புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 27. புலவர் பாடும் புகழ்!

1433 0

புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்

புறம்
27. புலவர் பாடும் புகழ்!

பாடல் ஆசிரியர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார் ( 27 – 30, 325). இவர் உறையூரைச் சார்ந்தவர். இவர் தந்தையாரின் பெயர் முதுகண்ணன். இவர் சோழன் நலங்கிள்ளியைப் புகழ்ந்து பாடல் ஆசிரியர். இவர் இயற்றிய பாடல் குறுந்தொகையிலும் ஒன்று உண்டு (133). புறநானூற்றுப் பாடல் 29 -இல் “நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லை என்பார்க்கு இனன் ஆகிலியர்” என்று சோழன் நலங்கிள்ளிக்கு அறிவுரை கூறிகிறார். மற்றும், அதே பாடலில், உலகம் தோன்றி நின்று மறைவதைக் கூத்தர்களின் கோலத்திற்கு உவமையாகக் கூறுகிறார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி (27 – 33, 45, 68, 225, 382, 400). சோழன் கரிகால் பெருவளத்தானுக்கு மணக்கிள்ளி, வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி என்று இரண்டு மகன்கள் இருந்தனர். கரிகாலன் இறந்த பிறகு, சோழநாட்டை இரண்டாகப் பிரித்து, மணக்கிள்ளி உறையூரைத் தலைநகரமாகவும், வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி பூம்புகாரைத் தலைநகரமாகவும் கொண்டு சோழநாட்டின் இருபகுதிகளையும் ஆண்டனர். மணக்கிள்ளிக்கு நெடுங்கிள்ளி என்று ஒரு மகனும் நற்சோனை என்று ஒரு மகளும் இருந்தனர். வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கு, கிள்ளி வளவன், நலங்கிள்ளி, மாவளத்தான் என்று மூன்று மகன்கள் இருந்தனர். மணக்கிள்ளியின் மகள் நற்சோனை, சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை மணம் புரிந்தாள். சேரன் செங்குட்டுவன் மற்றும் சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள் ஆகிய இருவரும் இமயவரம்பனுக்கும் நற்சோனைக்கும் பிறந்த பிள்ளைகள்.

ஒரு சமயம், வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கும் இமயவரம்பனுக்கும் இடையே போர் நடந்தது. அப்போரில் அவ்விரு மன்னர்களும் இறந்தனர். வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி இறந்த பிறகு, தன் தந்தையைப்போல், நலங்கிள்ளி பூம்புகாரைத் தலைநகரமாகக்கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டான். அவனுக்கும், மணக்கிள்ளியின் மகன் நெடுங்கிள்ளிக்கும் பகை மூண்டது. ஒரு சமயம், நெடுங்கிள்ளி ஆவூர் என்ற ஊரில் தங்கியிருந்த பொழுது, நலங்கிள்ளியின் சார்பாக, அவன் தம்பி மாவளத்தான் ஆவூரை முற்றுகையிட்டு நெடுங்கிள்ளியை வருத்தினான். நெடுங்கிள்ளி, அங்கிருந்து தப்பி, உறையூருக்குச் சென்றான். பின்னர், நலங்கிள்ளி உறையூரை முற்றுகையிட்டான். நலங்கிள்ளி உறையூரை முற்றுகையிட்டாலும், நெடுங்கிள்ளி போருக்கு வராமல், தன் அரண்மனைக்குள் அடைபட்டுக் கிடந்தான். அச்சமயம், கோவூர் கிழார் என்னும் புலவர், நெடுங்கிள்ளியிடம் சென்று, “நீ அறவழியில் வாழ விரும்பினால் நலங்கிள்ளிக்கு உன் நாட்டைக் கொடு; மறவழியில் வாழ விரும்பினால் நலங்கிள்ளியுடன் போர் செய். இரண்டு செயல்களில் எதையும் செய்யாமல், அரண்மனைக்குள் ஒளிந்துகொண்டிருப்பது வெட்கத்திற்குரியது” என்று அறிவுரை கூறினார் (புறநானூறு – 44). நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் போர் தொடங்கியது. அப்போரில் நெடுங்கிள்ளி தோல்வியடைந்ததாக வரலாறு கூறுகிறது.

நலங்கிள்ளி ஒரு சிறந்த வீரனாகவும் அரசனாகவும் இருந்தது மட்டுமல்லாமல் மிகுந்த தமிழ்ப் புலமை உடையவனாகவும் இருந்ததாகத் தெரிரிகிறது. இவன் இயற்றியதாகப் புறநானூற்றில் இரண்டு பாடல்கள் (73, 75) உள்ளன. இவன் சேட்சென்னி நலங்கிள்ளி என்றும் தேர் வண்கிள்ளி என்றும் அழைக்கப்பட்டான்.

பாட்டின் காரணம்: இப்பாடலில், “சிறந்த குடியில் பிறந்து அரசர்களாக இருக்கும் பலருள்ளும் புலவரால் பாடப்படும் புகழுக்கு உரியவர்கள் சிலரே. அவ்வாறு புகழ் பெற்றவர்கள் ஓட்டுநர் இன்றித் தானே இயங்கும் வானவூர்தியில் ஏறி விண்ணுலகம் செல்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வளர்தலும், தேய்தலும், இறத்தலும், பிறத்தலும் இவ்வுலகின் இயற்கை; ஆகவே, வருந்தி வருவோர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அருள் செய்க.” என்று உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சோழன் நலங்கிள்ளிக்கு அறிவுரை கூறுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: முதுமொழிக் காஞ்சி . அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்று உறுதிப் பொருட்களைப் பற்றிக் கூறுவது.

சேற்றுவளர் தாமரை பயந்த ஒண்கேழ்
நூற்றிதழ் அலரின் நிறைகண்டு அன்ன
வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து
வீற்றிருந் தோரை எண்ணுங் காலை
5 பாடல் விளக்கம்யும் பாட்டும் உடையோர் சிலரே;
மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே:
புலவர் பாடும் புகழுடையோர், விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி
எய்துப என்பதம் செய்வினை முடித்தெனக்
10 கேட்பல்; எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி!
தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்
மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்
அறியா தோரையும் அறியக் காட்டித்
திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து
15 வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள வல்லை ஆகுமதி; அருளிலர்
கொடா அமை வல்லர் ஆகுக;
கெடாத் துப்பின்நின் பகைஎதிர்ந் தோரே.

அருஞ்சொற்பொருள்:
1. பயத்தல் = கொடுத்தல், பிறப்பித்தல் (பூத்த); கேழ் = நிறம். 2. அலரி = மலர் (பூவிற்குப் பொதுப் பெயர்); நிரை = ஒழுங்கு, படைவகுப்பு (வரிசை). 3. விழு = சிறந்த; திணை = குடி. 5. பாடல் விளக்கம் = புகழ். 6. மரை = தாமரை. 8. வலவன் = ஓட்டுபவன்; ஊர்தி = வாகனம். 9. எய்துதல் = அடைதல். 11. தேய்தல் = குறைதல்; பெருகல் = வளர்தல். 14. புத்தேள் = தெய்வம். 15, வல்லுநர் = அறிஞர். 16. மருங்கு = விலாப்பக்கம், இடை, வடிவு. 19. துப்பு = வலிமை.

பாடல் விளக்கம்: சேற்றிலே வளரும் தாமரைச் செடியில் பூத்த ஒளிபொருந்திய தாமரை மலரில் உள்ள பல இதழ்களின் வரிசைபோல், உயர்வு தாழ்வு இல்லாத சிறந்த குடியில் பிறந்த அரசர்களை எண்ணிப்பார்க்கும்பொழுது, புகழுக்கும், புலவர்களால் புகழ்ந்து பாடும் பாடல்களுக்கும் உரியவர்கள் சிலரே. தாமரையின் இலைபோலப் பயனின்றி மறைந்தவர் பலர். தாம் செய்ய வேண்டிய நல்வினைகளைச் செய்து முடித்தவர்கள் புலவர்களால் பாடப்படும் புகழுடையவர்களாவார்கள். மற்றும், அவர்கள் ஆகாயத்தில் ஒட்டுநர் தேவையில்லாமல் தானாகவே செல்லும் விமானங்களைப் பெறுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். என் தலைவ! சேட் சென்னி என்று அழைக்கப்படும் நலங்கிள்ளி! தேய்தல், வளர்தல், மறைதல், இறந்தவர்கள் மீண்டும் பிறத்தல் போன்ற உண்மைகளை அறியாதவர்களுக்கு அறிவுறுத்தும் திங்கள் தெய்வம் உலாவும் இவ்வுலகத்தில், ஆற்றல் இல்லாதவர்களாக இருந்தாலும், அறிஞர்களாக இருந்தாலும், உன்னிடம் வருந்தி வந்தவர்களின் நிலையைப் பார்த்து அவர்களுக்கு அருள் செய்வாயாக! குறைவற்ற வலிமையையுடைய உன் பகையை எதிர்கொண்டவர்கள் அருளில்லாதவர்களாகவும் ஈகைத்தன்மை அற்றவர்களாகவும் ஆவார்களாக.

சிறப்புக் குறிப்பு: நூறு என்ற சொல் ஒரு எண்ணைக் குறிக்காமல் பல என்ற பொருளில் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ”நூற்றிதழ் தாமரைப்பூ” என்று (ஐங்குறுநூறு – 20) பிறரும் பாடியுள்ளனர்.

”பாடல் விளக்கம்” என்ற சொல் எல்லோராலும் புகழப்படும் புகழையும், ”பாட்டு” என்பது புலவர்களால் பாடப்படும் புகழையும் குறிக்கும் என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார்.

Related Post

புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 26. நோற்றார் நின் பகைவர்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 26. நோற்றார் நின் பகைவர்! பாடல் ஆசிரியர்: மாங்குடி மருதனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 24-இல் காண்க.பாடப்பட்டோன்: பாண்டியன்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 5. அருளும் அருமையும்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 5. அருளும் அருமையும்! பாடல் ஆசிரியர்: நரிவெரூஉத் தலையார் (5, 195). இப்புலவரின் தலை நரியின் தலையைப் போல் இருந்ததால்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

3. வன்மையும் வண்மையும்! – DNA

Posted by - ஏப்ரல் 11, 2020 0
  புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்   3. வன்மையும் வண்மையும்!   பாடல் ஆசிரியர்: இரும்பிடர்த் தலையார். இப்பாடலில், யானையின் பெரிய கழுத்தை “இரும்பிடர்த்தலை” என்று…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்- 85. யான் கண்டனன்!

Posted by - ஏப்ரல் 13, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 85. யான் கண்டனன்! பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார். இவரைப்பற்றிய செய்திகளை 83-ஆம் பாடலில் காண்க. பாடப்பட்டோன்: சோழன்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்- 92. மழலையும் பெருமையும்!

Posted by - ஏப்ரல் 13, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 92. மழலையும் பெருமையும்! பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 – இல் காணலாம். பாடப்பட்டோன்: அதியமான்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன