புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 6. நிலவும் கதிரும் போல் வாழ்க!

1870 0

புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்

புறம்
6. நிலவும் கதிரும் போல் வாழ்க!

பாடல் ஆசிரியர்: காரிகிழார் (6): இப்புலவர் காரி என்னும் ஊரைச் சார்ந்தவர். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றுதான்.
பாடப்பட்டோன்: பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி(6, 9, 12, 15, 64). சங்க காலத்துப் பாண்டிய மன்னர்களில் வெற்றி, வீரம், கொடை, புகழ் ஆகியவற்றில் சிறந்த மன்னர்களில் இவனும் ஒருவன். வரலாற்றில் முதலாக இடம் பெறும் பாண்டிய மன்னன் நிலந்தரு திருவிற் பாண்டியன். அவனுக்குப் பின்னர் பாண்டிய நாட்டை ஆண்டவன் முடத்திருமாறன். முடத்திருமாறனுக்குப் பிறகு பாண்டிய நாட்டை ஆண்டவர்களில் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியும் ஒருவன். இவன் குமரி மலையும் ப்ஃறுளி ஆறும் கடலால் கொள்ளப் படுவதற்கு முன்னாதாகப் பாண்டிய நாட்டை ஆண்டவன். இவனுடைய ஆட்சிக் காலத்தை சரியாக வரையறுப்பதற்கு ஏற்ற சான்றுகள் இல்லை. இவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்கு முன்பு பாண்டிய நாட்டை ஆட்சி செய்தான் என்று வரலாற்றில் காண்கிறோம்.

பாடலின் பிண்ணணி: இப்பாடலில், காரிகிழார் பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியின் வெற்றியையும் புகழையும் சிறப்பித்துக் கூறுவது மட்டுமல்லாமல் சிறந்த உறுதிப் பொருள்களை அவனுக்கு அறிவுரையாகக் கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆகும்.
செவியறிவுறூஉ. அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்.
வாழ்த்தியல். தலைவனை வாழ்த்துதல்.

வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்
5 கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின்
நீர்நிலை நிவப்பின் கீழும் மேலது
ஆனிலை உலகத் தானும், ஆனாது
உருவும் புகழும் ஆகி விரிசீர்த்
தெரிகோல் ஞமன்ன் போல, ஒரு திறம்
10 பற்றல் இலியரோ நின்திறம் சிறக்க
செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்
கடற்படை குளிப்ப மண்டி, அடர்ப் புகர்ச்
சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்
பாசவற் படப்பை ஆர்எயில் பலதந்து
15 அவ்வெயில் கொண்ட செய்வுறு நன்கலம்
பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கிப்
பணியியர் அத்தை நின் குடையே, முனிவர்
முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே;
இறைஞ்சுக, பெருமநின் சென்னி, சிறந்த
20 நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே;
வாடுக, இறைவ நின் கண்ணி, ஒன்னார்
நாடுசுடு கமழ்புகை எறித்த லானே;
செலீஇயர் அத்தை, நின் வெகுளி, வால்இழை
மங்கையர் துனித்த வாள்முகத்து எதிரே;
25 ஆங்க, வென்றி எல்லாம் வென்றுஅகத்து அடக்கிய
தண்டா ஈகைத் தகைமாண் குடுமி!
தண்கதிர் மதியம் போலவும் தெறுசுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்
மன்னிய, பெரும! நீநிலமிசை யானே!

அருஞ்சொற்பொருள்:
1. வடாஅது = வடக்கின் கண்ணது; படுத்தல் = நிலைபெறச் செய்தல்; படு = நிலைபெற்ற (தங்கிய); நெடு = நீண்ட; வரை = எல்லை. 2. தெனாஅது = தெற்கின் கண்ணது; உரு = அச்சம்; கெழு = பொருந்திய. 3. குணாஅது = கிழக்கின் கண்ணது; பொருதல் = முட்டுதல்; தொடல் = தோண்டல்; குணக்கு = கிழக்கு. 4. குடாஅது = மேற்கின் கண்ணது; தொன்று = பழமை; முதிர் = முதிர்ச்சி; பெளவம் = கடல்; குடக்கு = மேற்கு. 5. புணர் = சேர்க்கை; முறை = ஒழுங்கு; கட்டு = வகுப்பு. 6. நிவத்தல் = உயர்தல். 7. ஆனிலை உலகம் = பசுக்களின் உலகம் (சுவர்க்கலோகம்); ஆனாது = அமையாது. 8. உரு = அச்சம்; சீர் = அளவு. 9. தெரிதல் = ஆராய்தல்; கோல் = துலாக்கோல்; ஞமன் = துலாக்கோலின் முள்முனை; திறம் = பக்கம், கூறுபாடு, வலிமை, குலம். 10. பற்றல் = பிடித்தல்; திறம் = குலம். 11. வினை = போர்; எதிர்ந்த = மாறுபட்ட; தெவ்வர் = பகைவர்; தேஎம் =தேயம், நாடு. 12. குளித்தல் = மூழ்குதல்; மண்டல் = நெருங்கல்; அடர் = அடர்ந்த; புகர் = புள்ளி. 13. செவ்விதின் = செம்மையாக (நேரே); ஏவி = செலுத்தி. 14. பாசவல் = பசுமையான விளை நிலம்; படப்பை = ஊர்ப்புறம்; ஆர் = அரிய; எயில் = மதில்; தந்து = அழித்து. 15. உறுதல் = நன்மையாதல், பயன்படல்; உறு = மிக்க. 16. மாக்கள் = மக்கள்; வரிசையின் = தரமறிந்து; நல்கி = அளித்து. 17. பணியியர் = தாழ்க. 18. செல்வம் = செல்வர்; நகர் = கோயில். 19. இறைஞ்சுதல் = வணங்குதல்; பெருமன் = அரசன்; சென்னி = தலை. 20. ஏந்துதல் = கை நீட்டுதல். 21. கண்ணி = தலையில் அணியும் மாலை; ஒன்னார் = பகைவர். 22. கமழ் = மணக்கும். 23. செலீஇயர் = செல்வதாக (தணிவதாக);அத்தை – அசைச் சொல்; வால் = தூய, வெண்மையான; இழை = அணிகலன். 24. துனித்த = ஊடிய; வாள் = ஒளி. 25. வென்றி = வெற்றி. 26. தண்டா = தணியாத (நீங்காத); தகை = தகுதி; மாண் = மாட்சிமை பெற்ற. 27. தண் = குளிர்ந்த; தெறு = சுடுகை. 29. மன்னுதல் = நிலைபெறுதல்; மிசை = மேல்பக்கம்.

கொண்டு கூட்டு: குடுமி, பெரும, உருவும் புகழும் ஆக; ஒரு திறம் பற்றாது ஒழிக; நின் திறம் சிறக்க; பணிக; இறைஞ்சுக; வாடுக; செல்லுக; பரிசில் மாக்கட்கு நல்கி மதியம் போலவும் ஞாயிறு போலவும், பெரும நீ நிலத்தின் மிசை மன்னுக எனக் கூட்டுக.

பாடல் விளக்கம்: வடக்கே பனி நிலைபெற்றிருக்கும் நெடிய மலைக்கு (இமய மலைக்கு) வடக்கிலும், தெற்கே அச்சம் பொருந்திய குமரி ஆற்றுக்குத் தெற்கிலும், கிழக்கே கரையை முட்டும் ஆழமான (தோண்டப்பட்ட) கடலுக்கு கிழக்கிலும், மேற்கே மிகப் பழமையான கடலுக்கு மேற்கிலும், நிலம், ஆகாயம், சுவர்க்கம் என்று சேர்ந்துள்ள மூன்றில், நிலத்திற்குக் கீழும், சுவர்க்கத்திற்கு மேலேயும் அடங்காது உன்னைப்பற்றிய அச்சமும் உன் புகழும் பெருகி, பெரிய பொருள்களைச் சமமாக ஆராயும் துலாக்கோல் (தராசு) போல் ஒரு பக்கம் சாயாது இருப்பாயாக. உன் படை, குடி முதலியன சிறப்பதாக.

உன் செயலை எதிர்த்த உன் பகைவர் நாட்டில் கடல் புகுந்தது போல் பெருமளவில் உன் படையையும், சிறிய கண்களையுடைய யானைகளையும் செலுத்தி, அடர்ந்த பசுமையான விளைநிலம் மற்றும் ஊர்ப்புறங்களையும், பாதுகாக்கும் கடத்தற்கரிய அரண்களையும் அழித்து, அவற்றுள் அடங்கிய அழகுடன் செய்யப்பட்ட அணிகலன்களைப் பரிசிலர்க்கு அவர்கள் தகுதிக்கேற்ப அளிப்பாயாக. சடைமுடி தரித்த, மூன்று கண்களையுடைய சிவபெருமான் கோயிலை வலம்வரும் பொழுது மட்டும் உன் கொற்றக்குடை தாழட்டும். சிறந்த நான்கு வேதங்களைக் கற்ற அந்தணர்கள் தங்கள் கைகளை உயர்த்தி உன்னை வாழ்த்தும் பொழுது மட்டும் உன் தலை வணங்கட்டும். பகைவர்களின் நாட்டில் (உன்னால் போரில்) மூட்டப்பட்ட தீயினால் மட்டும் உன் தலையில் உள்ள மாலை வாடட்டும். தூய வேலைப்பாடுகள் நிறைந்த அணிகலன்கள் அணிந்த மகளிர் உன்னோடு ஊடும் பொழுது மட்டும் அவர்கள் எதிரில் உன் கோபம் தணியட்டும்.

அடையவேண்டிய வெற்றிகளை எல்லம் அடைந்தும் மனத்தில் அடக்கத்தோடும் குறையாத ஈகைக் குணத்தோடும் உள்ள மாட்சிமை பொருந்திய குடுமி!

தலைவா!, நீ குளிர்ந்த சுடருடைய திங்களைப் போலவும், வெப்பமான சுடருடைய கதிரவனைப் போலவும் இந்நிலத்தில் நிலைபெற்று வாழ்வாயாக!

Related Post

புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 43. பிறப்பும் சிறப்பும்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 43. பிறப்பும் சிறப்பும்! பாடல் ஆசிரியர்: தாமற்பல் கண்ணனார் (43). இவர் காஞ்சிபுரத்திற்கு அருகே உள்ள தாமல் என்ற ஊரைச்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் -72. இனியோனின் வஞ்சினம்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்   72. இனியோனின் வஞ்சினம்! பாடியவர்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். பாண்டிய நாட்டை மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்த மன்னர்களில்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 53. செந்நாவும் சேரன் புகழும்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 53. செந்நாவும் சேரன் புகழும்! பாடல் ஆசிரியர்: பொருந்தில் இளங்கீரனார் ( 53). இளங்கீரனார் என்பது இவர் இயற்பெயர். இவர்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 20. மண்ணும் உண்பர்

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 20. மண்ணும் உண்பர் பாடியவர்: குறுங்கோழியூர்கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 17-இல் காண்க.பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 11. பெற்றனர்! பெற்றிலேன்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 11. பெற்றனர்! பெற்றிலேன்! பாடல் ஆசிரியர்: பேய்மகள் இளவெயினியார் (11). இவர் பேயுருவத்தோடு நின்று பாலை பாடிய சேரமான் பெருங்கடுங்கோவைப்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன