புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 58. புலியும் கயலும்!

1423 0

புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்

புறம்
58. புலியும் கயலும்!

பாடல் ஆசிரியர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 57-இல் காண்க.
பாடப்பட்டோர்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும். சோழன் பெருந்திருமாவளவன், குராப்பள்ளி என்னும் இடத்தில் இறந்ததால் சோழன் குராப்பளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்று அழைக்கப்பட்டான். இவன் போர் செய்வதில் வல்லவன். இவன் காலத்தில் வாழ்ந்த சேரமன்னன், கொங்கு நாட்டவர்களின் துணையோடு இவனோடு போரிட்டான். அப்போரில், இச்சோழ மன்னன் வெற்றி பெற்றான். இவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் மிகுந்த நட்புடையவர்களாக இருந்தார்கள்.
பாட்டின் காரணம்: ஒருசமயம், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கே இருந்தனர். அதைக் கண்ட புலவர் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பெருமகிழ்ச்சி அடைந்தார். சோழனும் பாண்டியனும் ஒருங்கே இருந்ததைப் பலராமனும் திருமாலும் ஒருங்கே இருப்பதற்கு ஒப்பிட்டு, “அவர்கள் தொடர்ந்து ஒற்றுமையாக இருந்தால் இவ்வுலகம் அவர்கள் கையகப்படுவது உறுதி என்று இப்பாடலில் கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: உடன் நிலை: ஒருங்கே இருக்கும் இருவரைப் பாடுவது உடன் நிலை எனப்படும்.

நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவனே
முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக்
கொழுநிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது
5 நல்லிசை முதுகுடி நடுக்குஅறத் தழீஇ
இளையது ஆயினும் கிளைஅரா எறியும்
அருநரை உருமின் பெருநரைப் பொறாஅச்
செருமாண் பஞ்சவர் ஏறே; நீயே
அறந்துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே,
10 நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென
வரைய சாந்தமும் திரைய முத்தமும்
இமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும்
தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே!
பால்நிற உருவின் பனைக்கொடி யோனும்
15 நீல்நிற உருவின் நேமி யோனும்என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின் றாஅங்கு
உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி
இந்நீர் ஆகலின் இனியவும் உளவோ?
இன்னும் கேண்மின்நும் இசைவா ழியவே;
20 ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும்
உடனிலை திரியீர் ஆயின் இமிழ்திரைப்
பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம்
கையகப் படுவது பொய்யா காதே;
அதனால், நல்ல போலவும் நயவ போலவும்
25 தொல்லோர் சென்ற நெறியர் போலவும்
காதல் நெஞ்சின்நும் இடைபுகற்கு அலமரும்
ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது
இன்றே போல்கநும் புணர்ச்சி; வென்றுவென்று
அடுகளத்து உயர்கநும் வேலே; கொடுவரிக்
30 கோள்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி
நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த
குடுமிய ஆகபிறர் குன்றுகெழு நாடே.

அருஞ்சொற்பொருள்:
1. கிழவன் = உரியவன். 2. முழுமுதல் = அடிமரம்; கோளி = பூவாது காய்க்கும் மரம்; கொழு நிழல் = குளிர்ந்த நிழல். 3. சினை = கிளை; வீழ் = மரவிழுது. 4. தொல்லோர் = முன்னோர்; துளங்கல் = கலங்கல். 5. முதுகுடி = பழங்குடி; நடுக்கு = நடுக்கம் = அச்சம்; தழீஇ = உள்ளடக்கிக் கொண்டு; அரா = பாம்பு; கிளை = மந்தை. 7. அரு = பொறுத்தற்கரிய; உரும் = இடி; நரை = வெண்மை. 8. செரு = போர்; பஞ்சவன் = பாண்டியன். 9. துஞ்சுதல் = தங்குதல்; உறைந்தை = உறையூர்; பொருநன் = அரசன். 11. வரை = மலை; சாந்தம் = சந்தனம்; திரை = கடல் அலை. 12. இமிழல் = ஒலித்தல்; குரல் = ஒலி ஓசை. 15. நேமி = கடல்; நேமியோன் = திருமால். 17. உரு = அச்சம், நடுக்கம்; உட்கு = அச்சம். 18. இந்நீர் = இத்தன்மை. 19. இசை = புகழ். 20. ஆற்றுதல் = உதவுதல். 21. திரிதல் = மாறுதல். 22. பௌவம் = கடல். 24. நயத்தல் = அன்புசெய்தல், நட்பு கொள்ளுதல், நீதி செய்தல். 26. அலமரல் = வருந்தல். 27. கொடு = வளைவு. 28. கோள் = வலி; மா = புலி; குயிற்றல் = பதித்தல்; தொடு = தோண்டப்பட்ட; பொறி = அடையாளம். 29. கொடுவரி = புலி. 31. கெண்டை = கயல். 32. குடுமி = சிகரம், உச்சி.

கொண்டு கூட்டு: நீயே, காவிரிக் கிழவனை; இவனே பஞ்சவர் ஏறே; நீயே உறந்தைப் பொருநனை; இவனே கூடல் வேந்தே; பனைக் கொடியோனும் நேமியோனும் உடன் நின்றாஅங்கு இருவரும் உடனிலை ஆயின் மாநிலம் கையகப்படும்; அதனால், இன்றே போல்க நும் புணர்ச்சி; பிறர் குன்றுகெழு நாடு கோண்மாவும் கெண்டையும் பொறித்த குடுமிய வாக.

பாடல் விளக்கம்: நீ குளிர்ந்த நீரையுடைய காவிரிக்குத் தலைவன்; இவனோ, பருத்த அடியுள்ள ஆலமரத்தின் அடிமரம் வெட்டப்பட்டு அழிந்தாலும், அதன் நெடிய நிழல் தரும் கிளைகளை விழுதுகள் தாங்குவதைப்போல், முன்னோர்கள் இறந்தாலும், தான் தளராது, நல்ல புகழுள்ள தன் பழங்குடியைத் தடுமாற்றமில்லாமல் காத்துத், தான் சிறிதே ஆயினும் பாம்பைக் கூட்டத்தோடு அழிக்கும் வெண்ணிற இடிபோல் பகவரைக் காணப் பொறாமல் போரில் சிறந்த பாண்டியர்களில் சிங்கம் போன்றவன்.

நீயோ, அறம் நிலைபெற்ற உறையூரின் தலைவன். இவனோ நெல்லும் நீரும் அனைவருக்கும் எளிதில் கிடைப்பவை என்று கருதி யாவர்க்கும் பெறுதற்கரிய மலையில் விளையும் சந்தனம், கடலில் விளையும் முத்து, முழங்கும் மும்முரசுகள் ஆகியவற்றுடன் தமிழ் பொருந்திய மதுரையில் செங்கோல் செலுத்தும் வேந்தன்.

பால போன்ற வெண்ணிற மேனியும் பனைக்கொடியும் உடைய பலராமனும் நீல நிற மேனியையுடைய திருமாலும் ஆகிய இரண்டு கடவுளரும் ஒருங்கே கூடி இருந்தாற் போல் அச்சம் பொருந்திய காட்சியொடு நீங்கள் இருவரும் விளங்குவதைவிட இனிய காட்சியும் உண்டோ? உங்கள் புகழ் நெடுங்காலம் வாழ்வதாக! மேலும் கேட்பீராக!

நீங்கள் ஒருவர்க்கு ஒருவர் உதவுவீர் ஆகுக. நீங்கள் இருவரும் கூடியிருக்கும் இந்நிலை மாறாதிருப்பின் கடல் சூழ்ந்த, பயனுள்ள இவ்வுலகம் உங்கள் கைவசமாவது உறுதி; ஆதலால், நல்லவர்களாகவும், நடுவுநிலைமை தவறாதவர்களாகவும், உங்கள் முன்னோர்கள் சென்ற நெறியைப் பின்பற்றி, அன்போடு இருந்து, உங்களைப் பிரிக்கத் தவிக்கும் பகைவர்களின் சொற்களைக் கேளாமல், இன்று போலவே என்றும் சேர்ந்திருங்கள். போர்க்களத்தில் மேலும் மேலும் வெற்றிகளைப் பெற்று உங்கள் வேல் உயர்வதாகுக; பிறருடைய நாடுகளிலுள்ள குன்றுகளில், வளைந்த கோடுகளையுடைய புலிச் சின்னமும், பெரிய நீரில் வாழும் கயல்மீன் சின்னமும் பொறிக்கப்படுவதாகுக.

Related Post

புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்- 96. அவன் செல்லும் ஊர்!

Posted by - ஏப்ரல் 13, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 96. அவன் செல்லும் ஊர்! பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 – இல் காணலாம்.பாடப்பட்டோன்: அதியமான்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 57. காவன்மரமும் கட்டுத்தறியும்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 57. காவன்மரமும் கட்டுத்தறியும்! பாடல் ஆசிரியர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் (57, 58,169,171, 353). இவர் புறநானூற்றில் ஐந்து பாடல்கள்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 6. நிலவும் கதிரும் போல் வாழ்க!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 6. நிலவும் கதிரும் போல் வாழ்க! பாடல் ஆசிரியர்: காரிகிழார் (6): இப்புலவர் காரி என்னும் ஊரைச் சார்ந்தவர். புறநானூற்றில்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 39. புகழினும் சிறந்த சிறப்பு!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 39. புகழினும் சிறந்த சிறப்பு! பாடல் ஆசிரியர்: மாறோக்கத்து நப்பசலையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 37-இல் காண்க.பாடப்பட்டோன்: சோழன்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 18. நீரும் நிலனும்

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 18. நீரும் நிலனும் பாடல் ஆசிரியர்: குடபுலவியனார் (18, 19).இவரது இயற்பெயர் புலவியன் என்பது. இவர் குட நாட்டவராதலால் குடபுலவியனார்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன