புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 22. ஈகையும் நாவும்!

1013 0

புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்

புறம்
22. ஈகையும் நாவும்!

பாடல் ஆசிரியர்: குறுங்கோழியூர் கிழார். இவரை பற்றிய குறிப்புகளைப் பாடல் 17 – இல் காண்க.
பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 17-இல் காண்க.
பாட்டின் காரணம்: ”சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை சோம்பல் இல்லாதவன்; அவன் நாடு தேவருலகத்தைப் போன்றது; அவன் படை வலிமை மிகுந்தவன்; பிற வேந்தர்கள் அளிக்கும் திறையைக்கொண்டு தன்னிடம் பரிசு பெற வந்தவர்களை ஆதரிப்பவன்; அவனைப் பாடல் ஆசிரியர்கள் மற்றவர்களைப் பாட வேண்டிய தேவையில்லாத அளவிற்குப் பரிசு அளிப்பவன்” என்று பலவாறாகக் குறுங்கோழியூர் கிழார் சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையை இப்பாடலில் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

தூங்குகையான் ஓங்குநடைய
உறழ்மணியான் உயர்மருப்பின
பிறைநுதலான் செறல்நோக்கின
பாவடியால் பணைஎருத்தின
5 தேன்சிதைந்த வரைபோல
மிஞிறுஆர்க்கும் கமழ்கடாஅத்து
அயறுசோரும் இருஞ்சென்னிய
மைந்துமலிந்த மழகளிறு
கந்துசேர்பு நிலைஇவழங்கப்
10 பாஅல்நின்று கதிர்சோரும்
வானஉறையும் மதிபோலும்
மாலைவெண் குடைநீழலான்
வாள்மருங்கிலோர் காப்புஉறங்க,
அலங்குசெந்நெல் கதிர்வேய்ந்த
15 ஆய்கரும்பின் கொடிக்கூரை
சாறுகொண்ட களம்போல
வேறுவேறு பொலிவுதோன்றக்
குற்றானா உலக்கையால்
கலிச்சும்மை வியல்ஆங்கண்
20 பொலம்தோட்டுப் பைந்தும்பை
மிசைஅலங்கு உளைய பனைப்போழ் செரிஇச்
சினமாந்தர் வெறிக்குரவை
ஓதநீரில் பெயர்புபொங்க;
வாய்காவாது பரந்துபட்ட
25 வியன்பாசறைக் காப்பாள!
வேந்துதந்த பணிதிறையாற்
சேர்ந்தவர் கடும்புஆர்த்தும்
ஓங்குகொல்லியோர் அடு பொருந!
வேழ நோக்கின் விறல்வெம் சேஎய்!
30 வாழிய பெரும! நின் வரம்பில் படைப்பே
நிற்பாடிய அலங்குசெந்நாப்
பிறர்இசை நுவலாமை
ஒம்பாது ஈயும் ஆற்றல் எங்கோ!
மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே
35 புத்தேள் உலகத்து அற்றுஎனக் கேட்டுவந்து
இனிது கண்டிசின்; பெரும! முனிவிலை
வேறுபுலத்து இறுக்கும் தானையொடு
சோறுபட நடத்திநீ துஞ்சாய் மாறே.

அருஞ்சொற்பொருள்:
1. தூங்குதல் = அசைந்தாடுதல்; ஓங்கல் = உயர்ச்சி. 2.உறழ்தல் = மாறுபடுதல்; மருப்பு = கொம்பு. 3. செறல் = கோபித்தல். 4.பா = பரந்த; பணைத்தல் = பருத்தல்; எருத்து = கழுத்து. 5. சிதைதல் = சிதறுதல்; வரை = மலை. 6. மிஞிறு = தேனீ; ஆர்த்தல் = ஒலித்தல்; கமழ்தல் = மணத்தல்; கடாஅம் = மதம். 7. அயறு = புண்ணிலிருந்து வடியும் நீர்; சோர்தல் = விழுதல். 8.மைந்து = வலிமை; மலி = மிகுதி; மழ = இளமை. 9.கந்து = தூண், யானை கட்டும் தறி; சேர்பு = பொருந்தி. 10. சோர்தல் = விழுதல். 13. மருங்கு = பக்கம்; காப்பு = பாதுகாவல். 14. அலங்குதல் = அசைதல், ஒளி செய்தல். 15. ஆய் = மென்மை; கொடி = ஒழுங்கு. 16. சாறு = திருவிழா. 18. ஆனா = நீங்காத (அமையாத). 19. கலி = ஒலி, முழக்கம்; சும்மை = ஆரவாரம். 20. பொலம் = பொன், அழகு; தோடு = பூவிதழ்; மிசை = மேற்பக்கம். 21. அலங்குதல் = அசைதல்; உளை = தலை; பனைப்போழ் = பனந்தோடு. 23. ஓதம் = கடல்; பெயர்பு = கிளர்ந்து. 26. அயன் = அகன்ற. 27. கடும்பு = சுற்றம்; ஆர்த்துதல் = கொடுத்தல், நிறைவித்தல். 29. விறல் = வெற்றி; வெம்மை = விருப்பம். 30. படைப்பு = செல்வம். 32. நுவலுதல் = சொல்லுதல். 34. ஓம்புதல் = பாதுகாத்தல். 35. அற்று = அத்தன்மையது. 36. முனிவு = வெறுப்பு, கோபம். 38. படுத்தல் = செய்தல்; துஞ்சுதல் = சோம்புதல்

கொண்டு கூட்டு: காப்பாள, பொருந, சேஎய், பெரும, எங்கோ, பெரும, நீ துஞ்சாயாதலாற் சோறுபட நடத்தி; அதனால் இரும்பொறை ஓம்பிய நாடு புத்தேள் உலகத்து அற்றெனக் கேட்டு வந்து இனிது கண்டிசின்; நின் படைப்பு வாழிய எனக் கூட்டுக.

பாடல் விளக்கம்: அசையும் தும்பிக்கை, தலை நிமிர்ந்த நடை, மாறி மாறி ஒலிக்கும் மணிகள், உயர்ந்த கொம்புகள் (தந்தங்கள்), பிறை நிலா போன்ற நெற்றி, கோபம் மிகுந்த பார்வை, அகன்ற காலடிகள், பருத்த கழுத்து ஆகியவற்றுடன் வலிமை மிகுந்த இளம் யானை ஒன்று தான் கட்டப்பட்டிருக்கும் கம்பத்திலே நின்று அசைந்து கொண்டிருக்கிறது. அந்த யானையின் பெரிய தலையில் உள்ள புண்களிலிருந்து மணமுள்ள மதநீர் வடிகிறது. அந்த மதநீரை நுகர்வதற்கு, தேனீக்கள் யானையின் தலையில் ஒலியுடன் மொய்க்கின்றன, அந்த யானையின் தலை தேன்கூடு சிதைந்த மலைபோல் காட்சியளிக்கிறது. அந்த யானையின் பக்கத்தில், முத்து மாலைகளுடன் அலங்கரிக்கப்பட்டு, வானத்திலிருந்து ஒளிவிடும் திங்கள்போல் விளங்கும், வெண்கொற்றக் குடையின் பாதுகாவலில் வீரர்கள் வாள் அணியாமல் உறங்குகிறார்கள்.

அசையும் செந்நெல் கதிர்களால் வேயப்பட்டு, கரும்பால் ஒழுங்காகக் கட்டப்பட்ட கூரைவீடுகள் வேறுவேறு அழகுடன் விழாக்கோலம் பூண்டதுபோல் காட்சி அளிக்கின்றன. அங்கே, பெண்கள் உலக்கையால் குத்தும் ஒலி கேட்டுக்கொண்டே இருக்கிறது. மிகுந்த ஆரவாரமுடைய அகன்ற இடத்தில், பொன்னாலான இதழ்களையுடைய, பசுமையான தும்பை மலர்களுடன், அசையும் பனையோலைகளைச் செருகிக்கொண்டு சினத்தோடு வீரர்கள் குரவை ஆடுகிறார்கள். அவர்களின் குரவைக் கூத்தின் ஒலி கடல் ஒலிபோல் ஆரவாரமாக உள்ளது. உன்னுடைய பெரிய படையைக்கண்டு பகைவர்கள் அஞ்சுகிறார்கள். அகன்ற பாசறையையுடையவனே!

பகைமன்னர்கள் கொண்டுவந்து தந்த திறைப்பொருளால் உன்னை அடைந்தவர்களின் சுற்றத்தாரை நீ வாழச் செய்கிறாய். உயர்ந்த கொல்லிமலையினரின் வெற்றி மிகுந்த தலைவனே! யானையின் பார்வை போன்ற கூர்மையான பார்வையை உடையவனே! வெற்றியை விரும்பும் சேஎய் என்று அழைக்கப் படுவோனே! தலைவ, நீ வாழ்க.

உன் செல்வம் எல்லை இல்லாதது. உன்னப் பாடிய செவ்விய நாவால் பிறர் புகழைப் பாடவேண்டிய தேவை இல்லாதவாறு, குறையாது கொடுக்கும் ஆற்றல் மிகுந்த எம் அரசே!

மாந்தரஞ் சேரல் இரும்பொறையால் பாதுகாக்கப்படும் நாடு தேவருலகத்தைப் போன்றது என்று பிறர் சொல்லக் கேட்டு வந்தேன். என் கண்ணுக்கு இனிமையாக உன்னைக் கண்டேன். தலைவ! நீ சோம்பல் இல்லாதவன்; முயற்சியில் வெறுப்பில்லாமல், வேற்று நாட்டில் சென்று தங்கும் படையுடன், உன் நாட்டில் வளம் பெருகுமாறு ஆட்சி செய்வாயாக.

Related Post

புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 7. வளநாடும் வற்றிவிடும்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 7. வளநாடும் வற்றிவிடும்! பாடல் ஆசிரியர்: கருங்குழல் ஆதனார் (7, 224). ஆதனார் என்பது இப்புலவரின் இயற்பெயர். இவர் முதியவராக…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 35. உழுபடையும் பொருபடையும்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 35. உழுபடையும் பொருபடையும்! பாடல் ஆசிரியர்: வெள்ளைக்குடி நாகனார் (35). இப்புலவர், புறநானூற்றில் இச்செய்யுளையும் நற்றிணையில் இரண்டு (158, 196)…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 39. புகழினும் சிறந்த சிறப்பு!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 39. புகழினும் சிறந்த சிறப்பு! பாடல் ஆசிரியர்: மாறோக்கத்து நப்பசலையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 37-இல் காண்க.பாடப்பட்டோன்: சோழன்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 46. அருளும் பகையும்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 46. அருளும் பகையும்! பாடல் ஆசிரியர்: கோவூர் கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 31-இல் காண்க.பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 28. போற்றாமையும் ஆற்றாமையும்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 28. போற்றாமையும் ஆற்றாமையும்! பாடல் ஆசிரியர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 27-இல் காண்க.பாடப்பட்டோன்: சோழன்…

உங்கள் கருத்தை இடுக...