புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 56. கடவுளரும் காவலனும்!

2118 0

புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்

புறம்
56. கடவுளரும் காவலனும்!

பாடல் ஆசிரியர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் (56,189, 395). இவர் மதுரைக் கணக்காயனாரின் மகன் என்பதனால் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்று அழைக்கப்பட்டார். இவரும் மதுரை நக்கீரர் என்று அழைக்கப்பட்டவரும் ஒருவரே என்பது ஒரு சாரர் கருத்து. வேறு சிலர், மதுரை நக்கீரர் வேறு இவர் வேறு என்பர். இவர் கடைசங்கத்தின் தலைவராக இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர் தெளிந்த அறிவும் சிறந்த புலமையும் உடையவர். இவர் புறநானூற்றில் மூன்று செய்யுட்களையும் (56, 189, 395), அகநானூற்றில் 17 செய்யுட்களையும், நற்றிணையில் 7 செய்யுட்களையும், குறுந்தொகையில் 8 செய்யுட்களையும் இயற்றியவர். மற்றும், பத்துப்பாட்டில் முதலாவதாகிய திருமுருகாற்றூப்படையையும் ஏழாவதாகிய நெடுநல்வாடையையும் இய்ற்றியவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. இறையனார் அகப்பொருளுக்கு இவர் எழுதிய பாடல் விளக்கம் மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

குறுந்தொகையில், “கொங்குதேர் வாழ்க்கை” என்று தொடங்கும் பாடலை (குறுந்தொகை – 2) சிவபெருமான் இயற்றியதாகக் கருதப்படுகிறது. அப்பாடலில் பொருள் குற்றம் இருப்பதாக நக்கீரர் கூறியதாகவும், அப்பொழுது சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து தான் யார் என்பதை நக்கீரருக்குத் தெரிவித்தாகவும், நக்கீரர், “நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே” என்று சொன்னதாகவும் திருவிளையாடல் புராணத்தில் கூறப்படுகிறது. (குறுந்தொகை, புலவர் துரை இராசாராம், திருமகள் நிலையம்)
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 55-இல் காண்க.
பாட்டின் காரணம்: உலகம் காக்கும் கடவுளர் சிவன், பலராமன், திருமால், முருகன் ஆகிய நால்வரையும் ஒவ்வொரு வகையில் ஒத்திருப்பதாகக் கூறி, “வேந்தே, மகளிர் தரும் மதுவை அருந்தி இன்பங்களை நுகர்ந்து, உலகின் இருளை நீக்கும் ஞாயிற்றைப் போலவும், திங்களைப் போலவும் நீ நிலைபெற்று வாழ்க” என்று இப்பாடலில் நக்கீரர் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை வாழ்த்துகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பூவை நிலை: மனிதரைத் தேவரோடு ஒப்பிட்டுக் கூறுதல் பூவை நிலை எனப்படும்.

ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும்,
கடல்வளர் புரிவளை புரையும் மேனி
அடல்வெந் நாஞ்சில் பனைக்கொடி யோனும்,
5 மண்ணுறு திருமணி புரையும் மேனி
விண்ணுயர் புள்கொடி விறல்வெய் யோனும்
மணிமயில் உயரிய மாறா வென்றிப்
பிணிமுக ஊர்தி ஒண்செய் யோனும்என
ஞாலம் காக்கும் கால முன்பின்
10 தோலா நல்இசை நால்வர் உள்ளும்
கூற்றுஒத் தீயே மாற்றருஞ் சீற்றம்;
வலிஒத் தீயே வாலி யோனைப்;
புகழ்ஒத் தீயே இகழுநர் அடுநனை;
முருகுஒத் தீயே முன்னியது முடித்தலின்;
15 ஆங்குஆங்கு அவரவர் ஒத்தலின் யாங்கும்
அரியவும் உளவோ நினக்கே? அதனால்
இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈயா
யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனை கலத்து ஏந்தி நாளும்
20 ஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்கினிது ஒழுகுமதி, ஓங்குவாள் மாற!
அங்கண் விசும்பின் ஆரிருள் அகற்றும்
வெங்கதிர்ச் செல்வன் போலவும் குடதிசைத்
தண்கதிர் மதியம் போலவும்
25 நின்று நிலைஇயர் உலகமோடு உடனே.

அருஞ்சொற்பொருள்:
1. ஏறு = காளைமாடு; வலன் = வெற்றி; எரி = ஒளி,நெருப்பு; மருள் – உவமை உருபு; அவிர் = ஒளி. 2. மாற்று = எதிர்; கணிச்சி = சிவனுடைய ஆயுதம்; மணி = நீலமணி; மிடறு = கழுத்து. 3. புரி = முறுக்கு; வளை = சங்கு; புரைதல் = ஒத்தல்; அடல் = கொல்லுதல். 4. அடல் = கொல்லுதல்; நாஞ்சில் = கலப்பை. 5. மண்ணுதல் = கழுவுதல். 6. விறல் = வெற்றி; வெய்யோன் = விருப்பம் உடையவன். 7. மணி = நீலமணி; மாறா = மாறாத. 8. பிணிமுகம் = மயில். 9. முன்பு = வலிமை. 10. தோலா = தோல்வி காணாத. 11. கூற்று = எமன் (இங்கு சிவனைக் குறிக்கிறது). 12. வாலி = வெண்ணிறமுடையோன் (பலராமன்). 13. இகழுநர் = பகைவர். 14. முன்னுதல் = நினைத்தல். 17. அருகுதல் = குறைதல். 20. மடுத்தல் = உண்ணுதல் (ஊட்டுதல்). 23. குடதிசை = மேற்குத் திசை. 25. நிலைஇயர் = நிலைபெறுவாயாக.

பாடல் விளக்கம்: காளைக்கொடியை வெற்றியின் அடையாளமாக உயர்த்திப் பிடித்து, நெருப்புப் போல் ஒளிவிடும் சடையோடும், ஒப்பற்ற கணிச்சி என்னும் ஆயுதத்தோடும், நீலநிறக் கழுத்தோடும் காட்சி அளிப்பவன் சிவபெருமான். கடலில் வளரும் முறுக்கிய சங்கு போன்ற வெண்ணிற மேனியும், கொல்லுதலை விரும்பும் கலப்பையும், பனைக்கொடியும் உடையவன் பலராமன். கழுவப்பட்ட அழகிய நீலமணி போன்ற உடலும், வானளாவ உயர்ந்த கருடக் கொடியும் கொண்டு வெற்றியை விரும்புபவன் திருமால். நீலமணி போன்ற நிறத்தையுடைய மயிற்கொடியும், உறுதியான வெற்றியும், மயிலை ஊர்தியாகவும் (வாகனமாகவும்) கொண்ட ஓளிபொருந்தியவன் முருகன். இந்நான்கு கடவுளரும் உலகம் காக்கும் வலிமையும் அழியாத புகழும் உடையவர்கள். இந்த நால்வருள்ளும், உன்னுடைய நீங்காத சினத்தால் நீ அழிக்கும் கடவுளாகிய சிவனுக்கு ஒப்பானவன்; வலிமையில் பலராமனுக்கு ஒப்பானவன்; புகழில் பகைவரைக் கொல்லும் திருமாலுக்கு ஒப்பானவன்; நினைப்பதை முடிப்பதில் முருகனுக்கு ஒப்பானவன். இவ்வாறு ஆங்காங்கு அந்த அந்தக் கடவுளை ஒத்தவனாக இருப்பதால், உன்னால் செய்ய முடியாத செயலும் உண்டோ? அதனால், இரப்போர்க்கு அரிய அணிகலன்களை வழங்கி, யவனர் நல்ல கலங்களில் கொண்டுவந்த, குளிர்ந்த மணமுள்ள மதுவைப் பொன்னால் செய்யப்பட்ட அழகிய கிண்ணங்களில் ஏந்தி வந்து, ஓளிபொருந்திய வளையல் அணிந்த மக்ளிர் உனக்கு நாள்தோறும் கொடுக்க, அதைக் குடித்து, மகிழ்ச்சியோடு சிறப்பாக இனிது வாழ்வாயாக.

ஓங்கிய வாளையுடைய பாண்டியன் நன்மாறனே! அழகிய ஆகாயத்தில் நிறைந்த இருளை அகற்றும் கதிரவனைப் போலவும் மேற்குத் திசையில் தோன்றும் குளிர்ந்த கதிர்களையுடைய திங்களைப் போலவும் இவ்வுலகத்தோடு நின்று நிலைபெற்று நீ வாழ்வாயாக.

சிறப்புக் குறிப்பு: இப்பாடலில், பாண்டியனை சிவன், பலராமன், திருமால் மற்றும் முருகன் ஆகிய கடவுளர்க்கு ஒப்பிடுவதால், இப்பாடல் பூவை நிலையைச் சார்ந்ததாயிற்று.

Related Post

புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 66. நின்னினும் நல்லன் அல்லனோ!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 66. நின்னினும் நல்லன் அல்லனோ! பாடல் ஆசிரியர்: வெண்ணிக் குயத்தியார்(66). வெண்ணி என்பது திருவாரூர் மாவட்டத்தில், நீடாமங்கலம் என்னும் ஊருக்கு…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 25. கூந்தலும் வேலும்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 25. கூந்தலும் வேலும்! பாடல் ஆசிரியர்: கல்லாடனார். இவரை பற்றிய குறிப்புகளைப் பாடல் 23-இல் காண்க.பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 32. பூவிலையும் மாடமதுரையும்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 32. பூவிலையும் மாடமதுரையும்! பாடல் ஆசிரியர்: கோவூர்கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் – 31இல் காண்க.பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்- 103. புரத்தல் வல்லன்!

Posted by - ஏப்ரல் 13, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 103. புரத்தல் வல்லன்! பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 – இல் காணலாம்.பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 65. நாணமும் பாசமும்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 65. நாணமும் பாசமும்! பாடல் ஆசிரியர்: கழாத்தலையார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 62-இல் காண்க.பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சேரலாதன். கரிகால்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. Slot Online
  2. rtp yang tepat
  3. Slot Gacor
  4. Situs Judi Slot Online Gacor
  5. Situs Judi Slot Online
  6. Situs Slot Gacor 2023 Terpercaya
  7. SLOT88
  8. Situs Judi Slot Online Gampang Menang
  9. Judi Slot Online Jackpot Terbesar
  10. Slot Gacor 88
  11. rtp Slot Terpercaya
  12. Situs Judi Slot Online Terbaru 2023
  13. Situs Judi Slot Online Terpercaya 2023 Mudah Menang
  14. Daftar Situs Judi Slot Online Gacor Terbaik
  15. Slot Deposit Pulsa Tanpa Potongan
  16. Situs Judi Slot Online Resmi
  17. Slot dana gacor
  18. Situs Slot Gacor 2023
  19. rtp slot yang tepat
  20. slot dana
  21. harum4d slot