புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 62. போரும் சீரும்!

1634 0

புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்

புறம்
62. போரும் சீரும்!

பாடல் ஆசிரியர்: கழாத்தலையார் (62, 65, 270, 288, 289, 368). இவர் பெயர் கழார்த்தலையார் என்றும் கூறப்படுகிறது. கழார் என்னும் ஊரைச் சார்ந்ததவராக இருந்ததால் கழார்த்தலையார் என்ற பெயர் பெற்றிருக்கலாம். கழாத்தலையார் என்பது இவர் பெயராக இருந்திருக்குமானால், இவர் கழாத்தலை என்ற ஊரினராக இருந்திருக்கலாம். இவரை இருங்கோவேள் என்னும் குறுநிலமன்னனின் முன்னோர்களுள் ஒருவன் இகழ்ந்ததால், அந்நாட்டில் இருந்த அரையம் என்னும் ஊர் அழிந்ததாகக் கபிலர் புறநானூற்றுப் பாடல் 202-இல் குறிப்பிடுகிறார். இவர் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃறடக்கை பெருவிறற்கிள்ளி, சேரமான் பெருஞ்சேரலாதன் ஆகியோரைப் பாடல் ஆசிரியர்.
பாடப்பட்டோர்: சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்; சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி.
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்: இவன் போர்வன்மையும் கொடைச் சிறப்பும் மிகுந்தவன் என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் தம் நூலில் கூறுகிறார். மற்றும், பதிற்றுப்பத்தில் ஆறாம் பத்தின் பதிகத்தில் கூறப்பட்டிருபபவன் இவனாக இருந்தால் இவனுக்குப் பிறகு சேர நாட்டை ஆட்சி செய்தவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனாவான் என்றும் கூறுகிறார். அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்களின் கருத்து வரலாற்று ஆசிரியர்களின் கருத்துகளிலிருந்து மாறுபடுகிறது. வரலாற்று ஆசிரியர்கள் (N. சுப்பிரமணியன், K. A. நீலகண்ட சாஸ்திரி) உதியஞ் சேரலாதன் என்ற சேர மன்னனின் மகனாகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் சேரமன்னனுக்கும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கும் இடையே நடந்த போரில் இருவரும் இறந்ததாகக் கூறுகின்றனர். ஆகவே, சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் ஒருவனே என்று தோன்றுகிறது.

கரிகால் வளவனுக்கு இரண்டு மகன்கள் இருந்ததாக சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அந்த இரண்டு மகன்களுள் ஒருவன் பெயர் மணக்கிள்ளி, மற்றொருவன் பெயர் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி. மணக்கிள்ளி என்பவனின் மகள் நற்சோனை என்பவளை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மணம் புரிந்தான். கண்ணகிக்குச் சிலையெடுத்த சேரன் செங்குட்டுவனும் சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளும் இமயவரம்பனுக்கும் நற்சோனைக்கும் பிறந்த மகன்கள் என்று கூறப்படுகிறது. தேவி என்பவள் இமயவரம்பனின் மற்றொரு மனைவி. களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் இமயவரம்பனுக்கும் அவனது மனைவி தேவிக்கும் பிறத்த இரு மகன்கள்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இறந்த பிறகு, சேர நாட்டை, அவன் தம்பி பல்யானை செல்குழுக் குட்டுவன் என்பவன் ஆண்டதாகவும், அவனுக்குப் பிறகு, களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் சேர நாட்டை ஆண்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலுக்குப் பிறகு, கண்ணகிக்குச் சிலையெடுத்த சேரன் செங்குட்டுவன் சேர நாட்டை ஆண்டதாகக் கூறப்படுகிறது. அவனுக்குப் பிறகு, ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் சேர நாட்டை ஆண்டதாகவும் கூறப்படுகிறது.

வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி: இவன் கரிகால் வளவனின் இரு மகன்களுள் ஒருவன். கரிகால் வளவன் இறந்த பிறகு, இவன் புகார் நகரத்தைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டான். கிள்ளிவளவன், நலங்கிள்ளி மற்றும் மாவளத்தான் என்ற மூவரும் இவனுடைய மகன்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

பாட்டின் காரணம்: சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கும் இடையே நடந்த போரில் இரு மன்னர்களும் விழுப்புண்பட்டு இறந்தனர். போர்க்களத்தில், சேரமான் உயிர் நீங்கும் தறுவாயில் இருப்பதைக் கண்ட கழாத்தலையார் அவனைப் புகழ்ந்து பாடினார். சேரன் தன் கழுத்திலிருந்த மாலையைக் கழற்றி கழாத்தலையாருக்கு அணிவித்துப் பின்னர் இறந்தான். மன்னர்கள் இருவரும் இறப்பதைக் கண்ட புலவர் கழாத்தலையார் மிகுந்த வருத்தமுற்றார். “போரில் மன்னர்கள் இருவரும் இறந்தனர். அவர்களுடைய வெற்றியை அறைகூவும் முரசு ஓய்ந்தது. மன்னர்களின் மனைவியர் கைம்மை நோன்பை மேற்கொள்வதை விரும்பாது தம் கணவரைத் தழுவி உயிர் துறந்தனர். விண்ணுலகத்தில் உள்ள தேவர்கள் இந்த இரு மன்னர்களையும் விருந்தினராகப் பெற்றனர்” என்று இப்பாடலில் கூறுகிறார்.

திணை: தும்பை. பகைவரோடு போர் செய்வதற்கு ஆயத்தமாகும் பொழுது தும்பைப் பூவைச் சூடிக் கொள்ளல்.
துறை: தொகை நிலை. போர்க்களத்தில் அனைவரும் ஒருங்கே மாய்ந்ததைக் கூறுதல்.

வருதார் தாங்கி அமர்மிகல் யாவது?
பொருதுஆண்டு ஒழிந்த மைந்தர் புண்தொட்டுக்
குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி
நிறம்கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்
5 எடுத்துஎறி அனந்தற் பறைச்சீர் தூங்கப்
பருந்து அருந்துற்ற தானையொடு செருமுனிந்து
அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்
தாம்மாய்ந் தனரே; குடைதுளங் கினவே;
பாடல் விளக்கம்சால் சிறப்பின் முரசு ஒழிந்தனவே;
10 பன்னூறு அடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம்
இடம்கெட ஈண்டிய வியன்கண் பாசறைக்
களங்கொளற்கு உரியோர் இன்றித், தெறுவர
உடன்வீழ்ந் தன்றால் அமரே; பெண்டிரும்
பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்
15 மார்பகம் பொருந்தி ஆங்கமைந் தனரே;
வாடாப் பூவின் இமையா நாட்டத்து
நாற்ற உணவி னோரும் ஆற்ற
அரும்பெறல் உலகம் நிறைய
விருந்துபெற் றனரால் பொலிகநும் புகழே!

அருஞ்சொற்பொருள்:
1. வரு = வருகின்ற; தார் = தூசிப்படை, படை; அமர் = போர்; மிகல் = வெற்றி; யாவது = எது, எவ்விதம். 2. ஆண்டு = அங்கு; மைந்தர் = வீரர். 4 நிறம் = ஒளி; கிளர்தல் = மிகுதல். 5. அனந்தல் = மந்த ஓசை; பறைச் சீர் = பறைக்குரிய தாளம்; தூங்கல் = ஆடல். 6. உற்ற = பொருந்திய; செரு = போர்; முனிந்து = வெகுண்டு. 7. மண்டல் = மிகுதல். 8. துளங்கல் = கலங்கல், அசைதல். 9. பாடல் விளக்கம் = புகழ். 10. பைஞ்ஞிலம் = படைத்தொகுதி. 12. தெறு = அச்சம். 14 பாசடகு = பாசு + அடகு; பாசு = பசுமை; அடகு = கீரைக்கறி; மிசைதல் = உண்ட. 16. நாட்டம் = பார்வை. 17. ஆற்ற = மிக. 19. பொலிதல் = மிகுதல்.

பாடல் விளக்கம்: இனி, எதிர்த்து வரும் தூசிப்படையத் தடுத்துப் போரில் வெற்றி பெறுவது எப்படி? அப்போர்க்களத்தில் சண்டையிட்டு அங்கே புண்பட்ட வீரர்களின் புண்ணைத் தோண்டிக், குருதி தோய்ந்த சிவந்த கையால் தமது தலைமயிரைக் கோதிய, ஓளிமிக்க உருவத்தையுடைய பேய்ப்பெண்கள், மேன்மேலும் கொட்டுகின்ற மந்தமான தாளத்திற்க்கேற்ப ஆடுகின்றனர். இறந்த படைவீரர்களின் உடலைப் பருந்துகள் உண்ணுகின்றன. அத்தகைய படையோடு, சினந்து அறவழியில் போர்புரிந்த வீரமுடைய மன்னர்கள் இருவரும் இறந்தனர். அவரது குடைகள் தளர்ந்தன. அவர்களுடைய புகழ் மிகுந்த சிறப்புடைய முரசுகள் வீழ்ந்தன. நூற்றுக்கணக்கான படைவீரர்கள் அடங்கிய பலவகைப் படைகளும் இருக்க இடமில்லாதபடி நெருங்கி இருக்கும் அகன்ற பாசறைகளில், போர்க்களத்தைத் தம்முடையதாக்கிக் கொள்வோர் இல்லாமல், காண்போர்க்கு அச்சம் தரும் வகையில் போர் உடனே முடிந்தது. மன்னர்களின் மனைவியர் பசுமையான கீரைக்கறியை உண்டு, குளிர்ந்த நீரில் மூழ்கும் கைம்மை நோன்பை விரும்பாதவராய் தம் கணவரைத் தழுவி உடன் கிடந்தனர். வாடாத பூக்களையும், இமைகளைச் சிமிட்டாத பார்வையையும், நறுமணமுள்ள அவியாகிய உணவையும் உடைய தேவர்கள் பெறுதற்கரிய விருந்து பெற்றனர். உங்கள் புகழ் விளங்குவதாக.

சிறப்புக் குறிப்பு: இரு வேந்தர்களும் ஒருங்கே இறந்ததைக் கூறுவதால் இப்பாடல் தொகைநிலையைச் சார்ந்ததாயிற்று.

Related Post

புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

3. வன்மையும் வண்மையும்! – DNA

Posted by - ஏப்ரல் 11, 2020 0
  புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்   3. வன்மையும் வண்மையும்!   பாடல் ஆசிரியர்: இரும்பிடர்த் தலையார். இப்பாடலில், யானையின் பெரிய கழுத்தை “இரும்பிடர்த்தலை” என்று…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்- 102. சேம அச்சு!

Posted by - ஏப்ரல் 13, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 102. சேம அச்சு! பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 – இல் காணலாம்.பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்- 93. பெருந்தகை புண்பட்டாய்!

Posted by - ஏப்ரல் 13, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 93. பெருந்தகை புண்பட்டாய்! பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 – இல் காணலாம்.பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 7. வளநாடும் வற்றிவிடும்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 7. வளநாடும் வற்றிவிடும்! பாடல் ஆசிரியர்: கருங்குழல் ஆதனார் (7, 224). ஆதனார் என்பது இப்புலவரின் இயற்பெயர். இவர் முதியவராக…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 13. நோயின்றிச் செல்க!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 13. நோயின்றிச் செல்க! பாடல் ஆசிரியர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் (13, 127 – 135, 241, 374, 375).இவர்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன