புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 17. யானையும் வேந்தனும்!

1347 0

புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்

புறம்
17. யானையும் வேந்தனும்!

பாடல் ஆசிரியர்: குறுங்கோழியூர் கிழார் (17, 20, 22). கோழி அல்லது கோழியூர் என்பது உறையூருக்கு மற்றொரு பெயர். குறுங்கோழியூர் என்பது உறையூரைச் சர்ந்த ஒருபகுதியாக இருந்திருக்கலாம். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல்கள் மூன்று. இம்மூன்று பாடல்களும் சேரமான் யனைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற சேர அரசனைப் பற்றியவையாகும்.
பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை (17, 20, 22). பதிற்றுப்பத்து என்னும் எட்டுத்தொகை நூலில் பல சேர மன்னர்கள்ளின் வரலாறு காணப்படுகிறது. அந்நூலில் கூறப்படாத இரும்பொறை மரபைச் சார்ந்த மன்னர்களுள் இவன் ஒருவன். மற்றொருவன் கணைக்கால் இரும்பொறை என்பவன்.

இவனது இயற்பெயர் சேய். யானையினது நோக்குப் போலும் நோக்கினையுடையவன் என்பது குறித்து இவன் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்று அழைக்கப்பட்டான். “யானைக்கண்” என்பதற்கு மற்றொரு விளக்கமும் கூறப்படுகிறது. முருகப்பெருமான் சூரனை வெல்லப் பிணிமுகம் என்னும் யானைமீது அமர்ந்து சென்றது போல் இவன் யானைமீது ஏறிச் சென்றதை ஒப்பிட்டு “யானைக்கட் சேய்“ என்ற பெயர் வந்திருக்கலாம் என்பது ஒருசாரார் கருத்து.

ஒருசமயம், இச்சேரமன்னனுக்கும் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் இடையே போர் மூண்டது. அப்போரில், சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்ச் சேரல் இரும்பொறை பாண்டியனிடம் தோல்வியுற்று சிறையில் அடைக்கப்பட்டான். பின்னர், தன் வலிமையால் சிறைக் காவலரை வென்று தப்பிச் சென்று தன் நாட்டை மீண்டும் ஆட்சி செய்தான்.

இச்சேரமான் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான ஐங்குறுநூறு என்னும் நூலைத் தொக்குப்பித்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு பாடப்பட்ட சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை தொண்டி என்னும் ஊரைத் தலநகராகக்கொண்டு கி. பி. 200 – 225 காலக்கட்டத்தில் ஆட்சி புரிந்ததாக வரலாறு கூறுகிறது (சுப்பிரமனியன், பக்கம் 45).
பாட்டின் காரணம்: சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் சிறையிலிருந்து தப்பிச் சென்றதை இப்பாடலில் குறுங்கோழியூர் கிழார் புகழ்ந்து பாடுகிறார். அவன் சிறையிலிருந்து தப்பிச் சென்றதை, குழியில் அகப்பட்ட யானை, தன் வலிமையால் குழியைத் தூர்த்து வெளியேறிச் சென்று தன் இனத்தோடு வாழ்ந்ததற்கு ஒப்பிடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

தென்குமரி, வடபெருங்கல்,
குணகுட கட லாஎல்லை,
குன்று,மலை, காடு,நாடு
ஒன்றுபட்டு வழிமொழியக்
5 கொடிதுகடிந்து, கோல்திருத்திப்
படுவதுஉண்டு, பகல்ஆற்றி,
இனிதுஉருண்ட சுடர்நேமி
முழுதுஆண்டோர் வழிகாவல!
குலைஇறைஞ்சிய கோள்தாழை
10 அகல்வயல் மலைவேலி
நிலவுமணல் வியன்கானல்
தெண்கழிமிசைச் சுடர்ப்பூவின்
தண்தொண்டியோர் அடுபொருந!
மாப்பயம்பின் பொறைபோற்றாது
15 நீடுகுழி அகப்பட்ட
பீடுஉடைய எறுழ்முன்பின்
கோடுமுற்றிய கொல்களிறு
நிலைகலங்கக் குழிகொன்று
கிளைபுகலத் தலைக்கூடியாங்கு
20 நீபட்ட அருமுன்பின்
பெருந்தளர்ச்சி பலர்உவப்பப்
பிறிதுசென்று மலர்தாயத்துப்
பலர்நாப்பண் மீக்கூறலின்
உண்டாகிய உயர்மண்ணும்
25 சென்றுபட்ட விழுக்கலனும்
பெறல்கூடும் இவன்நெஞ்சு உறப்பெறின் எனவும்,
ஏந்துகொடி இறைப்புரிசை
வீங்குசிறை வியல்அருப்பம்
இழந்துவைகுதும் இனிநாம்இவன்
30 உடன்றுநோக்கினன் பெரிதுஎனவும்
வேற்றுஅரசு பணிதொடங்குநின்
ஆற்றலொடு புகழ்ஏத்திக்
காண்கு வந்திசின் பெரும! ஈண்டிய
மழையென மருளும் பல்தோல் மலையெனத்
35 தேன்இறை கொள்ளும் இரும்பல் யானை
உடலுநர் உட்க வீங்கிக் கடலென
வான்நீர்க்கு ஊக்கும் தானை ஆனாது
கடுஒடுங்கு எயிற்ற அரவுத்தலை பனிப்ப
இடியென முழங்கு முரசின்
40 வரையா ஈகைக் குடவர் கோவே!

அருஞ்சொற்பொருள்:
2. குணக்கு = கிழக்கு; குடக்கு = மேற்கு. 4. வழிமொழிதல் = வழிபாடு கூறுதல். 5. கோல் = அரசாட்சி. 6. படுவது = உரியது, அனுபவிப்பது; பகல் = நடுநிலை. 7. நேமி = சக்கரம். 8. வழி = மரபு. 9. இறைஞ்சுதல் = தாழ்தல்; கோள் = கொள்ளத்தக்க; தாழை = தென்னை. 11. கானல் = கடற்கரை, காடு. 12. தெண் = தெளிந்த; கழி = கடலையடுத்த உப்பங்கழி; மிசை = மேல். 13. தொண்டி = தொண்டி என்னும் ஊர்; அடுதல் = வெல்லுதல்; பொருநன் = அரசன். 14. மா = பெரிய; பயம்பு = பள்ளம்; பொறை= பூமி. 16.எறுழ் = வலிமை; முன்பு = வலிமை. 17. கோடு = கொம்பு. 18. நிலைகலங்க = நிலை சரிய; கொன்று = அழித்து. 19. கிளை = உறவு; புகலுதல் = விரும்புதல்; தலைக்கூடுதல் = நிறைவேற்றுதல் (சேர்தல்). 20. அரு = காணமுடியாத (பொறுத்தற்கரிய). 22. பிறிது = வேறு; மலர்தல் = விரிதல்; தாயம் = சுற்றம். 23. நாப்பண் = நடுவே. 24. உண்டு = தன்னிடத்தே இருந்த; உயர்மண் = உயர்ந்த நிலம். 26. உறல் = அணைதல், சார்தல், புணர்தல். 27. ஏந்தல் = உயர்ச்சி; இறை = உயர்ச்சி, தங்குதல்; புரிசை = மதில். 28. வீங்கு = மிக்க; சிறை = காவல்; வியல் = அகலம்; அருப்பம் = அரண், மதில். 29. வைகுதல் = இருத்தல். 30. உடன்று = வெகுண்டு. 33. ஈண்டுதல் = திரளுதல். 34. தோல் = கேடயம். 35. தேன் = வண்டு; இறை = தங்குதல்; இரு = பெரிய. 36. உடலுநர் = பகைவர் (உடலுதல் = சினத்தொடு பொருதல்); உட்குதல் = அஞ்சுதல். 37. வான் = மேகம்; ஊக்கும் = முயலும்; ஆனாது = அமையாது. 38. கடு = நஞ்சு; ஒடுங்குதல் = பதுங்கல், தங்குதல்; எயிறு = பல்; அரவு = பாம்பு. பனி = நடுக்கம். 40. வரையா = அளவில்லாத (குறையாத); குடவர் = குட நாட்டவர்.

கொண்டு கூட்டு: காவல், பெரும, கோவே, ஏத்திக் காண்கு வந்திசின் எனக் கூட்டுக.

பாடல் விளக்கம்: தெற்கே குமரியும், வடக்கே இமயமும், கிழக்கிலும் மேற்கிலும் கடலை எல்லையாகக்கொண்டு குன்று, மலை, காடு, நாடு ஆகியவற்றில் வாழ்வோர் ஒருங்கே வழிபாடு செய்ய, கொடுமைகளை நீக்கி, செங்கோல் செலுத்தி, உரிய வரியைத் திரட்டி நடுவு நிலைமையோடு உலகம் (தமிழ் நாடு) முழுவதையும் இனிமையாக நல்லாட்சி புரிந்தவர்களின் வழித்தோன்றலே!

குலைகள் தாழ்ந்து பறிப்பதற்கு ஏற்றதாக உள்ள தென்னை மரங்களையும், அகன்ற வயல்களையும், மலையையே வேலியாக உள்ள இடங்களையும், நிலவு போன்ற மணல் நிறைந்த கடற்கரையையும், தெள்ளிய கழியிடத்து நெருப்புப்போல் பூத்த சிவந்த ஒளிவிடும் பூக்களையும் உடைய குளிர்ந்த தொண்டி என்னும் ஊரில் வாழ்வோரின் வெற்றி வேந்தனே!

பெரிய குழியான இடம் இருப்பதை அறியாது, அந்த நெடிய குழியில் வீழ்ந்த, செருக்கும், மிகுந்த வலிமையும் உடைய, தந்தங்கள் முதிர்ந்த யானை அக்குழியைத் தூர்த்துத் தன்னை விரும்பும் சுற்றத்தோடு சென்று வாழ்ந்ததைப்போல் உன் அரிய வலிமையால் பகைவரிடம் நீ அடைந்த தளர்ச்சியினின்று நீங்கி, மீண்டும் அகன்ற உன் நாட்டிற்குச் சென்றது உன் சுற்றத்தார் நடுவே புகழ்ந்து பேசப்படுகிறது. நீ பாண்டியனால் தோற்கடிக்கப்பட்டு சிறையிலடைக்கப்படுவதற்கு முன்பு, உன்னால் தோற்கடிக்கப்பட்ட உன் பகைவர்கள், “இவன் மனமுவந்தால் நாம் இழந்த நம் நாட்டையும் இவனால் கொள்ளப்பட்ட அணிகலன்களையும் திரும்பப்பெறக்கூடும்” என்று எண்ணினார்கள். மற்றும், உன் வரவை எதிர்பாராத பகைவர்கள், தாங்கள் கவர்ந்து கொண்ட கொடி பறக்கும் உயர்ந்த மதில், மிகுந்த காடுகள், அகழி முதலியவைகளைக் காவலாக உடைய அரண்களை இழந்து வருந்த நேரிடும் என்று எண்ணினார்கள். இவ்வாறு எண்ணிய உன் பகைவர்கள் உனக்குப் பணிபுரிவதற்குக் காரணமாகிய உன் புகழை வாழ்த்தி உன்னைக் காண வந்தேன்.

உன் வீரர்கள் ஏந்தியிருக்கும் கேடயங்கள் திரண்ட மேகங்களைப்போல் காட்சி அளிக்கின்றன. உன் யானைகளைப் பெரிய மலை என்று எண்ணி தேனீக்களின் கூட்டம் அவைகளிடம் வந்து தங்குகின்றன. பகைவர்கள் அஞ்சும் உன் படையைக் கடலென்று கருதி மேகங்கள் நீர் கொள்ள முயலுகின்றன. இத்துணை வலிமையும் பெருமையும் உடைய படைகள் மட்டுமல்லாமல், பல்லில் நஞ்சுடைய பாம்பு நடுங்குமாறு இடிபோல் முழங்கும் முரசும் உடையவனே! குறையாத கொடையுடைய குடநாட்டின் அரசே!

Related Post

புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 43. பிறப்பும் சிறப்பும்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 43. பிறப்பும் சிறப்பும்! பாடல் ஆசிரியர்: தாமற்பல் கண்ணனார் (43). இவர் காஞ்சிபுரத்திற்கு அருகே உள்ள தாமல் என்ற ஊரைச்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 11. பெற்றனர்! பெற்றிலேன்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 11. பெற்றனர்! பெற்றிலேன்! பாடல் ஆசிரியர்: பேய்மகள் இளவெயினியார் (11). இவர் பேயுருவத்தோடு நின்று பாலை பாடிய சேரமான் பெருங்கடுங்கோவைப்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 29. நண்பின் பண்பினன் ஆகுக!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 29. நண்பின் பண்பினன் ஆகுக! பாடல் ஆசிரியர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 27-இல் காண்க.பாடப்பட்டோன்:…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 73. உயிரும் தருகுவன்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் – 73. உயிரும் தருகுவன்! பாடியவர்: சோழன் நலங்கிள்ளி; ‘நல்லுருத்திரன் பாட்டு’ எனவும் பாடம். சோழன் நலங்கிள்ளிக்கும் அவன் உறவினன் சோழன்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 28. போற்றாமையும் ஆற்றாமையும்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 28. போற்றாமையும் ஆற்றாமையும்! பாடல் ஆசிரியர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 27-இல் காண்க.பாடப்பட்டோன்: சோழன்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

 1. Slot Online
 2. rtp yang tepat
 3. Slot Gacor
 4. Situs Judi Slot Online Gacor
 5. Situs Judi Slot Online
 6. Situs Slot Gacor 2023 Terpercaya
 7. SLOT88
 8. Situs Judi Slot Online Gampang Menang
 9. Judi Slot Online Jackpot Terbesar
 10. Slot Gacor 88
 11. rtp Slot Terpercaya
 12. Situs Judi Slot Online Terbaru 2023
 13. Situs Judi Slot Online Terpercaya 2023 Mudah Menang
 14. Daftar Situs Judi Slot Online Gacor Terbaik
 15. Slot Deposit Pulsa Tanpa Potongan
 16. Situs Judi Slot Online Resmi
 17. Slot dana gacor
 18. Situs Slot Gacor 2023
 19. rtp slot yang tepat
 20. slot gacor yang tepat
 21. slot dana
 22. harum4d slot