புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 38. வேண்டியது விளைக்கும் வேந்தன்!

1217 0

புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்

புறம்
38. வேண்டியது விளைக்கும் வேந்தன்!

பாடல் ஆசிரியர்: ஆவூர் மூலங்கிழார் (38, 40, 166, 177, 178, 196, 261, 301). இவர் ஆவூர் மூலம் என்னும் ஊரைச் சார்ந்தவர். இவர் சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனையும், மல்லி கிழான் காரியாதியையும், பாண்டியன் கீரஞ்சாத்தனையும், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனையும் பாடல் ஆசிரியர்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-இல் காண்க.
பாட்டின் காரணம்: ஒருசமயம் ஆவூர் மூலங்கிழார் கிள்ளிவளவனைக் காண வந்தார். கிள்ளிவளவன், “நீர் எந்த நாட்டைச் சார்ந்தவர்? நீர் எம்மைக் நினைப்பதுண்டோ?” என்று கேட்டான். அதற்கு, ஆவூர் மூலங்கிழார், “ நீ நினைத்ததைச் செய்து முடிக்கும் ஆற்றல் மிகுந்தவன். நாங்கள் உன்னிழலில் பிறந்து உன்னிழலில் வளர்ந்தவர்கள்; நாங்கள் உன்னை நினைக்கும் அளவைச் சொல்லவும் முடியுமோ? என்று கூறி அவனை இப்பாடலில் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

வரைபுரையும் மழகளிற்றின்மிசை
வான்துடைக்கும் வகையபோல
விரவுஉருவின கொடிநுடங்கும்
வியன்தானை விறல்வேந்தே!
5 நீ உடன்று நோக்கும்வாய் எரிதவழ
நீ நயந்து நோக்கும்வாய் பொன்பூப்பச்
செஞ்ஞாயிற்று நிலவுவேண்டினும்
வெண்திங்களுள் வெயில்வேண்டினும்
வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின்
10 நின்நிழல் பிறந்து நின்நிழல் வளர்ந்த
எம்அளவு எவனோ மற்றே? இன்நிலைப்
பொலம்பூங் காவின் நன்னாட் டோரும்
செய்வினை மருங்கின் எய்தல் அல்லதை
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும்
15 கடவ தன்மையின் கையறவு உடைத்துஎன
ஆண்டுச்செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின்
நின்நாடு உள்ளுவர் பரிசிலர்
ஒன்னார் தேஎத்தும் நின்னுடைத் தெனவே.

அருஞ்சொற்பொருள்:
1. வரை = மலை, மலையுச்சி; புரைய = ஒரு உவமைச் சொல்; புரைதல் = ஒத்தல்; மழம் = இளமை. 3. விரவு = கலப்பு; உருவு = வடிவம், உருவம்; நுடங்கும் = அசையும், ஆடும். 4. வியன் = பரந்த; விறல் = வெற்றி. 5. உடன்று = வெகுண்டு. 6. நயத்தல் = அன்பு செய்தல். 11. மற்று – அசைச் சொல். 15. கடவது = செய்ய வேண்டியது; கையறுதல் = செயலறுதல். 16. நுகர்ச்சி = அனுபவம்.

கொண்டு கூட்டு: நீ வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின், விண்ணுலகத்து நுகர்ச்சி ஈண்டும் கூடலின், ஒன்னார் தேயத்திருந்தும் பரிசிலர் நின்னாடு நின்னை உடைத் தென்று நின்னாட்டை உள்ளுவர்; ஆதலான், நின் நிழல் பிறந்து நின் நிழல் வளர்ந்த எம் அளவு எவனோ எனக் கூட்டுக.

பாடல் விளக்கம்: மலைபோன்ற இளம் யானைகளின்மேல், ஆகாயத்தைத் தடவுவதுபோல் பல நிறங்கள் கலந்த கொடிகள் அசைந்து ஆடுகின்றன. பெரிய படையையுடைய வெற்றி பொருந்திய வேந்தே! நீ சினந்து பார்த்தால் தீ பரவும்; அன்புடன் பார்த்தால் பொன் விளங்கும்; ஞாயிற்றில் நிலவை விரும்பினாலும், திங்களில் வெயிலை விரும்பினாலும் வேண்டியதை விளைவிக்கும் ஆற்றல் உடையவன். இனிய நிலையையுடைய, பொன்னாலான பூக்கள் நிறைந்த சோலைகள் உள்ள நல்ல நாடாகிய விண்ணுலகத்தில் உள்ளோர், தாம் செய்த நல்வினைக்கேற்ப இன்பம் அனுபவிக்க முடியுமே தவிர, அங்கே செல்வமுடையோர் இல்லாதோர்க்கு வழங்குவதும், வறியவர்கள் செல்வமுடையவர்களிடத்துச் சென்று இரத்தலும் செய்யக்கூடிய செயல்கள் அல்ல. விண்ணுலகில் அனுபவிக்கக் கூடிய இன்பம் மட்டுமல்லாமல் ஈகையினால் வரும் இன்பத்தையும் உன் நாட்டில் அனுபவிக்க முடியும் என்று கருதி, உன் பகைவர்களின் நாட்டில் இருந்தாலும் உன்னாடு உன்னை உடையதால் பரிசிலர் உன் நாட்டையே நினைப்பர். ஆதலால், உன் நிழலில் பிறந்து உன் நிழலில் வளர்ந்த எம் நினைவின் அளவைக் கூறவும் முடியுமோ?

Related Post

புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 7. வளநாடும் வற்றிவிடும்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 7. வளநாடும் வற்றிவிடும்! பாடல் ஆசிரியர்: கருங்குழல் ஆதனார் (7, 224). ஆதனார் என்பது இப்புலவரின் இயற்பெயர். இவர் முதியவராக…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்- 97. இறுக்கல் வேண்டும் திறையே!

Posted by - ஏப்ரல் 13, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 97. இறுக்கல் வேண்டும் திறையே! பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 – இல் காணலாம்.பாடப்பட்டோன்: அதியமான்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 45. தோற்பது நும் குடியே!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 45. தோற்பது நும் குடியே! பாடல் ஆசிரியர்: கோவூர் கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 31-இல் காண்க.பாடப்பட்டோர்: சோழன்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்- 80. காணாய் இதனை!

Posted by - ஏப்ரல் 13, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 80. காணாய் இதனை! பாடியவர்: சாத்தந்தையார். சாத்தந்தையார் என்னும் சொல் சாத்தனின் தந்தை எனப் பொருள்படுமாயினும் சாத்தன் என்பவரைப் பற்றிய…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 59. பாவலரும் பகைவரும்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 59. பாவலரும் பகைவரும்! பாடல் ஆசிரியர்: பெருந்தலைச் சாத்தனார் (151,164,165, 205, 209, 294). இவர் பெருந்தலை என்னும் ஊரைச்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன