புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்
புறம்
51. கொள்க எனக் கொடுத்த மன்னர் நடுக்கற்றனரே
பாடப்பட்டோன்: பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி. கூடகாரம் என்பது பாண்டிய நாட்டிலிருந்த ஓரூர். அவ்வூரில் இறந்ததால் இவன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி என்று அழைக்கப்பட்டான். இவன் போர் புரிவதில் பேராற்றல் கொண்டவனாக இருந்தான் என்பது இப்பாடலிருந்தும் இதற்கு அடுத்த பாடலிலிருந்தும் தெரிகிறது.
பாட்டின் காரணம்: பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி ஆட்சி புரிந்த காலத்தில், அவன் ஆணைக்குப் பணிந்து திறை செலுத்தி வாழாமல் அவனுடன் பகைமை கொண்டு போரிட்டவர்களின் வலிமையை அழித்து அவர்கள் நாட்டிலும் தன் ஆட்சியை நிலை நாட்டினான். அவன் வலிமையை இப்பாடலில் ஐயூர் முடவனார் பாராட்டுகிறார்.
திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.
நீர்மிகின் சிறையும் இல்லை; தீமிகின்
மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை;
வளிமிகின் வலியும் இல்லை; ஒளிமிக்கு
அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி,
5 தண்தமிழ் பொதுஎனப் பொறாஅன் போர்எதிர்ந்து
கொண்டி வேண்டுவன் ஆயின், கொள்கஎனக்
கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே;
அளியரோ அளியர்அவன் அளிஇழந் தோரே;
நுண்பல் சிதலை அரிதுமுயன்று எடுத்த
10 செம்புற்று ஈயல் போல
ஒருபகல் வாழ்க்கைக்கு உலமரு வோரே.
அருஞ்சொற்பொருள்:
1. சிறை = தடை, கட்டுப்பாடு. 3. வளி = காற்று. 4. ஓர் அன்ன = ஒப்ப. 6. கொண்டி = பிறர் பொருள் முதலியவற்றைக் கொள்ளுதல் (திறை). 8. அளி = இரக்கம்; அளியர் = இரங்கத் தக்கவர்; அளி இழந்தோர் = இரக்கத்தை இழந்தோர். 9. சிதலை = கறையான். 11. உலமறல் = சுழற்சி.
கொண்டு கூட்டு: வழுதி, தமிழ்ப் பொதுவெனப் பொறானாய்க் கொண்டி வேண்டுவனாயின், கொடுத்த மன்னர் நடுக்கற்றனர்; கொடாமையின் அவன் அளியிழந்தோர் , ஒருபகல் வாழ்க்கைக்கு உலமருவோர்; ஆதலான் அவர் அளியோரோ அளியோர் எனக் கூட்டுக.
பாடல் விளக்கம்: நீர் மிகுந்தால் அதைத் தடுக்கக்கூடிய அரணும் இல்லை; தீ அதிகமானால், உலகத்தில் நிலைபெற்ற உயிர்களைப் பாதுகாக்கக்கூடிய நிழலுமில்லை; காற்று மிகையானால் அதைத் தடுக்கும் வலிமை உடையது எதுவும் இல்லை; நீர், தீ மற்றும் காற்றைப் போல் வலிமைக்குப் புகழ் வாய்ந்த, சினத்தோடு போர் புரியும் வழுதி, தமிழ் நாடு மூவேந்தர்களுக்கும் பொது என்று கூறுவதைப் பொறுக்க மாட்டான். அவனை எதிர்த்தவர்களிடமிருந்து திறை வேண்டுவான். அவன் வேண்டும் திறையைக் ”கொள்க” எனக் கொடுத்த மன்னர்கள் நடுக்கம் தீர்ந்தனர். அவன் அருளை இழந்தவர்கள், பல சிறிய கறையான்கள் கடினமாக உழைத்து உருவாக்கிய சிவந்த நிறமுடைய புற்றிலிருந்து புறப்பட்ட ஈயலைப்போல, ஒரு பகல் பொழுது வாழும் உயிர் வாழ்க்கைக்கு அலைவோராவர். ஆகவே, அவர்கள் மிகவும் இரங்கத் தக்கவர்கள்.