புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 34. செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை!

1618 0

புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்

புறம்
34. செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை!

பாடல் ஆசிரியர்: ஆலத்தூர் கிழார் (34. 36, 69, 225, 324). ஆலத்தூர் சோழநாட்டில் உள்ள ஓரூர். அவ்வூரைச் சார்ந்தவராகவும் வேளாண் மரபினராகவும் இருந்ததால் இவர் இப்பெயர் பெற்றிருக்கலாம். இவர் இயற்பெயர் தெரியவில்லை. இவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனையும், சோழன் நலங்கிள்ளியையும் பாடியுள்ளார்.

பாடப்பட்டோன்: கிள்ளிவளவன் (34 – 42, 46, 69, 70, 226 – 228, 373, 386, 393, 397). சங்க கால மன்னர்களில் பலருடைய வரலாறுகள் தெளிவாகத் தெரியவில்லை. கிள்ளிவளவனின் வரலாற்றிலும் விடைகாணமுடியாத வினாக்கள் பல உள்ளன. சிலர் (பேராசிரியர். கோ. தங்கவேலு) கிள்ளிவளவன் என்று அழைக்கப்பட்டவனும், குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவனும் வேறுவேறு காலத்தில் வாழ்ந்த சோழ மன்னர்கள் என்று கருதுகின்றனர். இருப்பினும், பல வரலாற்று ஆசிரியர்கள் (N. சுப்பிரமணியன், K. A. நீலகண்ட சாஸ்திரி, டாக்டர் பொன். தங்கமணி) கிள்ளிவளவனும் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவனும் ஒருவனே என்று ஆதாரங்களுடன் கூறுகின்றனர். மற்றும் அவன் சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவன் என்றும் அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

கரிகாலனுக்குப் பிறகு பூம்புகாரைத் தலைநகராகக்கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டவன் கரிகாலனின் மகன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி என்று வரலாற்று ஆசிரியர் N. சுப்பிரமணியன் தம் நூலில் கூறுகின்றார். மற்றும், வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்குக் கிள்ளிவளவன், நலங்கிள்ளி, மாவளத்தான் என்று மூன்று மகன்கள் இருந்தனர் என்றும் அவர் குறிப்பிடுகின்றார். இவர்களில், நலங்கிள்ளியும் கிள்ளிவளவனும் பூம்புகாரைத் தலைநகராகக்கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டதாகத் தெரிகிறது. நலங்கிள்ளிக்குப் பிறகு கிள்ளிவளவன் ஆட்சி புரிந்தான் என்றும் கருதப்படுகிறது. மற்றும், கிள்ளிவளவன் காலத்தில் பூம்புகார் நகரத்தின் ஒருபகுதி கடலால் கொள்ளப்பட்டதாக மணிமேகலையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கிள்ளிவளவன், சேரரின் தலைநகரான கரூரை முற்றுகையிட்டு, பின்னர் அதைக் கைப்பற்றியது அவனுடைய மிகச் சிறந்த வெற்றியாகக் கருதப்படுகிறது. சேரனை வென்ற பிறகு, மலையமான் திருமுடிக்காரியுடன் போரிட்டு அவனைக் கிள்ளிவளவன் வென்றான். பின்னர், பாண்டிய நாட்டின் மீது கிள்ளிவளவன் படையெடுத்தபோது, பாண்டியரின் படைத்தலைவன் பழையன்மாறன் என்பவனிடம் தோல்வியுற்று கிள்ளிவளவன் இறந்ததாகக் கருதப்படுகிறது.

புறநானூற்றில், கோவூர் கிழார். ஆலத்தூர் கிழார், வெள்ளைக்குடி நாகனார், மாறோக்கத்து நப்பசலையார், ஆவூர் மூலங்கிழார், இடைக்காடனார், ஆடுதுறை மாசாத்தனார், ஐயூர் முடவனார், நல்லிறையனார், எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார் ஆகியோர் கிள்ளிவளவனைப் புகழ்ந்து 19 பாடல்கள் இயற்றியுள்ளனர்.

கிள்ளிவளவன் வீரத்திலும் வெற்றியிலும் கொடையிலும் சிறந்து விளங்கியது மட்டுமல்லாமல், சிறந்த தமிழ்ப் புலமையுடையனாகவும் இருந்தான் என்பது இவன் இயற்றியதாகப் புறநானூற்றில் உள்ள ஒரு பாடலிலிருந்து (பாடல் 173) தெரிகிறது.

இவன் காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியாகவும் மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கமாகவும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பாட்டின் காரணம்: கிள்ளிவளவன் ஆலத்தூர் கிழாருக்குப் பெருமளவில் பரிசுகள் அளித்தான். அவற்றைப் பெற்றுக்கொண்டு ஆலத்தூர் கிழார் அவனிடமிருந்து விடைபெறும் தருணத்தில், கிள்ளிவளவன், “நீங்கள் என்னை நினைத்து மீண்டும் வருவீர்களா?” என்று அவரைப் பார்த்துக் கேட்டான். “செய்நன்றி கொன்றார்க்கு உய்வில்லை; உன்னை நான் எந்நாளும் மறவேன்; உன்னை நான் புகழ்ந்து பாடாவிட்டால், கதிரவன் தோன்றமாட்டான்; நீ நீண்ட நாட்கள் வாழ்க” என்று ஆலத்தூர் கிழார் கிள்ளிவளவனை வாழ்த்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்
மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கின் கழுவாயும் உளஎன
5 நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்என
அறம் பாடிற்றே ஆயிழை கணவ;
காலை அந்தியும் மாலை அந்தியும்
புறவுக் கருவன்ன புன்புல வரகின்
10 பாற்பெய் புன்கம் தேனொடு மயக்கிக்
குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த ஒக்கலொடு
இரத்தி நீடிய அகன்தலை மன்றத்துக்
கரப்பில் உள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி
அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு
15 அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன்
எங்கோன் வளவன் வாழ்க என்றுநின்
பீடுகெழு நோன்தாள் பாடேன் ஆயின்
படுபுஅறி யலனே பல்கதிர்ச் செல்வன்;
யானோ தஞ்சம்; பெரும! இவ்வுலகத்துச்
20 சான்றோர் செய்த நன்றுண் டாயின்
இமையத்து ஈண்டி இன்குரல் பயிற்றிக்
கொண்டல் மாமழை பொழிந்த
நுண்பல் துளியினும் வாழிய பலவே!

அருஞ்சொற்பொருள்:
2. மாண் = மாட்சிமை. 3. குரவர் = மூத்தோர் (பெற்றோர்); தப்பல் = தவறு புரிதல். 4. வழுவாய் = தவறுதல்; மருங்கு = இடம், பக்கம்; கழுவாய் = பரிகாரம். 5.புடை = இடம். 6.செய்தி = செய்கை (செய்த நன்றி); உய்தி = தப்பிப் பிழைத்தல். 7. ஆயிழை = தெரிந்தெடுத்த அணிகலன்களையுடையவள். 8. அந்தி = மாலைக்காலம், அதிகாலை. 9. புறவு = புறா; புன்புலம் = புல்லிய இடம், தரிசு நிலம். 10. புன்கம் = உணவு, சோறு. 11. சூடு = சுடப்பட்டது; ஒக்கல் = சுற்றம். 12. இரத்தி = இலந்தை மன்றம் = பலர் கூடும் வெளி ( பொதுவிடம்). 13. கரப்பு = வஞ்சகம் (மறைத்தல்). 14. அமலை = திரளை, கட்டி; ஆர்ந்த = அருந்திய. 17. பீடு = பெருமை; நோன்றாள் = நோன்+தாள் = வலிய தாள். 18. படுதல் = தோன்றுதல். 19. தஞ்சம் = எளிமை. 21. ஈண்டுதல் = திரளுதல். 22. கொண்டல் = கீழ்க்காற்று. நுண்பஃறுளி = நுண்+பல்+துளி.

கொண்டு கூட்டு: ஆயிழை கணவ, செய்தி கொறோர்க்கு உய்தி இல்லென அறம் பாடிற்று; ஆதலால், பாணர்க்குச் செல்வம் முழுதும் செய்தோன், எங்கோன் வளவன் வாழ்கவென்று காலை அந்தியும் மாலை அந்தியும் நின் தாள் பாடேனாயின், பல்கதிர்ச் செல்வன் படுபறியான்; பெரும, யானோ தஞ்சம்; சான்றோர் செய்த நன்று உண்டாயின், நுண் பல்துளியினும் பல காலம் வாழ்வாயாக எனக் கூட்டுக.

பாடல் விளக்கம்: பசுவின் முலையை அறுத்த தீவினையாளர்களுக்கும், (சிறந்த அணிகலன்களை அணிந்த) மகளிரின் கருவை அழித்தவர்களுக்கும், பெற்றோர்களுக்குத் தவறிழைத்தவர்களுக்கும் அவர் செய்த கொடிய செயல்களை ஆராயுமிடத்து, அவர் செய்த பாவச் செயல்களின் விளைவுகளிலிருந்து நீங்குவதற்குப் பரிகாரம் உண்டு. ஆனால், உலகமே தலைகீழாகப் பெயர்ந்தாலும் ஒருவன் செய்த நற்செயல்களை அழித்தவர்களுக்கு அவற்றின் விளைவுகளிலிருந்து விடுதலை இல்லை என்று அறநூல்கள் கூறுகின்றன.

நன்கு ஆராய்ந்து எடுத்த ஆபரணங்களை அணிந்தவளின் கணவ! காலை வேளையிலும் மாலை வேளையிலும், புன்செய் நிலத்தில் விளைந்த புறாவின் முட்டை போன்ற வரகினது அரிசியைப் பாலிலிட்டு ஆக்கிய சோற்றில் தேனும், கொழுத்த முயலின் இறைச்சியும் கலந்த உணவை, இலந்தை மரத்தடியில் உள்ள பொதுவிடத்தில், வஞ்சமில்லாத உள்ளத்தோடு, வேண்டுவனெல்லாம் பேசி, பாணர்கள் உண்டு மகிழ்வார்கள். அப்பாணர்களுக்குத் தன்னுடைய பெருஞ்செல்வம் அனைத்தையும் அளித்த என் தலைவன் கிள்ளி வளவன் வாழ்க என்று பெருமை பொருந்திய உன்னை நான் பாடேனாயின், பல கதிர்களை உடைய கதிரவன் தோன்றமாட்டான். நான் எளியவன்; தலைவ! இவ்வுலகில் சான்றோர்கள் செய்த நல்ல செயல்கள் உண்டாயின், இமயமலையில் திரண்ட மேகங்கள் இனிய ஓசையுடன் பெய்த பெருமழையின் நுண்ணிய பல துளிகளைவிட அதிக நாட்கள் நீ வாழ்க.

Related Post

புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்- 93. பெருந்தகை புண்பட்டாய்!

Posted by - ஏப்ரல் 13, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 93. பெருந்தகை புண்பட்டாய்! பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 – இல் காணலாம்.பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்-81. யார்கொல் அளியர்?

Posted by - ஏப்ரல் 13, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் 81. யார்கொல் அளியர்? பாடியவர்: சாத்தந்தையார். இப்புலவரைப் பற்றிய குறிப்புகளை 80-ஆவது பாடலில் காணலாம். பாடப்பட்டோன்: சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி. இவனைப் பற்றிய குறிப்புகளை…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 76. அதுதான் புதுமை!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 76. அதுதான் புதுமை! புறம் 76. அதுதான் புதுமை! புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் Buy Book From amazon:…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்- 80. காணாய் இதனை!

Posted by - ஏப்ரல் 13, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 80. காணாய் இதனை! பாடியவர்: சாத்தந்தையார். சாத்தந்தையார் என்னும் சொல் சாத்தனின் தந்தை எனப் பொருள்படுமாயினும் சாத்தன் என்பவரைப் பற்றிய…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

3. வன்மையும் வண்மையும்! – DNA

Posted by - ஏப்ரல் 11, 2020 0
  புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்   3. வன்மையும் வண்மையும்!   பாடல் ஆசிரியர்: இரும்பிடர்த் தலையார். இப்பாடலில், யானையின் பெரிய கழுத்தை “இரும்பிடர்த்தலை” என்று…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன