புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 28. போற்றாமையும் ஆற்றாமையும்!

1067 0

புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்

புறம்
28. போற்றாமையும் ஆற்றாமையும்!

பாடல் ஆசிரியர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 27-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 27-இல் காண்க.
பாட்டின் காரணம்: ”குருடு, கூன், செவிடு, ஊமை போன்ற குறைகளுடன் பிறப்பவர்களின் வாழ்க்கை பயனற்றது. நீ அத்தகைய குறைகளுடன் கூடிய பிறவி உடையன் அல்லன். உன் பகைவர்கள் உனக்குப் பயந்து காட்டில் ஒளிந்து வாழ்கிறார்கள். உன் நாடு வளமானதாக உள்ளது. உன் செல்வத்தை அறம், பொருள் இன்பம் ஆகிய உறுதிப் பொருட்களைப் அடைவதற்குப் பயன்படுத்துவதுதான் நீ உன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கு ஏற்ற வழியாகும்.” என்று உறையூர் முதுகண்ணன் சாத்தனார் இப்பாடலில் சோழன் நலங்கிள்ளிக்கு அறிவுரை கூறுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: முதுமொழிக் காஞ்சி . அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்று உறுதிப் பொருட்களைப் பற்றிக் கூறுவது.

சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்
கூனும் குறளும் ஊமும் செவிடும்
மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு
எண்பேர் எச்சம் என்றிவை எல்லாம்
5 பேதைமை அல்லது ஊதியம் இல்லென
முன்னும் அறிந்தோர் கூறினர்; இன்னும்,
அதன்திறம் அத்தையான் பாடல் விளக்கம்க்க வந்தது
வட்ட வரிய செம்பொறிச் சேவல்
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்
10 கானத் தோர்நின் தெவ்வர்; நீயே
புறஞ்சிறை மாக்கட்கு அறங்குறித்து அகத்தோர்
புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப்
பூம்போது சிதைய வீழ்ந்தெனக் கூத்தர்
ஆடுகளம் கடுக்கும் அகநாட் டையே;
15 அதனால் அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும் பெருமநின் செல்வம்
ஆற்றாமை நின் போற்றா மையே.

அருஞ்சொற்பொருள்:
1. சிதடு = குருடு; பிண்டம் = தசை. 2. குறள் = குறுமை (ஈரடி உள்ள மனிதன்); ஊம் = ஊமை. 3. மா = விலங்கு; மருள் = மயக்கம் (அறிவு மயக்கம்); உளப்பாடு = உள்ள தன்மை. 4. எச்சம் = குறைபாடு. 5. பேதைமை = பேதைத் தன்மையுடைய பிறப்பு; ஊதியம் = பயன். 7. திறம் = கூறுபாடு, தத்துவம். 8. வரி = கோடு; பொறி = புள்ளி. 9. ஏனல் = தினைப்புனம். 12. புய்த்தல் = பிடுங்கல், பறித்தல்; கழை = கட்டை, கழி. 13. போது = மலரும் பருவத்திலுள்ள அரும்பு. 14. கடுக்கும் = ஒக்கும். 17. போற்றுதல் = பாதுகாத்தல்.

பாடல் விளக்கம்: சிறப்பில்லாத குருடு, உருவமில்லாத தசைப் பிண்டம், கூன், குட்டை, ஊமை, செவிடு, விலங்கின் வடிவம், அறிவு மயக்கம், ஆகிய எட்டுவகைக் குறையுள்ள பிறவிகள் எல்லாம் பயனற்றவை என்று அறிஞர்கள் முன்னரே கூறினர். நான் சொல்ல வந்தது, ”எது பயனுள்ள பிறவி” என்பது.

வட்ட வடிவமான வரிகளையும், சிவந்த புள்ளிகளையும் உடைய சேவல் கோழிகள் கூவித் தினைப்புனம் காப்பவர்களை எழுப்பும் காட்டில் உன் பகைவர்கள் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். நீயோ வளமான நாட்டில் உள்ளாய். உன் நாட்டில், கரும்பு விளையும் வயல்களின் வேலிக்கு வெளியே இருப்பவர்கள் கரும்பு வேண்டும் என்று கேட்பதால், வேலிக்கு உள்ளே இருப்பவர்கள் கரும்புகளைப் பிடுங்கி வேலிக்கு வெளியே எறிகிறார்கள். அவர்கள் எறியும் கரும்புகளின் தண்டுகள், அருகில் உள்ள குளங்களிலுள்ள தாமரை அரும்புகளின் மீது விழுவதால் அவ்வரும்புகள் சிதறிக்கிடக்கின்றன. இந்தக் காட்சியைப் பார்த்தால், கழைக்கூத்தர்கள் ஆடும் களத்தில் பூக்கள் சிதறிக் கிடப்பதுபோல் உள்ளது. நீ இத்தகைய மருத நில வளமுடைய நாட்டை உடையவன். அதனால், உன் செல்வம் நீ அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் அடைவதற்குப் பயன்படட்டும். அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் அடைவதற்கு உன் செல்வத்தை நீ பயன்படுத்தாவிட்டால், நீ உன்னைப் பாதுகாத்துக்கொள்ளத் தவறியவனாவாய்.

சிறப்புக் குறிப்பு: இப்பிறவியில் செல்வத்தைப் நல்வழியில் பயன்படுத்தி, அறவழியில் நின்று, பொருள் ஈட்டி, இன்பம் துய்த்து வாழ்ந்தால், மறுபிறவில் குருடு, கூன், ஊமம், செவிடு போன்ற குறைகள் இல்லாமல் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளலாம் என்று மறைமுகமாகப் புலவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சோழன் நலங்கிள்ளிக்கு அறிவுரை கூறுகிறார்.

Related Post

புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்- 85. யான் கண்டனன்!

Posted by - ஏப்ரல் 13, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 85. யான் கண்டனன்! பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார். இவரைப்பற்றிய செய்திகளை 83-ஆம் பாடலில் காண்க. பாடப்பட்டோன்: சோழன்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்- 89. என்னையும் உளனே!

Posted by - ஏப்ரல் 13, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 89. என்னையும் உளனே! பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 – இல் காணலாம்.பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்- 93. பெருந்தகை புண்பட்டாய்!

Posted by - ஏப்ரல் 13, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 93. பெருந்தகை புண்பட்டாய்! பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 – இல் காணலாம்.பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 35. உழுபடையும் பொருபடையும்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 35. உழுபடையும் பொருபடையும்! பாடல் ஆசிரியர்: வெள்ளைக்குடி நாகனார் (35). இப்புலவர், புறநானூற்றில் இச்செய்யுளையும் நற்றிணையில் இரண்டு (158, 196)…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன