பாடியோர்: ஊன்பொதி பசுங்குடையார் (10, 203, 370, 378). இப்புலவரின் இயற்பெயர் தெரியவில்லை. பனையோலையால் குடை போல் செய்து அதை உணவு உண்பதற்கும், பூப்பறிப்பதற்கும் பழங்காலத்தில் மக்கள் பயன்படுத்தினர். பனையோலையில் ஊன் கொண்டு செல்வதை இவர் “ ஊன்பொதி பசுங்குடை” என்று பாடியதால் இவருக்கு இப்பெயர் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பாடப்பட்டோன்: சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி(10, 203, 370, 378). நெய்தலங்கானல் என்பது இச்சோழன் பிறந்த ஊராகும். இவன் தென்னாட்டுப் பரதவரையும் வடநாட்டு வடுகரையும் வென்று புகழ் கொண்டவன். இவன் பாமுளூர் என்னுமிடத்தும் செருப்பாழி என்னுமிடத்தும் பகைவரை வென்றதால் முறையே பாமுளூர் எறிந்த இளஞ்சேட் சென்னி என்றும் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி என்றும் அழைக்கப்பட்டான். நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி, பாமுளூர் எறிந்த இளஞ்சேட் சென்னி, செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி ஆகியோர் ஒருவர் அல்ல; அவர் வேறு வேறு மன்னர்கள் என்று கூறுவாரும் உளர்.

பாட்டின் காரணம்: இப்பாடலில் ஊன்பொதி பசுங்குடையார் சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியின் குணநலன்களைப் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

வழிபடு வோரை வல்லறி தீயே;
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே;
நீமெய் கண்ட தீமை காணின்
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;
5 வந்து, அடி பொருந்தி முந்தை நிற்பின்
தண்டமும் தணிதிநீ பண்டையிற் பெரிதே;
அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர்
10 மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப;
செய்து இரங்காவினைச் சேண்விளங் கும்புகழ்
நெய்தலங் கானல் நெடியோய்!
எய்த வந்தனம்யாம் ஏத்துகம் பலவே.

அருஞ்சொற்பொருள்:
1. வல் = விரைவு. 2. தேறல் = தெளிதல். 4. ஒறுத்தல் = தண்டித்தல். 7. அடுதல் = சமைத்தல்; ஆனாமை = தணியாமை; கமழ்தல் = மணத்தல்; குய் = தாளிதம்; அடிசில் = சோறு, உணவு. 8. வரை = அளவு, வரையா = குறையாத, அளவில்லாத; வசை = பழி. 9. மலைத்தல் = போர்செய்தல், விரோதித்தல்; மள்ளர் = வலிமையுடையவர். 10. சிலை = வானவில்; தார் = மாலை. 11. இரங்கல் = உள்ளம் உருகுதல் (வருந்துதல்); சேண் = தூரம். 12. நெடியோன் = பெரியோன். 13. எய்துதல் = அணுகுதல், அடைதல்; ஏத்துதல் = புகழ்தல்.

கொண்டு கூட்டு: விளங்கும்புகழ் நெய்தலங்கானல் நெடியோய், மார்ப, நீ வல்லறிதி, மொழிதேறலை, தகவொறுத்தி, தண்டமும் தணிதி, ஏத்துவோமாக, எய்த வந்தனம் எனக் கூட்டுக.

பாடல் விளக்கம்: உன்னை வழிபடுவோரை நீ விரைவில் அறிவாய். பிறர்மீது குற்றம் கூறுவோர் சொல்லை நீ ஏற்றுக் கொள்ள மாட்டாய். உண்மையிலே ஒருவன் செய்தது தவறு (தீமை) என்று நீ கண்டால் நீதி நூலுக்கு ஏற்ப ஆராய்ந்து தகுந்த முறையில் அவனைத் தண்டிப்பாய். தவறு செய்தவர்கள், உன் முன்னர் வந்து அடிபணிந்து நின்றால் நீ முன்பு அளித்த தண்டனையைப் பெரிதும் குறைப்பாய். அமிழ்தத்தைச் சேர்த்துச் சமைத்தது போல் உண்ணத் தெவிட்டாத மணம் கமழும் தாளிதத்தோடு கூடிய உணவை வருவோர்க்கு குறைவின்றி வழங்கும் பழியற்ற இல்வாழ்க்கை நடத்தும் உன் மகளிர் ஊடல் செய்வதன்றி, பகை வேந்தர் உன்னோடு போர் செய்வதில்லை. வானவில் போன்ற மாலையை அணிந்த மார்பையுடையவனே! வருந்தத்தக்க செயலைச் செய்யாத தன்மையும், பரந்த புகழும் உடையவனே! நெய்தலங்கானம் என்னும் ஊரைச் சார்ந்த பெரியோனே! யாம் உன்னை அணுகி வந்தோம். உன்னைப் பலவாறாகப் புகழ்கிறோம்.

Related Post

புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்- 88. எவருஞ் சொல்லாதீர்!

Posted by - ஏப்ரல் 13, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 88. எவருஞ் சொல்லாதீர்! பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 – இல் காணலாம். பாடப்பட்டோன்: அதியமான்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்- 95. புதியதும் உடைந்ததும்!

Posted by - ஏப்ரல் 13, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 95. புதியதும் உடைந்ததும்! பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 – இல் காணலாம்.பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 36. நீயே அறிந்து செய்க!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 36. நீயே அறிந்து செய்க! பாடல் ஆசிரியர்: ஆலத்தூர் கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-இல் காண்க.பாடப்பட்டோன்: சோழன்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்- 74. வேந்தனின் உள்ளம்

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 74. வேந்தனின் உள்ளம் பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை. இம்மன்னன் இரும்பொறை மரபைச் சார்ந்தவன். கணைய மரத்தைப் போன்ற வலிய…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 37. புறவும் போரும்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 37. புறவும் போரும்! பாடல் ஆசிரியர்: மாறோக்கத்து நப்பசலையார் (37, 39, 126, 174, 226, 280, 383). இவர்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன