புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்
புறம் 70. குளிர்நீரும் குறையாத சோறும்
பாடப்பட்டவன்:
பாடலின் பின்னணி:
திணை : பாடாண். துறை: பாணாற்றுப்படை.
பாடல் :
தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண!
கயத்து வாழ் யாமை காழ்கோத் தன்ன
நுண்கோல் தகைத்த தெண்கண் மாக்கிணை
இனிய காண்க; இவண் தணிக எனக் கூறி;
5 வினவல் ஆனா முதுவாய் இரவல!
தைத் திங்கள் தண்கயம் போலக்,
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்,
அடுதீ அல்லது சுடுதீ அறியாது;
இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்,
10 கிள்ளி வளவன் நல்லிசை யுள்ளி,
நாற்ற நாட்டத்து அறுகாற் பறவை
சிறுவெள் ளாம்பல் ஞாங்கர்,ஊதும்
கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப்
பாதிரி கமழும் ஓதி, ஒண்ணுதல்,
15 இன்னகை விறலியடு மென்மெல இயலிச்
செல்வை ஆயின், செல்வை ஆகுவை;
விறகுஒய் மாக்கள் பொன்பெற் றன்னதோர்,
தலைப்பாடு அன்று, அவன் ஈகை;
நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே!
அருஞ்சொற்பொருள்:
1. தேம் = தேன்; தீ = இனிமை; தொடை = யாழின் நரம்பு. 2. கயம் = குளம்; காழ் = வலிய கம்பி. 3. தெண் = தெளிந்த. 5. ஆனாமை = நீங்காமை; முதுவாய் = முதிய வாய்மையுடைய. 7. கூழ் = உணவு; வியல் = அகலம். 12. ஆம்பல் = அல்லி; ஞாங்கர் = மேலே. 14. பாதிரி = ஒரு மரம்; ஓதி = பெண்களின் கூந்தல். 15. இயலுதல் = நடத்தல். 17. ஓய்தல் = அழிந்து ஒழிதல் (வெட்டுதல்). 18. தலைப்பாடு = தற்செயல் நிகழ்ச்சி
உரை:
தேன் போன்ற இனிய இசையை அளிக்கும் சிறிய யாழையுடைய பாண! குளத்தில் வாழும் ஆமையை வலிய கம்பியில் கோத்ததைப் போல் நூண்ணிய குச்சிகளால் பொருத்தப்பட்ட தெள்ளிய கண்ணையுடைய பெரிய கிணையைக் காட்டி “இதை இனிதே காண்க; இங்கே சற்று இருந்து செல்க” என்று கூறும் முதுமையும் வாய்மையும் உடைய இரவலனே!
கிள்ளி வளவனின் நாடு, தை மாதத்தில் தெளிந்த குளிர்ந்த நீரையுடைய குளம் போல் கொள்ளக் கொள்ளக் குறையாத உணவுப் பொருட்களுடைய அகன்ற பெரிய நகரங்களுடையது. அந்நாடு, பகைவர்களால் தீக்கிறையாக்கப்பட்டதில்லை. அங்கு சமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் தீயை மட்டுமே காணமுடியும். கிள்ளி வளவன், பசிப்பணியை நீக்குவதற்குத் தேவையான நீர் வளமும் நில வளமும் மிகுந்த நல்ல நாட்டுக்கு அரசன்.
அவன் புகழை நினைவுகொள். நீ கிள்ளி வளவனை நோக்கிச் செல்லும் வழியில், நறுமணத்தை விரும்பும் வண்டுகள் வெண்ணிற ஆம்பல் மலர்களின் மேலே ஒலிக்கும் சிறுகுடி என்ற ஊரில், வள்ளல் தன்மை உடைய கையையும் ஈகையில் சிறந்தவனுமான பண்ணன் என்ற ஒருவன் உள்ளான். பாதிரி மணம் கமழும் கூந்தலும் ஒளிபொருந்திய நெற்றியும் உடைய உன் விறலியுடன் மெல்ல மெல்ல நடந்து சிறுகுடிக்குச் செல்வாயானால், நீ செல்வந்தன் ஆவாய். பண்ணன் உனக்குப் பரிசுகளை அளிப்பான். பண்ணனின் ஈகை, விறகு வெட்டப் போனவனுக்குப் பொன்கிடைத்ததைப்போல் தற்செயலாக நடைபெறும் நிகழ்ச்சி அல்ல; நீ அவனிடம் பரிசு பெறுவது உறுதி. பரிசு கிடைக்குமா என்று நீ ஐயப்படத் தேவையில்லை. வாழ்க பண்ணனின் தாள்கள்!
புறம் 70. குளிர்நீரும் குறையாத சோறும்
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்
Buy Book From amazon:
புறநானூறு: புதிய வரிசை வகை by பேராசிரியர் சாலமன் பாப்பையா
புறநானூறு மூலமும் உரையும் by உ.வே.சாமிநாதையர்