புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 65. நாணமும் பாசமும்!

880 0

புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்

புறம்
65. நாணமும் பாசமும்!

பாடல் ஆசிரியர்: கழாத்தலையார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 62-இல் காண்க.
பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சேரலாதன். கரிகால் வளவன், வெண்ணி என்ற ஊரில் நடைபெற்ற போரில் சேரமான் பெருஞ்சேரலாதனையும், பாண்டிய மன்னன் ஒருவனையும் பதினொரு வேளிர்குலச் சிற்றரசர்களையும் வென்றான். சேரமான் பெருஞ்சேரலாதனைப் பற்றி வேறு செய்திகள் எதுவும் காணப்படவில்லை.
பாட்டின் காரணம்: வெண்ணியில் நடைபெற்ற போரில் சேரமான் பெருஞ்சேரலாதனின் மார்பில் பாய்ந்த வேல் அவன் மார்பைத் துளைத்து முதுகையும் புண்ணாக்கியது. தன் முதுகில் புண்பட்டதால் அவன் நாணமுற்று வடக்கிருந்து உயிர் துறந்தான். அவனுடைய மரணத்தால் பெருந்துயருற்ற கழாத்தலையார், தம் வருத்தத்தை இப்பாடலில் வெளிப்படுத்துகிறார்.

திணை:
பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

மண்முழா மறப்பப் பண்யாழ் மறப்ப
இருங்கண் குழிசி கவிழ்ந்துஇழுது மறப்பச்
சுரும்பூஆர் தேறல் சுற்றம் மறப்ப
உழவர் ஓதை மறப்ப விழவும்
5 அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப
உவவுத்தலை வந்த பெருநாள் அமையத்து
இருசுடர் தம்முள் நோக்கி ஒருசுடர்
புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்
தன்போல் வேந்தன் முன்புகுறித்து எறிந்த
10 புறப்புண் நாணி மறத்தகை மன்னன்
வாள்வடக்கு இருந்தனன் ஈங்கு
நாள்போல் கழியல ஞாயிற்றுப் பகலே!

அருஞ்சொற்பொருள்:
1. மண் = முரசுக்குத் தடவப்படும் கருஞ்சாந்து; முழா = முழவு = முரசு. 2. இரு = பெரிய; கண் = இடம்; குழிசி = பானை; இழுது = வெண்ணெய். 3. சுரும்பு = வண்டு; ஆர்த்தல் = ஒலித்தல்; தேறல் = மது. 4. ஓதை = ஓசை. 5. அகலுள் = தெரு, ஊர், நாடு; சீறூர் = மலை நாட்டுச் சிற்றூர். 6. உவவு = முழுநிலா; அமையம் = சமயம். 8. புன்கண் = பொலிவு இழத்தல். 10. தகை = தகுதி, தன்மை.

பாடல் விளக்கம்: முரசு முழங்கவில்லை. யாழ் வாசிக்கப்படவில்லை. அகன்ற தயிர்ப்பானை கவிழ்த்து வைக்கப்பட்டு, வெண்ணெய் கடையாமல் உள்ளது. வண்டுகள் மொய்க்கும் மதுவை சுற்றத்தார் அருந்தவில்லை. உழவர் உழவுத் தொழிலைச் செய்யவில்லை. சிறிய ஊர்களின் தெருக்களில் விழாக்கள் நடைபெறவில்லை. முழுமதி தோன்றும் பெருநாளில், ஞாயிறும் திங்களும் ஆகிய இரண்டு சுடர்களும் ஒன்றையொன்று எதிர்நின்று பார்த்து, அவற்றுள் ஒருசுடர் ஒளி குறைந்து மாலைப்பொழுதில் மலையில் மறைந்தது போல், தன்னைப் போன்ற ஒருவேந்தன், மார்பைக் குறிவைத்து எறிந்த வேலால் முதுகில் உண்டாகிய புண்ணால் நாணமுற்று, வீரப்பண்புடைய சேரன் தன் வாளோடு வடக்கிருந்தான். அதனால், இங்கே. முன்பு இருந்ததுபோல் பகல் பொழுதுகள் கழிய மட்டா.

சிறப்புக் குறிப்பு: ”மண்முழா மறப்ப”, ”பண்யாழ் மறப்ப”, ”குழிசி கவிழ்ந்து இழுது மறப்ப” ”சுரும்பூஆர் தேறல் சுற்றம் மறப்ப”,” உழவர் ஓதை மறப்ப”, ”சீறூர் அகலுள் ஆங்கண் விழவும் மறப்ப” என்பவை முறையே, ”முரசு முழங்கவில்லை”, “ யாழ் வாசிக்கப்படவில்லை”, ”தயிர்ப்பானை கவிழ்த்து வைக்கப்பட்டு, வெண்ணெய் கடையாமல் உள்ளது”, ”வண்டுகள் மொய்க்கும் மதுவை சுற்றத்தார் அருந்தவில்லை”, ”உழவர் உழவுத் தொழிலைச் செய்யவில்லை”, ”சிறிய ஊர்களின் தெருக்களில் விழாக்கள் நடைபெறவில்லை” என்பவற்றைக் குறிக்கின்றன.

Related Post

புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 49. யாங்கனம் மொழிகோ, ஓங்குவாள் கோதையை?

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 49. யாங்கனம் மொழிகோ, ஓங்குவாள் கோதையை? பாடல் ஆசிரியர்: பொய்கையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 48-இல் காண்க.பாடப்பட்டோன்: சேரமான்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்- 94. சிறுபிள்ளை பெருங்களிறு!

Posted by - ஏப்ரல் 13, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 94. சிறுபிள்ளை பெருங்களிறு! பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 – இல் காணலாம்.பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 69. பொற்றாமரை பெறுவாய்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 69. பொற்றாமரை பெறுவாய்! பாடல் ஆசிரியர்: ஆலத்தூர் கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 34- இல் காண்க.பாடப்பட்டோன்: சோழன்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 5. அருளும் அருமையும்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 5. அருளும் அருமையும்! பாடல் ஆசிரியர்: நரிவெரூஉத் தலையார் (5, 195). இப்புலவரின் தலை நரியின் தலையைப் போல் இருந்ததால்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 18. நீரும் நிலனும்

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 18. நீரும் நிலனும் பாடல் ஆசிரியர்: குடபுலவியனார் (18, 19).இவரது இயற்பெயர் புலவியன் என்பது. இவர் குட நாட்டவராதலால் குடபுலவியனார்…

உங்கள் கருத்தை இடுக...