புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 29. நண்பின் பண்பினன் ஆகுக!

1114 0

புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்

புறம்
29. நண்பின் பண்பினன் ஆகுக!

பாடல் ஆசிரியர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 27-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 27-இல் காண்க.
பாட்டின் காரணம்: இப்பாடலில், ”வேந்தே, உன் அரசவையில், நாட்பொழுதில் பாணர்கள் சூழ்ந்து உன் புகழ் பாடட்டும்; அதன் பின்னர், மகளிர் உன் தோள்களைத் தழுவி உனக்கு இன்பம் அளிக்கட்டும்; கொடியவர்களைத் தண்டித்து நல்லோருக்கு நீ அருள் செய்வாயாக; மற்றும், நீ சிற்றினம் சேராது வாழ்வாயாக; உன் படைவீரர்கள் உன்னிடம் வருபவர்களுக்கு உதவும் பண்புடையவர்களாக இருப்பார்களாக; இவ்வுலகம் கூத்தாடுபவர்களின் களம் போன்றது. கூத்தர்கள் மாறிமாறி வேடம் அணிந்து வருவதுபோல், இவ்வுலகில் எல்லாம் முறையே தோன்றி மறையக் கூடியவை. உன் சுற்றத்தார் உனக்கு மகிழ்ச்சி அளிப்பவர்களாக இருப்பார்களாக; உன் செல்வம் உனக்குப் புகழ் தருவதாக.” என்று உறையூர் முதுகண்ணன் சாத்தனார் அறிவுரை கூறுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: முதுமொழிக் காஞ்சி . அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்று உறுதிப் பொருட்களைப் பற்றிக் கூறுவது.

அழல்புரிந்த அடர்தாமரை
ஐதுஅடர்ந்த நூல்பெய்து
புனைவினைப் பொலிந்த பொலம்நறுந் தெரியல்
பாறுமயிர் இருந்தலை பொலியச் சூடிப்
5 பாண்முற் றுகநின் நாள்மகிழ் இருக்கை;
பாண்முற்று ஒழிந்த பின்றை மகளிர்
தோள்முற் றுகநின் சாந்துபுலர் அகலம்; ஆங்க,
முனிவில் முற்றத்து இனிதுமுரசு இயம்பக்
கொடியோர்த் தெறுதலும் செவ்வியோர்க்கு அளித்தலும்
10 ஒடியா முறையின் மடிவிலை யாகி
நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லை என்போர்க்கு இனன்ஆ கிலியர்;
நெல்விளை கழனிப் படுபுள் ஓப்புநர்
ஒழிமடல் விறகின் கழுமீன் சுட்டு
15 வெங்கள் தொலைச்சியும் அமையார் தெங்கின்
இளநீர் உதிர்க்கும் வளமிகு நன்னாடு
பெற்றனர் உவக்கும்நின் படைகொள் மாக்கள்
பற்றா மாக்களின் பரிவுமுந் துறுத்துக்
கூவை துற்ற நாற்கால் பந்தர்ச்
20 சிறுமனை வாழ்க்கையின் ஒரீஇ வருநர்க்கு
உதவி ஆற்றும் நண்பின் பண்புடை
ஊழிற்று ஆகநின் செய்கை; விழவின்
கோடியர் நீர்மை போல முறைமுறை
ஆடுநர் கழியும்இவ் உலகத்துக் கூடிய
25 நகைப்புறன் ஆகநின் சுற்றம்;
இசைப்புற னாக நீ ஓம்பிய பொருளே.

அருஞ்சொற்பொருள்:
1. அழல் = நெருப்பு; அடர் = தகடு. 2. ஐது = நுண்ணியது, நெருக்கம். 3. பொலன் = பொன்; தெரியல் = பூமாலை; நறுமை = நன்மை. 4. பாறுதல் = பரந்து கிடத்தல்; இரு = கரிய. 5. பாண் = பாணர்; முற்றுதல் = சூழ்தல்; இருக்கை = இருப்பிடம். 7. புலர்தல் = உலர்தல்; அகலம் = மார்பு. 8. முனிவு = வெறுப்பு, கோபம். 9. தெறுதல் = அழித்தல். 10. ஒடியா = வளையாத, முறியாத; மடிவு = சோம்பல். 13. ஓப்புதல் = ஓட்டுதல். 14. ஒழிதல் = அழிதல்; மடல் = பனைமட்டை; விறகு = எரிகட்டை; கழி = கடலையடுத்த உப்பங்கழி (உப்பாறு). 15. வெங்கள் = விருப்பமான கள்; தொலைச்சிய = அழித்த. 18. பற்றலர் = பகைவர். 19. கூவை = ஒருவகைச் செடி; துற்றல் = குவிதல், நெருங்கல்(வேய்தல்). 21. நண்பு = நட்பு. 22. ஊழ் = முறை; விழவு = விழா. 23. கோடியர் = கூத்தர்; நீர்மை = குணம், தன்மை. 25. புறன் = இடம்.

கொண்டு கூட்டு: நின் நாண் மகிழிருக்கை பாண் முற்றுக; அதன்பின், அகலம் மகளிர் தோள் முற்றுக; நீ மடிவிலையாய் இனனாகாது ஒழிவாயாக; வளமிகு நன்னாடு பெற்றனர் உவக்கும் நின் படைகொள் மாக்கள்; நின் பற்றா மாக்களைப்போல சிறுமனை வாழும் வாழ்க்கையின் நீங்கி வருநர்க்கு உதவியாற்றும் நண்பொடு கூடிய பண்புடைத்தாகிய முறைமையை உடைத்தாக நின் செய்கை; நகைப்புறனாக நின் சுற்றம்; இசைப்புறனாக நீ ஓம்பிய பொருள் எனக் கூட்டுக.

பாடல் விளக்கம்: பொன்னைத் தீயிலிட்டுத் தகடாக்கிச் செய்த தாமரை மலர்களை நெருக்கமாக நூலால் கோத்து அலங்கரித்துச் செய்யப்பட்ட நல்ல மாலையைக் கரிய முடியுள்ள தலையில் சூடிய பாணர்கள் பகல் நேரத்தில் உன் அரசவையில் உன்னைச் சூழ்ந்திருப்பார்களாக. பாணர்களோடு கூடியிருந்த பிறகு, மகளிர் உன்னுடைய சந்தனம் பூசிய மார்பைத் தழுவுவார்களாக.

விரும்பத்தக்க உன் அரண்மனையின் முற்றத்தில் முரசு இனிதாய் முழங்குவதாக. தீயோரைத் தண்டித்தலும், நடுவுநிலைமை உடையவர்களுக்கு அருள் செய்வதும் சோம்பலின்றி இடையறாத முறையில் நடைபெறுவதாக. நல்வினைகளால் நன்மையும் தீவினைகளால் தீமையும் விளையும் என்பதை மறுப்பவர்களோடு நீ சேராதிருப்பாயாக.

நெல் விளையும் வயல்களுக்கு வரும் பறவைகளை ஓட்டுபவர்கள், பனைமரங்களிலிருந்து கீழே விழுந்த பனைமட்டைகளை விறகாகக்கொண்டு உப்பங்கழியிலுள்ள மீன்களைச் சுட்டுத் தின்று, விருப்பமான கள்ளைக் குடித்து, நிறைவு பெறாதவர்களாகி, தென்னைமரங்களிலிருந்து இளந்தேங்காய்களை உதிர்த்து அவற்றிலிருந்து இளநீரையும் குடித்து மகிழும் வளமான நாட்டை உன்னுடைய படைவீரர்கள் பெற்றிருக்கிறார்கள். உன்னுடைய பகைவர்கள் உன்னிடம் இரக்கத்தை எதிர்பார்த்து வருவதுபோல், கூவை இலையால் வேயப்பட்ட நான்கு கால்களாலாகிய பந்தர் போன்ற வீடுகளில் வாவழ்பவர்கள் அங்கிருந்து விலகி உன் இரக்கத்தைப் எதிர்பார்த்து வரும்பொழுது, உன் செயல்கள் அவர்களிடம் நட்புடனும் பண்புடனும் உதவி செய்யும் வகையில் அமைவதாக.

திருவிழாவில் கூத்தாடுபவர்கள் மாறி மாறி வேறு வேறு வேடம் தரித்து ஆடுவதுபோல், இவ்வுலகில் எல்லாம் முறை முறையே தோன்றி மறைவது இயற்கை. அத்தகைய இவ்வுலகில் உன் சுற்றம் மகிழ்வுடன் இருப்பதாக; நீ பாதுகாத்த செல்வம் உனக்குப் புகழ் அளிப்பதாக.

Related Post

புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்- 85. யான் கண்டனன்!

Posted by - ஏப்ரல் 13, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 85. யான் கண்டனன்! பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார். இவரைப்பற்றிய செய்திகளை 83-ஆம் பாடலில் காண்க. பாடப்பட்டோன்: சோழன்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 13. நோயின்றிச் செல்க!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 13. நோயின்றிச் செல்க! பாடல் ஆசிரியர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் (13, 127 – 135, 241, 374, 375).இவர்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 64. புற்கை நீத்து வரலாம்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 64. புற்கை நீத்து வரலாம்! பாடல் ஆசிரியர்: நெடும்பல்லியத்தனார்(64). புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றுதான். பல்லியம் என்று…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 41. காலனுக்கு மேலோன்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 41. காலனுக்கு மேலோன்! பாடல் ஆசிரியர்: கோவூர் கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 31-இல் காண்க.பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 19. எழுவரை வென்ற ஒருவன்

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 19. எழுவரை வென்ற ஒருவன் பாடல் ஆசிரியர்: குடபுலவியனார். இவரைப் பற்றிய குறிப்புகளை பாடல் 18 -இல் காண்க.பாடப்பட்டோன்: பாண்டியன்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன