புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 59. பாவலரும் பகைவரும்!

1472 0

புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்

புறம்
59. பாவலரும் பகைவரும்!

பாடல் ஆசிரியர்: பெருந்தலைச் சாத்தனார் (151,164,165, 205, 209, 294). இவர் பெருந்தலை என்னும் ஊரைச் சார்ந்தவர். பெருந்தலை என்ற பெயரில் தமிழ் நாட்டில் பல ஊர்கள் இருப்பதால் இவர் தமிழ் நாட்டில் எந்தப் பகுதியைச் சார்ந்தவர் என்று உறுதியாகக் கூறமுடியவில்லை என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார். அகநானூற்றில் இவர் இயற்றிய செய்யுள் ஒன்றில் (224) இவர் பெயர் ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் என்று குறிப்பிடப்படுவதால் இவரது பெற்றோர்கள் ஆவூர் மூலம் என்னும் ஊரைச் சார்ந்தவர் என்று கருதப்படுகிறது. இவர் தலை பெரிதாக இருந்ததால் இவர் பெருந்தலை என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார் என்றும் சிலர் கூறுவர்.

வறுமையில் வாடிய புலவர்களில் பெருந்தலைச் சாத்தனாரும் ஒருவர். கடையெழு வள்ளல்கலின் காலத்திற்குப் பிறகு குமணன் என்று ஒருவள்ளல் இருந்தான். அவன் வண்மையாலும் வெற்றிகளாலும் பெரும் புகழ் பெற்றதைக் கண்டு பொறாமை கொண்ட அவன் இளவல் இளங்குமணன் குமணனின் நாட்டைக் கைப்பற்றினான். குமணன் காட்டிற்குச் சென்று அங்கு வாழ்ந்தான். பெருந்தலைச் சாத்தனார் குமணனைக் காட்டில் கண்டு அவனைப் புகழ்ந்து பாடினார். பெருந்தலைச் சாத்தனார்க்கு அளிப்பதற்கு குமணனிடம் பொருள் ஏதும் இல்லாததால் அவன் தன் வாளைப் பெருந்தலைச் சாத்தனாரிடம் கொடுத்துத் தன் தலையை வெட்டி இளங்குமணனிடம் கொண்டுபோய்க் கொடுத்தால் அவன் அவருக்குப் பரிசளிப்பான் என்று கூறினான். பெருந்தலைச் சாத்தனார் குமணனிடமிருந்து வாளை மட்டும் பெற்றுக் கொண்டு இளங்குமணனிடம் சென்று சமாதானம் பேசி குமணனையும் இளங்குமணனையும் ஒருவரோடு ஒருவர் அன்புகொள்ளச் செய்தார்.

இவர் புறநானூற்றில் ஆறு செய்யுட்களும் அகநானூற்றில் இரண்டு செய்யுட்களும் (13, 224) நற்றிணையில் ஒரு செய்யுளும் (262) இயற்றியவர்.
பாடப்பட்டோன்: பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த காலத்தில், அவன் தம்பி வெற்றிவேற் செழியன், கொற்கையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டின் மற்றொரு பகுதியை ஆண்டுவந்தான். கோவலனைக் கள்வன் என்று எண்ணித் தவறாகத் தான் கொலை செய்ததை உணர்ந்த ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் “யானோ அரசன்? யனே கள்வன்” என்று கூறி உயிர் துறந்தான். அவன் உயிர் துறந்த பின், அவன் தம்பி வெற்றிவேற் செழியன், நெடுஞ்செழியனின் நாட்டின் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டான். அவன் சித்திரமாடம் என்ற இடத்தில் இறந்ததால், வெற்றிவேற் செழியன், பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் என்று அழைக்கப்பட்டன்.
பாட்டின் காரணம்: பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறனின் மாலை சூடிய மார்பையும், தாள் அளவு நீண்ட வலிய கையையும் பாரட்டி, “ வேந்தே, நீ அருள் செய்வதில் சிறந்தவன்; பொய் சொல்லாதவன். பகைவர்க்கு மிகுந்த வெப்பமுள்ள கதிரவனைப் போன்றவன்; எம் போன்றவர்க்குக் குளிர்ந்த திங்களைப் போன்றவன்” என்று புலவர் பெருந்தலைச் சாத்தனார் இப்பாடலில் அவனைப் புகழ்கிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பூவை நிலை: மனிதரைத் தேவரோடு ஒப்பிட்டுக் கூறுதல் பூவை நிலை எனப்படும்.
ஆரம் தாழ்ந்த அணிகிளர் மார்பின்
தாள்தோய் தடக்கைத் தகைமாண் வழுதி!
வல்லை மன்ற நீநயந் தளித்தல்!
தேற்றாய் பெரும! பொய்யே; என்றும்
5 காய்சினம் தவிராது கடல்ஊர்பு எழுதரும்
ஞாயிறு அனையை நின் பகைவர்க்குத்;
திங்கள் அனையை எம்ம னோர்க்கே.

அருஞ்சொற்பொருள்:
1. ஆரம் = மாலை; அணி = அழகு; கிளர்தல் = மிகுதல். 2. தகை = தகுதி. 3. வல்லை = வலிமை உடையவன்; மன்ற = நிச்சயமாக, தெளிவாக; நயந்து அளித்தல் = அருள் செய்தல். 4. தேற்றல் = அறிவித்தல் (சொல்லுதல்); காய்தல் = சினத்தல், சுடுதல். கடல் ஊர்பு = கடலிலிருந்து. 6. அனைய = போன்றாய்.

பாடல் விளக்கம்: மாலை தவழும் அழகு மிகுந்த மார்பையும், முழங்காலைத் தொடுமளவுக்கு நீண்ட கையையும் உடைய மாட்சிமைக்குரிய வழுதி! நீ யாவரும் மகிழும்படி அவர்களுக்கு அருள் செய்வதில் உண்மையாகவே வல்லவன். நீ என்றும் பொய்யே கூறமாட்டய். உன் பகைவர்க்கு, நீ என்றும் கடும் வெப்பம் நீங்காமல் கடலிடத்தே இருந்து கிளர்ந்து எழும் ஞாயிறைப் போன்றவன். எம்போன்றவர்களுக்கு, நீ குளிர்ந்த திங்களைப் போன்றவன்.

சிறப்புக் குறிப்பு: முழங்கால் அளவுக்குக் கைகள் நீண்டு இருப்பது ஆண்களுக்கு அழகு என்று கருதப்பட்டதால், புலவர், “தாள் தோய் தடக்கை” என்று குறிப்பிடுகிறார்.

Related Post

புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்- 90. பொருநரும் உளரோ, நீ களம் புகினே?

Posted by - ஏப்ரல் 13, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 90. பொருநரும் உளரோ, நீ களம் புகினே? பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 – இல்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 33. புதுப்பூம் பள்ளி!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 33. புதுப்பூம் பள்ளி! பாடல் ஆசிரியர்: கோவூர்கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் – 31இல் காண்க.பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்- 100. சினமும் சேயும்!

Posted by - ஏப்ரல் 13, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 100. சினமும் சேயும்! பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 – இல் காணலாம்.பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்- 107. பாரியும் மாரியும்

Posted by - ஏப்ரல் 13, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 107. பாரியும் மாரியும் பாடியவர்: கபிலர். கபிலரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 105 – இல் காணலாம்.பாடப்பட்டோன்: வேள் பாரி.…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்- 85. யான் கண்டனன்!

Posted by - ஏப்ரல் 13, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 85. யான் கண்டனன்! பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார். இவரைப்பற்றிய செய்திகளை 83-ஆம் பாடலில் காண்க. பாடப்பட்டோன்: சோழன்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன