புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 61. மலைந்தோரும் பணிந்தோரும்!

1566 0

புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்

புறம்
61. மலைந்தோரும் பணிந்தோரும்!

பாடல் ஆசிரியர்: கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரைக் குமரனார். இவரைப் பற்றிய குறிப்புகளை பாடல் 54-இல் காண்க.
பாடப்பட்டோன்:
சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி. இச்சோழ மன்னன், சோழன் நலங்கிள்ளியின் மகன் என்று கருதப்படுகிறான். இலவந்திகை என்றால் குளத்தருகே உள்ள சோலை என்று பொருள். குளத்தருகே இருந்த சோலை ஒன்றில் இருந்த பள்ளியில் (படுக்கை அறையில்) இறந்ததால், இச்சோழமன்னன் சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி என்று அழைக்கப்பட்டான்.
பாட்டின் காரணம்: கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் சேட்சென்னியின் நாட்டின் வளங்களையும் அவன் போர் புரியும் ஆற்றலையும் இப்பாடலில் விரிவாகக் கூறுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.

துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

கொண்டைக் கூழைத் தண்தழைக் கடைசியர்
சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்
மலங்குமிளிர் செறுவின் தளம்புதடிந் திட்ட
பழன வாளைப் பரூஉக்கண் துணியல்
5 புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறை ஆக
விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி
நீடுகதிர்க் கழனிச் சூடுதடு மாறும்
வன்கை வினைஞர் புன்தலைச் சிறாஅர்
தெங்குபடு வியன்பழம் முனையின், தந்தையர்
10 குறைக்கண் நெடும்போர் ஏறி விசைத்தெழுந்து
செழுங்கோள் பெண்ணைப் பழந்தொட முயலும்
வைகல் யாணர் நன்னாட்டுப் பொருநன்
எஃகுவிளங்கு தடக்கை இயல்தேர்ச் சென்னி
சிலைத்தார் அகலம் மலைக்குநர் உளர்எனில்
15 தாமறி குவர்தமக்கு உறுதி; யாம்அவன்
எழு திணிதோள் வழுவின்றி மலைந்தோர்
வாழக் கண்டன்றும் இலமே; தாழாது
திருந்துஅடி பொருந்த வல்லோர்
வருந்தக் காண்டல் அதனினும் இலமே!

அருஞ்சொற்பொருள்:
1. கொண்டை = மயிர் முடிச்சு; கூழை = தலை மயிர்; தழை = பச்சிலை; கடைசியர் = உழத்தியர், மருத நிலப் பெண்கள். 2. நெய்தல் = வெள்ளாம்பல்; கட்கும் = களைந்து எறியும். 3. மலங்கு = ஒரு வகை மீன்; மிளிர்தல் = ஒளிசெய்தல்; செறு = வயல்; தளம்பு = சேற்றைக் குழப்பிக் கட்டிகளை உடைத்து செம்மைப் படுத்தும் கருவி; தடிதல் = அறுத்தல், வெட்டல். 4. பழனம் = வயல்; வாளை = வாளை மீன்; பரூஉ = பருமை; துணியல் = துண்டு (சதை). 5. கண்ணுறை = மேலே தூவுவது. 6. விசித்தல் = விம்முதல், வீங்குதல்; மாந்தல் = உண்ணுதல், வருந்துதல். 7. சூடு = நெற்கதிர்க் கட்டு. 8. வினைஞர் = மருத நில மக்கள் (உழவர்கள்). 9. தெங்கு = தென்னை. 10. விசை = விரைவு. 11. செழுமை = வளமை; கோள் = குலை; பெண்ணை = பனைமரம். 12. வைகல் = நாள்; யாணர் = புதிய வருவாய். 13. எஃகு = வேல்; தடக்கை = பெரிய கை; சென்னி = நலங்கிள்ளி சேட்சென்னி. 14. சிலை = ஒளி; அகலம் = மார்பு; மலைத்தல் = போரிடுதல். 15. உறுதி = உறப்போவது (நேரப்போவது). 16. எழு = கணையமரம்; உறழ் = ஒத்தல்; திணி = வலிமை; வழு = தவறு. 17. தாழாது = விரைந்து. 18. திருந்துதல் = ஒழுங்குகாகுதல்.

பாடல் விளக்கம்: கொண்டையாக முடிந்த முடியும், முடியில் செருகிய தழையும் உடைய மருதநிலப் பெண்கள், சிறிய வெள்ளாம்பலுடன் ஆம்பலையும் களைவர். வயல்களில் மலங்கு மீன்கள் ஒளிருகின்றன. அந்த வயல்களில் தளம்பைப் பயன்படுத்தியதால், பருத்த வாளை மீன்கள் துண்டிக்கப் படுகின்றன. புதுநெல்லைக் குத்தி ஆக்கிய வெண்மையான சோற்றின் மேல் அந்த வாளைமீன் துண்டுகளைத் தூவி, விலாப் புடைக்க உண்ட மயக்கத்தால், நெடிய நெற்கதிர்களின் கட்டுகளை வைக்கும் இடம் தெரியாமல் உழவர்கள் தடுமாறுவர். வலிய கைகளையுடைய உழவர்களின் இளஞ்சிறுவர்கள் தென்னை மரங்கள் தரும் தேங்காய்களை வெறுத்துத், தம் தந்தையரின் குறுகிய இடங்களில் உள்ள நெடிய வைக்கோற் போரில் விரைந்து ஏறி பனம்பழத்தைப் பறிக்க முயல்வர். நாள்தோறும் புதிய வருவாயையுடைய நல்ல நாட்டிற்கு அரசனாகிய நலங்கிள்ளி சேட்சென்னி, வேல் ஒளிரும் பெரிய கையினையும் நன்கு செய்யப்பட்ட தேரையும் உடையவன். ஒளி நிறைந்த மலர் மாலைகளை அணிந்த மார்பையுடைய சேட்சென்னியுடன் போர்புரிபவர்கள் இருப்பார்களானால், அவர்களுக்கு நேரப் போவதை அவர்கள் மட்டுமே அறிவார்கள். நாங்கள் கணையமரம் போன்ற வலிய தோள்களையுடைய அவனோடு போரிட்டவர்கள் வாழக்கண்டதில்லை. விரைந்து சென்று அவனது நல்லடியை அடைய வல்லோர் வருந்தக் கண்டது அதனினும் இல்லை.

Related Post

புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 26. நோற்றார் நின் பகைவர்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 26. நோற்றார் நின் பகைவர்! பாடல் ஆசிரியர்: மாங்குடி மருதனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 24-இல் காண்க.பாடப்பட்டோன்: பாண்டியன்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 14. மென்மையும்! வன்மையும்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 14. மென்மையும்! வன்மையும்! பாடல் ஆசிரியர்: கபிலர். இவரைப் பற்றிய குறிப்புகளை பாடல் 8-இல் காண்க.பாடப்பட்டோன்: சேரமான் செல்வக் கடுங்கோ…
போரும் சோறும் - புறநானூறு 2

2. போரும் சோறும் | புறநானூறு

Posted by - ஜூலை 23, 2019 0
பொற்சிகரங்களையுடைய இமயமமும் பொதியமும் போல் , பால் புளித்தாலும், பகல் இருண்டாலும், நான்கு வேதங்களில் கூறப்படும் ஒழுக்க நெறிகள் மாறினாலும்...
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 42. ஈகையும் வாகையும்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 42. ஈகையும் வாகையும்! பாடல் ஆசிரியர்: இடைக்காடனார் (42). இவர் இடைக்காடு என்னும் ஊரைச் சார்ந்தவராதலால் இடைக்காடனார் என்ற பெயரை…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 13. நோயின்றிச் செல்க!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 13. நோயின்றிச் செல்க! பாடல் ஆசிரியர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் (13, 127 – 135, 241, 374, 375).இவர்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன