புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 31. வடநாட்டார் தூங்கார்!

1508 0

புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்

புறம்
31. வடநாட்டார் தூங்கார்!

பாடல் ஆசிரியர்: கோவூர் கிழார் (31-33, 41, 44 – 47, 68, 70, 308, 373, 382, 386, 400)
இவர் கோவூரைச் சார்ந்தவர். வேளாண் மரபினர். இவர் புறநானூற்றில் 15 பாடல்களை இயற்றியவர். சோழன் நலங்கிள்ளிக்கும் சோழன் நெடுங்கிள்ளிக்கும் இடையே போர் மூண்ட பொழுது, கோவூர் கிழார், “ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே; இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால், குடிப்பொருள் அன்று, நும் செய்தி” என்று கூறி அவர்களைச் சமாதானப்படுத்திப் போரைத் தடுத்தி நிறுத்தினார் (புறம்- 45). பின்னர், ஒரு சமயம் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளியை ஆவூரில் முற்றுகையிட்ட பொழுது நெடுங்கிள்ளி போரிடாமல் அரண்மனையில் அடைபட்டுக் கிடந்தான். அவ்வமயம், “அறவை யாயின்,’நினது’ எனத் திறத்தல்! மறவை யாயின், போரொடு திறத்தல்; அறவையும் மறவையும் அல்லையாகத் திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின் நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல் நாணுத்தக வுடைத்திது காணுங் காலே “ என்று அறிவுரை கூறினார். மற்றும், சோழன் நெடுங்கிள்ளி, இளந்தத்தன் என்னும் புலவனை ஒற்றன் எனத் தவறாகக் கருதிக் கொல்ல நினைத்தான். அப்போது, புலவர் கோவூர் கிழார், “இளந்தத்தன் ஒற்றன் அல்ல; அவர் ஒரு புலவர்” என்று எடுத்துரைத்து அப்புலவரைக் காப்பாற்றினார் (புறம் – 47). சோழன் கிள்ளிவளவன், மலையமான் என்பவனின் மக்களை யானையின் காலிலிட்டுக் கொல்ல முயன்ற பொழுது, அச்சிறுவர்களின் இயல்புகளைக் கூறி, அவர்களைக் காப்பாற்றினார் (புறம் – 46). புலவர் கோவூர் கிழார், சிறந்த அறிவும், ஆழ்ந்த புலமையும், மன்னர்கள் தவறு செய்தால் தட்டிக் கேட்கும் மன உரமும் கொண்ட சான்றோர் என்பது அவர் இயற்றிய பாடல்களிலிருந்து தெரிகிறது.

பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் -27இல் காண்க.
பாட்டின் காரணம்: இப்பாடலில், நலங்கிள்ளியின் வெற்றிகளைச் சிறப்பித்து, “அரசே! நீ போரை விரும்பிப் பாசறையில் இருக்கிறாய். உன் யானைகள், பகைவர்களின் மதிற் சுவர்களைக் குத்தித் தாக்கியதால், அவற்றின் கொம்புகள் மழுங்கி உள்ளன. அவ்வாறு இருந்தாலும், உன் யானைகள் இன்னும் அடங்கவில்லை. உன் படைவீரர்கள் எப்பொழுதும் போரை விரும்புபவர்களாக உள்ளனர். ஆகவே, வட நாட்டில் உள்ள மன்னர்கள் நீ எப்பொழுது அங்கே உன் படையுடன் வருவாயோ என்று நினைத்து நெஞ்சம் நடுங்கி உறக்கமின்றி உள்ளனர்.” என்று கோவூர் கிழார் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை: மழபுல வஞ்சியும் ஆம்.
அரசவாகை: அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.
மழபுல வஞ்சி: பகைவர் நாட்டைக் கொள்ளையிடுதல், எரித்தல் ஆகிய செயல்களைச் செய்து அழித்தலைப் பற்றிக் கூறுதல்.

சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல
இரு குடை பின்பட ஓங்கி ஒருகுடை
உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க,
5 நல்லிசை வேட்டம் வேண்டி வெல்போர்ப்
பாசறை யல்லது நீயல் லாயே;
நுதிமுகம் மழுங்க மண்டி ஒன்னார்
கடிமதில் பாயும்நின் களிறுஅடங் கலவே;
போர்எனில் புகலும் புனைகழல் மறவர்
10 காடிடைக் கிடந்த நாடுநனி சேய;
செல்வேம் அல்லேம் என்னார்; கல்லென்
விழவுடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக்
குணகடல் பின்ன தாகக் குடகடல்
வெண்தலைப் புணரிநின் மான்குளம்பு அலைப்ப
15 வலமுறை வருதலும் உண்டுஎன்று அலமந்து
நெஞ்சுநடுங்கு அவலம் பாயத்
துஞ்சாக் கண்ண வடபுலத்து அரசே.

அருஞ்சொற்பொருள்:
4. உரு = வடிவழகு, நிறம்; கெழு = பொருந்திய; நிவத்தல் = உயர்தல்; நிவந்து = ஓங்கி; சேண் = சேய்மை. 5.வேட்டம் = விருப்பம், விரும்பிய பொருள். 6.ஒல்லுதல் = உடன்படுதல், இணங்குதல். 7. நுதி = நுனி; மண்டுதல் = நெருங்குதல் (குத்துதல்). 8. பாய்தல் = குத்துதல். 9. புகலுதல் = விரும்புதல்; புனைதல் = அணிதல். 10. நனி = மிகவும்; சேய = தொலைவாக. 11. கல் – ஒலிக்குறிப்பு. 12. விழவு = விழா. 13. குண = கிழக்கு; குட = மேற்கு. 14. புணரி = அலை; மான் = குதிரை; அலைப்ப = அடித்தல் (அலை அடித்தல்). 15. அலமந்து = சுழன்று. 16. அவலம்= துன்பம், வருத்தம்; பாய்தல் = பரவுதல். 17. துஞ்சுதல் = உறங்குதல்.

பாடல் விளக்கம்: அறத்தின் சிறப்பினால், பொருளும் இன்பமும் அறத்தின் பின்னதாகக் கருதப்படுவதுபோல், சேர பாண்டியருடைய கொற்றக்குடைகள் பின் வர உன் கொற்றக்குடை அழகிய திங்களைப்போல் வெகு தொலைவில் உயர்ந்து விளங்குகிறது. நல்ல புகழை விரும்பி, உன் தலைநகராகிய பூம்புகாரில் இல்லாமல், நீ வெற்றிதரும் போர்ப்பாசறையிலேயே உள்ளாய். உன் யானைகள், அவற்றின் தந்தங்களின் நுனிகள் மழுங்குமாறு பகைவர்களின் காவலுடைய மதில்களைக் குத்தித் தாக்கியும் அடங்காமல் உள்ளன. போர் என்று கேள்விப்பட்டவுடன் உன் படை வீரர்கள், வீரக்கழல்கள் அணிந்து, போருக்குப் புறப்படுகிறார்கள். பகைவர்களின் நாடு காட்டுக்கு நடுவே, மிகவும் தொலைவில் இருந்தாலும் அங்கே செல்லமாட்டோம் என்று அவர்கள் சொல்லமாட்டார்கள். பகைவர்களின் நாட்டில் ஆரவாரமாக வெற்றிவிழா கொண்டாடிக், கிழக்குக் கடற்கரையிலிருந்து கிளம்பிய உன் குதிரைகளின் குளம்புகளை மேற்குக் கடலின் வெண்ணிற அலைகள் அலம்ப, நீ நாடுகளை வலம் வருவாயோ என்று வடநாட்டு மன்னர்கள் வருந்தி, நெஞ்சம் நடுங்கி உறக்கமின்றி உள்ளனர்.

சிறப்புக் குறிப்பு: பகைவரை வென்று ஆரவாரிப்பதைப் பற்றி இப்பாடலில் கூறப்பட்டிருப்பதால், இப்பாடல் வாகைத் திணையில் அடங்கும். சோழன் நலங்கிள்ளி, போரை விரும்பிப் பாசறையில் இருப்பதாகக் கூறியது அவனது இயல்பைக் கூறியதாகும். ஆகவே, இப்பாடல் அரசவாகைத் துறையைச் சார்ந்தது என்று கருதப்படுகிறது. மற்றும், பகைவர்களின் மதில்களை நலங்கிள்ளியின் யானைகள் குத்தித் தாக்கியதையும், அவன் படை வீரர்கள் எப்பொழுதும் போரை விரும்புவதையும், வட நாட்டு மன்னர்கள் நலங்கிள்ளியின் வருகையை நினைத்து நடுங்கி உறக்கமின்றி இருப்பதையும் கூறியிருப்பது பகைவரின் நாட்டை அழிப்பதைக் குறிப்பதால், இப்பாடல் மழபுல வஞ்சித் துறையைச் சார்ந்ததாகவும் கருதப்படுகிறது.

Related Post

புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 19. எழுவரை வென்ற ஒருவன்

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 19. எழுவரை வென்ற ஒருவன் பாடல் ஆசிரியர்: குடபுலவியனார். இவரைப் பற்றிய குறிப்புகளை பாடல் 18 -இல் காண்க.பாடப்பட்டோன்: பாண்டியன்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 6. நிலவும் கதிரும் போல் வாழ்க!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 6. நிலவும் கதிரும் போல் வாழ்க! பாடல் ஆசிரியர்: காரிகிழார் (6): இப்புலவர் காரி என்னும் ஊரைச் சார்ந்தவர். புறநானூற்றில்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்- 92. மழலையும் பெருமையும்!

Posted by - ஏப்ரல் 13, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 92. மழலையும் பெருமையும்! பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 – இல் காணலாம். பாடப்பட்டோன்: அதியமான்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 30. எங்ஙனம் பாடுவர்?

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 30. எங்ஙனம் பாடுவர்? பாடல் ஆசிரியர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 27-இல் காண்க.பாடப்பட்டோன்: சோழன்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

 1. Slot Online
 2. rtp yang tepat
 3. Slot Gacor
 4. Situs Judi Slot Online Gacor
 5. Situs Judi Slot Online
 6. Situs Slot Gacor 2023 Terpercaya
 7. SLOT88
 8. Situs Judi Slot Online Gampang Menang
 9. Judi Slot Online Jackpot Terbesar
 10. Slot Gacor 88
 11. rtp Slot Terpercaya
 12. Situs Judi Slot Online Terbaru 2023
 13. Situs Judi Slot Online Terpercaya 2023 Mudah Menang
 14. Daftar Situs Judi Slot Online Gacor Terbaik
 15. Slot Deposit Pulsa Tanpa Potongan
 16. Situs Judi Slot Online Resmi
 17. Slot dana gacor
 18. Situs Slot Gacor 2023
 19. rtp slot yang tepat
 20. slot gacor yang tepat
 21. slot dana
 22. harum4d slot