புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 25. கூந்தலும் வேலும்!

832 0

புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்

புறம்
25. கூந்தலும் வேலும்!

பாடல் ஆசிரியர்: கல்லாடனார். இவரை பற்றிய குறிப்புகளைப் பாடல் 23-இல் காண்க.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். இவனைப் பற்றிய குறிப்புகளை பாடல் 18-இல் காண்க.
பாட்டின் காரணம்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனோடு போரிட்டுத் தோல்வியுற்ற சேரனும் சோழனும் இறந்தனர்; அவர்களின் படைவீரர்கள் பலரும் இறந்தனர். இறந்தவர்களின் மனைவியர் தம் கூந்தலைக் கொய்து கைம்மை நோன்பை மேற்கொள்ளும் அவலக் காட்சியைக் கண்டதும் நெடுஞ்செழியன் போரை நிறுத்தியதாக இப்பாடலில் கல்லாடனார் கூறுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல
ஈண்டுசெலல் மரபின் தன் இயல் வழாஅது
உரவுச்சினம் திருகிய உருகெழு ஞாயிறு
நிலவுத்திகழ் மதியமொடு நிலஞ்சேர்ந் தாஅங்கு
5 உடலருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை
அணங்கரும் பறந்தலை உணங்கப் பண்ணிப்,
பிணியுறு முரசம் கொண்ட காலை
நிலைதிரிபு எறியத் திண்மடை கலங்கிச்
சிதைதல் உய்ந்தன்றோ நின்வேல்; செழிய!
10 முலைபொலி அகம் உருப்ப நூறி,
மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல்,
ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர,
அவிர்அறல் கடுக்கும் அம்மென்
குவைஇரும் கூந்தல் கொய்தல் கண்டே.

அருஞ்சொற்பொருள்:
1.விசும்பு = ஆகாயம்; பாய்தல் = பரவுதல். 2. ஈண்டு = விரைவு. 3. உரவு = வலி; திருகிய = வளைந்த, முறுகிய; உரு = அச்சம். 5. உடலுதல் = பொருதல்; துப்பு = வலி; ஒன்றுமொழிதல் = வஞ்சினம் கூறுதல். 6. அணங்கு = வருத்தம்; பறந்தலை = போர்க்களம்; உணங்கல் = துன்பப்படல். 8. திரிபு = வேறுபாடு; எறிதல் = நீக்கல், வெல்லுதல்; திண் = வலி; மடை = ஆயுத மூட்டு. 9. சிதைதல் = கெடுதல், அழிதல். 10. ஆகம் = மார்பு, நெஞ்சு; உருத்தல் = வெப்புமுறச் செய்தல்; நூறுதல் = அழித்தல், நசுக்குதல், இடித்தல். 11. படுத்தல் = செய்தல்; பூசல் = பெரிதொலித்தல். 12. கூர்த்தல் = மிகுத்தல்; கூர் = மிகுதி. 13. அவிர்தல் = விளங்கல்; அறல் = கருமணல்; கடுக்கும் = ஒக்கும். 14. குவை = திரட்சி; இரு = கரிய; கொய்தல் = அறுத்தல்.

கொண்டு கூட்டு: செழிய, மகளிர் கூந்தல் கொய்தல் கண்டு, நின் வேல் சிதைதல் உய்ந்தது எனக் கூட்டுக.

பாடல் விளக்கம்: விண்மீன்கள் திகழும் ஆகாயத்தில் பரவிய இருள் அகல, விரைந்து செல்லும் தன்மையிலிருந்து தவறாது, வலிய, வெப்பம் மிகுந்த, அச்சம் பொருந்திய கதிரவனும், நிலாவொளியைத் தரும் திங்களும் வந்து நிலத்தில் சேர்ந்தாற்போல விளங்கி, வஞ்சினம் கூறிய, வலிமையுடைய இரு வேந்தர்களும் (சேரனும் சோழனும்) அழியுமாறு நீ போர் செய்தாய்; அவ்விருவரையும் கொடிய போர்க்களத்தில் நிலைகலங்கச் செய்தாய்; அவர்களிடமிருந்து, வாரால் பிணிக்கப்பட்ட போர்முரசுகளைக் கைப்பற்றினாய்; நின்ற நிலையிலே நின்று, உன்னைச் சூழ்ந்த பகைவர்களின் வீரர்களைப் பிடித்துத் தூக்கியெறிந்தாய். செழியனே! போரில் கணவனை இழந்த மகளிர், கருமணல் போன்று விளங்கும் தம் கூந்தலை அறுத்துக்கொண்டு, துயரத்துடன் தம் முலைகள் பொலிந்த மார்பகங்களை வெப்பம் உண்டாகுமாறு அடித்துக்கொண்டார்கள். அதைக் கண்டதும் நீ போரை நிறுத்தியதால், உன் வேல்கள் தொடர்ந்து பகைவர்ளைத் தாக்கப் பயன்படுத்தப்படவில்லை. ஆகவே, அவைகள் சேதமில்லாமல் தப்பின.

Related Post

புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்- 87. எம்முளும் உளன்!

Posted by - ஏப்ரல் 13, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 87. எம்முளும் உளன்! பாடியவர்: தமிழ் இலக்கிய வரலாற்றில் அவ்வையார் என்ற பெயரில் பெண்பாற் புலவர்கள் பலரைக் காண்கிறோம். சங்க…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 16. செவ்வானும் சுடுநெருப்பும்

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 16. செவ்வானும் சுடுநெருப்பும் பாடல் ஆசிரியர்: பாண்டரங் கண்ணனார் (16). இவருடைய இயற்பெயர் கண்ணனார். இவர் தந்தையார் பெயர் பாண்டரங்கன்.…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 44. அறமும் மறமும்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 44. அறமும் மறமும்! பாடல் ஆசிரியர்: கோவூர் கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 31-இல் காண்க.பாடப்பட்டோன்: சோழன் நெடுங்கிள்ளி.…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 61. மலைந்தோரும் பணிந்தோரும்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 61. மலைந்தோரும் பணிந்தோரும்! பாடல் ஆசிரியர்: கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரைக் குமரனார். இவரைப் பற்றிய குறிப்புகளை பாடல் 54-இல்…

உங்கள் கருத்தை இடுக...