புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 57. காவன்மரமும் கட்டுத்தறியும்!

1514 0

புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்

புறம்
57. காவன்மரமும் கட்டுத்தறியும்!

பாடல் ஆசிரியர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் (57, 58,169,171, 353). இவர் புறநானூற்றில் ஐந்து பாடல்கள் இயற்றியது மட்டுமல்லாமல், அகநானூற்றில் மூன்று பாடல்களும் (107, 123, 285), குறுந்தொகையில் ஒரு பாடலும் (297) இயற்றியவர்.
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 55-இல் காண்க.
பாட்டின் காரணம்: ஒரு சமயம், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் பகைவருடன் போர் செய்வதற்குச் சென்று கொண்டிருந்தான். அவனுடைய வலிமையையும் போர் புரியும் ஆற்றலையும் நன்கு அறிந்த காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார், “வேந்தே, உன் வீரர்கள் பகைவர்களின் நாட்டு வயல்களை கொள்ளை கொண்டால் கொள்ளட்டும்; வேண்டுமானால் அவர்களின் ஊர்களுக்குத் தீ மூட்டுக; ஆனால், அவர்களின் காவல் மரங்களை வெட்டுவதைத் தவிர்ப்பாயாக.” என்று இப்பாடலில் அவனுக்கு அறிவுறை கூறுகிறார்

திணை: வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.
துறை: துணை வஞ்சி. பிறரை வெற்றி கொள்ள நிற்பவனுக்குச் சந்து செய்வித்தல்.

வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன
பாடல் விளக்கம்சால் சிறப்பின் புகழ்சால் மாற!
நின்னொன்று கூறுவது உடையேன்; என்னெனின்
5 நீயே, பிறர்நாடு கொள்ளும் காலை அவர்நாட்டு
இறங்குகதிர் கழனிநின் இளையரும் கவர்க;
நனந்தலைப் பேரூர் எரியும் நக்க;
மின்னுநிமிர்ந் தன்னநின் ஒளிறுஇலங்கு நெடுவேல்
ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம்
10 கடிமரம் தடிதல் ஓம்புநின்
நெடுநல் யானைக்குக் கந்தாற் றாவே.

அருஞ்சொற்பொருள்:
1. வல்லார் = திறமையற்றவர்; வல்லுநர் = திறமையுள்ளவர். 3. பாடல் விளக்கம் = சொல்; சாலல் = மிகுதியாதல், மேன்மையுடைத்தாதல். 6. இறங்குதல் = வளைதல்; இளையர் = வேலைக்காரர், வீரர்; கவர்தல் = எடுத்தல் (கொள்ளையடித்தல்). 7. நனம் = அகற்சி; நக்க = சுடுக. 8. இலங்கல் = விளங்குதல். 9. ஒன்னார் = பகைவர்; செகுத்தல் = அழித்தல்; என்னதூஉம் = சிறிதும். 10. கடிமரம் = பகைவர் அணுகாவண்ணம் வளர்த்துக் காக்கப்படும் காவல் மரம்; தடிதல் = வெட்டல்; ஓம்புதல் = தவிர்தல். 11. கந்து = யானை கட்டும் தறி; ஆற்றுதல் = கூடியதாதல்.

கொண்டு கூட்டு: மாற, நின் யானைக்கு கந்து ஆற்றாவாதலால் கடி மரந் தடிதல் ஓம்பு எனக் கூட்டுக.

பாடல் விளக்கம்: திறமையற்றவர்களாக இருந்தாலும் திறமையுடையவர்களாக இருந்தாலும், உன்னைப் புகழ்வோர்க்கு அருள் புரிவதில் நீ திருமாலைப் போன்றவன். சொல்லுதற்கரிய புகழ் பொருந்திய மாறனே! நான் உன்னிடம் ஒன்று கூறுவேன். அது என்னவென்றால், நீ பிறர் நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும் பொழுது, அவர்களின் நாட்டில், வளைந்த கதிர்களையுடய வயல்களை உன்னுடய வீரர்களும் கொள்ளை கொள்ளட்டும்; அகன்ற பெரிய இடங்கள் உள்ள பெரிய ஊர்களைத் தீயால் வேண்டுமானால் எரிப்பாயாக; மின்னலைப் போல் ஒளியுடன் விளங்கும் உன்னுடைய நெடிய வேல், பகைவர்களை அழித்தாலும் அழிக்கட்டும்; அவர்களுடைய காவல் மரங்களை வெட்டுவதை மட்டும் தவிர்ப்பாயாக. ஏனெனில், உன் நெடிய யானைகளுக்கு அம்மரங்கள் கட்டுத் தறியாகும் தகுதி அற்றவை.

சிறப்புக் குறிப்பு: காவல் மரங்களை வெட்டினால் போர் முடிவுபெறும். ஆகவே, காவல் மரங்களை வெட்டாமல் இருந்தால், பகைவர்கள் பணிந்து திறை கட்டுவதற்கு உடன்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அதனால், புலவர், காவல்மரங்களை வெட்டுவதைத் தவிர்த்துப் பகைவர்களுடன் சமாதானமாகப் போவதற்கு வழிவகுக்குமாறு இப்பாடலில் பாண்டியனுக்கு அறிவுரை கூறுகிறார். இப்பாடலில், புலவர் சமாதானத்துக்கு வழிகாட்டுவதால், இப்பாடல் துணைவஞ்சி என்னும் துறையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.

Related Post

புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 30. எங்ஙனம் பாடுவர்?

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 30. எங்ஙனம் பாடுவர்? பாடல் ஆசிரியர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 27-இல் காண்க.பாடப்பட்டோன்: சோழன்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்- 98. பகைவர்களின் வளநாடு கெடுமோ!

Posted by - ஏப்ரல் 13, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 98. பகைவர்களின் வளநாடு கெடுமோ! பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 – இல் காணலாம்.பாடப்பட்டோன்: அதியமான்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 53. செந்நாவும் சேரன் புகழும்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 53. செந்நாவும் சேரன் புகழும்! பாடல் ஆசிரியர்: பொருந்தில் இளங்கீரனார் ( 53). இளங்கீரனார் என்பது இவர் இயற்பெயர். இவர்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 64. புற்கை நீத்து வரலாம்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 64. புற்கை நீத்து வரலாம்! பாடல் ஆசிரியர்: நெடும்பல்லியத்தனார்(64). புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றுதான். பல்லியம் என்று…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன