புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 40. ஒரு பிடியும் எழு களிரும்!

1215 0

புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்

புறம்
40. ஒரு பிடியும் எழு களிரும்!

பாடல் ஆசிரியர்: ஆவூர் மூலங்கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 38-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-இல் காண்க.
பாட்டின் காரணம்: ஒருமுறை, ஆவூர் மூலங்கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் காணச் சென்றார். அவனைக் காண்பது அரிதாய் இருந்தது. சில நாட்களுக்குப் பிறகு, அவனைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. இப்பாடலில், “இன்று உன்னைக் காண்பது எளிதாய் இருந்தது. அதுபோல், நீ என்றும் காட்சிக்கு எளியவனாகவும், இன்சொல் கூறுபவனாகவும் இருப்பாயாக.” என்று அறிவுரை கூறுகிறார். மற்றும், அவன் வெற்றிகளையும், அவன் நாட்டின் வளத்தையும் இப்பாடலில் நயம்படப் புகழ்கிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: செவியறிவுறூஉ. அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்.

நீயே, பிறர்ஓம்புறு மறமன்னெயில்
ஓம்பாது கடந்தட்டுஅவர்
முடிபுனைந்த பசும்பொன்னின்
அடிபொலியக் கழல்தைஇய
5 வல்லாளனை வயவேந்தே!
யாமேநின், இகழ்பாடுவோர் எருத்தடங்கப்
புகழ்பாடுவோர் பொலிவுதோன்ற
இன்றுகண் டாங்குக் காண்குவம் என்றும்
இன்சொல்எண் பதத்தை ஆகுமதி; பெரும!
10 ஒருபிடி படியுஞ் சீறிடம்
எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே!

அருஞ்சொற்பொருள்:
1. ஓம்பல் = பாதுகாத்தல்; எயில் = அரண். 2. கடந்து = எதிர் நின்று; அட்டு = அழித்து. 4. தைஇய = இழைத்த. 5. வயம் = வெற்றி. 6. எருத்து = கழுத்து. 7. பொலித்தல் = சிறத்தல். 10. பிடி = பெண் யானை.

கொண்டு கூட்டு: நாடுகிழ வோயே! இன்சொல் எண்பதத்தை ஆகுமதி; அதனால், நின் இகழ் பாடுவோர் எருத்தடங்கப், புகழ்பாடுவோர் பொலிவுதோன்ற, யாம் இன்று கண்டாங்கு என்றும் காண்குவம் எனக் கூட்டுக.

பாடல் விளக்கம்: பகைவர்கள் பாதுகாத்த அரண்களை ஒருபொருட்டாக மதியாது, அவற்றை அழித்து, பகைவர்களின் முடியில் சூடிய பொன்னாலாகிய மகுடங்களை உருக்கி உன் கால்களில் வீரக் கழலாக அணிந்த வலிய ஆண்மையுடைய வேந்தே! ஒரு பெண்யானை படுக்கும் சிறிய இடத்தில் ஏழு யானைகளுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் விளையும் நாட்டுக்கு உரியவனே! தலைவா! நீ இன்சொல் உடையவனாகவும் காட்சிக்கு எளியவனாகவும் இருப்பாயாக. உன்னை இகழ்ந்து பாடுவோர் தலைகுனியவும், உன்னைப் புகழ்ந்து பாடுவோர் பெருமிதத்தால் தலை நிமிர்ந்து விளங்கவும், இன்று கண்டதுபோல் என்றும் காண்போமாக.

Related Post

புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்- 86. கல்லளை போல வயிறு!

Posted by - ஏப்ரல் 13, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 86. கல்லளை போல வயிறு! பாடியவர்: காவற் பெண்டு (காதற்பெண்டு எனவும் பாடம்.) காவற் பெண்டு என்பவர் மறக்குடியில் பிறந்து…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 27. புலவர் பாடும் புகழ்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 27. புலவர் பாடும் புகழ்! பாடல் ஆசிரியர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார் ( 27 – 30, 325). இவர்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 45. தோற்பது நும் குடியே!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 45. தோற்பது நும் குடியே! பாடல் ஆசிரியர்: கோவூர் கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 31-இல் காண்க.பாடப்பட்டோர்: சோழன்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 16. செவ்வானும் சுடுநெருப்பும்

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 16. செவ்வானும் சுடுநெருப்பும் பாடல் ஆசிரியர்: பாண்டரங் கண்ணனார் (16). இவருடைய இயற்பெயர் கண்ணனார். இவர் தந்தையார் பெயர் பாண்டரங்கன்.…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்- 106. கடவன் பாரி கைவண்மையே!

Posted by - ஏப்ரல் 13, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 106. கடவன் பாரி கைவண்மையே! பாடியவர்: கபிலர். கபிலரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 105 – இல் காணலாம்.பாடப்பட்டோன்: வேள்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன