புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 55. அறநெறி முதற்றே அரசின் கொற்றம்

2315 0

புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்

புறம்
55. அறநெறி முதற்றே அரசின் கொற்றம்

பாடல் ஆசிரியர்: மதுரை மருதன் இளநாகனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 52-இல் காண்க.
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் (55 – 57,196, 198). இலவந்திகை என்ற சொல்லுக்கு நீர்நிலையைச் சார்ந்த சோலை என்று பொருள். இப்பாண்டிய மன்னன் ஒருஇலவந்திகையில் இருந்த பள்ளியறையில் இறந்ததால் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்று அழைக்கப்பட்டான். இவன் கொடையிலும் வீரத்திலும் சிறந்தவன். இவனைப் பாடிய புலவர்கள்: மதுரை மருதன் இளநாகனார், மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார், ஆவூர் மூலங்கிழார், வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்.
பாட்டின் காரணம்: படை வலிமை மிகுந்ததாகவும் சிறப்புடையதாகவும் இருந்தாலும் அரசனுடய வெற்றிக்கு அடிப்படைக் காரணம் அறநெறிதான் என்று மதுரை மருதன் இளநாகனார் இப்பாடலில் நன்மாறனுக்கு அறிவுரை கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: செவியறிவுறூஉ. அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்.

ஓங்குமலைப் பெருவில் பாம்புஞாண் கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெருவிறல் அமரர்க்கு வெற்றி தந்த
கறைமிடற்று அண்ணல் காமர் சென்னிப்
5 பிறைநுதல் விளங்கும் ஒருகண் போல
வேந்து மேம்பட்ட பூந்தார் மாற,
கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகல்மறவரும்என
நான்குடன் மாண்ட தாயினும் மாண்ட
10 அறநெறி முதற்றே அரசின் கொற்றம்;
அதனால், நமரெனக் கோல்கோ டாது,
பிறர்எனக் குணங் கொல்லாது,
ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும்,
திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும்,
15 வானத்து அன்ன வண்மையும் மூன்றும்
உடையை ஆகி இல்லோர் கையற
நீநீடு வாழிய நெடுந்தகை! தாழ்நீர்
வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்
நெடுவேள் நிலைஇய காமர் வியன்துறைக்
20 கடுவளி தொகுப்ப ஈண்டிய
வடுஆழ் எக்கர் மணலினும் பலவே!

அருஞ்சொற்பொருள்:
1. ஓங்கு = உயர்ந்த; ஞாண் = கயிறு; கொளீஇ = கொண்டு. 2. கணை = அம்பு; எயில் = ஊர், புரம், மதில், அரண்; உடற்றுதல் = அழித்தல். 3.விறல் = வலிமை; அமரர் = தேவர். 4. மிடறு = கழுத்து; அண்ணல் = தலைவன், பெரியவன்; காமர் = அழகு; சென்னி = தலை, முடி. 6.மாறன் = பாண்டியன். 7. கதழ்தல் = விரைதல்; பரிதல் = ஓடுதல்; கலி = செருக்கு; மா = குதிரை. 8. நிமிர் = உயர்ந்த; நெஞ்சு = துணிவு; புகல் = விருப்பம் (போரை விரும்பும்). 9. மாண்டது = மாண்புடையது. 10. கொற்றம் = அரசியல் (ஆட்சி). 11. நமர் = நம்முடையவர். 13. திறல் = வெற்றி, வலிமை. 14. சாயல் = மென்மை. 15. வண்மை = ஈகை. 16. கையறுதல் = இல்லாமற் போதல். 17. நெடுந்தகை = பெரியோன்; தாழ்நீர் = ஆழமான நீர். 18. புணரி = அலைகடல். 20. கடு = விரைவு. 21. வடு = கருமணல்; எக்கர் = மணற்குன்று.

கொண்டு கூட்டு: பூந்தார் மாற, நெடுந்தகை, நான்குடன் மாண்ட தாயினும்
அரசின் கொற்றம் அறநெறி முதற்றே; அதனால், நமரெனக் கோல்கோடாது, பிறர்எனக் குணங் கொல்லாது, ஆண்மையும், சாயலும், வண்மையும் உடையை ஆகி இல்லோர் கையற நீ மணலினும் பலகாலும் நீடு வாழிய எனக் கூட்டுக.

பாடல் விளக்கம்: உயர்ந்த மலையைப் பெரிய வில்லாகவும் பாம்பை நாணாகவும் கொண்டு, ஒரே அம்பில் முப்புரங்களையும் (மூன்று அசுரர்களின் பறக்கும் கோட்டைகளையும்) அழித்து, பெரிய வலிமையுடைய தேவர்களுக்கு வெற்றியைக் கொடுத்த, கரிய நிறமுடைய கழுத்தையுடைய சிவபெருமானின் அழகிய திருமுடியின் பக்கத்தில் உள்ள பிறையணிந்த நெற்றியில் உள்ள கண்போல் மூவேந்தர்களிலும் மேம்பட்ட மாலையணிந்த நன்மாறனே!

கடிய சினத்தையுடைய கொல்லும் யானைப்படை, விரைந்து செல்லும் செருக்குடைய குதிரைப்படை, உயர்ந்த கொடிகளுடைய தேர்ப்படை, நெஞ்சில் வலிமையுடன் போரை விரும்பும் காலாட்படை ஆகிய நான்கு படைகளும் உன்னிடம் சிறப்பாக இருந்தாலும், பெருமைமிக்க அறநெறிதான் உன் ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படையாகும். அதனால், இவர் நம்மவர் என்று நடுவுநிலைமையிலிருந்து தவறாமல், இவர் நமக்கு அயலார் என்று அவர் நற்குணங்களை ஒதுக்கித் தள்ளாமல், கதிரவனைப் போன்ற வீரம், திங்களைப் போன்ற குளிர்ந்த மென்மை, மழையைப் போன்ற வண்மை ஆகிய மூன்றையும் உடையவனாகி, இல்லை என்பார் இல்லை என்னும்படி நீ நெடுங்காலம் வாழ்க! பெருந்தகையே! ஆழமான நீரையுடைய கடலின் மேல் உள்ள வெண்ணிற அலைகள் மோதும் திருச்செந்தூரில் முருகக் கடவுள் நிலை பெற்றிருக்கும் அழகிய அகன்ற துறையில் பெருங்காற்றால் திரட்டப்பட்ட கருமணலினும், நீ பலகாலம் வாழ்வாயாக.

சிறப்புக் குறிப்பு: புலவர் மதுரை மருதன் இளநாகனார் பாண்டிய மன்னனுக்கு “நான்குடன் மாண்ட தாயினும் மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்” என்றும் ஆண்மையும், மென்மையும், வண்மையும் உடையவனாக அவன் இருத்தல் வேண்டும் என்றும் அறிவுரை கூறுவதால் இப்பாடல் செவியறிவுறூஉத் துறையைச் சார்ந்ததாயிற்று.

Related Post

புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 67. அன்னச் சேவலே!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 67. அன்னச் சேவலே! பாடல் ஆசிரியர்: பிசிராந்தையார் (67, 184, 191, 212). பிசிர் என்பது பாண்டிய நாட்டில் இருந்த…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 37. புறவும் போரும்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 37. புறவும் போரும்! பாடல் ஆசிரியர்: மாறோக்கத்து நப்பசலையார் (37, 39, 126, 174, 226, 280, 383). இவர்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 19. எழுவரை வென்ற ஒருவன்

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 19. எழுவரை வென்ற ஒருவன் பாடல் ஆசிரியர்: குடபுலவியனார். இவரைப் பற்றிய குறிப்புகளை பாடல் 18 -இல் காண்க.பாடப்பட்டோன்: பாண்டியன்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 52. ஊன் விரும்பிய புலி !

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 52. ஊன் விரும்பிய புலி ! பாடல் ஆசிரியர்: மருதன் இளநாகனார் (52, 55, 138, 139, 349). இவரை…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 50. கவரி வீசிய காவலன்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 50. கவரி வீசிய காவலன்! பாடல் ஆசிரியர்: மோசிகீரனார் (50, 154, 155, 156, 186). இவர் மோசி என்பவரின்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. Slot Online
  2. rtp yang tepat
  3. Slot Gacor
  4. Situs Judi Slot Online Gacor
  5. Situs Judi Slot Online
  6. Situs Slot Gacor 2023 Terpercaya
  7. SLOT88
  8. Situs Judi Slot Online Gampang Menang
  9. Judi Slot Online Jackpot Terbesar
  10. Slot Gacor 88
  11. rtp Slot Terpercaya
  12. Situs Judi Slot Online Terbaru 2023
  13. Situs Judi Slot Online Terpercaya 2023 Mudah Menang
  14. Daftar Situs Judi Slot Online Gacor Terbaik
  15. Slot Deposit Pulsa Tanpa Potongan
  16. Situs Judi Slot Online Resmi
  17. Slot dana gacor
  18. Situs Slot Gacor 2023
  19. rtp slot yang tepat
  20. slot dana
  21. harum4d slot